ஓரிறையின் நற்பெயரால்...
ஒருவன் கடவுளை மறுப்பதாலோ, ஏற்பதாலோ கடவுளுக்கு எந்த ஒரு நன்மையும்,தீமையும் விளைவதில்லை. மாறாக நாம் மேற்கொள்ளும் செயல்களுக்கு ஏற்றவாறு நமக்கே பயன்களும்,தீமைகளும் வந்தடைகின்றன. அதை யாராக இருந்தாலும் கண்கூடாக நடைமுறையில் காண்கிறோம்.ஆக கடவுள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் கடவுள் இல்லை என வாதிடுவோர் பரிணாம கோட்பாடு எனும் தியரியை தாண்டி எந்த ஒரு நிருபிக்கப்பட்ட அறிவியல் ஆதாரங்களையும் இதுவரையும் முன் வைக்கவில்லை.இந்த குற்றச்சாட்டை அவர்களிடம் முன்வைத்தால் அவரகள் இதே கேள்வியே கடவுளை நம்புவோரிடமும் முன்வைப்பர். நியாயமானது தான். (எனினும் சாதாரணமாக தர்க்கரீதியாக நடைமுறை வாழ்வில் கூட கடவுள் இல்லை என்பதை நிருபிக்க முடியவில்லை என்பது வேறு விசயம்) கடவுளை மறுப்பதற்கு எந்த ஒரு பகுத்தறிவு சிந்தனையும் தேவையில்லை. கடவுளை நம்புவதற்கு தான் பகுத்தறிவு அவசியமாகிறது. எப்படி? இறைவழி நின்று அலசுகிறது இக்கட்டுரை
கடவுள் தான் இவ்வுலகில் அனைத்து உயிர்களையும் படைத்ததாக கொண்டால் ஏனைய உயிர்கள் அல்லாது பிரத்தியேக குணாதிசயங்களோடு மனிதர்களை மட்டும் படைத்ததன் நோக்கம் என்ன? அந்த நோக்கத்தை நிறைவேற்ற கடவுள் மேற்கொண்ட நடவடிக்கை என்ன?
என்ற கேள்விகளுக்கு தெளிவான விடை சிந்தனைக்கு உகந்த வகையில் அமைந்தால் "கடவுளை நம்புவதற்கு" எந்த வித தடையும் எவருக்கும் இல்லை. சரி., மனித மூலங்கள் மண்ணில் படைக்கபடுவதற்கு முழு முதற் காரணம் குறித்து குர்-ஆன் கூறும்போது,
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(51:56)
(ஜின்கள்- இக்கட்டுரையின் நோக்கமில்லை என்பதால் அவை குறித்த பார்வை இங்கு வேண்டாம்) ஆக மனித படைப்பின் நோக்கமே இறைவனை வணங்குவதற்காகவே எனும் போது கடவுளுக்கு வழிபாடுகள் தேவையா...? என்ற கேள்வியே அர்த்தமற்றதாகிறது. ஆனால் "அல்லாஹ்" எவ்வித தேவையுடையவனும் அல்ல என்பது வேறு விசயம்.அவ்வாறு வணங்குவதற்காக படைக்கப்பட்ட மனிதனுக்கு வணங்குவது உட்பட வாழ்வதற்கு தேவையான அனைத்து நடைமுறை செய்கைகளும், தெரிவுகளும் மிக தெளிவாக மற்றும் சரியாக கடவுள் புறத்தால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.அவ்வாறு மனித சமுக முழுமைக்கும் பின்பற்ற தகுந்த வழிகாட்டுதல்கள் இருக்கும் போது தான் மனிதர்கள் மேற்கொண்ட நன்மை தீமைக்கு தகுந்தாற்போல் அவர்களுக்கு பரிசோ,தண்டனையோ அளிப்பதென்பது நியாயமானதாகும்.
மனித குல முழுமைக்கும் நேர்வழி காட்ட கடவுளே நேரடியாக இப்புவிக்கு வர வேண்டுமா?
மனிதர்களுக்கு வழிகாட்ட கடவுளே நேரடியாக மனித வடிவெடுத்து வருகிறார் என வைத்துக்கொள்வோம்.தாளாரமாக மனிதர்கள் மேற்கொள்ள வேண்டிய தவிர்க்க வேண்டிய அனைத்து விசயங்களையும் தன் சொல்,செயல் மூலமாக மிக தெளிவாக எடுத்துரைக்க முடியும்.அதன் படி மக்களையும் நேரான வழியில் செலுத்த முடியும். சரி, எவ்வளவு காலத்திற்கு மனிதர்களோடு மனிதராக கடவுள் உலா வர முடியும்? அச்சமுகம் நல்லவனவற்றை பின்பற்றும் வரையிலா...அல்லது உலகம் அழியும் வரையிலுமா...? மேலும், கடவுள் மனிதனாக அவதரிக்கும் பொழுது மனித குணாதிசயங்களுடன் மனிதான மாற முடியும், அல்லது இருக்கும் காலம் வரை மனிதனாக நடிக்கவே மட்டும் தான் முடியும். உங்களைப்போன்று என்னைப்போன்று இயல்பாகவே ஆசை, துக்கம், தூக்கம், கோபம், தாபம், ஏமாற்றம், பசி போன்ற சராசரி மனித எண்ணங்களோடு நிச்சயமாக வாழ முடியாது.ஆக மிக நேர்த்தியான மற்றும் துல்லியமான வழிகாட்டுதல்கள் கடவுள் மனிதனாக இருந்து தந்த போதிலும்,ஒரு நிலையில் அவைகளை சரிவர நாம் பின்பற்றா நிலையில் எளிதாக நம்மால் முறையிட முடியும் ஏனெனில் நாம் மனிதனாக பிறந்து மனிதனாக வாழ்கிறோம்.ஆனால் வழிகாட்ட வந்தவரோ கடவுளாக இருந்து மனிதனாக வாழ்ந்தவர்.ஆக கடவுள் மனிதனாக அவதரித்து மனித மனங்களை சீர் செய்வதென்பது ஒரு முழுமைப்பெற்ற பணியாகாது. அப்படியெனில், எக்காலத்திற்கும் ,எந்நேரத்திலும் மனிதர்களால் குறை கூறா வண்ணம் ஒரு நிலையான வழிகாட்டியே அதுவும் பொதுவான பின்பற்றதலோடு கடவுள் என்பவர் ஏற்படுத்த வேண்டும்.அது தான் நியாயமானதும் கூட அதற்கு.,
"மனிதனாக பிறந்து மனிதனாக வாழ்ந்து மனிதனாக மரிக்கும் ஒருவரை மனிதர்களுக்கு நேர்வழி காட்ட அவர்களுக்கு மத்தியில் வாழ செய்ய வேண்டும். இதை தான் "இஸ்லாம்" மிக தெளிவாக முன்மொழிகிறது. மனித மூலங்கள் மண்ணில் வாழ தொடங்கிய நாள் முதல் அவர்களுக்கு "ஓரிறையின் போதனைகளின்" அடிப்படையில் வாழ்வில் மேற்கொள்ள வேண்டிய ஏவல்கள்-விலக்கல்களை மிக தெளிவாக விளக்கி மக்களை பின்பற்ற சொன்னதோடு தாமும் பின்பற்றி வாழலானார்கள்.அவ்வாறு மக்களோடு மக்களாக வாழும் தருவாயில் எல்லோருக்கும் ஏற்படும் எண்ணங்களின் அடிப்படையில் தங்களின் வாழ்க்கையே அமைத்துக்கொண்டாலும் கெட்ட செயல்பாடுகள் யாவும் துறந்து நன்மையே மட்டுமே செய்து மனித புனிதர்களாக வாழ்ந்து மக்களுக்கு ஓர் நல்ல வழிகாட்டியானவர்கள் தான் இறைவன் மனிதர்களுக்கு மத்தியில் தேர்ந்தெடுத்த "இறைத்தூதர்கள்" ஆவார்கள்.
(நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே "(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்" (என்று நபியே! அவர்களிடம் கூறும்). (21:7)
ஒவ்வொரு சமுதாயமும் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக உலகில் உண்டான அனைத்து சமுதாயத்தினருக்கும் "இறைத்தூதர்கள்" அனுப்பப்பட்டனர். அதுவும் அவர்கள் மொழி பேசக்கூடியவராகவே. மேலும் அம்மக்களில் ஒருவரே முன் மாதிரியாக நின்று அம்மக்களுக்கு மத்தியில் வாழ்வதால் அதை அச்சமுகம் எந்த வித பிறழ்வுமின்றி மிக எளிதாக பின்பற்ற முடியும்.அவ்வாறு பின்பற்ற நிலை வரும்போது கூட ஒரு தகுந்த காரணம் சொல்லமுடியாது ஏனெனில் இங்கு வழிகாட்டி நம்மைப்போல் மனிதனாக பிறந்து மனிதனாக வாழ்பவரே! எனவே அவரை பின்பற்றுவது எல்லா காலத்திற்கும் எல்லா நேரத்திற்கும் பொருந்தக்கூடியதே.,
ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (14:4)
அவ்வாறு அவர் மரணித்த பின், வரும் காலங்களில் வழிதவறும் மக்களுக்காக வேறொரு "இறைத்தூதர்" அப்போதைய மக்கள் மத்தியில் இறைவனால் நியமிக்கப்படுவார். ஆதம் அலை தொட்டு நூஹ், மூஸா,இப்ராஹீம்,ஈஸா (அலை) தொடர்ந்து அனுப்பப்பட்டவர்கள் தான் இறைத்தூதர்கள்.அவர்களில் முஹம்மது நபியுடன் "இறைத்தூதர்" வரிசை முற்றுப்பெற்றது.
முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். (33:40)
இறைத்தூதர்கள் வரும் வழியில் அவர்களில் சிலருக்கு வேதங்களும் கொடுக்கப்பட்டன.அத்தகைய வேதங்களில் இறுதியானது தான் "குர்-ஆன்".ஆக இன்று முஹம்மது நபி அவர்கள் உயிரோடு இல்லையென்றாலும் அவர்களை பின்பற்ற தகுந்த வகையில் அவர்கள் கொணர்ந்த வேதமும் அவர்களின் வாழ்வும் நம் கண் முன் திறந்தே இருக்கிறது. அதை பின்பற்றுவது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும் ஏனெனில் ஏனைய இறைத்தூதர்கள் போல் அல்லாமல் "இறுதித்தூதரும் -இறுதி வேதமும்" உலகம் முழுவதற்கும் அருட்கொடையான ஒன்று! மாறாக இஸ்லாமிய சமுதாயத்திற்கு மட்டும் உரித்தானதல்ல!!
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (21:107)
அல்லாஹ் மிக்க அறிந்தவன்
0 கருத்துக்கள்:
Post a Comment
அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.
நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!