Thursday, August 19, 2010

"செயற்கை உயிர் (?)": பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன?

5 கருத்துக்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக....ஆமின்.
    
செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?

வினவு இணையதளத்தில் கடந்த மாதம் வெளிவந்த ஒரு கட்டுரையின் தலைப்பு இது.

செயற்கை செல் (Synthetic Cell) ஆராய்ச்சி முடிவுகள் குறித்து மருதையன் என்ற சகோதரரால் எழுதப்பட்ட இந்த கட்டுரைக்கான நேரடி பதிலை யார் சொன்னால் நன்றாக இருக்கும்?

இந்த ஆராய்ச்சியை நடத்திய கிரேக் வென்டர் கழகத்தின் தலைவரும் (J.Craig Venter Institute (JCVI)), செயற்கை செல் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவருமான டாக்டர் கிரேக் வென்டர் அவர்கள் சொன்னால் சரியாக இருக்குமா?   

"Kornberg did not create life in a test tube, nor did we create life from scratch. We transformed existing life into new life. We also did not design and build a new chromosome from nothing. Rather, using only digitized information, we synthesized a modified version of the naturally occurring Mycoplasma mycoides genome. The result is not an "artificial" life form" - J.Craig Venter and Daniel Gibson, How We Created the First Synthetic Cell, The Wall Street Journal, dated 26th May 2010.

நாங்கள் உயிரை ஆரம்பத்திலிருந்து (from scratch) உருவாக்கவில்லை. இருந்த ஒரு உயிரை வேறொரு புது உயிராக உருமாற்றியுள்ளோம். அது போல, நாங்கள் ஒன்றும் ஒரு புது உயிர் அணுககோலை (Chromosme) ஒன்றுமில்லாததிலிருந்து வடிவமைக்கவோ, கட்டமைக்கவோ இல்லை. முடிவோ, செயற்கை உயிர் இல்லை - (Extract from the original quote of) J.Craig Venter and Daniel Gibson, How We Created the First Synthetic Cell, The Wall Street Journal, dated 26th May 2010. 

இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்தியவரே சொல்கின்றார் 'நாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லையென்று". இந்த விஷயம் சகோதரர் மருதையனுக்கு ஏன் தெரியவில்லை?.
   
இதே போன்றதொரு கருத்தை தான் "தி நியூயார்க் டைம்ஸ்" நாளிதழில் வந்த ஒரு கட்டுரையும் பிரதிபலிக்கின்றது.       

"He has not created life, only mimicked it” - Dr. Baltimore, Researchers Say They Created a ‘Synthetic Cell’, The New York Times, dated 20th May 2010. 
அவர் உயிரை உருவாக்கவில்லை, ஒரு உயிரை மிமிக்ரி மட்டுமே செய்துள்ளார் - (Extract from the original quote of) Dr. Baltimore, Researchers Say They Created a ‘Synthetic Cell’, The New York Times, dated 20th May 2010.

ஒரு செயற்கை உயிரை வென்டர் உருவாக்கிவிட்டார் என்று மருதையன் போன்ற சகோதரர்கள் நினைத்தால் அது நிச்சயமாக உண்மையல்ல. படிப்பவர்களை உண்மையை விட்டு திசைதிருப்பும் முயற்சியே இது மாதிரியான தலைப்புக்கள்.   

மருதையன் அவர்களின் கட்டுரைக்கான தலைப்பு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும், 

செயற்கை உயிர்: பழைய நாத்திக கொள்கை காலி: புதிய கொள்கைகள் என்னென்ன?

ஆம், ஒரு முக்கிய நாத்திக கொள்கையை  (ஒரு வாழும் செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற கொள்கையை) சுக்குநூறாக நொறுக்கியிருக்கின்றன செயற்கை செல் ஆராய்ச்சி முடிவுகள்.    
  
அதே கட்டுரையில் மருதையன் அவர்கள் பின்வருமாறு எழுதுகின்றார்,

"சடப்பொருள் வேறு, உயிர்ப்பொருள் வேறு; உடல் வேறு ஆன்மா வேறு என்று கூறி வரும் மதக் கோட்பாடுகள் மற்றும் பல கருத்துமுதல்வாத கோட்பாடுகள் அனைத்தின் முகத்திலும் பூசப்பட்டிருக்கும் கரி – சிந்தடிகா" - வினவு, 8/7/2010. 

இந்த செயற்கை செல் ஆராய்ச்சி உண்மையில் யார் முகத்தில் கரியை பூசியிருக்கின்றது?, இறை நம்பிக்கையாளர்கள் மீதா அல்லது சகோதரர் மருதையன் போன்ற நாத்திகர்கள் மீதா?, செயற்கை செல் (Synthetic Cell) என்றால் என்ன?, இந்த ஆராய்ச்சியால் நாம் பெரும் பலன்கள் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைக்காண முயல்வதே இந்த பதிவின் நோக்கம். இன்ஷா அல்லாஹ். 

செயற்கை செல் என்றால் என்ன?

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவையே. அவை ஒருசெல் உயிரினங்கள், பலசெல் உயிரினங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நுண்ணுயிரிகள் (உதாரணத்துக்கு பாக்டீரியாக்கள்) ஒரு செல் உயிரினங்களே. ஆக, ஒரு செல்லை ஆரம்பத்திலிருந்து உருவாக்கினாலே (from Scratch) உயிரியலைப் பொறுத்தவரை அது ஒரு உயிரை உருவாக்கியதாகத் தான் அர்த்தம்.

இப்போது செயற்கை செல் ஆய்வுக்கு வருவோம்.

JCV கழகம் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஒரு முக்கியமான உயிரியல் கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. "ஒரு வாழும் செல்லுக்கு குறைந்த பட்சம் எத்தனை மரபணுக்கள் (Genes) தேவை? (what is the minimum number of genes required to make a living cell?)" என்ற கேள்விதான் அது. இந்த ஆய்வுக்கு அவர்கள் சூட்டிய பெயர் "குறைந்தபட்ச மரபணு திட்டம் (Minimal Genome Project)".

இந்த கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதற்காக ஒரு மிகச் சாதாரண உயிரினமான Mycoplasma mycoides பாக்டீரியாவை பல ஆண்டுகளாக ஆராய்ந்து வருகின்றார்கள். இந்த பாக்டீரியா சுமார் 475 மரபணுக்களால் ஆனது. ஒப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், மனித மரபுரேகை அல்லது மரபணுத் தொகுப்பு (Genome, which means a full complement of genes found in the cell) சுமார் 20,000-25,000 மரபணுக்களால் ஆனது.

முதலில் இந்த பாக்டீரியாவின் (475 மரபணுகளுக்குண்டான) டி.என்.ஏ வார்த்தைகளை வரிசைப்படுத்தி கொண்டார்கள். கணிப்பொறியில் அந்த தகவல்களை பதிந்து கொண்டனர்.  பின்னர் அவற்றை 1,100 துண்டுகளாக பிரித்து கொண்டார்கள். ஒவ்வொரு துண்டையும் செயற்கையான முறையில் நான்கு வெவ்வேறு விதமான வேதிப்பொருட்களை கொண்டு உருவாக்கினார்கள்.

இப்படி செயற்கையாக உருவாக்கப்பட்ட 1,100 டி.என்.ஏ துண்டுகளையும் ஒன்று சேர்த்து (Assembling) மரபுரேகையை (Genome) உருவாக்கினார்கள்.

இந்த துண்டுகளை எப்படி இணைத்தார்கள் என்றால், ஈஸ்ட் (Yeast) செல்களை கொண்டுதான். அதாவது, செயற்கையாக ஒரு மரபுரேகையை உருவாக்க ஏற்கனவே இயற்கையாக உள்ள ஒரு வாழும் செல் தான் அவர்களுக்கு உதவியிருக்கின்றது. 

"The synthetic Mycoplasma mycoides genome was assembled by adding the overlapping DNA fragments to yeast. Once inside a yeast cell, the yeast machinery recognized that two DNA fragments had the same sequence and assembled them at this overlapping region" - J.Craig Venter and Daniel Gibson, How We Created the First Synthetic Cell, The Wall Street Journal, dated 26th May 2010.

இந்த வாழும் செல் இல்லையென்றால் செயற்கை மரபுரேகையை உருவாக்கியிருக்க முடியாது. இது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம்.   

இப்படி உருவாக்கப்பட்ட மரபுரேகை சுமார் 1.08 மில்லியன் (1 Million = 10 lakhs) வார்த்தைகளை கொண்டதாக இருந்தது. இதுதான் உலகிலேயே இது வரை உருவாக்கப்பட்ட செயற்கை மரபுரேகைகளில் மிகப் பெரியது.

இப்படியாக செயற்கை மரபுரேகை (Synthetic Genome) உருவாக்கப்பட்டது. இப்போது இதனை வேறொரு பாக்டீரியாவின் செல்லுக்குள் (Recipient Cells) செலுத்தி சோதனை செய்ய வேண்டும். இதற்கு ஆய்வாளர்கள் தேர்ந்தெடுத்த பாக்டீரியா Mycoplasma capricolum என்பதாகும். முதலில் இந்த பாக்டீரியாவின் மரபுரேகையை நீக்கிவிட்டனர்.

பின்னர், Mycoplasma capricolum பாக்டீரியாவின் தடுப்பு நொதி மரபணுவை (Restriction Enzyme gene) செயலிழக்க செய்தார்கள். அப்படி செய்யவில்லை என்றால் அது உள்ளே வரும் செயற்கை மரபுரேகையை அழித்து விடும்.

அந்த மரபணுவை செயலிழக்க செய்த பின்பு செயற்கை மரபுரேகையை Mycoplasma capricolum பாக்டீரிய செல்லின் சய்டோப்லாசத்தின் (Cytoplasm) உள்ளே செலுத்தினர் (Transplantation). செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகையை அந்த பாக்டீரியா ஏற்றுக்கொண்டு (Booted up) பிரதி எடுக்க (replicate) ஆரம்பித்து விட்டது.

இது குறித்த விரிவான ஆய்வு முடிவுகள் சயின்ஸ் எக்ஸ்பிரஸ் (Science Express) இணைய இதழில் மே மாதம் 20 ஆம் தேதி வெளிவந்தன. 
  



இப்படி உருவான அந்த பாக்டீரியாவிற்கு அவர்கள் வைத்த பெயர் "Mycoplasma mycoides JCVI-syn1.0" என்பதாகும். இதற்கு சின்தியா (Synthia) என்ற செல்லப் பெயரும் உண்டு. (இதைத்தான் "சிந்தடிகா" என்று எழுதினாரோ மருதையன்)

சற்று எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு காரின் ஒரு பாகத்தை பார்த்து அந்த தகவல்களை கணிப்பொறியில் ஏற்றிக்கொண்டு, பின்னர் அதே போன்ற ஒன்றை ஆய்வுக்கூடத்தில் உருவாக்கி அதனை வேறொரு காரில் பொருத்தி அது வேலை செய்கின்றதா என்று பார்ப்பது.

ஆக, இவர்கள் செய்தது, ஒரு பாக்டீரியாவை நன்கு ஆராய்ந்து அதன் மரபுரேகையை கணிப்பொறி துணையோடு ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கி பின்னர் அதனை மற்றொரு பாக்டீரியாவில் செலுத்தியது.

மொத்தத்தில், இவர்கள் மரபுரேகையை புதிதாக உருவாக்கவில்லை. ஏற்கனவே இருந்த ஒன்றை பார்த்து அதே போன்ற ஒன்றை சிற்சில மாற்றங்களோடு உருவாக்கியுள்ளனர். இது எப்படி செயற்கை உயிரை உருவாக்கியதாக அமையும்? அதனால் தான் கிரேக் வென்டர், தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை என்றும், ஏற்கனவே இருந்த ஒரு உயிரை உருமாற்றி மட்டுமே உள்ளோம் என்று தெளிவாக விளக்கியுள்ளார்.   

விஞ்ஞானிகள் செயற்கை உயிரை உருவாக்கிவிட்டார்கள் என்று சிலர் நினைத்தால் அது அவர்களது அறியாமையே தவிர வேறொன்றுமில்லை.....

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கலாம். அதாவது, கிரேக் வென்டர் குழு (JCVI) செயற்கையாக உருவாக்கியது பாக்டீரிய செல்லின் மரபுரேகையைத் தானே?, பிறகு ஏன் ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்கியது போல "செயற்கை செல்" என்று பெயர் வைத்திருக்கின்றார்கள்?

உங்களுடைய சந்தேகம் மிக நியாயமான ஒன்றுதான். இந்த கேள்வியைத்தான் பலரும் கேட்கின்றனர். மரபுரேகையை மட்டும் நகலெடுத்து செயற்கையாக உருவாக்கிவிட்டு அதற்கு "செயற்கை செல்" என்று பெயரிடுவது என்ன மாதிரியான லாஜிக்?, "செயற்கை மரபுரேகை" (Synthetic Genome) என்றுதானே பெயரிட்டிருக்க வேண்டும்?

"First, as many have noted, the technical accomplishment is not quite what the JCVI press release claimed. It’s hard to see this as a synthetic species, or a synthetic organism, or a synthetic cell; it’s a synthetic genome of Mycoplasma mycoides, which is familiar enough" - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.

"முதலில், பலரும் குறிப்பிட்டது போல, JCV கழகம் வெளியிட்ட அறிக்கை கோருவது போல இந்த ஆராய்ச்சி தொழில்நுட்ப சாதனையாக தெரியவில்லை. இதனை ஒரு செயற்கை இனமாகவோ, அல்லது செயற்கை உயிரியாகவோ, அல்லது செயற்கை செல்லாகவோ பார்க்க கடினமாக உள்ளது; Mycoplasma mycoidesனுடைய செயற்கை மரபுரேகையான இது நமக்கெல்லாம் நன்கு அறியப்பட்ட ஒன்றுதான்" - (Extract from the original quote of) Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.         

ரூடர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் செயற்கை செல் குறித்து எழுதும் போது "Artificial life? Synthetic genes 'boot up' cell" என்று தலைப்பு வைத்ததற்கு இந்த குழப்பம் ஒரு காரணமாக இருந்திருக்கலாமோ?    

இது குறித்து வென்டர் என்ன கூறுகின்றார்?...செல்லை கட்டுபடுத்துவது செயற்கையாக உருவான மரபுரேகை என்பதால் இதற்கு "செயற்கை செல்" என்று பெயர் வைத்ததாக கூறுகின்றார். ஆனால் அவருடைய இந்த விளக்கம் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றது...

"The explanation from the Venter camp is that the genome took over the cell, and since the genome is synthetic, therefore the cell is synthetic. But this assumes a strictly top-down control structure that some biologists now question. Why not say instead that the genome and the cell managed to work out their differences and collaborate, or even that the cell adopted the genome (and its identity)? Do we know enough to say which metaphor is most accurate?" - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.

ஆக, இவர்களது ஆய்வுக்கு சரியான பெயர் "செயற்கை மரபுரேகை" என்பது தானே தவிர "செயற்கை செல்" அல்ல.

இந்த ஆய்வின் மூலம் JCV கழகம் தங்கள் திட்டத்தை நோக்கி ஒரு படி மேலே சென்றிருக்கின்றனர். அதாவது, ஒரு வாழும் செல்லுக்கு குறைந்த பட்சம் எத்தனை மரபணுக்கள் தேவை என்பது பற்றி அறியும் திட்டம்.

இங்கு நான் சொல்ல முயற்சித்திருப்பது மிகச் சிறிதுதான். இந்த ஆய்வு பல நுணுக்கமான விஷயங்களை உள்ளடக்கியது. அதனால் நீங்கள் இது பற்றி மேலும் ஆராய்ந்தறிய வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.


இந்த ஆய்வு, உயிர் என்பது வெறும் வேதிப்பொருட்களால் ஆனது என்று கூறுகின்றதா? (Does the Venter Institute's achievement show that life is just chemicals?)  

இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. 

செயற்கையாக டி.என்.ஏவை உருவாக்கி அவற்றை மற்ற உயிரின செல்களுக்குள் செலுத்துவதென்பது பல காலங்களாக நடந்து வருவதுதான். இந்த முறை நடந்ததுதான் அளவுக்கோளில் மிகப் பெரியது.

ஒரு முக்கிய விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.

அதாவது, Mycoplasma capricolum பாக்டீரியாவின் மரபுரேகை வெளியே எடுக்கப்பட்டு விட்டாலும் அது இன்னும் உயிருள்ள ஒரு செல் தான் (மரபுரேகையை வெளியே எடுத்தவுடன் அது செத்துவிடவில்லை). ஆனால், அது தன்னுடைய தன்மையான "தன்னைத்தானே பிரதி எடுத்துக்கொள்வதை" செய்யாது. செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகை உள்ளே செலுத்தபட்டவுடன் அந்த பாக்டீரியா தன்னைத்தானே பிரதி எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டது.      

வாழும் மற்றும் பிரதி எடுக்கும் என்று இவற்றுக்கான வித்தியாசம் இன்னும் சரிவர அறிவியலாளர்களுக்கு புலப்படவில்லை. ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்குவது எப்படி என்றும் விளங்கவில்லை.

"What separates a bag of DNA from a living, replicating cell is still unclear and un-synthesizable. To me, life is still "special" and incredibly powerful" - Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010. 
"வாழும் மற்றும் பிரதி எடுக்கும் செல் என்று இவற்றுக்கான வித்தியாசம் இன்னும் சரிவர அறிவியலாளர்களுக்கு புலப்படவில்லை. ஒரு செல் செயற்கையாக உருவாக்கப்படவும் இல்லை. என்னை பொறுத்தவரை உயிர் என்பது தனித்துவம் மிக்கது மற்றும் மிகவும் வலிமையானது" - (Extract from the Original quote of) Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010.  

ஆக, உயிருள்ள ஒரு செல்லுக்குள் தான் செயற்கை மரபுரேகை புகுத்த பட்டுள்ளது. 

ஒரு வாழும் செல்லை செயற்கையாக வேதிப்பொருட்களை கொண்டு உருவாக்கும் வரை உயிர் என்பது வெறும் வேதிப்பொருட்களால்  ஆனது என்று கூற முடியாது.     


செயற்கை செல் இறைவனை மறுக்கின்றதா? 

இதற்கான பதிலை வென்டர் தெளிவாக கூறிவிட்டார். தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை என்று. ஏற்கனவே இருந்த ஒரு உயிரை ரி-ப்ரோக்ராம் (Re-Program) தான் செய்துள்ளார்கள்.

மரபுரேகையையும் (Genome) இவர்களாக உருவாக்கவில்லை, இயற்கையாக இருந்த ஒரு உயிரின் மரபுரேகையை பார்த்து அதே போன்ற ஒன்றை செய்துள்ளனர்.

உதாரணத்துக்கு, மரபுரேகையை ஒரு மென்பொருளோடு (Software) ஒப்பிட்டால், அந்த மென்பொருளை இவர்களாக எழுதவில்லை, ஏற்கனவே இருந்த ஒரு மென்பொருளை பார்த்து காப்பி அடித்திருக்கின்றனர், அவ்வளவுதான். (They didn't write a new software, they just copied a existing one).  

"The work reported by Venter and his colleagues is an important advance in our ability to re-engineer organisms; it does not represent the making of new life from scratch." - Jim Collins, Artificial life? Synthetic genes 'boot up' cell, Reuters, dated 20th May 2010.
வென்டர் மற்றும் அவருடைய குழுவினருடைய ஆய்வு, உயிரினங்களை மறுசீரமைப்பு செய்யும் தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய முன்னேற்றம். (ஆனால்) அது ஒரு புது உயிரை ஆரம்பத்திலிருந்து உருவாக்கவில்லை - (Extracted from the original quote of) Jim Collins, Artificial life? Synthetic genes 'boot up' cell, Reuters, dated 20th May 2010. 

இவர்கள் கடவுளாக முயற்சிக்கவில்லை. கடவுள் உருவாக்கிய ஒரு உயிரின் சிறு பகுதியை பார்த்து அதனை 40 மில்லியன் டாலர்கள் செலவில், அதிநவீன இயந்திரங்களின் துணையோடு, 15 வருட கடின உழைப்பில், 25 விஞ்ஞானிகளின் கண்காணிப்பில் நகலெடுத்துள்ளனர். இது எப்படி கடவுளை மறுப்பதாக அமையும்?

மேலும், மரபுரேகை மட்டும் தான் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அது செலுத்தப்பட்ட செல்லோ  இயற்கையானது.

ஒரு செல்லையே செயற்கையாக உருவாக்கினால் தான் உயிரியல் வரையரைப்படி அது உயிரினமாக கருதப்படும்.

ஆக, செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபுரேகையை செயற்கையாக உருவாக்கப்பட்ட செல்லுக்குள் இவர்கள் செலுத்தவில்லை. இயற்கையாக உள்ள மற்றொரு செல்லுக்குள் தான் செலுத்தியிருக்கிறார்கள்.

வேறுவிதமாக சொல்லப்போனால் இந்த மரபுரேகையை உருவாக்க ஒரு சிறு பகுதியை மிமிக்ரி செய்தும் மற்றவற்றை கடன் வாங்கியும் உள்ளனர்.

"It might be still more accurate to say that the researchers mimicked one part and borrowed the rest" - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.
இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால், ஆய்வாளர்கள் ஒரு பகுதியை மிமிக்ரி செய்தும், மற்றவற்றை கடன் வாங்கியும் உள்ளனர் - (Extract from the original quote of) Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010. 

ஒரு கணிப்பொறியில் (Mycoplasma mycoides) உள்ள மென்பொருளை (Genome of Mycoplasma mycoides) காப்பி செய்து அதனை மற்றொரு கணிப்பொறியில் (Mycoplasma capricolum) மாற்றி விட்டு விட்டனர். ஆக, செல் என்னும் கணிப்பொறியை கடன் வாங்கியும், மரபுரேகை என்னும் மென்பொருளை மிமிக்ரி செய்தும் ஆய்வு முடிவுகளை அளித்திருக்கின்றனர். இது எப்படி கடவுளை மறுப்பதாக அமையும்?   

அதுமட்டுமல்லாமல் இவர்களுடைய ஆய்வுக்கு உறுதுணையாக இருந்தது ஒரு வாழும் செல் தான் (ஈஸ்ட் செல்). 

ஈஸ்ட் செல்கள் இல்லையென்றால் சின்தியா உருவாகியிருக்காது. ஆக, ஏற்கனவே இருந்த ஒரு உயிரைக்கொண்டு தான் செயற்கை மரபுரேகையை உருவாக்கியுள்ளனர்.

"Without life, Synthia wouldn't be alive" - Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010. 
உயிரில்லை என்றால் சின்தியா வந்திருக்காது -  (Extract from the original quote of) Christina Agapakis, What Synthia Means to Me, Oscillator, Scienceblogs, dated 21st May 2010.   

செயற்கையான ஒன்றை உருவாக்குவதற்கு இயற்கையான ஒன்றுதான் இவர்களுக்கு தேவைப்பட்டிருக்கின்றது.

மொத்தத்தில், இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை மாதிரியாக எடுத்துக்கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிரை "செயற்கை மரபுரேகையை" உருவாக்க பயன்படுத்தி கொண்டு, இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிருக்குள் தங்களது செயற்கை மரபுரேகையை செலுத்திவிட்டு என்று இப்படி எல்லா நிலையிலும் JCV குழுவினருக்கு இறைவனுடைய படைப்புகள் தான் தேவைப்பட்டிருக்கின்றது. 

இப்படி இறைவன் கொடுத்த அனைத்தையும் உபயோகப்படுத்தி கொண்டு, விஞ்ஞானிகள் ஒரு உயிரை செயற்கையாக உருவாக்கி கடவுளை பொய்பித்து விட்டனர் என்று கூறுவது அபத்தமானது மட்டுமல்ல, அறிவுக்கு ஒத்து வராததும் கூட.

இதனால் தான் வென்டர் "தாங்கள் செயற்கை உயிரை உருவாக்கவில்லை" என்று மிக தெளிவாக, விரைவாக மறுத்து விட்டாரோ? 


செயற்கை செல் நாத்திக கொள்கையை பொய்பிக்கின்றதா?

என்னை பொறுத்தவரை, ஆம். 

உலகில், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தற்செயலாக ஒரு செல் உருவாகியிருக்க வேண்டும் (Abiogenesis), பின்னர் அவற்றில் இருந்து படிப்படியாக உயிரினங்கள் வந்திருக்க வேண்டுமென்பது பல நாத்திகர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்துள்ளது செயற்கை செல் ஆராய்ச்சி. 

பல பேருடைய அயராத உழைப்பில், அதி நவீன கருவிகளைக் கொண்டு இந்த செயற்கை மரபுரேகை உருவாகியுள்ளது. (நகலெடுப்பதில் ஏற்பட்ட) ஒரு சிறிய தவறு பல மாதங்களுக்கு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு நடக்க விடாமல் தடுத்திருக்கின்றது. ஆக, அதி கவனமாக பதினைந்து வருடங்களாக பாடுபட்டு இந்த ஆய்வை செய்திருக்கின்றனர். 

ஆனால் பல நாத்திகர்களோ ஒரு வாழும் செல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்ற வாதத்தை எந்தவொரு ஆதாரமும் இல்லாமலேயே நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஒரு சாதாரண பாக்டீரிய செல்லின் உள்ளே இருக்கும் மரபுரேகையை உருவாக்குவதற்கு அதிநவீன இயந்திரங்களின் உதவியும், பலருடைய தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறதென்றால், மிக சிக்கலான கட்டமைப்பை கொண்ட ஒரு வாழும் செல் யாருடைய கண்காணிப்பும், உதவியும் இல்லாமல் தற்செயலாக உருவாகியிருக்கும் என்பது என்ன விதமான வாதம்? 

ஒரு செல்லே தற்செயலாக உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்னும் போது அதனை அடிப்படையாக கொண்டு மற்றவை வந்திருக்கும் என்பது பகுத்தறிவுக்கு உட்பட்டதா?

ஒவ்வொரு முறையும் இறைவனை மறுப்பதாக கூறிக்கொண்டு நாத்திகர்கள் கொண்டு வரும் அறிவியல் ஆதாரங்கள் எல்லாம் பூமராங் போல திரும்ப அவர்களையே வந்து தாக்கும். இந்த முறையும் அது தான் நடந்துள்ளது. என்ன, கடந்த காலங்களை போலல்லாமல் வெகு விரைவாகவே அந்த பூமராங் இந்த முறை வந்து விட்டது.

இதுபோன்ற ஆய்வுகள் சில நாத்திகர்களது உள்ளத்தில் நிச்சயம் பல கேள்விகளை எழுப்பியிருக்கும். தங்கள் நிலைப்பாட்டை தள்ளி வைத்துவிட்டு உண்மையை அறிய தூண்டியிருக்கும். 

மனித குலத்திற்கு இந்த ஆய்வால் என்ன பலன்?   

பல பயன்கள் உள்ளதாக வென்டர் கூறியுள்ளார். சுத்தமான தண்ணீர் வழங்குவதிலிருந்து சுகாதாரம் வரை இந்த ஆய்வால் பயனுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த ஆராய்ச்சி கேன்சர் போன்ற நோய்களை பற்றி நன்கு அறிவதற்கும், புதிய மருந்துகளை உருவாக்குவதற்கும் பயன்படலாம். 

ஆனால் அதே சமயம் இந்த ஆய்வுகளால் விபரீதங்களும் ஏற்படலாம் என்று பலரும் அஞ்சுகின்றனர். Bio-Terrorism போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்று சமூக ஆர்வலர்கள் எண்ணுகின்றனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த ஆய்வு குறித்து கவலை தெரிவித்திருக்கின்றார். 

"This development raises the prospect of important benefits, such as the ability to accelerate vaccine development. At the same time, it raises genuine concerns, and so we must consider carefully the implications of this research." - President Obama, in a letter to the chair of his new bioethics commission.  

இந்த ஆய்வு சரியான திசையில் சென்றால் இதனை வரவேற்று ஊக்குவிக்க வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமையாகிறது. 

இறைவன் எந்தவொரு நோயையும் அதற்குண்டான நிவாரணம் இல்லாமல் படைப்பதில்லை என்பது நபி மொழி. இது போன்ற ஆய்வுகள் மனித குலத்திற்கு சவாலாக இருக்கும் நோய்களை பற்றி நன்கு அறிவதற்கு பயன்படுகிறது என்றால் இதனை ஊக்குவிப்பதே ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரின் எண்ணமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. 
       
முடிவாக... 

உயிரியல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படும் இந்த ஆய்வை மருதையன் போன்ற சகோதரர்கள் தங்கள் நாத்திக கொள்கையை வளர்க்க பயன்படுத்துவது ஆச்சர்யமாக உள்ளது.

ஆனால் பாவம், அவர்களும் என்ன செய்வார்கள்...கடவுளை மறுப்பதற்கு அறிவியல் ரீதியாக எந்தவொரு காரணங்களும் இல்லாத நிலையில் இப்படி ஏதாவது ஒன்று குறுக்கே வரும் போது அதனை வெளிச்சம் போட்டு காட்டிதான் தங்கள் நாத்திக நம்பிக்கையை தக்க வைத்து கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனால் அந்த வெளிச்சமும் சிறிது காலமே நிலைத்திருக்கும் என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம். இந்த முறையும், "செயற்கை செல்" ஆராய்ச்சி கடவுளை பொய்பிக்கின்றது என்ற கருத்துக்கு அந்த ஆய்வை முன்னின்று நடத்தியவரே தெளிவாக பதில் சொல்லி இவர்களது பொய் பிரசாரத்திற்கு முற்றுபுள்ளி வைத்து விட்டார். 

இந்த ஆய்வு இறைவனை மறுக்காது, மாறாக இறைவனின் ஆற்றலை பறைச்சாற்றி இறை நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கின்றது

நான் நாத்திக சகோதர்களை கேட்டுக்கொள்வதெல்லாம் இதுதான், நீங்கள் "செயற்கை செல்" ஆய்வை நன்கு ஆராய்ந்து பாருங்கள். அது கடவுளை மறுக்கின்றதா? அல்லது உங்கள் கொள்கையை அசைத்து பார்க்கின்றதா? என்று உங்கள் பகுத்தறிவை கொண்டு பதிலளிக்க முயலுங்கள்.....

முடிவாக, விஞ்ஞானிகளால் ஒரு உயிரை உருவாக்கவே முடியாதா? என்று நீங்கள் கேட்டால் அதற்கான பதிலை மே மாதம் வெளிவந்த பிரபல Nature இதழில் காணலாம். 

"Frankly, scientists do not know enough about biology to create life," - Jim Collins, Life after the synthetic cell, Nature, 27th May 2010. 
வெளிப்படையாக, ஒரு உயிரை உருவாக்கும் அளவு உயிரியலைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு தெரியாது - Jim Collins, Life after the synthetic cell, Nature, 27th May 2010.         

விஷயம் முடிந்தது....முற்றுப்புள்ளி......    


இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...
    

My Sincere thanks to:
1. Dr.Craig Venter.
2. The Wall Street Journal daily.
3. The Scientist magazine.
4. The New York Times daily.
5. Science magazine.
6. Reuters.
7. JCVI.org
8. Vinavu.
9. Nature Journal.

References: 
1. Creation of a Bacterial Cell Controlled by a Chemically Synthesized Genome - Science, Vol. 329. no. 5987, pp. 52 - 56, dated 2nd July 2010.
2. Is Synthia Life From Scratch? No, But A Cell Controlled By A Synthetic Genome May Save Our Energy Future - Science 2.0, dated 20th May 2010.
3. Cell door opens on fantastic future - The Sydney Morning Herald, dated 27th May 2010.
4. How We Created the First Synthetic Cell - J. CRAIG VENTER AND DANIEL GIBSON, The Wall Street Journal, dated 26th May 2010.
5. Artificial life? Synthetic genes 'boot up' cell - Reuters, dated 20th May 2010.
6. First Self-Replicating Synthetic Bacterial Cell - J.Craig Venter Institute.
7. What Synthia means to me - Christina Agapakis, Oscillator, Scienceblogs.com, dated 21st May 2010.
8. Is the Synthetic Cell about Life? - Gregory Kaebnick, Is the “Synthetic Cell” about Life?, The Scientist, Volume 24, Issue 7, Page 27, dated 1st July 2010.
9. Scientists create first synthetic cell - Hindustan Times, dated 22nd May 2010.
10. Synthetic Cell - Man playing God or plagiarising God? - Abu Musa, Khilafah.com, dated 27th May 2010.
11. Is Craig Venter's Synthetic cell really life? - Uncommon descent.
12. Researchers Say They Created a ‘Synthetic Cell’ - The New york Times, dated 20th May.
13. Mycoplasma capricolum, Mycoplasma mycoides, Microorganism, Genome, Bacterial cell structure - Wikipedia
14. How many genes are there in an average human? - Answers.com
15. Life after the synthetic cell, Nature, 27th May 2010.      
16. Vinavu's Article on Synthetic cell, 8th July 2010.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ  

5 கருத்துக்கள்:

  • August 20, 2010 at 9:06 AM
    Anonymous :

    i agree you write but who is the GOD Alla? kristhu? hindu ?

  • August 20, 2010 at 10:54 AM
    Anonymous :

    Very Good article Mr. Aashiq ahmed. keep it up... anbe sivam.... Jai Shree Ram....... Allavu Akbar..... Praise the Lord...

    from
    G. Ramu, Chennai

  • August 20, 2010 at 3:57 PM
    Anonymous :

    Those who are commented on the post in vinavu related to synthetica cell, can ready to discuss here?

  • August 20, 2010 at 4:55 PM
    G u l a m :

    சகோதரர அவர்களுக்கு
    நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக
    சகோதரரே. 1Anonymous
    நமக்கு தேவையானஒன்றை தேர்ந்தேடுப்பதாக இருந்தால்., உணவு,உடை மற்றும் ஏனைய தேவைகள் எப்படி தேடி தேடி இது மிக சரியானதா...நமக்கு நன்மையளிக்க கூடியதா தெரிவு செய்வோம் நிலையற்ற வாழ்வின் தேவைக்கே இவ்வாறும் நாம் செய்யும்போது நீடித்திருக்கும் கடவுள் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது என்ன? உலகில் கடவுள் என கூறப்படுபனவற்றை குறித்து (அல்லாஹ் உட்பட ) நடு நிலையோடு ஆராயுங்கள் உங்கள் மனித சிந்தைக்கு ஏற்ற வகையில் எது கடவுளுக்குரிய உயர் பண்புகளோடு பொருந்திப்போகிறதோ அவர் தான் உண்மை கடவுள் உலகின் கடவுள்

  • November 20, 2010 at 7:55 PM

    இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் செயற்கை உயிரனம் என்பது சாத்தியமே அல்ல.ஏற்கனவே இருந்த ஒரு உயிரை வேறொரு புது உயிராக மாற்றினாலும்,அதில் சுயம் என்பது இல்லை.அது ஒரு ப்ரோக்ராம் செய்யப்பட்ட ஒரு ரோபோ போன்றது என என்னுகிறேன்.இந்த பதிவுக்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறீர்கள்.நன்றி.

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!