Monday, October 24, 2011

சர்தார்ஜிக்களை விட்டுருவோமே...ப்ளீஸ்

15 கருத்துக்கள்


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

சர்தார்ஜி ஜோக்குகள் - இன்றைய காலக்கட்டத்தில் இவை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை தந்தாலும், பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் இன்றும் இம்மாதிரியான நகைச்சுவைகள் வந்துக்கொண்டு தான் இருக்கின்றன. ஆகையால், நமக்கெல்லாம் ஒரு நினைவூட்டலாக இந்த பதிவு. 

நம்மில்  பலரும் அறியாமையால் தான் இன்றும் சர்தார்ஜி நகைச்சுவைகளை பகிர்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.  அதாவது இது தவறென்று தெரியாமலேயே.

இதனை பகிர்பவர்கள் இதன் பின்னணியை அறிந்திருக்கின்றார்களா என்று தெரியவில்லை.  வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி, பதினெட்டாம் நூற்றாண்டில் நாதிர் ஸா மன்னனின் படைகளிடம் இருந்து பெண்களை காக்க நள்ளிரவு நேரத்தில் கொரில்லா யுத்தம் செய்து பெண்களை விடுதலை செய்வனராம் சீக்கியர்கள். அவர்கள் குறைந்த அளவில் இருந்ததே இந்த நள்ளிரவு தாக்குதலுக்கு காரணம். ஆனால் இன்றோ இந்த வரலாற்றை அறியாத நம்மவர்கள் சீக்கியர்களை வைத்தே '12 மணி' ஜோக்குகள் என்று ஒன்றை உருவாக்கி அவர்களை கேலி செய்துக்கொண்டிருக்கின்றார்கள். 

அதுமட்டுமல்லாமல், சீக்கியர்கள் மீதான ஈகோவும் இம்மாதிரியான நகைச்சுவைகள் தோன்ற காரணமாக இருந்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

சரி போகட்டும். இஸ்லாமிய பார்வையில் சர்தார் நகைச்சுவைகளை எப்படி கையாள்வது. இது சரியா??

"எல்லா மனிதர்களும் ஆதாம், ஏவாள்லிருந்தே வந்தனர். ஒரு அரபி, அரபி அல்லாதவரை காட்டிலும் உயர்ந்தவரல்ல. அதுபோலவே ஒரு அரபி அல்லாதவர், அரபியரை விட உயர்ந்தவரல்ல. மேலும், வெள்ளையர் கருப்பரை விடவோ அல்லது கறுப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரல்ல" - நாயகம் (ஸல்) அவர்கள், தன்னுடைய இறுதி பேருரையில்..

எல்லா இனத்தவரும் சமம் என்று இஸ்லாம் கூறுகின்றது. சீக்கியர்களின் அறிவுத்திறனை பகடி செய்தே சர்தார்ஜி நகைச்சுவைகள் வருகின்றன. இன்னொரு இனத்தவரை நம்மை விட அறிவுத்திறனில் தாழ்ந்தவராக எண்ணுவது இஸ்லாம் நமக்கு வகுத்த தந்த பாதையல்ல. அப்படியிருக்க எப்படி ஒரு முஸ்லிமால் இன்னொரு இனத்தவரை கேலி செய்ய முடியும்?

அதுமட்டுமல்லாமல், நமக்கு என்ன விரும்புகின்றோமோ அதனையே அடுத்தவருக்கும் விரும்ப சொல்கின்றது இஸ்லாம். தமிழ் என்னும் நம் இனம், அறிவுத்திறனில் தாழ்ந்த இனமாக கருதப்பட்டு கேலிச் செய்யப்படுவதை நாம் விரும்ப மாட்டோம். பிறகு எப்படி நமக்கு விரும்பாத ஒன்றை அடுத்தவருக்கு செய்துக்கொண்டிருக்கின்றோம்? 

நான்  முன்னமே சொன்னது போன்று சர்தார்ஜி நகைச்சுவைகளை பலரும் அறியாமையால் தான் பகிர்ந்து வருகின்றனர். சும்மா நகைச்சுவைக்காக தானே என்று நினைத்து தான் பகிர்ந்து வருகின்றனர். நகைச்சுவை என்ற காரணத்தை சொல்லி ஒரு இனத்தையே கேலிக்குள்ளாக்குவது ஏற்புடையதா? 

அறியாமல் செய்த காலங்கள் போகட்டும். இனியும் நாம் இதனை தொடர்ந்தால் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்பதை நினைவில் கொண்டு இந்த செய்கைகளை கைவிடுவோம். சர்தார் நகைச்சுவைகளை பகிர மாட்டோம் என்று உறுதிக்கொள்வோம். இன்ஷா அல்லாஹ்.

இறைவன்  நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே  எல்லாம் அறிந்தவன்.

Reference: 
1. Sardarji jokes - wikipedia. link

வஸ்ஸலாம், 

உங்கள் சகோதரன்,
ஆஷிக்  அஹமத் அ  

Sunday, October 9, 2011

இஸ்லாமிய தேசியம் - எழுச்சியும் வீழ்ச்சியும்...

5 கருத்துக்கள்


நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி. அமெரிக்காவில், ஆப்ரிக்க அமெரிக்க இனத்தவர் கடுமையான அடக்குமுறைகளுக்கு ஆளான நேரம். அவர்களுக்கு உதவ  வாலஸ் பர்த் முஹம்மது (Wallace D.Fard Muhammed) என்பவரால் 1930ல் தோற்றுவிக்கப்பட்டது தான் "Nation of Islam (இஸ்லாமிய தேசிய அமைப்பு அல்லது இஸ்லாமிய தேசியம்)".

பிறகு, 1933 ஆம் ஆண்டு, பர்த் முஹம்மது அவர்களின் மாணவரான எலிஜா முஹம்மது(Elijah Muhammed) அவர்களின் கட்டுபாட்டுக்குள் அமைப்பு வந்தது. எலிஜா அவர்கள் பொறுப்பில் இருந்த காலத்தில் தான் (1933-1975) அமைப்பு மாபெரும் எழுச்சி கண்டது. அமெரிக்காவை திணறடித்தது.


அமைப்பின் பெயரில் இஸ்லாம் என்ற வார்த்தையை பார்த்தவுடன் இது ஒரு இஸ்லாமிய அமைப்பாக இருக்குமோ என்று நீங்கள் கருதினால், அது தவறு.

ஆம், பெயரில் தான் இஸ்லாம் இருந்ததே ஒழிய, இஸ்லாத்திற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லுமளவு வேறுபாடுகள்.

இவர்களது சில கொள்கைகளை பார்த்தால் உங்களுக்கே புரியும்,
  • இவர்களை பொறுத்தவரை, இந்த அமைப்பை தோற்றுவித்தவரான பர்த் முஹம்மது அவர்கள் இறைவனின் அவதாரம் (God Incarnate).
  • அதற்கு பிறகு வந்த எலிஜா முஹம்மது அவர்கள் இறைவனின் தூதர். 
  • நோன்பு, தொழுகை, ஜகாத் அவசியமில்லை. 
  • கிருத்துவர்களை போல நாற்காலியில் அமர்ந்து கொண்டே பிரார்த்தனை செய்வார்கள். சஜிதாவெல்லாம் கிடையாது. 
  • ஆப்ரிக்க அமெரிக்க இனத்தவர் தான் உயர்ந்தவர். மற்ற இனத்தவர் இவர்களுக்கு கீழே தான். அதுவும், வெள்ளையர்களை "Devils" என்று அழைத்தவர்கள். 
  • மற்ற இனத்தவருடன் திருமண உறவு வைத்துக்கொள்ள கூடாது என்ற கொள்கையை கொண்டிருந்தவர்கள்.   
ஆக, நாம் மேலே பார்த்த அனைத்தும் இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரான கொள்கைகள். சுருக்கமாக சொல்லப்போனால் தங்களுக்கு தகுந்தாற்போல வளைத்துக்கொண்டார்கள்.

அதே சமயம், இவர்களிடம் நல்ல விசயங்களும் பல இருந்தன. உதாரணத்துக்கு, இவர்களின் அமைப்பில் உறுப்பினராக சேர விரும்புபவர்கள்,
  • மது பழக்கம் இருந்தால் விட்டு விட வேண்டும். 
  • போதை மருந்துகளின் பக்கம் கூட போகக்கூடாது. 
  • சூதாட்டம் கூடாது. 
  • கொள்ளை கும்பல்களின் (Gang, Gangster) உறவு இருக்கக்கூடாது. 
  • மிக கண்ணியமான முறையில் உடையணிய வேண்டும். 
இவை மட்டுமல்லாமல், இவர்கள் பன்றி இறைச்சியை உண்ண மாட்டார்கள். குரான் தான் இவர்களுக்கு இறைவேதம்.

இந்த அமைப்பால் தங்களின் தவறான பழக்க வழக்கங்களை விட்டொழித்தவர்கள் பலர்.

அரசியல் ரீதியாக மாபெரும் எழுச்சியை 1950 களில் கண்டது இஸ்லாமிய தேசிய அமைப்பு. அது தான், உலகின் சிறந்த மனிதர்களில் ஒருவராய் கருதப்படும் மால்கம் எக்ஸ் (Malcolm X) அவர்கள் அந்த அமைப்பில் உறுப்பினராய் சேர்ந்த நேரம் (1952). மால்கம் எக்ஸ் ஒரு புத்துணர்ச்சியை அமைப்பிற்கு கொடுத்தார். இயக்கம் வேகமாக வளர ஆரம்பித்தது.


முஸ்லிம்களுக்கோ பெரும் வேதனையை கொடுத்தது இவர்களுடைய வளர்ச்சி. அமைப்பின் கொள்கைகள் இஸ்லாமிற்கு முரணானது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இஸ்லாமிய தேசிய அமைப்பை சேர்ந்தவர்கள் முஸ்லிம்களே அல்ல என்று அறிவித்தனர். ஆனால் இதையெல்லாம் கேட்க கூடிய நிலையில் எலிஜா அவர்கள் இல்லை. 

எவ்வளவு நாள் தான் பொய்யான முகம் நிலைத்திருக்கும்?

எந்த மால்கம் எக்ஸ் அந்த அமைப்பு எழுச்சி பெற உதவியாய் இருந்தாரோ, அதே எக்ஸ், 1963 ஆம் ஆண்டு அந்த அமைப்பிலிருந்து வெளியேறி தூய இஸ்லாமின்பால் வந்து மாபெரும் அதிர்ச்சியை அவர்களுக்கு தந்தார். 

மால்கம் எக்ஸ் அவர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டது அவர் சென்ற ஹஜ் யாத்திரை தான்.

அங்கு பலதரப்பட்ட மக்களும் ஒன்றாக, நிற பேதம் பார்க்காமல் சகோதரர்களாய் பழகியது அவருக்குள் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட வித்திட்டது. ஹஜ் பயணத்திற்கு பிறகு, வெள்ளையர்கள் மீதான அவருடைய எண்ணம் மாறியது. எல்லோரும் ஒன்றே என்ற எண்ணம் பிறந்தது. இது போன்ற எண்ணங்கள் இஸ்லாமிய தேசிய அமைப்பின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறானது. வெள்ளையர்களை தாழ்ந்தவர்களாகவே பார்த்து பழக்கப்பட்டவர்கள் அவர்கள்.

மால்கம் எக்ஸ், இஸ்லாமிய தேசிய அமைப்பின் நடவடிக்கைகள் இஸ்லாமிற்கு புறம்பானவை என்று கூறினார். ஆனால் கறுப்பினத்தவர் மீதான அடக்குமுறைகளுக்கு தொடர்ந்து பாடுபடுவேன் என்று அறிவித்தார்.

அவருடைய விலகல் அந்த அமைப்புக்கு பலத்த அடியாக அமைந்தது. 

அதே போல, அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை வீரரான முஹம்மது அலி, நம் தலைமுறையின் மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான இமாம் சிராஜ் வஹாஜ் என்று எண்ணற்றவர்கள் தொடர்ந்து வெளியேறி சத்தியமார்க்கத்தின்பால் தங்களை இணைத்துக்கொண்டனர்.


இப்படி பல பேர் அமைப்பை விட்டு வெளியேறுவதற்கு பின்னணியில் இருந்தவர், இன்று முஸ்லிம் அமெரிக்கர்களால் பெரிதும் மதிக்கப்படும் நபர்களில் முக்கியமானவர். அவர் செய்த காரியம் நிச்சயம் புரட்சிகரமானது. 

இஸ்லாமிய தேசிய அமைப்பின் 45 ஆண்டு கால வாழ்வை, 1975 ஆம் ஆண்டு முடித்து வைத்தவர் அவர். இஸ்லாமிய தேசிய அமைப்பை கலைத்து அதை இஸ்லாமுடன் ஐக்கியப்படுத்தியவர் அவர்.

அந்த நபர் வேறு யாருமல்ல...நபி என்று சொல்லப்பட்ட எலிஜா முஹம்மது அவர்களின் மகனான வாரித் தீன் முஹம்மது (Warith Deen Mohammed) தான் அவர். 


தன் தந்தையினுடைய செயல்பாடுகள், இஸ்லாமிற்கு எதிராக இருப்பதாக தொடர்ந்து போராடி வந்து, எலிஜா அவர்களின் மறைவுக்கு பிறகு அந்த அமைப்பை கலைத்தே விட்டார்.

சிறு வயதிலிருந்தே பர்த் முஹம்மது அவர்களின் தெய்வத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தவர் வாரித். அதன் காரணமாக சிலமுறை அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார். அமெரிக்க இராணுவத்தில் பணியாற்ற மறுத்து தன் இருபத்தி எட்டாம் வயதில் சிறைக்குச் சென்றார்.

அந்த சிறைச்சாலை தான் அவருடைய வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

குரானை நன்கு ஆராய்ந்து தூய இஸ்லாமை அவர் அறிந்து கொண்டது அந்த பதினான்கு மாத சிறை வாழ்க்கையில் தான். சிறையை விட்டு வெளியே வந்த போது, இஸ்லாமிய தேசிய அமைப்பு தன் கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும், இஸ்லாமின்பால் வர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். வெள்ளையர்களையும் சமமாக பார்க்க வேண்டுமென்று கூறினார்.

இவருடைய தாவாஹ் தான் மால்கம் எக்ஸ் அவர்களையும், இன்னும் பலரையும் அமைப்பிலிருந்து வெளியேற வைத்தது.

அவருடைய தந்தையின் மரணத்திற்கு பிறகு, அதாவது, 1975 ஆம் ஆண்டு அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றார். அழகிய முறையில் இஸ்லாத்தை பற்றி எடுத்துக் கூறி அமைப்பின் உறுப்பினர்களை இஸ்லாத்தின்பால் கொண்டு வந்தார். இஸ்லாமிய தேசிய அமைப்பு (Nation of Islam), முஸ்லிம் அமெரிக்கர்கள் சங்கம் (American Society of Muslims) என்று பெயர் மாறி சத்தியமார்க்கத்தின்பால் வந்தது.

ஆக, முஸ்லிம் அமெரிக்கர்களை பொறுத்தவரை வாரித் தீன் முஹம்மது அவர்கள், ஒரு மிகச் சிறந்த தலைவராக பார்க்கப்படுகிறார். இஸ்லாமிய நாடுகள் பலவற்றால் கவுரவிக்கபட்டவர். 2008ல், இவரது மறைவுக்கு பிறகு, அமெரிக்காவின் முக்கிய இஸ்லாமிய அமைப்பான CAIR (Council on American-Islamic relations) இவரை, "அமெரிக்காவின் இமாம்" என்று அழைத்து இவருக்கு பெருமை சேர்த்தது.

வாரித் தீன் அவர்கள், சுமார் 25 லட்சம் மக்களை தூய இஸ்லாமின்பால் கொண்டு வந்ததாக ஒரு ஆய்வு சொல்லுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய தேசிய அமைப்பை சார்ந்தவர்கள் ஆவர்.  

1970 களின் பிற்பகுதியில் Nation of Islam கலைக்கப்பட்டாலும் பிரச்சனை முழுவதுமாக முடிந்து விடவில்லை. வாரித் தீன் அவர்களின் முடிவை ஏற்றுக்கொள்ளாத சிலர், 1981 ஆம் ஆண்டு மறுபடியும் இஸ்லாமிய தேசிய அமைப்பை நிறுவினர். லூயிஸ் பராகான் (Louis Farrakhan) அதனுடைய தலைவராக பொறுப்பேற்றார்.

அன்றிலிருந்து இன்றுவரை அந்த அமைப்பு வீரியம் குறைந்த அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது. முன்பு போல அதற்கு முக்கியத்துவம் இருப்பதில்லை. அதுமட்டுமல்லாமல், இந்த அமைப்பினரை குறி வைத்து நடத்தப்படும் தாவாஹ் பணிகள் இந்த அமைப்பில் சேருபவர்களை எளிதில் இஸ்லாத்தின்பால் கொண்டு வந்துவிடுகின்றன.       

இதையெல்லாம் விட மேலாக, இஸ்லாமிய தேசிய அமைப்பும் சிறுக சிறுக இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

தங்களுடைய பல தவறான கொள்கைகளை ஒவ்வொன்றாக களைந்து விட்டு இஸ்லாத்தின்பால் வந்து கொண்டிருக்கின்றனர்.    

2000 ஆம் ஆண்டு, அமைப்பின் தலைவரான பராகான் அவர்கள் "வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனின் இறுதி தூதர்" என்று அறிவித்து வியப்பை ஏற்படுத்தினார்.   

இப்பொழுதெல்லாம் இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தொழ, நோன்பு நோற்க ஆரம்பித்திருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்.     

"...சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்தே போகும்..."  - குர்ஆன் 17:81  

அமெரிக்காவின் இஸ்லாமிய அறிஞர்கள் தொடர்ச்சியாக லூயிஸ் பராகான் அவர்களை சந்தித்து தான் வருகின்றனர். தாவாஹ் பணியை செய்து கொண்டுதான் இருக்கின்றனர். 

இன்ஷா அல்லாஹ், கூடிய விரைவில் இறைவன் இந்த அமைப்பினரை முழுவதுமாக இஸ்லாத்தின்பால் கொண்டுவர வேண்டுமென்று துவாச்செய்வோம்.

அதுபோல, யாரெல்லாம் தூய இஸ்லாத்தை விட்டு வெளியே இருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் இஸ்லாத்தின்பால் கூடிய விரைவில் இறைவன் கொண்டு வருவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

References:
1. Brief history on the origin of Nation of Islam - noi.org
2. Nation of Islam in the Balance of islam - Islam online.
3. Nation of Islam FAQs - beleivenet.com
4. Differences between Islam and Nation of Islam - differencebetween.com
5. Malcolm X - malcolmx.com
6. Muhammed Ali - ali.com
7. Warith Deen Muhammed, Elijah Muhammed, Malcolm X, Siraj Wahhaj, Muhammed Ali - wikipedia. 

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.  
     

Monday, October 3, 2011

நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..

4 கருத்துக்கள்

    ஓரிறையின் நற்பெயரால்.,
           
தம் கொள்கைப்படி வாழ மக்களை பின்பற்ற அழைக்கும் ஒரு மதமோ அல்லது மதம் சாரா இயக்கங்களோ தங்களுக்கென ஒரு கோட்பாட்டை ஒரு வரையறை செய்திருக்க வேண்டியது அவசியம். அக்கோட்பாடு சரியானதா அல்லது தவறானதா என்பது அதுக்குறித்து விவாதிக்க படும்போது அறிந்துக்கொள்ளலாம். 

       ஆனால் கடவுளை ஏற்றுக்கொள்ளாமல் அதை எதிர்க்கும் நாத்திகம் என்ற ஒரு கொள்கை(?) கடவுள் மறுப்பு அல்லது எதிர்ப்பு என்ற பிரதான ஒரு காரணத்தை மட்டுமே முன்னிருத்தி இச்சமுகத்தில் தன்னை ஒரு இயக்கமாக நிறுவ முயல்கிறது, கம்யூனிஷ மற்றும் திராவிட இயக்க சாயல் இவற்றில் இருந்தாலும் உலகம் தழுவிய அளவில் ஒரே கொள்கை கோட்பாடுகளை கொண்ட ஒரு பேரியக்கமாக நாத்திகம் இல்லை., கொள்கைரீதியில் தனக்கென வரையறை கொள்ளாவிட்டாலும் வாழ்வியல் முறையிலாவது தனக்கென தனிச்சட்டங்கள் ஏற்படுத்தி இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.,  

        மதங்கள் முன்னிறுத்தும் சடங்கு சம்பிரதாயங்கள் போலியானது என புறந்தள்ளி வாழ்க்கைக்கும் வாதத்திற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எந்த ஒரு செய்கையும் நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்துபவர்களே நாத்திகர்கள் என இச்சமுகத்தில் அவர்களுக்கு ஒரு குறீயிடு உண்டு. ஆனால் எதை மதங்கள் மேற்கொள்வதாக விமர்சித்து அதை விடுத்தார்களோ அத்தகைய செயலை பகுத்தறிவு போர்வையில் தமது அன்றாட நடைமுறை வாழ்வில் அவர்கள் மேற்கொள்வது தான் அபத்தமானது... ஏன் அறிவுக்கு பொருந்தாததும் கூட., அவற்றில் ஓரிரண்டு குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

 வணக்கம்???

    பொதுவாக மதங்களின் அடிப்படை கொள்கை "இறையை வணங்குதல்" ஆகும். ஆக வணங்குதல் அவசியமற்ற ஒன்று என்று அசெய்கையே எதிர்க்கும் நாத்திகர்கள்., அச்செயலுக்கு சொல் வடிவம் கொடுத்து ஏற்பது தான் நடை முறை வாழ்க்கையில் நாத்திகம் கொள்ளும் நூறு சதவீகித தெளிவான முரண்பாடு.

         இஸ்லாம் தவிர்த்த ஏனைய மதங்களை பின்பற்றுவோர் சர்வசாதாரணமாக ஒருவரை ஒருவர் சந்திக்கின்ற போது பெரும்பாலும் "வணக்கம்" என்ற வார்த்தையையே உபயோகப்படுத்துகிறார்கள். இது அறிமுகப்படுத்தும்போது வாழ்த்துச்செய்தியாக கொண்டாலும் இது இறைவனுக்கு மட்டுமே உரித்தாக வேண்டிய ஒரு செயல் வடிவ வார்த்தை.

   சரி மதங்களை பின்பற்றோர் தான் தவறாக இறைவனுக்கு மட்டுமே கொடுக்கவேண்டிய கண்ணியத்தை சக மனிதர்கள் மத்தியில் சொல்கிறார்களென்றால் பகுத்தறிவில் செயல்படும் நாத்திகர்களும் அதே வார்த்தையே சொல்வது தான் ஏற்றுக்கொள்ள முடியாதது.

        ஏனெனில் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொள்ளும் போது உங்கள் மீது அமைதியும் சமாதானமும் நிலவட்டும் என்று சொல்வதே ஏற்புடைய வார்த்தையாக இருக்கும் ஏனெனில் எந்த ஒரு மனிதருக்கும் அமைதி மற்றும் சமாதானம் என்பது எல்லா காலங்களிலும் தேவையான ஒன்று. மேலும் இவ்வாக்கியத்தை ஒருவரை சந்திக்கும் எல்லா தருணங்களிலும் உபயோகப்படுத்தலாம். ஆக மேற்கண்ட வரிகளே மனித அறிமுக பொழுதுகளில் சொல்வது ஏற்புடையதும் பிறிதொருவர் மேல் கொண்ட அக்கறைக்கு உரித்தான வார்த்தையாக இருக்கும்.,

  எனினும் அவ்வார்த்தை ஒரு மார்க்க/ மத ரீதியான அடையாளத்தை ஏற்படுத்தும் என குறை சொன்னாலும் பரவாயில்லை., உடன்பாட்டு முறையில் அதை ஏற்றுக்கொள்வோம்., மேற்கண்ட வார்த்தைகள் சொல்வது வேண்டாம் என்ற போதிலும் குறைந்த பட்சம் நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்பதே ஏற்புடைய வார்த்தையாகும்.

             வணக்கம் என்ற வார்த்தையின் விளக்கம் குறித்து சற்று ஆராய்ந்தால் இவ்வார்த்தை தமிழ் மொழியில் இருவேறு அர்த்ததில் கையாளப்படவில்லை., மேலும் இதற்கு வேறு மறைமுக பொருளும் இல்லை., இவ்வார்த்தை வணங்குதல் அல்லது வணங்கப்படுதலை மட்டுமே மையப்படுத்திய ஒரு  இணைப்பு வார்த்தையாகும்-  தமிழ் பொருளகராதியில் இவ்வார்த்தையின் பொருள் குறித்து பார்த்தாலும் வணக்கம் என்ற தனிச்சொல்லுக்கு எந்தவித அர்த்தமும் கிடையாது வேறு வினை/பெயர்ச்சொல்லுடன் சேரும் போதே பொருள்கொள்ளப்படுகிறது. உதாரணமாக வணக்கம் தெரிவிக்கிறேன்., உன்னையே வணங்குகிறேன்.. இப்படி.,

    ஆக எதிரில் நிற்கும் ஒருவரை சுட்டி "வணக்கம் என்ற சொல்லை உபயோகித்தால் அச்சொல் அர்த்தம் பெற்று அவர் வணக்கத்திற்குரியவராக பொருள்படும். எதையும் அறிவுரீதியாக அணுகி சம்பிரதாயங்களை மறுக்கும் நாத்திகம், அடிபணிதலுக்குறிய பிரத்தியேகமான சொல்லாடல் வார்த்தையை பயன்படுத்துவது ஏன்? அதுவும் அவர்களின் அடிப்படைக்கு கூற்றுக்கு எதிராக அவ்வார்த்தை இருந்தும்..?

   இல்லை...இல்லை வணக்கம் என்ற வார்த்தையை வணங்குதல் என்ற பொருளில் பயன்படுத்த வில்லை மாறாக ஒருவரின் அறிமுக துவக்கத்தில் வெறும் வழக்கு சொல்லாக தான் பயன்படுத்துகிறோம் என்றால்., மேற்குறிப்பிட்ட அற்புத முகமனோடு அனேக வார்த்தைகள் அழகிய தமிழில் அணிவத்திருக்க வெறுமனே வாய் உச்சரிப்பிற்காக பொருளற்ற வெற்று வார்த்தையே பயன்படுத்த வேண்டிய அவசியமென்னே?

அடுத்து, பிறந்த நாள் கொண்டாட்டம்.

      மதம் தவிர்த்தும் ஏனைய இயக்கம் சாந்தவர்களாலும் பிறந்த நாள் கொண்டாடுவதை நாம் அன்றாடம் வாழ்வில் பார்த்து தான் வருகிறோம்., அதிலும் இறந்த தலைவர்களுக்கு மாலை அணிவித்து அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் வழக்கம் தேவையா இல்லையா என்பதை விட முதலில் அது அறிவுக்கு பொருத்தமானதா...? (( இங்கு எல்லோரையும் குறித்து பேசவில்லை, பகுத்தறிவு பேசும் நாத்திகர்களை குறித்தே ))

      ஏனெனில் ஒருவர் இறந்தவுடனேயே அவரது வாழ் நாள் வரையறுக்கப்பட்டு அவரது ஆயூட்காலமும் கணக்கிடப்பட்டு அவரது செய்கைகள் முடிவுறுகின்றன. அப்படியிருக்கும் போது இறந்த மனிதர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதென்பது எப்படி சாத்தியமாகும்..? வருடா வருடம் பிறந்த நாள் என்ற பெயரில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் சடங்கு தமிழகத்தில் திராவிட கழக பெயரில் நாத்திகர்கள் நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

   உயிருள்ளவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது தேவையில்லையென்ற போதிலும் அது அவர்களுக்கு மன மகிழ்ச்சியளிக்கும் என்ற விதத்திலாவது அச்செய்கையை நியாயப்படுத்தலாம்., ஆனால் இறந்தவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதற்கு பெயர் தானா.. பகுத்தறிவு???

      இச்செயலை நியாயப்படுத்த, நாங்கள் பெரியார் புரிந்த சேவைக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கும் முகமே அவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறோம் என சமாதானம் சொல்கின்றனர்., ஆனால் ஒரு மனிதர் மேற்கொண்ட சேவைக்கு கொடுக்கும் கண்ணியத்தின் வழிமுறை அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவிப்பதிலா இருக்கிறது..? அதுவும் எதை வணங்கும் பொருளாக ஆக்க வேண்டாம் என்று மறுத்தாரோ அத்தகைய கல்லிலே அவரை வடித்து மரியாதை எனும் பெயரில் வருடத்திற்கு ஒரு முறை மாலை அணிவிப்பதை சடங்காக செய்து வருவதுதான் உச்சக்கட்ட கொடுமை.,

     ஆக இறந்த ஒருவரை கண்ணியப்படுத்துதல் என்பது அவரது எண்ணத்தை பூர்த்தி செய்வது , அல்லது அவரது சொல்லுக்கு செயல்வடிவம் கொடுப்பதில் இருக்கிறது., இன்னும் அதிகப்பட்சமாக அவர் பெயரில் பொது மக்களின் நலத்திற்கு தேவையானவற்றை ஏற்படுத்துவது மற்றும் உருவாக்குவது அவர் கொணர்ந்த கொள்கைக்கு மதிப்பு கொடுக்கும் விதமாக அமையும். மாறாக "மாலை அணிவிப்பதில் மாற்றமடைய போவதில்லை மரித்தவரின் மரியாதை.!"
 
          இச்செயலை நாடு தழுவிய அளவில் உள்ள அனைத்து நாத்திகர்களும் செய்யவில்லை மாறாக சில "இயக்க தோழர்கள்" மட்டுமே செய்வதாக சொன்னாலும் .இஃது அறிவுக்கு பொருந்தாத இச்செயலை ஏன் ஏனைய நாத்திகர்கள் எதிர்க்கவில்லை... குறைந்த பட்சம் விமர்சிக்கக்கூட வில்லை?

ஆக,     
  • 1. இறந்தவருக்கு பிறந்த நாள் கொண்டாடுவதும்
  • 2. ஒருவரை கண்ணியப்படுத்த அவரது உருவப்படத்திற்கு அல்லது சிலைக்கு மாலை அணிவிப்பதும்
நடைமுறை வாழ்வில் நாத்திகம் சந்திக்கும் இரண்டாவது தெளிவான முரண்பாடு.  

எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே!
-தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973
(This quote taken from tamil oviya blogspot)

அதுப்போல, பெரியாரின் போதனைகளை பின்பற்றுவோரை குறித்து இங்கு நான் விமர்சிக்க வில்லை மாறாக அவரது பெயரை வைத்து பகுத்தறிவுக்கு பொருத்தமில்லாத செய்கைகளின் ஈடுபடும் நாத்திகர்களை குறித்தே இங்கு விமர்சனம்.!

சார்ட்டா சொல்லணும்னா...

   மதங்களின் போலி சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை மறுக்கும் நாத்திகர்கள் அதே, மதம் சார்ந்த நபர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏன்? அதுவும் பகுத்தறிவிற்கு பொருத்தமில்லாத வகையில் இருந்தும் கூட???

இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் - இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை. (39:23)
                                                                             அல்லாஹ் நன்கு அறிந்தவன்.