Saturday, September 24, 2011

'அல்லாஹ்வின் கயிறா'..? அதல்லாத 'ஒற்றுமை'யா..? எது வேண்டும்..?

19 கருத்துக்கள்
சென்ற வருடம் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வோர் வாரமும், இரண்டு நாள், இரவு அரை மணி நேரம் "ஒற்றுமை வேண்டி" ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் ஒற்றுமைப்படுத்தி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான ஒரே ஒரு "முஸ்லிம் இயக்கமாக" உருவாக்கிவிடுவது என்ற ஒரு நல்ல நோக்கத்தில் அனைத்து இயக்கங்களையும் தனித்தனியாக அழைத்து "ஒன்று படுங்களேன்" என்று மிகுந்த பொருட்செலவில் ஒற்றுமைக்கான அறிவுரை கூறப்பட்டது. பலவாரங்கள் நான் அதை பார்த்து வந்தேன்.  இறுதியில் விளைவு பூஜ்யம்..! ஏன்..? எதனால்..? எப்படி இந்த ஒற்றுமை முயற்சி நம் இயக்கங்களிடையே பலனளிக்காமல் போனது..? என்ன தவறு நேர்ந்தது இதில்..? ஏனோ இதை யாருமே சிந்திக்கவில்லை..! 'எதனால் பிரிந்தனர்', 'அதற்கு என்ன காரணம்', 'அதனை இப்போது தீர்க்க வழியுண்டா'... என்றெல்லாம் விவாதிக்காமல், வெறுமனே "ஒன்று படுங்கள்"  "ஒன்று படுங்கள்" எனப்பட்டனர். அதனால், யாருமே ஒன்று படவில்லை. ஆனாலும், அதேபோன்ற "ஒற்றுமை வேண்டும்" என்ற கோஷம் மட்டும் இன்னும் தொடரத்தான் செய்கிறது.

சகோ..! நான் ஒற்றுமைக்கு எதிரானவன் அல்லன். அது ரொம்ப அவசியம் நமக்கு. ஆனால், அதை உண்டாக்க நாமாக நம் இஷ்டத்துக்கு ஏனோ தானோ என்று முயற்சி செய்யாமல்... இவ்விஷயத்தில் அல்லாஹ் சுபஹானஹுதஆலாவும் அவனின் திருத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் காட்டித்தந்த வழியில் முயற்சிப்பதே நம்மிடையே ஒற்றுமை ஏற்பட முழுப்பலனளிக்கும் என்று மிக உறுதியாக தெரிவிக்கவே இந்த பதிவு..!

70-களில் நம்மிடம் 'ஒற்றுமை' இருந்தது. இஸ்லாத்திற்கு எதிரான எல்லாவித பித்அத், அனாச்சாரம், ஷிர்க் மற்றும் மூட நம்பிக்கைகளிலும் நம்மிடம் 'ஒற்றுமை' இருந்தது..! அன்று அரசியலிலும் கூட ஒரே கட்சி என்ற 'ஒற்றுமை'தான் நிலவியது..! காரணம், அப்போது மக்கள் அனைவரும், பள்ளி இமாம்களும் பெரியவர்களும் என்ன சொல்கிறார்களோ அதையே இஸ்லாம் என்று நம்பி வந்த காலம். 'அவர்கள் சொல்வது சரிதானா' என்று உரசிப்பார்க்க இப்போதுள்ளது போன்று தர்ஜுமாக்கள் எனும் உரைகல் அப்போது இல்லை.

இந்நிலையில்தான், 80-களின் மத்தியில்  மதஹப்களுக்கு அப்பாற்பட்ட உண்மையான இஸ்லாம் பற்றி மதரசாவில் தான் கசடற கற்ற கல்வியை கூற முற்பட்ட ஒரு சிலரால்தான் மேற்படி 'ஒற்றுமைக்கு' வேட்டு வைக்கப்பட்டது. அதிலிருந்து மக்களை காக்க, அப்போது... ஜும்மா பயான்கள், ஆடியோ கேசட்டுகள், வீதி மேடைகள், சந்தனக்கூடு, கந்தூரி, மீலாது விழாக்கள்... என இங்கெல்லாம் ''ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று ஒரு திருக்குர்ஆன் வசனம் கூறுவதாக  தமிழகத்தில் நீண்ட காலமாக  தவறாக சொல்லப்பட்டு வந்தது. அவர்கள் கூறும் வசனம் எது என்று தேடிப்பார்த்தால்... அது இதுதான்..!

அல்லாஹ்வின்(ஒற்றுமை எனும் )கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள். அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே, அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள். நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே அல்லாஹ் தனது சான்றுகளை தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன்- 3: 103)

ஆனால், மேற்கண்ட  வசனத்தில் பிராக்கட் போட்டு 'ஒற்றுமை'யை வலுக்கட்டாயமாக உள்ளே சொறுகித்தான் நோட்டிஸ் அடித்து பிரச்சாரம் புரிந்தார்கள். 'நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என்றும் இதனடிப்படையில் வாதிட்டு வந்தனர். (இன்னும் இப்படி வெகுசிலர் உள்ளனர்)

"ஓர் ஊரில் அனைவரும் ஒற்றுமையாக இஸ்லாம் தடுத்த ஒரு தீமையை செய்தால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்த தீமையை செய்யுமாறு அல்லாஹ் எப்படி கூறுவான்" என்று சிந்தித்த மக்கள் இதுவல்ல ஒற்றுமை என்று தெளியத்துவங்கினர். பிற்காலத்தில் குர்ஆன் தர்ஜுமாக்கள் வந்தவுடன், ஒற்றுமை பற்றியான அந்த வசனத்தை தேடத்துவங்கினர். அதில், ''அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று தான் அவ்வசனம் கூறுவதை கண்டனர்.


இந்த வசனத்தில், எல்லாம் வல்ல மகத்தான இரட்சகன், "அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்" என்றுதான் கட்டளையிடுகின்றான். மேலும் அல்லாஹ்வின் கயிறு என்பது திருக்குர்ஆனும், நபிமொழிகளும் தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் பற்றி பிடியுங்கள் என்று இயம்புகின்றது என்றும்...

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொள்கிறாரோ, அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் – அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 2;256)

எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ, அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டான். இன்னும் காரியங்களின் முடிவெல்லாம் அல்லாஹ்விடமேயுள்ளது. (அல்குர்ஆன்: 31;22)

...... குர்ஆனில் ஆல்லாஹ்வின் வார்த்தைகள் மூலமே கயிறு என்றால் எது என்று தெளிவும் பெற்றனர்.


எனவே, 'அல்லாஹ்வின் கயிறை எல்லோரும் பற்றிப்பிடித்தால்' அதாவது... "திருக்குர்ஆனையும், நபிமொழிகளையும் பின்பற்றி தீமையை விலக்கி நன்மைகள் செய்து வாழ்ந்தால் மட்டுமே முஸ்லிம்களிடையே ஒற்றுமை உருவாகும்" என்று இங்கே தெளிவாக புரிகிறது.

ஆனால், "குர்ஆன், ஹதீஸில் உள்ளவைகளை எடுத்துச்சொல்வதால் உண்மையில் ஒற்றுமை கெடுகின்றது; எனவே அதைச் சொல்லாதீர்கள்" என்று இஸ்லாத்திற்கு விரோதமான தீய செயல்களில் இருப்போர் அதற்கு நேர் மாறான விளக்கத்தை தருகின்றனர். இது ஓர் அரசியல் சூழ்ச்சி சகோ..! சரியான  விளக்கத்தை  விளக்கி அதை  சரியாக  விளங்கினால் எப்படி  குலையும் ஒற்றுமை..?

ஆனால், 'அல்லாஹ்வின் கயிற்றை' நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப் பிடிக்க முன் வராவிட்டால் நமது பிடியை நாம் விட்டு விடாமல், அவர்களையும் பிடிக்குமாறு, நன்மையை ஏவி அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும். அவர்கள் மீறினால், அவர்கள் செய்யும் தீமையை தடுக்கவும் வேண்டும். ஹி...ஹி... இதை நானாக சொல்ல வில்லை சகோ..! அல்லாஹ்வே அந்த வசனத்துக்கு  அடுத்து சொல்லிக்கொண்டே செல்வதை நீங்களே படியுங்கள்..!

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.  (அல்குர்ஆன்- 3 : 104)  

இதுதான் தெளிவான சான்று. இதைப்பின்பற்றி இதன்படி செய்யாவிட்டால் என்னவாம்..? நரகக்கேடாம்..! இதையும் நான் சொல்லலீங்க..!

தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப்பிரிந்து விட்டோரைப்போல் ஆகாதீர்கள்! அவர்களுக்கே கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன்- 3 : 105) 

நன்மையை ஏவினால் ஒற்றுமை குலையாது. ஆனால், தீமையை தடுத்தால் ஒற்றுமை குலையும். பகைமையும் வெறுப்பும் நமக்குள் உண்டாக்கும். இப்படியெல்லாம் ஒற்றுமையை குலைப்பது சரியா..? --சந்தேகம் வருகிறதா..?

'உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும்வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது' என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன்- 60 : 4 -ல் முற்பகுதி) 

அப்பாடா..! இப்போ ஓகேவா..? இனி வேறு ஏதேனும் உங்களுக்கு தயக்கம் உண்டா "ஒற்றுமையை குலைக்கும்" ஏகத்துவ வேலையிலே..? 

ஹலோ..! ஹலோ..! சகோ.ஆஷிக்..! நிறுத்துங்கள். அந்த வசனம் இறைநிராகரிப்பாளர்கள் சம்பந்தப்பட்டது. அது முஸ்லிம்களிடத்தில் எங்ஙனம் பொருந்தும்..? 

அட..! யாருங்க அது..? 'இணைவைத்தல்' எவ்வளவு பெரிய பாவம்..? முஸ்லிம்களே அதை செய்துவிட்டால், அப்புறம் அவர்கள் யார்..?

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இனை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார் (அல்குர்ஆன் 4: 48)

அல்லாஹ்வுக்கு இனை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். (அல்குர்ஆன்: 5:72)

உமக்குக் கட்டளையிடப் பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (அல்குர்ஆன்- 15 : 94)

அதெல்லாம் சரிதான் சகோ..! இணை கற்பிக்காமல் மற்ற பாவங்களை செய்வோரிடம் எப்படி சண்டை போட்டு ஒற்றுமையை குலைக்க முடியும்..?

அப்படியா..? கொஞ்சம் இருங்கள்... இதையும் தொடர்ந்து படியுங்கள்..!

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடிய சமுதாயத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போர் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். (அல்குர்ஆன்: 58:22)

இங்கே...  "அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போர்" என்றால்.. என்ன அர்த்தம்..? குர்ஆன் மற்றும் நபிவழியை புறக்கணித்து அல்லாஹ்வின் கயிற்றை பற்றாமல் விட்டோர்தானே..? ஆக, அவர்கள் நம் குடும்பதாராகவே இருந்தாலும் நமக்கு "அல்லாஹ்வின் கயிறு தானே" முக்கியம் சகோ..? ஒற்றுமை அல்லவே..? சரிதானே..? ஆக, "ஒற்றுமையை குலைக்க" தயாராகுங்கள்..! :-)

இப்படி  'அல்லாஹ்வின் கயிற்றை' பற்றிப்பிடிப்போரை பலர் ஆளுக்கு ஒரு பிரச்சாரம் செய்து குழப்பி வெவ்வேறு திசைகளில் இழுத்துச் செல்கின்றனரே..? இப்போது நாம் யாரை-எந்த இயக்கத்தை பின்பற்றுவது..? ஒருவருக்கொருவர் முரணாக அல்லவா கூறுகின்றனர்..? 

இப்படியெல்லாம் குழப்பமே வேண்டாம் சகோ..! மனிதனை படைத்து 'முதல் மனிதஜோடியே இவ்வுலகில் எப்படி வாழ்வது' என்பதற்கு இஸ்லாம் எனும்  வாழ்வியல் நெறியை (catalog - manual) கூடவே கொடுத்துதானே இறைவன் இவ்வுலகிற்கு அனுப்பி வைத்தான்..? நம்மை மட்டும் இப்படி அனாமத்தாக பதிலின்றி விட்டுவிடுவானா..?

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்கள் ஆக்கி பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! (அல்குர்ஆன்- 7:3)

ஆக, அல்லாஹ் இங்கே சொல்வது என்ன..? நாம் குர்ஆன் மற்றும் நபி வழிகள் இவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டுமாம். எந்த அறிஞறையோ, பெரியாரையோ, ஆசிரியரையோ அல்லது இயக்கத்தையோ அமைப்பையோ அதற்கு பொறுப்பாக்கி பின்பற்றக்கூடாதாம்.

ஆனால், எனக்கு அந்த அளவுக்கு இஸ்லாமிய அறிவு இல்லையே..? நான் மவுலவி இல்லையே..? ஆலிம் இல்லையே..? பின் எப்படி குர்ஆன்  நபிவழி அறிவது..?

இப்படித்தான் நாம் நம்மிடம் இல்லாத இஸ்லாமிய அறிவிற்காக ஒவ்வொரு உலமாவாக கேள்வி கேட்டுக்கொண்டு பதிலுக்காக விளக்கத்திற்காக தொங்கிக்கொண்டு இருக்கிறோம். 

ஆலிம்/மவுலவி :- உங்களை யாருங்க இப்படி எல்லாம் ஆக வேண்டாம் என்று தடுத்தது..? டாக்டர் ஆகிறீங்க.. இஞ்சிநியர் ஆகிறீங்க.. கலெக்டர் ஆகிறீங்க.. ஆனால், ஆலிம் மட்டும் ஆக மாட்டீங்களா..? 

மற்றதெல்லாம் ஆகணும்னா அதுக்கு படிப்பு மட்டும் போதாது. சான்றிதழ் வேண்டும். உதாரணமாக, ஒரு அஞ்சு வருடம் வீட்டில் அமர்ந்து கடும் பிரயத்தனப்பட்டு மூன்று வருட சட்டக்கல்வியை கரைத்து குடித்துவிட உங்களால் முடியும்தானே..? அந்த அறிவைக்கொண்டு நீங்கள் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் அருமையாக வழக்காடி வெல்ல முடியுமா..? அங்கே BL டிகிரி சர்டிஃபிகேட் அல்லவா கேட்பார்கள். அதை வைத்து பார் கவுன்சிலில் பதிவும் பண்ணி இருக்க வேண்டுமே..? 

ஆனால், மறுமையில் அல்லாஹ்விடம் ஆலிம் ஆகவேண்டுமானால்... "ஏழு வருஷம் மதரசாவில் படித்த பட்டம் எங்கே" என்று அல்லாஹ் கேட்பான் என்றா நினைக்கிறீர்கள்.? அல்லது, ஏழு வருஷம் படித்து பட்டம் பெற்றும் அனைத்தையும் மறந்து விட்டால் அவர் அல்லாஹ்விடம் ஆலிம் ஆகுவாரா..? சஹாபாக்கள் எந்த மதரசாவில் படித்தனர்..? ஆக, ஆலிம் என்றால் அறிந்தவர்-கற்றவர்..! அவ்ளோதான்.

சுவர்க்கம் அடைதல் மட்டுமே நம் இலட்சியம் என்றால், யாரும் ஆலிம் ஆகலாமே..! அதற்கு நாம் இஸ்லாமிய மார்க்கத்தை கசடற கற்க வேண்டும்..! கடுமையாக நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டும். கற்றபடி வாழ வேண்டும். நாமே நமக்கான - நம் இஸ்லாமிய வாழ்க்கைக்கான ஃபத்வாக்களை நமக்கு  நாமே வழங்கிக்கொள்ளும் அளவுக்கு உறுதியான தெளிவான அறிவை பெற வேண்டும்.

இப்படியாக... நன்மையை ஏவி தீமையை தடுத்து நல்லமல்கள் செய்து ஏக இறைவனை மட்டுமே வணங்கி பித்அத்களை புறக்கணித்து நபிவழியில் வாழ்ந்தால்... அப்படி வாழும் நாம் யார்..? நமது பெயர் என்ன..?

என்னது... தவ்ஹீத்வாதியா..? ஏகத்துவவாதியா..? அது நாமே நமக்கு வச்சிக்கிட்ட பெயர்..! அந்த பெயர் வேண்டாம். ஏதோ நாம் முஸ்லிம் அல்லாத வேறொரு பிரிவினர் என்பது போல ஆகிறது..! இப்படி வாழும் நமக்கு  ஒரு பெயர் அல்லாஹ் வைத்திருக்கிறான்..! அதைக்கொண்டே நம்மை அழைத்துக்கொள்வோம். அது என்ன..?

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்னரும் இதிலும் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். (அல்குர்ஆன்- 22:78-ல் இடைப்பகுதி)

ஆம்..! நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு முன்ன்ன்னர் முதல்மனிதர் நபி ஆதம் (அலை) முதலாக... இதோ இன்றைக்கும் "அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப்பிடித்து" வாழும் மக்களுக்கும் பெயர் முஸ்லிம்கள்தான்..! 

இப்படி வாழும் மக்கள் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் போதும், அப்படி தீமைகளில் மூழ்கி இருப்போரிடமிருந்து தம் இருப்பை பிரித்துக்காட்ட அல்லது அந்த தீமையை தடுக்கும் பணியில் உண்டாகும் எதிர்ப்பை களத்திலும், சட்டரீதியாக வழக்குகளிலும் சமாளிக்க, ஜனநாயக அரசியல் ரீதியாக தம் கருத்தை அரசுக்கு கொண்டு போக "ஒரு முஸ்லிம்களின் அமைப்பு" என்று ஒன்று இருத்தல் அவசியம் ஆகிறது.

அப்படி குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் ஓர் அமைப்பாக உருவாகி உண்டானோரில், பின்னாளில் மார்க்க விஷயங்களின் புரிதல்களிலோ, தாவா பணிக்காக அந்நிய நிதியை பெறுவதா-வேண்டாமா என்ற கருத்திலோ, அரசியலில் ஈடுபடலாமா வேண்டாமா என்ற முடிவிலோ, தம்மீதே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால் 'தான்தான்' என்ற ஈகோ காரணமாகவோ மேலும் மேலும் மேலும் பிரிந்து விட்டனர்..! ஆனால், அவர்கள் அனைவரும் 'தாம் அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப்பிடிப்போராக' இருக்கும் பட்சத்தில் தம்மை 'முஸ்லிம்கள்' என்றே அழைத்துக்கொள்ளுதல் மிக மிக அவசியம்.

அப்படி அவர்கள் 'அல்லாஹ்வின் கயிற்றை' பற்றிப்பிடிப்போராக இருந்திருந்தால் இவ்வுலக பிரச்சினைக்காக பிரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. இதில், 'யாரிடம் எங்கே தவறு' என்று அறிந்து, அலசி ஆராய்ந்து அதைக்கண்டு, உடன்பாடு கண்டு, பின் அதை களைந்து, அவர்களுக்குள் ஒன்றுபட வேண்டும். அப்படி ஒன்றுபடவில்லை என்றால்... அதற்கு சாத்தியமில்லை என்றால், ஒவ்வொரு முறையும் பிரிந்த இருவரில் ஒருவரிடம் தவறு இருப்பது உறுதி..! எந்த அமைப்பிடம் எந்த விஷயத்தில் தவறு உள்ளது என்று அறிந்து அதனை அந்த விஷயத்தில் நாம் புறக்கணிக்க வேண்டும்.

நான் எந்த அமைப்பிலும் இல்லை. ஆனால், எந்த அமைப்பு 'அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப்பிடித்து' இருப்பதாக என் இஸ்லாமிய அறிவு தீர்மாணிக்கிறதோ அவர்களின், 'நன்மையை ஏவி தீமையை தடுக்கும் செயல்'களில் என்னை தவறாது இணைத்துக்கொள்வேன். இயலாவிடின் அவற்றை செய்வோரை ஆதரிப்பேன். அச்சமயம் நான் இணையாத மற்ற இயக்கங்கள் குறித்து அவதூறு, பொய், புறம், கோல், வசைபாடுதல் இவற்றை செய்யவே மாட்டேன். 'இறந்த சகோதரனின் இறைச்சியை உண்பதல்லவா அது'..?

நான் அப்படி செய்தால்... அதுவே போதுமான சான்று பகரும்... நான் 'அல்லாஹ்வின் கயிற்றை' விட்டுவிட்டேன் என்று..! அதேநேரம் பிற இயக்கங்களின், குறிப்பாக தான் மட்டுமே தூய/சரியான இஸ்லாத்தை பிரச்சாரம் பண்ணுவதாக  ஒரு  இயக்கம்  சொல்லுமேயானால்,  அதன் தீமை/குற்றம் குறித்து  என்னிடம் தக்க தர்க்கமோ ஆதாரமோ இருந்தால், அதன் மீது நன்மையை ஏவி தீமையை தடுக்கும் வேலை எனக்கு உண்டு..! இதை செய்யும் போது அந்த விஷயத்தில் நாம் கற்றவராக 'அல்லாஹ்வின் கயிற்றை' விடாது பற்றியவராக- இறையச்சம் உடையவராக இருக்க வேண்டும்..!

இதேபோல ஒவ்வொருவரும் இஸ்லாமிய மார்க்க கல்வியை (குர்ஆன் & சுன்னா =அல்லாஹ்வின் கயிறு) கசடற கற்று அதன்படி தம் வாழ்க்கையினை இறையச்சத்துடன் அமைத்து அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப்பிடிப்பதன் மூலம் ஒன்றிணைந்தால் மட்டுமே இன்ஷாஅல்லாஹ் முஸ்லிம்களிடத்தில் ஒற்றுமை தானாகவே வரும்..! யாருடைய எந்த ஒற்றுமை கோஷத்துக்கும் முயற்சிக்கும் அவசியமே இலலாமல் இன்ஷாஅல்லாஹ் முஸ்லிம் களிடத்தில் ஒற்றுமை தானாக வந்தே தீரும்..! எனக்கிதில் சந்தேகமில்லை..!

இதுதான் உண்மையான ஒற்றுமை..!
பிரிக்கவே இயலாத ஒற்றுமை..! 
குழப்பமே இல்லாத ஒற்றுமை..! 
பிணக்குகளே வராத ஒற்றுமை..! 
நல்லோரின் ஒற்றுமை..! 
நபி (ஸல்) அவர்கள் காலத்து ஒற்றுமை..! 
முஸ்லிம்களின் ஒற்றுமை..!
இது ஏற்படும்போது... நம்மிடையே எந்த ஒரு பிரிவும், மதஹபும், அமைப்பும், இயக்கமும், பேரவையும், ஜமாஅத்தும், ஃபிரண்ட்டும், லீக்கும், கழகமும், கட்சியும், கொடிகளும் இருக்கவே இருக்காது..! அனைத்தும் அவசியமற்றதாகி ஒழிந்து விடும்..! முஸ்லிம் என்ற ஒரே ஒரு பெயர் மட்டுமே எஞ்சி நிற்கும்..!

ஆனால் அதுவரை, தமக்குள் கருத்து வேறுபாடு இருந்தால் அல்லாஹ் காட்டித்தந்த அழகிய முறையில் விவாதித்து தக்க முடிவுக்கு வருவதை விட்டுவிட்டு ஒருவரை ஒருவர் ஆபாசமாக அநாகரிகமாக அவதூறாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் கூறி திட்டிக்கொள்வது என்பது அல்லாஹ்வின் கயிற்றை விட்டு விலகி வெகுதூரம் சென்று விட்டதற்கு அடையாளம்.

இவ்வாறு சிலரை பார்த்தால், அவர்களிடம் அழகிய நல்லுபதேசம் கூறி நன்மையை ஏவி தீமையை விலக்கி நம்மால் இயன்ற அளவுக்கு 'அல்லாஹ்வின் கயிற்றை' அவர்கள் கைகளில் திணிக்க முயற்சிக்க வேண்டும். இறை அச்சமூட்டி எச்சரிக்கை செய்து நற்போதனைகள் செய்தால் அவற்றை கேட்காமல் இருக்க... இவர்கள் யாரும் ஈமான் இல்லாத சொன்னால் கேட்காத ரவுடிகள் இல்லை..! 

பிரச்சனை எங்கே ஆரம்பிக்கிறது  என்றால், கலிமா சொல்லி தம்மை முஸ்லிம் என அறிமுகப்படுத்திக்கொண்டு தொழுகையை நிலைநாட்டும் ஒருவரிடம் தவறான புரிதல் இருப்பின், அது தனது மார்க்க விளக்கத்துக்கு மாறாக இருப்பின் உடனே அவரை முஸ்லிம் இல்லை என முஷ்ரிக், முனாஃபிக், காஃபிர், பித்அத்வாதி, பலவேஷம், பெயர்தாங்கி, அல்லாஹ்வின் ஏட்டில் முஸ்லிமாக இல்லாதவன் என்றெல்லாம் பலவகையில் பட்டப்பெயர் சூட்டி அழைப்பது நிச்சயமாக  இஸ்லாமிய நெறிகளுக்கு மாற்றமானது. அப்புறம் எப்படி அவர் சரியான புரிதலின் பால் திரும்புவார்..?

இப்படி செய்யும்போது குழப்பமே மிஞ்சுகிறது. இவ்விடத்தில் கலிமா சொன்ன மக்களை பிரிக்கும் நோக்கமின்றி தன்பால் ஒன்றிணைக்க என்ன செய்யலாம் என்றுதான் மார்க்கம் சொல்வோர் முயற்சிக்க வேண்டும். அதற்கு மற்றவர்களும் நன்மைகளை தொடர்ந்து ஏவவேண்டும்.

ஆனால், இதை எல்லாம் செய்யாமல்... "அடித்துக்கொள்ளும் இந்த இயக்கங்களே இனி தேவை இல்லை" என்பதும் அனைத்து இயக்கங்களையும் ஒரேயடியாக வெறுத்து ஒதுக்குவதும் அறிவீனம். ஏனெனில், ஒரு சிலரின் மார்க்க முரணான செயலால் இந்த இயக்கங்கள் செய்த... செய்து கொண்டு இருக்கும் நற்செயல்களை எல்லாம் எப்படி புறந்தள்ள முடியும்..?

வீதிகளில், பத்திரிகையில், இணையத்தில், தொலைக்காட்சியில் என்றும் இடையறாத இஸ்லாமிய தாவா, குர்ஆன்-ஹதீஸ் மொழிபெயர்ப்பு செய்தல், ஜகாத்-பித்ரா வசூல்-விநியோகம், கூட்டு குர்பானி ஏற்பாடு, மருத்துவ நிவாரணம், மஸ்ஜித், மதரஸா, பள்ளி கட்டுதல், கற்பித்தல், இரத்ததானம், ஆம்புலன்ஸ், பல்வேறு நலத்திட்ட உதவி, இயற்கை பேரிடரில் உதவி, அனாதை-முதியோர் இல்லம், முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு சமூக அரசியல் உரிமைக்காக வீதியில் இறங்கி போராடுதல்... புதிதாக இஸ்லாத்தை ஏற்ற மக்களுக்கு சட்ட உதவியிலிருந்து பாதுகாப்பு, நிதி, இஸ்லாமிய கல்விபோதித்தல் என அனைத்தும் செய்தல்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்... ... .....

மேலும், இந்த இயக்கங்கள் அயல்நாடுகளில் -- மிகவும் குறிப்பாக வளைகுடா நாடுகளில் -- பணியாற்றும் பெயர், ஊர், முகம் தெரியா விபரமற்ற தமிழ் பேசும் அப்பாவி தொழிலாளர்களின் நலன், அவர்களின் பிரச்சினைகள், அவர்கள் ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டால் அவர்களுக்கான நிதியை ஒரே ஒரு ஈமெயில் வாயிலாக திரட்டித்தந்து, அவர்களுக்கான அனைத்துவிதமான உதவிகள் செய்தல், தமிழர் யாரேனும் இறந்துவிடின் அவரின் உடலை இந்தியாவிற்கு - அவரின் குடும்பத்தார்க்கு அனுப்பவும் அவருக்கான மீதி நிதியை அவர் பணியாற்றிய இடத்திலிருந்து அவரின் குடும்பத்துக்கு பெற்றுத்தரவும்... என்று எந்த சமயத்தினர் ஆனாலும் தன் வேலையை போட்டுவிட்டு ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டுதல்... ... .....

... ...என, இத்தனை அளப்பறிய தொண்டுகள் அனைத்தையும் ஒரே நொடியில் மறந்துவிட்டு... "ச்சே... இனி ஒர்ர்ரு இயக்கம் கூட நமக்கு வேண்டாமப்பா... எல்லாத்தையும் கலைச்சிடனும்.." என்று கூறுவது... இவ்வியக்கங்களில் சிலவற்றின் இத்தனை ஆண்டு இஸ்லாமிய உழைப்புக்கும், நிதி கொடுத்து, நேரம் கொடுத்து, ரத்தம் கொடுத்து, வியர்வை சிந்தி எவ்வித கூலியும் இன்றி மறுமைக்கான நற்கூலியை மட்டுமே எதிர்நோக்கி பணியாற்றிவரும் இவர்களின் சமூக தொண்டுக்கும்  மிகப்பெரிய இழுக்கு சேர்க்கும் ஒன்றாகும் என்பதையும், அவர்களின் ஆர்வத்திற்கு பின்னடைவை தோற்றுவிக்கும்  என்பதையும் நாம் விளங்க வேண்டும்.

இதுவரை, நாம் மார்க்கம் தொடர்பான ஒற்றுமை மற்றும் பிரிவினை பற்றி பேசினோம். இனி, இந்திய அரசியலில் பல கட்சிகளாக இருக்கலாமா... ஒரே கட்சியாக இருக்கலாமா... என்று பார்ப்போம். சப்போஸ், இறைநாடினால்... ஒருவேளை நாளை தமிழகமக்கள் அனைவரும் முஸ்லிம்கள் ஆகி... தமிழ்நாடு ஒரு 'முழு இஸ்லாமிய ஜனநாயக மாநிலம்' என்று ஆனால், ஒரே ஒரு கட்சியாக இருந்து கொண்டு, எதிர்க்கட்சியே இல்லாமல் தேர்தல் நடத்துவது எப்படி..? அப்போது இரண்டு கட்சிகளாவது ஜனநாயகத்தில் வேண்டுமே..? இதற்கு 'ஒற்றுமை' கோரும் மக்கள் என்ன பதில் அளிப்பார்கள்..? ஆகவே, தற்சமயம் பல இயக்கங்களாக இருந்தாலும், அவை  அரசியலில் எதிரும் புதிருமாக  வெவ்வேறு  கூட்டணியில் போட்டியிட்டாலும், அவைகள் அனைத்தும் "அல்லாஹ்வின் கயிற்றை" பலமாக பற்றி இருக்கிறார்களா என்பதே இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான ஒற்றுமை அம்சம். சகோ..!

அப்படியன்றி, நிகழ்காலத்தில் சிறுபான்மையினராக இருக்கும் நிலையில் முஸ்லிம்களுக்கு ஒரே ஒரு கட்சி இருப்பின், அது சேர்ந்திருந்த கூட்டணி தோல்வியடைந்தால்... ஆளும் கட்சியின் கோபப்பார்வையிலோ அல்லது அலட்சியப்பார்வையிலோ சிறுபாண்மையினர் இருப்பார்கள். எனவே, எதிரும்புதிருமாக ஆட்சியை பிடிக்க போட்டியிடும் இரு கூட்டணியிலும் இப்பக்கம் ஒன்று அப்பக்கம் ஒன்று என இரு முஸ்லிம் கட்சிகள் போட்டியில் இருப்பதே தற்சமயம் பாதுகாப்பானது சகோஸ். எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உரிய பிரதிநித்துவம் மற்றும் அனுசரணை இருக்கும். இது இம்மை அரசியல் விஷயம்.

மற்றபடி, இரண்டுக்கும் மேலே... நம்மிடையே எத்தனை இயக்கங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் அல்லாஹ்வின் கயிற்றை பற்றி இருந்தால் அவை அனைத்துமே ஒரே இயக்கம்தான்... ஒரே உம்மாதான்..!

முடிவாக,

'அல்லாஹ்வின் கயிறு' என்ற குர்ஆன்&நபிவழி இவற்றை பூரணமாக பின்பற்றியவுடன் வருகிறதே... ஓர் ஒற்றுமை... அந்த உன்னதமான மெய்யான ஓர் ஒற்றுமையை நோக்கி நாம் அனைவரும் முன்னேறவும்...

அதற்காக எல்லா இஸ்லாமிய அமைப்புகளும் 'அல்லாஹ்வின் கயிற்றை' பிடித்து, மற்றவரையும் பிடிக்கவைக்க அயராது உழைக்கவும்...

அதில் நம்மையும் ஈடுபடுத்திக்கொள்ளவும்... எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக..! ஆமீன்..!

19 கருத்துக்கள்:

 • September 24, 2011 at 1:37 PM

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
  மாஷா அல்லாஹ் மிகத் தெளிவான பதிவு சகோ

 • September 24, 2011 at 2:10 PM

  அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பின் முஹம்மத் ஆஷிக்,
  ஒற்றுமை என்ற வாதத்தில் அடங்கியிருக்கும் அபத்தங்களை வெளிக் கொண்டு வந்திருக்கிறது இந்த பதிவு. ஒற்றுமை பற்றிய புரிதலை நோக்கி நம்மை முன்நகர்த்தும் நல்லதொரு விளக்கங்களை கொண்டுள்ள பதிவு.

 • September 24, 2011 at 5:12 PM

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  சகோ.ஆஷிக்,

  நான் எந்த அமைப்பிலும் இல்லை. ஆனால், எந்த அமைப்பு 'அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப்பிடித்து' இருப்பதாக என் இஸ்லாமிய அறிவு தீர்மாணிக்கிறதோ அவர்களின், 'நன்மையை ஏவி தீமையை தடுக்கும் செயல்'களில் என்னை தவறாது இணைத்துக்கொள்வேன். இயலாவிடின் அவற்றை செய்வோரை ஆதரிப்பேன். அச்சமயம் நான் இணையாத மற்ற இயக்கங்கள் குறித்து அவதூறு, பொய், புறம், கோல், வசைபாடுதல் இவற்றை செய்யவே மாட்டேன். 'இறந்த சகோதரனின் இறைச்சியை உண்பதல்லவா அது'..?

  என் சிந்தையிலும் இந்த வரிகள்தான் ஃப்ளாஷ் ஆகிக்கொண்டே இருந்துவருகிறது.
  அதன்படியே என்வாழ்வையும் அமைத்துவருகிறேன்.
  கற்றறிந்த அறிஞர்கள் கூட வீம்புடன் வீராப்புடன் இருப்பதாக நினைத்து இறை வசனத்தை விளங்காமல் இருப்பதுதான் மிகவும் வேதனை.
  வாழ்த்துக்கள்!

 • September 24, 2011 at 5:28 PM

  அஸ்ஸலாமு அலைக்கும் ( ரஹ்)

  சகோ ஒற்றுமை பற்றிய அருமையான செய்தி. நாம் ஒன்று படுவதன் நோக்கம் இந்த உலக வாழ்க்கையிலும் மறுமையிலும் வெற்றி பெரும் வகையில் அமைய வேண்டும் வெறுமின RSS காரர்களுக்கு எதிர்வினை யாற்ற வேண்டும் என்ற நோக்கம் இருக்குமாயின் அது கண்டிப்பாக வீணான செயல்.இவ்வாறான போலி ஒற்றுமை நமக்கு பெரும் ஆபத்து.இவ்வாறான போலி ஒற்றுமையை RSS கூட்டம் மாற்று மத நடுநிலையாளர்களிடம் கூறி மூளை சலவை செய்து நமக்கு எதிராக திருப்பும்.மேலும் கொள்கையற்ற ஒற்றுமை மறுமையில் வெற்றி கொடுக்காது

 • September 24, 2011 at 9:50 PM

  ASSALAMU ALAIKKUM BROTHER.

  விவாதங்களை படிக்கத்தான் முடியும் என்னால் விவாதிக்க முடியாது.

  காரணம் தற்பொழுதுள்ள சூழ்நிலையில் யார் யாரையும் குற்றம் சொல்லுவதற்கில்லை எல்லோருமே தாம் சொல்லுவதுதான் சரி என்று சொல்லுகிறார்கள் படித்த உலமாக்களே இப்படி தடம் புரண்டால் படிக்காத மக்கள்கள் என்ன செய்வார்கள்?

  அனைத்து இயக்கங்களும் ஒன்றுபட்டால் மகிழ்ச்சியே ஆனால் அவர்கள் ஒன்று படவே மாட்டார்கள் யார் பெரியவர் யார் சிறியவர் என்ற ஏற்ற தாழ்வு நிலை அனைத்து தலைவர்களின் மனதிலும் இருக்கின்றது இதை நீக்கிட அல்லாஹ்தான் உதவி செய்யனும்.


  மத்ஹபுக்கள் தேவை இல்லைதான் ஆனால் இதை எப்படி ஒழிப்பது என்றுதான் புரியவில்லை மக்களோடு மக்களாக கலந்து விட்ட இந்த மத்ஹபுகளை ஒழிப்பது என்பது ரொம்ப சிரமத்திற்குறியது.

  அல் குரானையும் அல் ஹதீஸையும் தொடர்பவர்கள் புத்திசாளிகள் பால் கித்தாபையும் மௌலூது சரிபையும் தொடர்பவர்கள் பரிதாபத்திற்குறியவர்கள்.

 • September 28, 2011 at 4:21 PM

  அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பின் சகோதர / சகோதரிகளே,
  ஒற்றுமை தொடர்பான ஒரு கேள்வியை இஸ்லாமிய மார்க்க அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீனிடம் ஷமீம் என்ற சகோதரர் கேள்வியாக கேட்க அதற்கு பி.ஜே அவர்கள் சொன்ன பதிலை இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

  கேள்வி : ஏன் உங்களது கொள்கைகள் (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்) சரியானதாக இருந்தும் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றாக சேர்க்க முடியவில்லை? மேலும், தங்கள் அமைப்பில் இருப்பவர்கள் ஏன் விலகிச் செல்கின்றார்கள்?

 • September 28, 2011 at 4:21 PM

  பதில் : குர்ஆன் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டும் பின்பற்றி வாழ வேண்டும் என்பதே நமது கொள்கை. இதுவே சரியான கொள்கை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தவிர உள்ள மற்ற அமைப்புகள் இதற்கு மாற்றமான கொள்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

  மற்ற அமைப்பினர்க்கு நமது கொள்கையை எடுத்துரைத்து அவர்களைச் சரியான வழியின் பக்கம் அழைக்கும் முற்சியை நாம் தொடர்ந்து செய்து வருகின்றோம். இதைத் தான் நம்மால் செய்ய முடியும். ஒருவருடைய மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி அவருக்கு நேர்வழி காட்டும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.

 • September 28, 2011 at 4:21 PM

  (முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன். அல்குர்ஆன் (28 : 56)

  (முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் விதண்டா வாதம் செய்வார்களானால் ‘என் முகத்தை அல்லாஹ்வுக்கே வழிபடச் செய்து விட்டேன். என்னைப் பின்பற்றியோரும் (இவ்வாறே செய்து விட்டனர்)” எனக் கூறுவீராக! வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், எழுதப் படிக்கத்தெரியாதோரிடமும் ‘இஸ்லாத்தைஏற்கிறீர்களா?” என்று கேட்பீராக! அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் நேர் வழி பெற்றனர். புறக்கணித்தால் எடுத்துச் சொல்வதே உமக்குக் கடமை. அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன்.

 • September 28, 2011 at 4:22 PM

  (முஹம்மதே!) அவர்கள் புறக்கணித்தால் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக நாம் அனுப்பவில்லை. எடுத்துச் சொல்வது தவிர உமக்கு வேறு இல்லை. அல்குர்ஆன் (42 : 48)எனவே நபிமார்களாக இருந்தாலும் தவறான வழியில் உள்ளவர்களுக்கு எடுத்துச் சொல்வது தான் கடமை. அவ்வாறு எடுத்துச் சொல்லும்போது நபிமார்களின் போதனைகள் புறக்கணிக்கப்படாலாம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

  நபி (ஸல்) அவர்களுக்கு பக்கபலமாக இருந்த அவர்களுடைய சிறிய தந்தை அபூதாலிப் அவர்களை நேர்வழியில் கொண்டுவருவதற்கு நபி (ஸல்) அவர்கள் எவ்வளவோ முயற்சித்தார்கள். ஆனால் அவர் கடைசி வரை இஸ்லாத்தை ஏற்காமலேயே மரணித்துவிட்டார்.

 • September 28, 2011 at 4:23 PM

  முஸய்யப் பின் ஹஸ்ன் பின் அபீ வஹ்ப்(ரலி) அவர்கள் கூறினார்கள் : அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்ட போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூ ஜஹ்ல் அவரருகே இருந்தான். நபி (ஸல்) அவர்கள், ‘என் பெரிய தந்தையே! ‘லா இலாஹ இல்லல்லாஹ்’லிவணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை’ என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்” என்றுசொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், ‘அபூதாலிபே! (பெரியவர், உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், ‘ (என் இறப்பு என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் (நிகழும்)” என்று அவர்களிடம்சொல்லிவிட்டார். புகாரி (3884)

  மாற்றுக் கொள்கையில் உள்ளவர்களை நல்வழிபடுத்துவதற்கு நம்மால் முடிந்த முயற்சிகளைச் செய்து வருகிறோம். எனவே அனைத்து மக்களும் நம் கொள்கையில் ஒன்றிணைய வேண்டும் என்று ஆசைப்படும் நீங்களும் நம்முடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

 • September 28, 2011 at 4:23 PM

  கொள்கை சரியாக இருந்தால் அக்கொள்கையில் மக்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பது இறைவன் ஏற்படுத்திய நியதியல்ல. நூஹ் (அலை) அவர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் மக்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் இறங்கினார்கள். ஆனால் அம்மக்களில் பெரும்பாலோர் கடைசி வரை நூஹ் (அலை) அவர்களின் பிரச்சாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் நூஹ் (அலை) அவர்களின் கொள்கையும் அவர்கள் செய்த பிரச்சாரமும் தவறு என்று ஆகிவிடுமா?

  மறுமையில் ஒரு இறைத் தூதர் தன்னை ஏற்றுக் கொண்ட ஒரு நபருடனும் இன்னொரு இறைத் தூதர் தன்னை ஏற்றுக் கொண்ட இரண்டு நபர்கர்களுடனும் இன்னொரு இறைத் தூதர் தன்னை ஏற்றுக்கொண்ட சிறு கூட்டத்துடனும் வருவார்கள் என்று ஹதீஸில் பார்க்கிறோம். சில இறைத்தூதர்களுடன் அவர்களைப் பின்பற்றிய மக்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.

 • September 28, 2011 at 4:24 PM

  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம் வந்து (பின்வருமாறு) கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின் போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது தம்முடன் ஒரேயொரு மனிதர் மட்டுமிருந்த இறைத் தூதரும், இரண்டு மனிதர்கள் மட்டுமே தம்முடனிருந்த இறைத் தூதரும், (பத்துப் பேர்களுக்குட்பட்ட) ஒரு சிறுகூட்டம் மட்டுமே தம்முடன் இருந்தஇறைத்தூதரும், தம்முடன் ஒருவருமில்லாத இறைத்தூதரும் கடந்து செல்லத் தொடங்கினர். (ஹதீஸின் சுருக்கம்) புகாரி 5752

  இறைத் தூதர்களின் பிரச்சாரத்தை மக்கள் ஏற்கவில்லை என்பதால் அவர்களின் கொள்கை தவறு என்று ஆகிவிடுமா? எனவே கொள்கை சரியாக இருப்பதற்கும் மக்கள் அனைவரும் நம்முடன் ஒன்று படுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

 • September 28, 2011 at 4:24 PM

  இயக்கங்களை நடத்திச் செல்லும் தலைவர்கள் சுய லாபத்துக்காகவும் உலக ஆதாயங்களுக்காகவும் செயல்படுகிறார்கள். எனவே மக்கள் இயக்க வெறியை உள்ளத்திலிருந்து எடுத்துவிட்டு இருக்கின்ற அமைப்புகளில் எந்த அமைப்பின் கொள்கை சரியானது? யார் உள்நோக்கம் இல்லாமல் சமுதாயத்துக்காகப் பாடுபடுகிறார்கள்? யார் ஒழுக்கம் மற்றும் பண விஷயங்களில் சரியாக நடக்கிறார்கள்? எந்தக் கேள்வி கேட்டாலும் அதற்குரிய சரியான பதிலை யார் அளிக்கிறார்கள்? என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்தார்களானால் கண்டிப்பாக சுயநலமிக்கத் தலைவர்கள் தனியே விடப்படுவார்கள். மக்கள் அனைவரும் சரியான ஜமாஅத்தில் ஒன்றிணைவார்கள்.

  அனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் நம்மால் ஏன் ஒன்று சேர்க்க முடியவில்லை? என்று நீங்கள் நம்மைப் பார்த்து கேட்பதை விட தவறான கொள்கையில் இருக்கும் மற்ற அமைப்பினர்களிடம் சென்று நமது கொள்கையை எடுத்துரைப்பது தான் அனைத்து முஸ்லிம்களும் சரியான ஒரே கொள்கையில் இணைய வழி வகுக்கும். அதைத் தான் நாமும் செய்து கொண்டிருக்கின்றோம். நீங்களும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

 • September 28, 2011 at 4:24 PM

  அடுத்து நம்முடைய அமைப்பிலிருந்து ஏன் சிலர் விலகிச் செல்கின்றனர் என்று கேட்கின்றீர்கள். இந்த அமைப்பில் இருப்பதன் மூலம் சில உலக ஆதாயங்களை அடைந்து கொள்ளலாம் என்ற கெட்ட நோக்கத்தில் வந்து சேர்ந்தவர்கள் தங்களது நோக்கம் நிறைவேறாத பட்சத்தில் அமைப்பின் மீது ஏதேனும் குறை சொல்லி அவர்களாக வெளியேறும் நிலை ஏற்படுகின்றது. அல்லது இத்தகைய
  புல்லுருவிகளை நாமாகக் கண்டுபிடித்து வெளியேற்றும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அமைப்பின் கொள்கையையும் அமைப்பின் கண்ணியத்தையும் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டவர்களைத் தான் இந்த அமைப்பு வெளியேற்றியிருக்கின்றது. ஏதோ ஒரு சுய லாபத்திற்காகவும் தவறான நோக்கத்திற்காகவும் இந்த அமைப்புக்குள் வந்தவர்களைத் தான் அல்லாஹ் தன் கிருபையால் இந்த அமைப்பை விட்டும் வெளியேற்றி இதன் கண்ணியத்தைக் காத்து வருகிறான்.

  அமைப்பை அலங்கோலப்படுத்தும் அசுத்தங்கள் ஒரு பக்கம் வெளியேறினாலும் இந்த அமைப்பை அலங்கரிப்பதற்காக ஏராளமான கொள்கைச் சகோதரர்களும் சகோதரிகளும் மறுபக்கம் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டு இருக்கின்றார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

 • September 28, 2011 at 4:26 PM

  அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கி இருப்பான்.மாறாக தான் நாடியோரை அவன் வழிகேட்டில் விடுகிறான்.தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான்.நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி விசாரிக்கபடுவீர்கள். அல் குர்ஆன்.16:93

  எங்கள் இறைவனே! எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் உள்ள‌ங்களை தடம் புர‌ளச் செய்துவிடாதே! இன்னும் எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்! (3:8)

 • September 28, 2011 at 5:21 PM

  இங்கே ஒற்றுமையை வலியுறுத்தும் சகோதர சகோதரிகளுக்கு ஒரு பகிரங்க அறைகூவல். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தவிர தமிழ்நாட்டில் செயல்படும் மற்ற இயக்கங்கள் குர்ஆன் - சுன்னாவிற்கு முரணாக இருக்கிறதென்று நான் எண்ணுகிறேன். எனவே அவர்களோடு இணைந்து செயல்பட என்னால் முடியாது. இல்லை மற்ற சில இயக்கங்களும் குர்ஆன் - சுன்னாவிற்கு முரண்படாமல் சரியாக தான் இருக்கிறது என யாராவது சொன்னால் அவர்களோடு இது குறித்து விவாதிக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.

 • September 28, 2011 at 5:40 PM

  என்னுடைய அறைகூவல் தொடர்பான ஒரு விளக்கம்: நான் குறிப்பிட்டது தமிழ்நாட்டில் செயல்படும் மற்ற இயக்கங்களை பற்றி தான். பல சகோதர சகோதரிகள் தன்னளவில் சரியான இஸ்லாத்தை விளங்கி குர்ஆன் சுன்னாவிற்கு முரண்படாமல் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்னும் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ளாமல் இருந்தாலும் அவர்களை இந்த அறைகூவல் கட்டுப்படுத்தாது.

 • October 4, 2011 at 11:05 PM

  'ஒற்றுமை'யா.? அல்லாஹ்வின் கயிறா.? எது வேண்டும்.?

  சகோதரரின் ஆக்கம் அருமையானது. இக்காலத்திற்கேற்ற விளக்கம் (மாஷா அல்லாஹ்)

  ஒற்றுமை ஒற்றுமை என்று சமுதாயத்தில் போலி கோசம்(வேஷம்) போட்டு மக்களை அறியாமை எனும் இருளிலிருந்து இஸ்லாம் எனும் சுவர்கத்தின் வெளிச்சத்தை மக்களை பின்பற்றவிடாமல் இருப்பதே இந்த போலி ஒற்றுமை தான். போலி ஒற்றுமைதான் இஸ்லாம் என்று நினைத்து கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு தெளிவான சுன்னாவின் அடிப்படையில் விளக்கம் தந்த சகோ.. மிக்க நன்றி. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.

  7280 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
  (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர என்று கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார் என்று பதிலளித்தார்கள்.

  ஒற்றுமை என்பது சுவர்க்கத்தின் பால் இணைக்கும் ஒற்றுமைதான் உண்மையான ஒற்றுமையாக இருக்க முடியும். நபிகாளாரின் கட்டளைகளை ஏற்று கீழ்படியும் மக்களால் தான் அப்படிப்பட்ட ஒற்றுமையை ஏற்படுத்த முடியும்.. உலக ஆதாயத்திற்காக சேரப்படும் ஒற்றுமை என்பது வெறும் கவர்ச்சி தானே தவிர அதில் எந்த பயனும் இல்லை.

  வேற்றுமையில் ஒற்றுமை காணும் கூட்டத்திற்கும் இறுதியில் கிடைக்கபெறும் பயனும் பூஜ்யம் தான்..!

 • November 1, 2011 at 9:50 AM

  அஸ்ஸலாமு அழைக்கும்
  மிகவும் அருமையான ஒரு அழைப்பும் விளக்கமும் என்னுடைய அடிமனதிலும் இப்படியான கருத்தினை மக்கள் மன்றத்தில் வைக்கவேண்டும் என்று எழுந்தது ஜசாகமுள்ளஹு ஹைர முஸ்லிம்கள் சிந்தித்து செயல்படட்டும்

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!