Tuesday, September 20, 2011

மரணம் - பொய்க்கும் நாத்திகம்

2 கருத்துக்கள்
                                              ஒரிறையின் நற்பெயரால்

 • நேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தாரு...இன்னைக்கு பொசுக்குனு போய்ட்டாரு....
 • அட! காலையிலே தானே பாத்தேன்....அடடா...அதுகுள்ள என்னாச்சி அவருக்கு...
 • நைட் நல்லாதாங்க படுக்க போனாரு...காலையிலே பாத்தா... 

சராசரி மனிதர்கள் வாயில் அன்றாடம் வலம் வரும் வார்த்தைகள் தான் இவை. சாதாரணமாக தெரியும் இவ்வெளிய வார்த்தைகளுக்குள் நாத்திகம் பதில் தர மறக்கும்/மறுக்கும் அனேக உண்மைகள் உறங்கிக்கொண்டிருக்கிறது... தட்டியெழுப்ப ட்ரை பண்ணுவோம்.

மரணம் -

நாம் விரும்பினாலும்-விரும்பாவிட்டாலும் நம்மை வந்தடைவது உறுதி என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்படிப்பட்ட மரணம், மனிதன் உட்பட எல்லா உயிர்க்கும் பொதுவாக நிகழ்ந்தாலும் அஃது ஒரே மாதிரி நிகழ்வதில்லை என்பது தான் இவ்வாக்கத்தின் மையக்கருத்து.

அதற்கு முன்பாக, மரணம் குறித்து விக்கிபீடியா என்ன விளக்கம் தருகின்றது என்பதை பார்த்துவிடுவோம்.

இறப்பு என்பது உயிரினங்களின் இயக்கங்களை  வரையறுக்கும் உயிரியற் செயற்பாடுகள் நிரந்தரமாக நின்றுவிடுவதைக் குறிக்கும். நவீன அறிவியலின்படி இந்நிகழ்வு அவ்வுயிரினத்தின் முடிவு ஆகும் - விக்கிப்பீடியா

உடலின் இயக்கத்திற்கு தேவையான உயிரியல் செயல்பாட்டுக்கூறுகள் முழுவதும் ஒரே நேரத்தில் செயலிழக்கும் போது இறப்பு ஏற்படுகிறது. அதாவது.,

தொடர்ந்து சுத்திகிட்டு இருக்கும் ஒரு காத்தாடி, பவர் போனா... அதன் சுழற்சியை கொஞ்ச கொஞ்சமா ஸ்டாப் பண்ணி அதன் கட்டுப்பாட்டை முழவதும் இழந்து வெறுமனே நிக்கும் பாத்திங்களா அதுப்போல.,

இவ்வாறு மரணம் குறித்து அறிவியல்ரீதியான விளக்கம் சொல்லப்பட்ட போதிலும் ஏற்படும் மரணத்திற்கு தான் காரணங்கள் கூறப்படுகிறதே தவிர மரணம் ஏன் ஏற்பட வேண்டும் என்பது குறித்து அறிவியலும் ஆழ்ந்த குழப்பத்தில் தான் இருக்கிறது

அதாவது, அறிவியல் வரையறை தரும் மரணத்தை நாத்திக சிந்தனை மேற்சொன்ன இலக்கணப்படி ஏற்றுக்கொண்டாலும், உலகில் ஏற்படும் அனைத்து மரணங்களுக்கும் ஒரே மாதிரி வரையறையை நாத்திகம் ஏற்படுத்தவில்லை - இது தான் நாத்திகம் சந்திக்கும் பிரச்சனை

எதையும் காரண காரியத்தோடு அலசி ஆராய்ந்து அறிவுக்கு பொருந்தமாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வதாக கூறும் நாத்திகம், மரணம் ஏற்படுவது குறித்தும், அஃது ஏன் ஏற்படுகிறது என்பது குறித்தும் தெளிவான காரணிகளை வைத்திருக்க வேண்டும். 

முதலில், மரணங்கள் ஏற்படும் விதம் குறித்து காண்போம்.

எந்த ஒரு செயல் நடைபெறுவதற்கும் காரணங்கள் இருக்கவேண்டும் என்பதே நாத்திகர்களின் மையக்கருத்து,

அதனடிப்படையில் மரணம் என்பது உயிரியல் செயற்பாடுகளோடு தொடர்புடையதால் ஒரு மரணம் நிகழ அறிவியல் ரீதியான காரணம் வேண்டும். அதாவது ஒவ்வொருவரின் இறப்புக்கு பின்னரும் நமக்கு அறிவுக்கு பொருந்தக்கூடிய காரணம் இருக்க வேண்டும்.

அப்படியிருந்தால் மட்டுமே நாத்திகம் அச்செயல் உண்மையென நம்பும். அதனடிப்படையில் இன்று உலகில் பல்வேறு வகையில் உயிரிழப்புகள் நிகழ்கிறது.

 • மாரடைப்பு ஏற்பட்டு,
 • சீறுநிரகம் பழுதுப்பட்டு
 • வெள்ளம், தீ, கட்டிட இடிபாடுகள் போன்ற இயற்கை சீற்றங்களில் சிக்குண்டு
 • வெடிகுண்டு தாக்குதலில்
 • விபத்துகளில்
 • தற்கொலை

இதைப்போன்ற கண்முன் காணும் உயிரிழப்பு சம்பவங்களுக்கு பிறகு ஒருவரின் உயிர் போவதற்கான காரணத்தை ஆராய்ந்தால் அதிக இரத்த அழுத்தம்,  இரத்த ஓட்டமின்மை, கழிவு நீர் அகற்றும் உறுப்புகள் செயலிழத்தல், மூச்சுவிட முடியா அளவிற்கு ஆக்ஸிஜன் இல்லாமை, நெருப்பின் அதிக உஷ்ணம் உறுப்புகளை கருக்குதல், நிமிட நேரத்தில் உறுப்புகள் ஒவ்வொன்றும் சிதறடிக்கப்படுதல்,  அதிகப்படியான இரத்த வெளியேற்றம், இதயத்திற்கும் சுவாசக்குழாய்க்கும் இடையில் உள்ள தொடர்பு துண்டிப்பு - இப்படி ஒவ்வொரு மரணமும் நிகழ ஒவ்வொரு வகையான காரணங்கள்.

நன்று....இஃது ஏற்படும் மரணத்திற்கு உரித்தான காரணங்கள் நம் கண்முண்ணே விரிந்து கிடப்பதால் இத்தகைய மரண நிகழ்வுகளை அறிவுப்பூர்வமாக ஏற்று கொள்வதில் எந்த பிரச்சனையுமில்லை, இவ்வாறு நிகழும் மரணத்திற்கு நாத்திகம் மேலதிக விளக்கம் தர தேவையுமில்லை.  ஆனால் மரண வகைகள் மேற்கண்ட வழிகளில் மட்டுமே ஏற்படுவதாக இருந்தால் நாத்திகப்பார்வை சரியென கூறலாம்.

ஆனால்.,

இவ்வாக்கத்தின் முதல் மூன்று வரிகளை மீண்டும் படியுங்கள்., 

 • நேற்று வரை நலமுடன் இருந்தவர் எவ்வித காரணமுமின்றி இன்று இறக்கிறார்.
 • காலையில் சக மனிதர்களுடன் உரையாடி சென்றவர் இந்நேரத்தில் உயிரோடில்லை.
 • இரவு உறக்கத்தை இனிதே கழித்தவர் காலையாகியும் எழவே இல்லை.

இதுமட்டுமல்ல, இத்தகைய மரணங்கள் நிகழ அறிவியல்ரீதியான எந்த ஒரு அறிகுறியும் இல்லையென்பதோடு, நிகழ்ந்த மரணத்திற்கு அறிவுப்பூர்வமான பதிலும் இல்லை.

அதுப்போலவே, உயரமான இடத்திலிருந்து அல்லது கட்டிடத்திலிருந்து வேண்டுமென்றே கீழே குதித்தவர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பிக்கிறார். சாதாரணமாக நடக்கும் போது கால் தவறி தரையில் விழும் மனிதர் மரணிக்கிறார்.

இதுவும் நாம் அன்றாட செய்தித்தாள்களில் படிப்பதுண்டு

ஆக மேற்சொன்னவைகளை தற்செயல் (எதெச்சையான செயல்) என்றோ திடீரென்று ஏற்படும் சம்பவமாகவோ ஏனைய மதரீதியான உலகம் பார்க்கிறது..
  
ஆனால் நிகழ்வுகளுக்கான சரியான காரணத்தை அறிவியல்ரீதியாக முன்னிருத்தினால் மட்டுமே ஏற்கும் நாத்திக அகராதியில் தற்செயல் என்பதோ அல்லது திடீரென்று நடைபெறும் சம்பவங்களோ இருக்க முடியாது.

மேற்சொன்ன வகையில் மரணிப்பதற்கும், உயிர் பிழைப்பதற்கும் அறிவியல்ரீதியான காரணத்தை வேண்டினால் நாத்திகம் அதன் வரையறைக்கே முரண்பட்டு பொருளற்ற பொருளைத்தான் தரும்.

மேலும் தர்க்கரீதியாகவும் இச்சம்பங்களை நாத்திகத்தால் வரையறை செய்ய முடியாது. ஏனெனில் மேற்கண்ட நிகழ்வுகள் எப்போதாவது நிகழ்வதில்லை மாறாக.,

உலகில் நிகழும் மரணங்களில் அறிவியல்ரீதியில் காரணம் என்னவென்ற விளங்க /விளக்க முடியா நிலையில் மேற்சொன்ன அடிப்படையிலேயே அனேக மரணங்கள் நிகழத்தான் செய்கின்றன.

ஆக தற்செயல்/திடீர் என ஏற்படுவதாக சொல்லும் பேச்சுக்கே நாத்திகத்தில் இடமில்லை.

இல்லை...இல்லை...மேற்கண்ட இயல்பு நிலைக்கு மாற்றமான ஏற்படும் மரணங்களுக்கும் மறைமுக அறிவியல் காரணங்கள் உண்டு என சொன்னாலும் நோ ப்ராப்ளம். இப்போது நாத்திகம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் முன்பைவிட அதிகம். இச்செய்கை உண்மையென்று நாத்திகம் வாதித்தால் உலகில் ஏற்படும் அனைத்துவிதமான மரணங்களுக்கும் அறிவியல்ரீதியான காரணங்கள் கிடைத்துவிடும். கிடைக்கும் காரணங்களை வைத்து,

 1. ஏற்படும் மரணத்திலிருந்து தப்பிக்க அல்லது 
 2. மரணம் நிரந்தரமாக ஏற்படாமல் இருக்க அல்லது
 3. ஒவ்வொரு உயிருக்கும் மரணம் ஏன் நிகழ வேண்டும்.?

 - என்பதற்காவது நாத்திக அறிவியல் ஒரு வழிவகை செய்திருக்க வேண்டும். அப்படி மரணத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் மரணம் ஏற்படுவதற்கான அறிவியல் ரீதியான காரணம் தெரிந்திருப்பதால் எல்லோர் மரணத்திற்கும் உண்டான காலக்கெடுவை நாத்திக அறிவு மிக துல்லியமாக வரையறுத்திருக்க வேண்டும்.

டிஸ்கி: 

சமகாலங்களில் கூட பிராணிகளில் உண்டு, உறங்கி, உடலுறவு கொள்ளல் என சில குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே தம் வாழ்நாளை கழிக்கும் சிலவகை ஆமை, முதலை போன்ற உயிரிகளின் ஆயூட்காலம் சராசரியாக நூற்றைம்பது ஆண்டுகளை தாண்டி தொடரும்போது, அனைத்துத் தேவைக்காகவும் தம் வாழ்நாளை கழிக்கும் அறிவார்ந்த மனித உயிரின் ஆயூட் காலம் சராசரி 50 க்கும் 60க்கும் மத்தியில் தொங்கி கொண்டிருப்பது ஏன்..?

ஏனெனில், ஏனைய உயிரினங்களுக்கு மத்தியில் அறிவார்ந்து செயல்படும் ஒரு உயிரினாலே ஆயூட்காலம் மட்டுமில்லாது வாழ்வியலுக்கு தேவையான அனைத்து சிறப்பியல்க்கூறுகளையும் ஏனைய உயிரினங்களை விட அதிகம் பெற்று வாழ முடியும்.

ஆனால் பரிணாமம் உருவாக்கிய மனிதப்படைப்பு ஒரு கொசுவை காட்டிலும் அதிக பலகீனங்களை தன்னுள் கொண்டு வாழ்ந்து - மரணிப்பது விந்தையுலும் விந்தையே..!

உணர்ந்துக்கொள்வதற்கு முன் உணர்வுகளை நிறுத்தும் மரணத்திற்கான காரணங்களை இனியாவது மெய்படுத்துமா நாத்திகம்??

அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான். (22:66)
   
                                                      அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

2 கருத்துக்கள்:

 • September 20, 2011 at 8:33 PM

  மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை அது சாத்தியமென மனிதன் நினைத்திருக்க வாய்ப்பே இல்லை! உலகில் இன்று நீங்கள் உண்மை என நம்பிக்கொண்டிருக்கும் பல்வேறு நிகழ்வுகளும் இப்படித்தான்! மரணத்தை தடுத்து நிறுத்துவது குறித்தும், இறந்தவரை உயிர்ப்பிப்பது குறித்துமான ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். ஒருவேளை இன்னும் இருபது வருடங்களில் அது கண்டுபிடிக்கப்பட்டு மரணம் நிறுத்தப்பட்டால் இந்த மாதிரியான மோசமான பதிவை எழுதிய தாங்கள் தங்களது மூஞ்சியை எங்கே போய் வைத்துக்கொள்வீர்கள் என்பதையும் அறிய ஆவலாக உள்ளேன் :-)

 • September 21, 2011 at 10:57 AM

  உங்கள் மீதும் ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
  அன்பு சகோ
  சக்கரம் முதல் தற்போதைய நவீன கண்டுபிடிப்புக்கும் முன்பாக அதுக்குறித்த தேவை -அல்லது அதன் மூலமான பயன்பாடு மனிதனுக்கு ஏற்பட்டதால் அதுக்குறித்து சிந்தித்தான் இறை நாட்டத்தால் செயல்படுத்தி கண்டுபிடித்தான்.ஆனால் மரணம் அதுபோலல்லாது முதல் உயிரினம் தொட்டே நிகழ தொடங்கிய ஒன்றாகும். ஆக காரணமே அறிய தொடங்கப்படுவதற்கு முன்பு ஒரு நிகழ்வு இன்று வரை தொடர்ந்து வருவது பரிணாம மாற்றத்தால் ஏற்பட்ட ஒன்றல்ல சகோ., ஏனெனில் கால சூழல் மற்றும் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் அங்கு வாழும் உயிரியின் ஆயூட்காலத்தை சற்று நீடித்து வைத்திருக்க முடியுமே தவிர எத்த்கைய சூழலும் பருவ நிலை மாற்றத்திலும் நிரந்தரமாக மரணத்தை தடுத்து நிறுத்த இயலாது. அ....அது தான் ஏன்? ஆக்கத்தை பொறுமையாக மறுமுறையும் படிங்யுங்கள் சகோ!

  //ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்//
  நான் பள்ளியில் படிக்கும் காலத்திற்கு முன்பே ஆராய்ச்சிகள் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன ஆனால் உயிரியல் செயற்பாட்டுக்கூறுகள் முழுவதும் செயலிழப்பதால் தான் மரணம் நிகழ்கிறது என்ற பாமர உண்மையை தான் இதுவரை மரணம் குறித்த ஆராய்ச்சி கண்டுபிடித்திருக்கிறது சகோ
  எனிவே., மரணம் ஆராய்ச்சி முழுவதும் வெற்றி பெற வாழ்த்துகள்.,

  //ஒருவேளை இன்னும் இருபது வருடங்களில் அது கண்டுபிடிக்கப்பட்டு மரணம் நிறுத்தப்பட்டால் //
  கண் முன் நிகழும் நிதர்சன செய்கைகள் அறிவுக்கு பொருத்தமாக இருந்தால் ஏற்றுக்கொள்வதே பகுத்தறிவு.. இருபது ஆண்டுகள் இல்லை ஒருவேளை நாளையே, மரணத்தை தடுத்து நிறுத்துவதும், இறந்தவரை உயிர்ப்பிப்பதும் சாத்தியமென்றால் கவலைப்படாதீர்கள்... அப்போது நானும் சொல்வேன் கடவுள் இல்லையென்று...
  ஆனால் இதே மூஞ்சியுடன் தான்...

  உங்கள் உள்ளம் உண்மையான தேடுதலின் பால் செல்ல இறைவனிடன் இறைஞ்சுகிறேன்
  -இறை நாடினால் இனியும் சந்திப்போம்

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!