Tuesday, April 17, 2012

ஒரு முக்கிய கேள்வி

2 கருத்துக்கள்

மன்னிக்கவும். மிக மிக பெரிய ஒரு இடைவேளைக்கு பிறகு இந்த புதினத்தை தொடர்கிறேன். இதன் முன் பகுதி இங்கே. நன்றி :)


நடந்து கொண்டே வந்த இஸபெல்லா, கொர்டபாவின் கிழக்கு திசை வாயில் வழியாக நுழைந்து 'கஸ்ருல் ஷுஹதா'வை(வீர மரணமடைந்தவர்களின் அடக்கஸ்தலம்) நோக்கி நடக்கலானாள். அதைத் தாண்டியே அவள் 
வீடிருந்தது. இஸ்லாமிய ஆட்சியாளர்களால் அன்றைய ஸ்பெயின் எங்கெங்கு நோக்கினும் அழகுற மிளிர்ந்து கொண்டிருந்தது. டாக்டர்.ட்ரேப்பர்(Dr Draper) கூறியது போல ஒரே தெரு விளக்கின் ஒளியில் இருபது மைல் கூட ஒருவரால் நடந்திட இயலும், அந்தளவிற்கு சாலைகள் அனைத்தும் அழகுற திட்டமிடப்பட்டவையாகவும், விளக்குகளின் வெளிச்சத்தில் ஒளிர்பவையாகவும் இருந்தன.

இஸபெல்லாவின் கால்கள் வேகமாக வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தன. அதை விட வேகமாக அவளின் சிந்தனைக்குதிரை ஓடிக்கொண்டிருந்தது. மாலை நேர நடைப்பயிற்சிக்கு பிறகு எப்பொழுதும் தன் தோழியருடன் வீடு திரும்பும் இஸபெல்லா இன்று தனியே சிந்தனை வயப்பட்டவளாக வீட்டிற்கு விரைந்து   கொண்டிருந்தாள். மாளிகை போன்ற தன் வீட்டினுள் நுழைந்ததும் வாயிலில் காத்துக்கொண்டிருந்த ஆயாவிடம்  தாமதத்திற்கு ஏதோ ஒரு காரணத்தை கூறிவிட்டு தன்னறையினுள் நுழைந்தாள். ஈஸி சேரில் அமர்ந்து மீண்டும் பைபிளை  ஆழ்ந்து படிக்க ஆரம்பித்ததாள். எத்தனை கவனமாக படித்தபோதிலும் செயின்ட் பாலின் கடிதங்கள், 'மார்க்கக்கட்டளைகள் ஒரு சாபமே' என்னும் கூற்றையே போதித்தன. அவை மேலும் மேலும் இஸபெல்லாவின் சந்தேகத்திற்கு உரமிட்டன. யோசித்து யோசித்து களைத்துப் போனபின் இதைப்பற்றி தந்தையிடமே கேட்போம் என முடிவு செய்தாள்.

பதிலளிக்க முடியாத கேள்வி என்று அதை இஸபெல்லா நினைக்கவில்லை. தன்னால் முடியவில்லை எனில் கண்டிப்பாக, ஸ்பெய்னிலேயே மார்க்க ஞானத்தில் யாராலும் விஞ்ச இயலாத தன் தந்தையால் கண்டிப்பாக முடியும் என்றே நினைத்திருந்தாள். சிறிதே சமாதனமான மனதுடன் இரவு உணவை உண்டவள் மீண்டும் சிறிது  பைபிளில் கழித்து விட்டு உறங்கினாள்.

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை, காலையிலேயே கிளம்பி தேவாலயத்திற்கு சென்றாள். தேவாலயத்திலிருந்து திரும்புகையில் இஸபெல்லாவின் தந்தை அவளை அழைத்தார்.

தந்தை: 'இஸபெல்லா.., இரவு நெடு நேரம் பைபிளை படித்துக் கொண்டிருந்தாய் போலவே. எந்த அதிகாரத்தை படித்தாய்? எதிலாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் என்னைக் கேளம்மா.."

இஸபெல்லா: அப்பா... (பாதிரியாரின் கைகளை முத்தமிட்டுவிட்டு) நேற்றிரவு நான் யோவான் 1, அதிகாரம் 3ஐ படித்தேன். அப்பா. நீங்கள் அனுமதித்தால் அதிலுள்ள என் சந்தேகத்தை கேட்பேன்.

தந்தை: நிச்சயமாக அம்மா... நிச்சயமாக... உன் சந்தேகத்தைக் கேள், கண்டிப்பாக என்னால் அதை நிவர்த்தி செய்ய முடியும்.

இஸபெல்லா: அப்பா, பழைய ஏற்பாட்டில் நம் இறைவன் நமக்காக பன்னிரெண்டு கட்டளைகளை கொடுத்திருக்கிறாரே. அவை மார்க்கக்கட்டளைகளை பற்றியதுதானே?

தந்தை: ஆமாம் இஸபெல்லா. அவை அனைத்தும் மார்க்கக்கட்டளைகளைப் பற்றியவைதான்.

இஸபெல்லா: ஆனால் செயின்ட் பால் மார்க்கக்கட்டளைகளை 'சாபம்' என்று கூறியுள்ளாரே?

தந்தை: ஆமாம் அம்மா, மார்க்கக்கட்டளைகள் ஒரு சாபமே. அதிலிருந்து நம்மைக் காக்கவே இயேசுநாதர் பூமிக்கு வந்ததும், சிலுவையில் அறையப்பட்டதும்.

இஸபெல்லா: அப்படியானால் மார்க்கக்கட்டளைகள் என்பது ஒரு சாபம். எத்தகைய கொடிய சாபம் என்றால், அதிலிருந்து நம்மைக் காப்பாற்றவே இயேசு நாதர் பூமிக்கு வந்ததும் சிலுவையில் அறையப்பட்டதும். இல்லையா அப்பா? அப்படியெனில் மார்க்கக்கட்டளைகளை பின்பற்றுவதும் ஒரு சாபம்தானே??

தந்தை: ஆமாம், இஸபெல்லா. அதனால்தான் இன்று கிறிஸ்தவர்களாகிய நாம் மார்க்கக்கட்டளைகளை பேணுவதை விட்டும் இயேசுநாதர் மேல் நம்பிக்கை கொள்கிறோம். அவர் சிலுவையில் அறையப்படாத வரையில் மட்டுமே மார்க்கக்கட்டளைகள் பயனில் இருந்தன.

இஸபெல்லா: சரி அப்பா, அப்படியானால் திருடுவது நமக்கு அனுமதி அளிக்கப்பட்டதா?

தந்தை: இதற்கும் மார்க்கக்கட்டளைகளுக்கும் என்ன சம்பந்தம்? இஸபெல்லா... எந்த ஒரு கேள்வியும் கேட்கும் முன் நன்றாக யோசித்துக் கேள். இல்லையெனில் கேள்வி கேட்கப்படுபவர் உன்னை முட்டாள் என நினைத்து விடுவார்.

இஸபெல்லா: மன்னித்துவிடுங்கள் அப்பா. ஆனால் எனக்கு இந்த விஷயம்  இன்னமும் புரியவில்லை. எந்த மார்க்கக்கட்டளைகளை நாம் பேணக் கூடாது என்கிறீர்களோ அதில் வரும் கட்டளையே திருடக்கூடாது என்பது. அண்டை வீட்டாரை துன்புறுத்தக் கூடாது என்பதும் அதில் ஒரு கட்டளையே. தாய் தந்தையரை மதித்து நடக்க வேண்டாம் என்பதும் அதிலுள்ள கட்டளையே. மார்க்ககட்டளைகளை பேணக் கூடாது என்றால் இதை எல்லாம் செய்வதற்கு அனுமதி உண்டு என்றுதானே அர்த்தமாகிறது? 

தந்தை: இல்லை இஸபெல்லா, உனக்கு இன்னமும் மார்க்கக்கட்டளைகளை புரிந்து கொள்ள தெரியவில்லை. முதலில் இந்த முட்டாள்தனமான கேள்வியை உன்னிடத்தில் யார் கேட்டார்கள் அதை சொல்.


இதனைக் கேட்டதும் தோட்டத்தில் உமர் லஹ்மிக்கும் மு’ஆஸ்ஸுக்கும் இடையில் நடந்த உரையாடலை இஸபெல்லா கூறினாள்.

தந்தை: அம்மா இஸபெல்லா, உனக்கு ஏற்கனவே தெரிந்ததுதான், இந்த முஸ்லிம்கள் எல்லாம் நம்பிக்கையற்றவர்கள், நம் புனித மார்க்கத்தை பகைமை பாராட்டுவதையே குறிக்கோளாய் கொண்டவர்கள் என்று. நம் வேத புத்தகங்களை பரிகசிப்பது சாத்தானின் மூளையை உபயோகிப்பது போலவாகும். முதலில் தேவனிடம் பாவமன்னிப்பு கேளம்மா. மேலும் இந்த முஸ்லிம்களின் பேச்சை கேட்பதையும் தவிர்த்துக்கொள். அவர்களுக்கு மார்க்கம் என்ற ஒன்றே இல்லை, ஆனால் மற்றவர்களின் உண்மையான மார்க்கத்தை குறை கூறியே திரிவார்கள். அவர்களின் மார்க்கம் எதை போதிக்கிறது என்று உனக்கு தெரியுமா இஸபெல்லா? இரத்தம் சிந்த வைப்பது அவர்களின் மார்க்கத்தில் நற்கூலி பெற்றுத் தரும் ஒரு செயலாகும். நீயே பார், எப்படி அவர்கள் நம் ஸ்பெயினை ஆக்கிரமித்ததோடில்லாமல் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களையும் கொன்றார்கள். இப்பொழுது என்னடாவென்றால் வாழ்பவர்களின் மீது அவர்களின் மதத்தை வலுக்கட்டாயம் ஆக்குகிறார்கள். நீ என்னிடம் கேட்ட கேள்வி உன்னிடத்திலிருந்தே வந்திருந்தால் சரி, என்னால் அதை நொடியில் பதிலளிக்க முடியும். ஆனால் அவர்களின் விதண்டாவாதத்திற்கு நாம் என்ன பதில் தருவது? சொல்?
இஸபெல்லாவிற்கு தன் தவறு புரிந்தது. ‘முஸ்லிம்கள்’ என்னும் பெயரை கூறாமல் விட்டிருந்தாலாவது அவளின் கேள்விக்கு விடை கிடைத்திருக்கும். சரி இப்போதென்ன ஆயிற்று, பாடங்களில் ஏதேனும் சந்தேகம் என்றால் நம் ஆசிரியர்தானே விடை தருகிறார். அவரிடமே இந்தக் கேள்வியை கேட்டுக்கொள்ளலாம் என முடிவு செய்தாள்.

மறுநாள் அதே கேள்வியை அவளின் ஆசிரியர் முன்னிலும் இஸபெல்லா கேட்டாள். ஆனால் அவரும் இஸபெல்லாவின் மனது தெளிவாகும் வகையில் பதில் தர முடியாமல் போனார். அந்நேரம் வரையிலும் அந்த கேள்வியின் விடை தனக்கு மட்டுமே தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த இஸபெல்லாவிற்கு தான் மிகவும் நம்பிய ஆதாரங்களே தோல்வியுற்றதும் இது சிறிய, சாதாரண விஷயமில்லை என்று புரிந்தது. அதே நேரம் தன் மார்க்கத்தின் மேலான சந்தேகமும் இன்னும் பலமாக வளர்ந்தது.  



இனியும் வளரும்... 

.