Thursday, September 9, 2010

இஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து

1 கருத்துக்கள்
                                              ஓரிறையின் நற்பெயரால்...
   குர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ஒன்றா...? இஸ்லாமியர் சிலர் மனதில் கூட ஊசலாடும் கேள்வி இது தான். சுருக்கமாக கூறினால் "ஒன்று" என்று சொல்லலாம்.விளக்கமாக கூறினால் "இல்லை" என்று சொல்லலாம்.என்ன தெளிவான குழப்பமாக இருக்கிறதா? அதை விளக்கவே இக்கட்டுரை.
 இயேசுவை கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ உயர்த்தி வர்ணிக்கப்படும் கிறித்துவத்தில் அவரது ஏனைய அற்புத நிகழ்வுகள் குறித்து சிலாகித்து கூறப்பட்டாலும் இயேசு கிறித்துவை பற்றி பைபிள் இப்படியும் குறிப்பிடுகிறது.

 34.பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள், சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
 35.எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.(மத்தேயூ                                                                       அதிகாரம்:12)

 17.பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்;
 18.அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே; (மாற்கு அதிகாரம்:10)

 49.பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
 50.ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.
 51.நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
 52.எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.
 53.தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.   (லூக்கா அதிகாரம்:12)

34. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.  (மாற்கு அதிகாரம்:15)

 19.அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
 20.அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
                                                                                        ( மத்தேயூ அதிகாரம்:8)

                   இவ்வாறு கடவுள் ஸ்தானத்திற்கு அல்லது கடவுளின் மகனாக மகிமைப்படுத்தி கூறப்படும் இயேசு கிறித்துவை பற்றிதான் மேலுள்ள வாக்கியங்களும் உள்ளன.அவ்வாறு கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ கருதப்படுபவர் குறித்து சராசரி மனித பண்புகளோடு அல்லது அதற்கு கீழாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இங்கு பைபிள் குறித்து நான் விமர்ச்சிக்க வரவில்லை.மாறாக கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ சித்தரிக்கப்படும் ஒருவரின் தகுதிக்கு இவ்வாசகங்கள் ஏற்புடையதா என்பதே என் கேள்வி? 
     ஆனால் இஸ்லாம் இயேசு கிறிஸ்து குறித்து கூறும்போது கடவுளின் மகன் இல்லையேன்று ஆணித்தரமாக கூறினாலும் இறைவனின் தூதுவர்களில் ஒருவர் என்பதை முன்மொழிந்து அவரது தூது தன்மைக்கு கலங்கமோ, தவறான கற்பிதங்களோ கொடுக்காமல் தூதரும்,தூய மனிதர் என்ற நிலைப்பாட்டிலும் இயேசுவை மிகச்சரியாக கண்ணியப்படுத்துகிறது.இங்கு ஒரு தெளிவு "பைபிளும், குர்-ஆனும் முன்மொழியும் அந்த இறைத்தூதரை "இயேசு கிறித்து" என்ற பெயரில் உச்சரிக்கும் பொழுது சிலுவையில் அறையப்பட்டு,கை,கால்களில் ஆணிகள் ஊடுருவப்பட்ட நிலையில், முள் கீரிடம் சுமந்தவராக, செங்குருதி வடிந்தவராக மனித கரங்களால் உருவாக்கப்பட்ட இடதுபுறம் தலைச்சாய்த்த முகம் தான் ஏனோ...ஞாபகம் வருகிறது.கடவுளின் மகன்(?) என கூறப்படும் அந்த தூயவருக்கு கொடுக்கும் கண்ணியமா இது? அதே நேரத்தில் திருக்குர்-ஆன் கூறும் நபி ஈஸா (அலை) அவர்கள் பெயரை உச்சரிக்கும் பொழுது எந்தவித எண்ணத்தோன்றங்களும் எழாது என்பதால் இனி அந்த தூய இறைத்தூதரை "ஈஸா (அலை) என்ற பதத்திலே இங்கு பெரும்பாலும் பயன்படுத்துகின்றேன்.அல்லாஹ் அவன் திருத்தூதரை குறித்து சொல்வதை கேளுங்கள்.,

மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;.  (3:45)

     "மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்."  (3:46)

"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!  (3:55)

 அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;. தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்;. இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்;... (2:253 ன் சுருக்கம்

மேலும் பார்க்க நபி ஈஸா அலை குறித்து :    (2-87, 3-45>59, 4-157,171, 
5-17,72,75,78,110>120, 9-30, 19-16>34, 23-50, 42-13, 43-57,61,63, 61-6, 3-52, 57-27, 61-14)  

    மேற்குறிப்பிடப்பட்ட அல்லது குர்-ஆன் முழுவதும் நபி ஈஸா அலை அவர்களை பற்றி குறிப்பிடும் எந்த ஒரு வசனமும் அவர்களின் தூதுத்துவ தன்மைக்கு இழிவாகவோ தனி மனித கண்ணியத்திற்கு குறைவான நிலையிலோ குறிப்பிடுவதாக இல்லவே இல்லை.

  நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் - இறைத் தூதர்கள் தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் - எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(புஹாரி : 3442 அபூஹுரைரா (ரலி))
'ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவரின் மகனையும் தவிர' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு பிறகு, 'நான் இக்குழந்தைக்காகவும் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்னும் (மர்யமுடைய தாய் செய்த பிரார்த்தனையை கூறும் - என்ற 3:36-வது) இறைவசனத்தை ஓதுவார்கள். (புஹாரி : 3431 ஸயீத் பின் அல் முஸய்யப் (ரலி)
.
 இவ்வாறு இறைவனும் அவனது இறுதித்தூதரும் நபி ஈஸா (அலை) அவர்ககளை கண்ணியப்படுத்தி கூற என்ன காரணம்? ஆக, கிறித்துவம் கூறும் இறைமகன் பண்புகள் ஈஸா (அலை) அவர்களுக்கு பொருந்தி வருகின்றதா? இஸ்லாம் கூறும் இறைத்தூதர் என்ற நிலை ஈஸா (அலை) அவர்களுக்கு பொருந்துன்றதா?
  நன்றாக சிந்தியுங்கள் கிறித்துவ சகோதரங்களே., இஸ்லாமியர்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் புனித வேதமாக வர்ணிக்கப்படும் பைபிள் குறித்தும் அது கடவுளின் மகனாக உருவப்படுத்தும் இயேசு குறித்தும் தான்.மாறாக  கிறித்துவ சமுகத்திற்கு உண்மையாக அனுப்பப்பட்ட இஞ்ஜில் வேதங்குறித்தோ அல்லது உண்மைத்தூதர் ஈஸா(அலை) அவர்கள் குறித்தோ அல்ல.,
   ஏனெனில் உண்மையான இயேசுவை விமர்சிப்பவன் தூய முஸ்லிமாக இருக்க முடியாது., தூய இயேசுவை பின்பற்றாதவன் உண்மை கிறித்துவனாக இருக்க முடியாது.ஆக அந்த தூய இறைத்தூதர் ஈஸா(அலை)அவர்கள் சொன்னது என்ன? செய்ய சொன்னது என்ன ? என்பதை அறிய முற்படுங்கள்., நீங்கள் உண்மை தேடுதலில் விருப்பம் உடையவராக இருந்தால் இரண்டில் ஒன்றுதான் கலங்கப்படுத்தப்படாத உண்மையாகவே இறைவனின் வார்த்தைகளாக இருக்க முடியும் என்ற நடு நிலை எண்ணத்தோடு பைபிளையும் குர்-ஆனையும் ஆராயுங்கள். சர்வ வல்லமை படைத்த இறைவன் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.

    பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம், மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம், ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேணவில்லை அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர்.  (திருக்குர்-ஆன் 57:27)

                                                      அல்லாஹ் மிக்க அறிந்தவன்

1 கருத்துக்கள்:

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!