Thursday, March 17, 2011

"உயிரியல் மரமென்பது கட்டுக்கதை" - வென்டர் சொல்கிறார்

0 கருத்துக்கள்


நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

-------
பதிவிற்குள் செல்லும் முன் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டிய சொல்:

உயிரியல் அல்லது பரிணாம மரம் (Evolutionary Tree or Phylogenetic tree or Tree of life): ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து எப்படி உயிரினங்கள் வெவ்வேறு கிளைகளாக மாறின என்று விளக்குவதே பரிணாம மரம்.
-------

அரிசோனா பல்கலைகழகத்தில் சமீபத்தில் நடந்த "உயிர் என்றால் என்ன?" என்ற விவாதத்தில் பல சுவாரசிய காட்சிகள் நடந்தேறின. உயிரியல் மரம் குறித்து வென்டர் கூறிய கருத்துக்கள் பலரது புருவத்தை உயர செய்துள்ளது. 

(வென்டர் குறித்த பதிவை காண <<இங்கே>> சுட்டவும்)

டாகின்சின் வார்த்தைகளில் சொல்லுவதென்றால், உயிரியல் மரத்தை "புனைவு/கட்டுக்கதை (fiction)" என்று வர்ணித்துள்ளார் வென்டர்.

இந்த செய்தி உங்களது ஆர்வத்தை தூண்டியிருந்தால் மேற்கொண்டும் படியுங்கள். 

டாகின்ஸ், வென்டர், பால் டேவிஸ், லாரன்ஸ் க்ராஸ், க்றிஸ் மெக்கே உள்ளிட்ட ஏழு அறிவியலாளர்கள் கலந்து கொண்ட இந்த உரையாடல் நிகழ்ச்சியில் "உயிர் என்றால் என்ன?, உயிர் தோன்றியது எப்படி?" என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ரோஜர் பின்ஹம் விவாதத்தை நடத்தினார். 



உரையாடலில் கலந்து கொண்டவர்களில் பலர், இவ்வுலகில் உயிர் என்பது ஒரே வகை தான் என்று கூறினர். அதாவது, இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒரே மூதாதையரில் இருந்து வந்துள்ளதால் இவ்வுலகில் உயிர் என்பது ஒரு வகை மட்டுமே என்பது பலரது கருத்தாக இருந்தது, ஒருவரைத் தவிர...

ஆம்....கிரேக் வென்டரை தவிர. 
   
அப்போது நடந்த சுவாரசிய உரையாடல் இங்கே உங்கள் பார்வைக்கு, 

வென்டர்: இவ்வுலகில், உயிர் என்பது ஒரு வகைதான் என்ற (இங்குள்ள) என் சக தோழர்களின் கருத்திலிருந்து நான் வேறுபடுகின்றேன். நம்மிடையே பல்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன. 

pH 12 baseசில் உங்களை தூக்கி போட்டால் உங்களது தோல் கரைந்து விடும். ஆனால் அதில் வாழக்கூடிய உயிரினங்களும் உள்ளன. இந்த இரண்டையும் ஒரே வகையான உயிரினங்கள் என்று நான் கூற மாட்டேன்.   

பால் டேவிஸ்: (ஆனால்) நமக்கெல்லாம் ஓரே மரபணு குறியீடு (Genetic code) தானே இருக்கின்றது? நமக்கெல்லாம் ஒரே பொதுவான மூதாதையர் தானே...

வென்டர்: இல்லை, நமக்கெல்லாம் ஒரே மாதிரியான மரபணு குறியீடுகள் இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், Mycoplasma பாக்டீரியாக்களில் உள்ள மரபணு குறியீடு உங்களது செல்களில் வேலை செய்யாது. ஆக, உயிரினங்களுக்குள்ளாக நிறைய வேறுபாடுகள் உள்ளன. 

உரையாடல் படுசுவாரசியமாக சென்றது...

டேவிஸ்: அவை (Mycoplasmas) வேறு உயிரியல் மரத்தை சார்ந்தவை என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன். 

வென்டர்: உயிரியல் மரம் என்பது ஆரம்ப கால அறிவியல் அறிவை கொண்டு புனையப்பட்டது. அது நிலைத்து நிற்கவும் இல்லை. (ஆக) உயிரியல் மரம் என்று ஒன்றுமில்லை. 

வென்டரின் அதிரடியான இந்த பதில்கள் பார்வையாளர்களை நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கும். 

பரிணாம உலகின் அடிப்படையான "பரிணாம மரம்" குறித்த வென்டரின் கருத்துக்கள் டாகின்ஸ் உள்ளிட்ட அனைவரையும் திணறடித்திருக்க வேண்டும். அதனை டாகின்ஸ் வெளிப்படுத்தவும் செய்தார். 

டாகின்ஸ்: உயிரியல் மரம் என்பது கட்டுக்கதை/புனைவு என்ற வென்டரின் கருத்துக்கள் என்னை ஆச்சர்யமடைய செய்கின்றன. இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் டி.என்.ஏ குறியீடுகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. ஆக, இவையெல்லாம் தொடர்புடையவை என்று தானே அர்த்தம்?

இதை அவர் சொல்லி முடித்தது தான் தாமதம். ஓரிரு நொடிகள் அமைதி. ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டனர். 
.
.
.
சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தார் வென்டர். 



பின்னர், உரையாடலை நடத்திய ரோஜர் வேறு கேள்விக்கு செல்ல விஷயம் முடிவுக்கு வந்தது. டாகின்சின் பதில் குறித்து வென்டரை கருத்து கேட்டிருந்தால் விவாதம் இன்னும் படு சூடாக இருந்திருக்கும். வென்டர் தானாக முன்வந்தாவது கருத்து சொல்லியிருக்கலாம். எதற்கு இங்கே பிரச்சனை என்று சிரிப்போடு நிறுத்தி கொண்டார் போல...  

டாகின்சின் இத்தகைய பதிலை "பெரிய பொய் (Whopper)" என்று வர்ணிக்கின்றது "பரிணாம செய்திகள் (Evolutionary News)" தளம். 

ஏனென்றால், சற்று முன் தான் வென்டர் தெளிவாக கூறினார், Mycoplasma பாக்டீரியாக்களின் மரபணு குறியீடுகள் வேறானவை என்று. இத்தனைக்கும், வென்டர் கடந்த பல ஆண்டுகளாக தன்னுடைய ஆய்வுக்கு பயன்படுத்தி வருவது இந்த பாக்டீரியாக்களை தான். ஆனால் டாகின்சோ வேறு மாதிரியாக சொல்கின்றார். இவர்களில் யார் சொல்வது உண்மை? 

எது எப்படியென்றாலும், வென்டரின் கருத்துக்கள் சிலருக்கு பீதியை ஏற்படுத்தியிருக்கும் என்பது மட்டும் உண்மை.

உயிரின் தேடலைப்பற்றிய இந்த கலந்துரையாடலில் என்னை கவனிக்க வைத்த இரண்டு கருத்துக்கள்,

1. ஆரம்ப கால உலகை ஆழ்ந்து படிக்கும் போது, உயிரினங்கள் முதன் முதலாக காணப்படும் போதே முழுமையாகவும், சிக்கலான வடிவமைப்பை கொண்டதாகவும் இருக்கின்றன. இது மிகவும் மர்மமாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையே, சில விஞ்ஞானிகளை, உயிர் என்பது இங்கே உருவாகவில்லை, வேறெங்கிருந்தோ பூமிக்கு வந்திறங்கியிருக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைக்க வைத்தது - க்றிஸ் மெக்கே, NASA Ames Research Center.       

2. உயிரின் தோற்றத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்ற கருத்தை ஆமோதிக்கின்றேன். உயிரின் தோற்றத்தை அலசும் பல யூகங்கள் உள்ளன. ஆரம்ப கால பூமியை போன்ற சூழ்நிலையை வேறொரு கிரகத்தில் உருவாக்கி சோதித்தால் ஒழிய நம்மால் உயிரின் தோற்றத்தை கண்டுபிடிக்க முடியாது. அறிவியலில் சிலவற்றை நிரூபிக்க முயலாம். ஆனால், சுமார் 3.5-4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நிகழ்வை விவரிக்கும் யூகங்களை நிரூபிப்பதென்பது முடியாத காரியம் - வென்டர்.     

அறிவுக்கு நல்ல தீனியாய் அமைந்த இந்த உரையாடலை காண விரும்புபவர்கள், விவாதத்தின் முதல் பகுதியை கீழே காணலாம் (வென்டர்-டாகின்ஸ் குறித்து நான் மேலே குறிப்பிட்டவை 8.48வது நிமிடத்திலிருந்து தொடங்குகின்றது).




மற்ற இரண்டு பகுதிகளை பார்க்க விரும்புகின்றவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை சுட்டவும். 

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன். 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

References:
1. The Great Debate - What is life? (part 2 of 3). link
2. The Great Debate - What is life? (part 3 of 3). link
3. Venter vs. Dawkins on the Tree of Life -- and Another Dawkins Whopper. link

உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹ்மத் அ

0 கருத்துக்கள்:

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!