Monday, June 11, 2012

திருமணம் 'கட்டாயக்கடமை' இல்லையா...?

4 கருத்துக்கள்
பள்ளிப்படிப்பில் குறிப்பாக தமிழ் செய்யுட்பகுதிகளில் துறவறம் குறித்து சற்று உயர்வாகத்தான் கூறப்பட்டிருந்தது..! மேலும், மணம்  செய்து 'இல்லறம்'புரிந்து வாழ்வது குறித்து கூறப்படும்போது 'சிற்றின்பம்' என்றும், எப்போதும் இறைசிந்தையில் திளைத்து விடுவதாக சொல்லிக்கொண்டு,  காவிபூண்டு தம் வாழ்வில் 'துறவறம்' பூண்டு வாழ்தல்  'பேரின்பம்' என்றும் வகைப்படுத்தி வைத்திருப்பர்..! 
.
இதில் நாம் கவனிக்க வேண்டியது... 'துறவி'யாக வாழ்தல் 'அறம்' என்று அறிவுறுத்தப்படுகிறது..! நடைமுறைக்கு ஒவ்வாத... பயிற்றுவிப்பவரே தம் வாழிவில் வெறுக்கக்கூடிய ஒன்று எப்படி நல்லறமாகும்..? 'சிறுமையும்.. பெருமையும் அதெப்படி ஒரே தரநிலையில் 'அறம்' என்றாக முடியும்..?' இது தவறான கல்வி அல்லவா..? ஆகவே... "இல்லறமே நல்லறம்..!" "துறவு என்பது ஓர் அறமே அல்ல..!" இப்படி புரிதலே சரியான புரிதல் அல்லவா..?


அதேசமயம், குர்ஆனில் ஏவப்பட்டது மட்டுமே 'கட்டாயக்கடமை' என்றும், முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் சொன்னதெல்லாம் 'சுன்னத் தான்...', விட்டால் பாவம்/குற்றம்/தண்டனை ஏதும் இல்லை என்றும் எனக்கு போதிக்கப்பட்டது..!  இறைமார்க்க விஷயத்தில் நபி(ஸல்) அவர்களின் சொல்-செயல்-அங்கீகாரம் இவையும் வஹீ தான்..! அன்னார் ஒன்றை தடுத்தால் அதுவும்  செய்யவே கூடாத ஹராம்தான். 'செய்' என மக்களுக்கு அவர்களால் ஏவப்பட்ட ஒன்றை செய்யாவிட்டால் தண்டனை உண்டுதான்..! அதேநேரம்... நபி (ஸல்) அவர்களின் ஒரு சிறந்த தொடர் செயலை அவர்கள் நமக்கு 'செய்' என ஏவாத நிலையிலும், நாம் நன்மையை கருதி அவர்களை பின்பற்றி செய்தால் மட்டுமே அது 'சுன்னத்-தான்... விட்டால் குற்றம் /பாவம் /தண்டனை இல்லை' என்று பொருள் கொள்ள வழி உள்ளது..! இதெல்லாம் எனது பிற்கால புரிதல்கள்..!

"திருமணம்  நபிவழி (சுன்னத்) தான்" என்று சிலர் சொல்கின்றனர்..! 'அதற்கு 'கட்டாயக்கடமை' (ஃபர்ள்) போன்ற அந்தஸ்து இல்லை' என்பது போன்ற தவறானபுரிதல் நிறைய பேருக்கு இருக்கின்றது..! ஆனால், அவர்களே... "திருமணத்துக்கு பிறகு மனைவி குழந்தைகள் ஆகியோருக்கு உணவு-உடை-உறைவிடம்-பாதுகாப்பு ஆகிய எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்பது ஆணுக்கு கடமை" என்பதை நன்கு விளங்கி வைத்துள்ளனர்..! அந்த பொறுப்பில் தவறுவோர் இறைவனால் மறுமையில் விசாரிக்கப் படுவார்கள் என்றும் சரியாகவே புரிந்து வைத்துள்ளனர்..!

மேலும், திருமணத்திலேயே கூட, 'மணப்பெண்ணுக்கு மணமகன் மஹர் தருவதையும் 'கட்டாயக்கடமை' என்று நன்கு புரிந்து வைத்துள்ளனர்..! திருமணத்தை சுற்றி இதுபோல பல கடமையான விஷயங்கள் இருக்க, 'திருமணம் மட்டும் கடமை இல்லை'; 'அதை செய்யாவிட்டால் குற்றம் / பாவம் / மறுமை தண்டனை என ஏதும் இல்லை' என்று ஆகிவிடுமா..? "திருமணம் 'கட்டாயக்கடமை' இல்லையா..?" இது பற்றி சுருக்கமான ஓர் அலசல்தான் இப்பதிவு..! (என்ன்ன்னாது.... அப்போ இவ்ளோ நேரம் வெறும் முன்னுரைதானா ஓடிச்சு..! : Oh...... really Sorry..!:-))))
 
திருமணம்  செய்ய சக்தியுள்ளவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்..!
.
“இளைஞர்களே உங்களில் திருமணத்துக்கு சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) புஹ்காரி (5065), முஸ்லிம் (2710)  

திருமண உறவுக்கு ஏற்ற உடல்நலன் இல்லாமை, மஹருக்கான பொருள் தேடல், வேறு இக்கட்டான சூழல்... ஆகியன காரணமாக "இயலாதோர்" பற்றி இப்பதிவில் பேச யாதுமில்லை..! 'ஹஜ்' கூட (உடல்&செல்வ) சக்தி உடையவருக்கு மட்டுமே கட்டாயக்கடமை என்பதை நாம் அறிவோம்..! சக்தி இல்லாதவருக்கு அதுபற்றி கேள்விகணக்கு இல்லை அல்லவா..! 

துறவற(?)த்துக்கு இஸ்லாத்தில் தடை உள்ளது..!

திருமணம் என்ற உறவை முறித்து விட்டு, துறவறம் (இதெல்லாம் ஓர் அறமா..?!) செல்லவும் இஸ்லாம் தடை விதித்துள்ளது. துறவறம் மூலம் இறையருளைப்பெற முடியும் என்ற கருத்தை இஸ்லாம் மறுக்கிறது.
“உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் துறவறம் மேற்கொள்ளள அனுமதி கேட்ட போது நபி (ஸல்) அவர்கள் அனுமதியளிக்கவில்லை”.அறிவிப்பவர்: ஸஅத்பின் அபீவாக்காஸ் (ரலி) புஹ்காரி (5074), முஸ்லிம் (2715)
மேலும் திருமணம் செய்து இல்லற வாழ்வில் ஈடுபட்டுக்கொண்டுதான் ஒருவர் இறையருளை அடைய முடியும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
“அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன்; அல்லாஹ்வை பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்; விட்டுவிடவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன். மேலும் நான் பெண்களை மணமுடிந்தும் உள்ளேன் ஆகவே, என் வழி முறையை யார் வெறுப்பாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று கூறினார்கள்.  புஹ்காரி 5063), முஸ்லிம் (2714)
திருமண உறவை வெறுத்தோ அல்லது திருமணம் செய்து கொள்ள வசதி இல்லாததாலோ ஆண்மை நீக்கம் செய்து கொள்ள இஸ்லாம் எவரையும் அனுமதிக்கவில்லை.
“நான் ஆண்மை நீக்கம் செய்து கொள்ளலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம். "அவ்வாறு செய்ய வேண்டாம்" என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத்தடை விதித்தார்கள். அறிவிப்பவர்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) புஹ்காரி (5075), முஸ்லிம் (2720)
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்... 'துறவறம் தடை' என்பது மட்டுமல்ல... இந்த தடையிலிருந்து நாம் மீண்டு வெளியே வர வேண்டுமானால்... அதற்கு சக்தி இருந்தால்... 'திருமணம் கட்டாயம் செய்தே ஆக வேண்டும்' என்றே புரிகிறோம்..! இதிலிருந்து "சக்தியுள்ளவருக்கு திருமணம் கட்டாயக்கடமை" என்று புரியும்..! 
.
திருமணம் - இஸ்லாமிய கடமைதான் :- 
 

ஏனெனில்... திருமணம் புரியாமல் இருப்பவர்கள் அல்லாஹ்விடம் குற்றவாளிகள்..!

அல் குர்ஆன் 57:26, 27
நூஹையும், இப்ராஹீமையும் தூதர்களாக அனுப்பினோம். அவர்களது வழித் தோன்றல்களில் நபி எனும் தகுதியையும், வேதத்தையும் அமைத்தோம். அவர்களில் நேர் வழி பெற்றவரும் உண்டு. அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள். பின்னர் அவர்களின் அடிச் சுவட்டில் நமது தூதர்களைத் தொடர்ந்து அனுப்பினோம். மர்யமின் மகன் ஈஸாவையும் (அவர்களைத்) தொடர்ந்து அனுப்பினோம். அவருக்கு இஞ்சீலைக் கொடுத்தோம். அவரைப் பின்பற்றியோரின் உள்ளங்களில் இரக்கத்தையும், அன்பையும் ஏற்படுத்தினோம்.அவர்கள், தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதைக்கூட பேண வேண்டிய விதத்தில் பேணவில்லை. அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுவதைத்தவிர (வேறெதையும்) அவர்கள் மீது நாம் விதியாக்கவில்லை. அவர்களில் நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களின் கூலியைக் கொடுத்தோம். அவர்களில் அதிகமானோர் குற்றவாளிகள்.

மணமுடிக்க  மட்டுமல்ல... மணமுடித்து வைக்கவும் அல்லாஹ்வின் கட்டளை நமக்கு உள்ளது..!

அல்குர்ஆன் 24:32
உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவர் (ஆண், பெண்) களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையற்ற நற்குணமுள்ள)ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், தன் நல்லருளைக் கொண்டு அல்லாஹ் அவர்களை சீமான்களாக்கி வைப்பான். மேலும்,அல்லாஹ்(வாரிவழங்குவதில்) விசாலமானவன்.

ரசூல் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்:

நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று கூறினார்கள். (ஹதீஸின் கடைசி பகுதி) அறிவிப்பு : அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் - புஹ்காரி 5063


திருமண முறையை புறக்கணிப்போரை... 'நபி (ஸல்) அவர்கள்... தன்னை சார்ந்தவர்கள் இல்லை' என்கிறார்கள்... 'அவர்கள், மூஃமினே/முஸ்லிமே இல்லை' என்றால்..? எவ்வளவு பெரிய நஷ்டம் அது..? இது மிகப்பெரிய எச்சரிக்கை சகோ..!

எங்களைத் திருமணம் புரியும்படி கட்டளையிட்டதுடன், திருமணம் புரியாதிருப்போரை கடுமையாக ரசூல் (ஸல்) கண்டித்தார்கள். அறிவிப்பு அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : முஸ்னத் அஹமத், இப்னு ஹிப்பான்.
 
நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்:

'மார்க்கத்திலும், குணத்திலும் நீங்கள் விரும்பும் மனிதர் உங்களிடம் (மணப்பெண் கேட்டு) வந்தால் அவருக்கு திருமணம் செய்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், பூமியில் கடுமையான குழப்பமும், ஒழுக்கமின்மையும், அமைதியின்மையும் ஏற்படும்.' அறிவிப்பு : அபூஹூரைரா (ரலி), ஆதாரங்கள் : திர்மிதி, ஹாகிம், முஸ்னத் அஹ்மத். 


ஆக... சமூக அமைதி, சமூக ஒழுக்கம் இவற்றுக்கும் ஒருவிதத்தில் திருமணமும் தீர்வுதான் என்பதை நாம் நம்மைச்சுற்றி அவ்வப்போது நடக்கும் ஒழுக்கமில்லா உலக நடைமுறையை கண்டு அந்த அனுபவத்தின் மூலம்  அறியலாம்.

ஆனால், 'திருமணம் கட்டாய கடமை' என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது என்று கேட்பீர்களாயின்...

உதாரணமாக, நாம்... "சாப்பிடுவது இஸ்லாமிய கடமையா"... "சாப்பிடுவது ஃபர்ளா" என்று ஆதாரம் தேடுகிறீர்கள் என்று வைப்போம்..! ஆனால், ஒருவர் வேண்டுமென்றே ஏதும் சாப்பிடாமல் பட்டினி கிடந்து சாகிறார்... எனில், இது தற்கொலை...! 'தற்கொலைக்கு பரிசு நரகம்' என்று நாம் நன்கு அறிவோம்..! சாகாமால் இருக்க வேண்டுமானால்... நரகம் செல்லாமல் இருக்க வேண்டுமானால்... நாம் சாப்பிட்டே ஆக வேண்டும் அல்லவா..!? இப்பொது சொல்லுங்கள்... சாப்பிடுவது இஸ்லாமிய கடமையா.. (ஃபர்ளா)..? இல்லையா...? ஆதாரம் கிடைத்து விட்டது அல்லவா..?

அதேபோல... 'துறவி'யாக இல்லாமல் இருந்து நரகத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி, திருமணம் செய்ய சக்திபெற்றோர் திருமணம் செய்தே ஆக வேண்டும்..! 'இது சுன்னத்துதானே...' என திருமணத்தை தவிர்ப்போர் அல்லது புறக்கனிப்போர் இனி இது 'கட்டாயகடமை'தான் என்பதை அவசியம் சிந்திக்கவும்..!

நபி (ஸல்) அவர்கள் சொல்லி அதை தவிர்க்கலாம் என்றால்... அதையும் அவர்களேதான் அனுமதிக்க முடியும்..! உதாரணமாக... புஹ்காரி-627  அப்துல்லாஹ் இப்னு முகப்பல்(ரலி) அறிவித்தார். “ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு” என்று நபி(ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறிவிட்டு மூன்றாம் முறை ‘விரும்பியவர்கள் தொழலாம்” என்றார்கள். இங்கே, 'முன் சுன்னத் தொழுதே ஆக வேண்டும், முன் சுன்னத் தொழாதவர் என்னைச்சார்ந்தவர் இல்லை' என்றெல்லாம் சொல்லவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்..! ஆகவே, இத்தொழுகைகள் கடமை என்ற அந்தஸ்து பெறாமல்... 'தொழுதால் நமக்கு அதிகப்படி நன்மைகள்' என்ற அளவில் வலியுறுத்தப்படுகின்றன..!

நபி (ஸல்) கூறினார்கள்: எந்த ஒரு பெண் தன் பொறுப்பாளர் (வலீ) அனுமதியின்றி திருமண சம்மதம் தெறிவிக்கிறாளோ அத்திருமணம் செல்லாது, அத்திருமணம் செல்லாது, அத்திருமணம் செல்லாது. அப்பெண்ணுடன் உடலுறவு கொள்வதை மஹர் தொகை அனுமதிக்கிறது. எவளொருவளுக்கு வலீயில்லையோ அவளுக்கு அரசர் வலீயாவார். அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி.

நபி (ஸல்) கூறினார்கள்: ஒரு (மணப்) பெண்ணை மற்றொரு பெண் (வலீயாக இருந்து) மணம் செய்விக்கக் கூடாது. மணப்பெண் தன்னையே (வலீயின்றி) மணம் செய்தல் கூடாது. அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: இப்னுமாஜா, தாரகுத்னி, பைஹகி


மணமக்கள் தவிர... ஒரு வலி, இரு சாட்சிகள் (குர்ஆனில் சில இடங்களில் ஒப்பந்தம் இடப்படும்போது, விவாகரத்துக்கு என்றல்லாம் இரண்டு சாட்சிகள் வேண்டும் எனப்படுவதை அறிவோம்) ஒரு நிக்காஹ்வுக்கு அவசியம். அல்லாஹ் ஏற்படுத்திய இந்த நடைமுறையை வலியும் சாட்சிகளும் புறக்கணிப்பது பாவமாகாமல் இருக்குமா..? மணமகன் தரும் மணவிருந்துதான் வலிமா. 'வலிமாவை புறக்கணித்தோர் என்னை சார்ந்தவர் இல்லை...' என்பது நபி ஸல் அவர்கள் பொன்மொழி. மணமகன் தன் வலிமாவுக்கு கூப்பிடும் விருந்தினர்... நிச்சயம் நிக்காஹ்விலும் இடம்பெறுவர். புறக்கணிக்க முடியாத வலிமா முக்கியம் என்றால்... நிக்காஹ் அதைவிட கலந்து கொள்ளவேண்டிய முக்கியம் என்பதை நாம் உணரவேண்டும். சுன்னத்தான "பாரக்கல்லாஹு லக...." என்ற மணமக்களுக்கான பிரார்த்தனையை நிக்காஹ்வை புறக்கணித்துவிட்டு... வலிமாவில் அமர்ந்து சொல்ல முடியுமா..? நிக்காஹ் இல்லையேல் வலிமா இல்லையே..!

ஆகவே, இப்படி இஸ்லாத்தில் அல்லாஹ்வும் அவன் ரசூலும் வலியுறுத்திய திருமணம் என்ற ஒரு கட்டாயக்கடமையை ஒருவர் செய்கிறார் என்றால்... அவருக்கு உறுதுணையாக இருந்தால் நன்மை கிடைக்குமா அல்லது அவரின் இந்த நற்செயலை புறக்கணித்தால் நன்மை கிடைக்குமா...? இதுபற்றி இஸ்லாம் சொல்வது என்ன..? இதை புறக்கணிக்க இஸ்லாமிய அனுமதி உண்டா..? உண்டு என்றால் அது எப்போது..? இல்லை என்றால், அப்போது புறக்கணித்தவர் மறுமை நிலை யாது..? இக்கேள்விகளுக்கெல்லாம் பதில்களை அலசி இன்ஷாஅல்லாஹ் அடுத்த பதிவில் சிந்திப்போம் சகோ..!

4 கருத்துக்கள்:

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!