Thursday, August 11, 2011

ரமலானில் முஸ்லிம்கள்!..?

1 கருத்துக்கள்
                                                      ஓரிறையின் நற்பெயரால்
                 இஸ்லாத்தில் ஏனைய ஆக்கங்களை விட ரமலான் குறித்தே அதிக ஆக்கங்கள் இணையத்தில் நிறைந்து காணப்படுகின்றன.,ரமலான் குறித்து புதிதாய் அறிந்து கொள்வதற்கு எதுவுமில்லை என்ற அளவிற்கு அதிகமதிகம் செய்திகள் கிடைக்கின்றன., அல்ஹம்துலில்லாஹ்..!
        
    அத்தகைய சங்கைமிகு ரமலான் மாதத்தில் இப்போது நாமும் இருக்கிறோம். ரமலான் மாதத்தின் நோன்பை முழுவதும் நோற்க அல்லாஹ் அருள்புரிவானாக..! நோன்பு நோற்பதால் உடலுக்கு ஏற்படும் மருத்துவ ரீதியான நன்மைகள் ஆயிரமாயிரம் நிருபனமானாலும் (benefit of islamic fasting என கூக்ளியிட்டால் ஏராளமாக கண்டுக்கொள்ளலாம்) அஃது நோன்பின் உண்மையான நோக்கமும் அதன் அடிப்படையில் செயல்படும் முஸ்லிம்களின் நிலையும் குறித்தே இந்த கட்டுரை

இஸ்லாமும் - ரமலானும்          ஏனைய வணக்கங்களைப்போல் அல்லாமல் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே நோன்பு குறித்து இறை வசனங்கள் இருக்கின்றன அல்குர்-ஆனில்


 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.  (2:183)
   
     இங்கு நோன்பு நோற்பதின் நோக்கத்தை எளிதாக அறிந்திட அல்லாஹ்
" நோன்பின் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்." என குறிப்பிடுகிறான். இங்கு தூய்மை என்பது உள்ளத்தூய்மையை குறிக்கிறது. மேலும் இரட்சகனின் இறுதித்தூதரும் ,
    யார் பொய்யான பேச்சையும் கெட்ட நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!"
அறிவிப்பாளர்:அபூ ஹுரைரா(ரலி அவர்கள்
புஹாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1903 

                   பொதுவாக நோன்பு பட்டினி கிடப்பதை மையப்படுத்தியிருந்தாலும் அதை முன்னிலைப்படுத்தி கடமையாக்கப்படவில்லை. பசித்திருப்பதும்-தாகித்திருப்பதும் நோன்பு காலங்களில் ஒரு அம்சமாக இருந்தாலும், தனி மனித ஒழுக்கத்தை பிரதானப்படுத்தியே நோன்பு இருக்கிறதென்பதை தான் மேற்கண்ட வேத வரியும் தூதர் மொழியும் எடுத்து இயம்புகின்றன. ஆக பட்டினி கிடப்பது மட்டுமே நோன்பின் சாரம்சமாக இருந்தால் மேற்கண்ட இறை வசனங்களில் அல்லாஹ் அவ்வாறு கூற வேண்டிய அத்தியாவசியமும் இல்லை., அவனுடைய தூதரும் வழிமொழிய வேண்டிய அவசியமும் இல்லை.
        
            ஆக மேலதிக விளக்கம் இல்லாமலே நோன்பின் அடிப்படை நோக்கம் என்ன என்பதை எளிதாக அறியலாம்., எனினும் அத்தகைய சங்கை மிகு நோன்பு காலங்களில் முஸ்லிம்கள் செயல்பாடுகள் குறித்து காண்போம்.

ரமலானும் -முஸ்லிம்களும்      எந்த ஒரு முஸ்லிமும் ரமலானிற்கு முன்னதாகவே அதனை வரவேற்க மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறார் என்பதில் இரு வேறுகருத்துக்கள் இல்லை. எனினும் நோன்பு காலங்களில் இரவு காலங்களில் சஹருக்கு முன்புவரை நன்கு எங்கேணும் அமர்ந்து விளையாடி (அல்லது சக நண்பர்களோடு அரட்டை அடித்து)விட்டு சஹருக்கு பின் நன்றாக தூங்கி நோன்பு திறப்பதற்கு முன் தன் கண்களை திறக்கும் சகோதரர்களின் நிலை மாறி.,
      
             பதினான்கு மணி நேரத்திற்கு மேலாக பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மட்டுமல்லாது தனது அன்றாட அதிக அலுவல்களுக்கு மத்தியிலும் அந்தந்த தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டவுடன் மிகச்சரியாக (பள்ளி வாசலுக்கு) தொழ செல்வதும், ஏனைய பர்ளான தொழுகைகளை போலவே சுன்னத்தான இரவு தொழுகைக்கு மிக முன்னதாக அல்லது தனது அலுவல் பணி முடிந்தும் விரைவாக வந்து ஜமாத்தோடு கலந்து தொழுகையே தொடர்வதும், 
      
             ஆயிரமாயிரம் மக்கள் உலவும் கடை வீதிகளில் அரைகுறை ஆடையுடன் காட்சியளிக்கும் அனேக அனாச்சாரியங்களுக்கு மத்தியிலும் பார்வையை தாழ்த்தி ஈமானை அதிகரிக்கும் மாண்புடன் உலவுவதும், தீய பேச்சுக்க்கள் பேசிடினினும், கெட்ட எண்ணங்கள் வந்திடினும் மறுகணம் "அஸ்தாஃபீருல்லாஹ்..!" எனக்கூறி எண்ணத்தை தூய்மையாக்குதலும், திரைப்படத்திற்கு திரையிட்டு தன்னின் நேரங்களை குர்-ஆனோடு உரையாடுவதற்காக செலவிடுவதும்,அதிக பசி இருப்பதை அறிந்தும் அருகே வந்தவருக்கு தன்னிடமிருந்து ஏராளமான உணவும் அதை விட தாரளமான இடமும் கொடுக்கும் பொறுமையும் மன சகிப்புதன்மையும் பொரும்பாலான முஸ்லிம்களின் நோன்பாக இருக்கிறது... எனினும்
அத்தகைய சங்கை மிகு ரமலான் கடந்து விட்டால்...

ரமலான் முழுக்க நம்மில்-

  • தஸ்பீஹ்கும் கையுமாக இருந்தவரின் கரங்களில் உயர்ரக சிகரெட்டுகள்..!
  • பாங்கு சொல்வதற்கு முன்னதாக பள்ளிக்குள் நுழைந்தவர் தொழுகை நேரம் முடிந்தும் பள்ளியின் பக்கம் எட்டிப்பார்பதில்லை...!
  • கடைவீதீகளில் தரையுடன் மட்டுமே விழிகளால் பேசியவர்களின் பார்வை தேடும் விரச காட்சிகள்
  • தீயப்பேச்சுகள் இவையாவும் அடியோடு தவிர்த்த அனேகர்களின் வாயில் அநாகரிக பேச்சுக்களின் அடிச்சுவடுகள்...!
  • பெரு நாள் தொழுகை முடிந்து துஆ கேட்பதற்கு முன்பாகவே திரையரங்க வளாகங்களில்...டிக்கெட் கிடைத்த பெருமிதத்தோடு
       இப்படி சிலர்..!

  இப்படித்தான் பல வருட ரமலானும் அதைத்தொடர்ந்த மாதங்களும் வெற்று சடங்காக பலர் வாழ்கையில் வந்தும்- சென்றும் கொண்டிருக்கின்றது.


இதுதான் ரமலான் மாதம் முழுக்க நமக்கு அளிக்கப்பட்ட பயிற்சியா ? 


இதுதான் நோன்பு நோற்பதன் மூலம் நாம் அடைந்து கொண்ட பயன்பாடா..? 


தூய்மையுடையோர் என்பதற்கு இது தான் விளக்கமா?


நோன்பு காலங்களில் மட்டும்தான் ஒழுக்கத்துடன் செயல் பட வேண்டும் என அல்லாஹ் வரையரை ஏற்படுத்தி தந்திருக்கின்றானா..?

 சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம் நாம்...
  மேலும் புஹாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1894 ல் அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்க
இரட்சகனின் இறுதித்தூதர் மேலும் கூறுகிறார்கள்

  "நோன்பு ஒரு கேடயமாகும்..!"


      ஆம்! அது பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயம்.,  அக்கேடயத்தை பயன்படுத்தி பாவ செயல்களிலிருந்தும், மன இச்சையிலிருந்தும் நம்மை தற்காத்து நோன்பில் நாம் கொண்ட பயிற்சியின் விளைவாக இறைவனுக்கு பயந்து ரமலான் மாதம் முழுக்க எவ்வாறு ஒழுக்க சீலர்களாக நம்மை தயார்படுத்தினோமோ அதன் தாக்கம் அதை தொடர்ந்த ஏனைய மாதங்களிலும் நம்மீது இருக்கவேண்டும்.,
         ஏனெனில் ஆதம் அலையை படைப்பதற்கு முன்னதாக இருந்த அதேஅல்லாஹ் தான் நம்முடன் நோன்பிலும் இருக்கின்றான் -நோன்பல்லாத பிற காலங்களிலும் இருக்கின்றான். மேலும் ஒரு நல்ல செயலை தொடர்ந்து செய்வதற்கும், அதுப்போல கெட்டச்செயலை விட்டொழிப்பதற்கும் ஏனைய நிலைகளை விட ரமலான் மாத்திலேயே முறையாக பின்பற்றுதலுக்குரிய சாத்தியக்கூறுகள் அதிகம்.
      அந்த வாய்ப்பை நாம் நன்கு பயன்படுத்தி ரமலானில் மட்டும் முஸ்லிம்களாக இல்லாமல் நோன்பில் கொண்ட பயிற்சியின் விளைவால் உயிர் வாழும் காலம் முழுவதும் அல்லாஹ்விற்கு பயந்து அவனது ஏவல்-விலக்கல்களை பின்பற்றும் முன்மாதிரி முஸ்லிம்களாக வாழ வேண்டும். அத்தகைய நல்ல பாக்கியத்தை உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக..!

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். (3:102)


                                                                                            அல்லாஹ் நன்கு அறிந்தவன்

1 கருத்துக்கள்:

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!