Showing posts with label நோன்பு. Show all posts
Showing posts with label நோன்பு. Show all posts

Thursday, August 11, 2011

ரமலானில் முஸ்லிம்கள்!..?

1 கருத்துக்கள்
                                                      ஓரிறையின் நற்பெயரால்
                 இஸ்லாத்தில் ஏனைய ஆக்கங்களை விட ரமலான் குறித்தே அதிக ஆக்கங்கள் இணையத்தில் நிறைந்து காணப்படுகின்றன.,ரமலான் குறித்து புதிதாய் அறிந்து கொள்வதற்கு எதுவுமில்லை என்ற அளவிற்கு அதிகமதிகம் செய்திகள் கிடைக்கின்றன., அல்ஹம்துலில்லாஹ்..!
        
    அத்தகைய சங்கைமிகு ரமலான் மாதத்தில் இப்போது நாமும் இருக்கிறோம். ரமலான் மாதத்தின் நோன்பை முழுவதும் நோற்க அல்லாஹ் அருள்புரிவானாக..! நோன்பு நோற்பதால் உடலுக்கு ஏற்படும் மருத்துவ ரீதியான நன்மைகள் ஆயிரமாயிரம் நிருபனமானாலும் (benefit of islamic fasting என கூக்ளியிட்டால் ஏராளமாக கண்டுக்கொள்ளலாம்) அஃது நோன்பின் உண்மையான நோக்கமும் அதன் அடிப்படையில் செயல்படும் முஸ்லிம்களின் நிலையும் குறித்தே இந்த கட்டுரை

இஸ்லாமும் - ரமலானும்          ஏனைய வணக்கங்களைப்போல் அல்லாமல் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே நோன்பு குறித்து இறை வசனங்கள் இருக்கின்றன அல்குர்-ஆனில்


 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.  (2:183)
   
     இங்கு நோன்பு நோற்பதின் நோக்கத்தை எளிதாக அறிந்திட அல்லாஹ்
" நோன்பின் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்." என குறிப்பிடுகிறான். இங்கு தூய்மை என்பது உள்ளத்தூய்மையை குறிக்கிறது. மேலும் இரட்சகனின் இறுதித்தூதரும் ,
    யார் பொய்யான பேச்சையும் கெட்ட நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!"
அறிவிப்பாளர்:அபூ ஹுரைரா(ரலி அவர்கள்
புஹாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1903 

                   பொதுவாக நோன்பு பட்டினி கிடப்பதை மையப்படுத்தியிருந்தாலும் அதை முன்னிலைப்படுத்தி கடமையாக்கப்படவில்லை. பசித்திருப்பதும்-தாகித்திருப்பதும் நோன்பு காலங்களில் ஒரு அம்சமாக இருந்தாலும், தனி மனித ஒழுக்கத்தை பிரதானப்படுத்தியே நோன்பு இருக்கிறதென்பதை தான் மேற்கண்ட வேத வரியும் தூதர் மொழியும் எடுத்து இயம்புகின்றன. ஆக பட்டினி கிடப்பது மட்டுமே நோன்பின் சாரம்சமாக இருந்தால் மேற்கண்ட இறை வசனங்களில் அல்லாஹ் அவ்வாறு கூற வேண்டிய அத்தியாவசியமும் இல்லை., அவனுடைய தூதரும் வழிமொழிய வேண்டிய அவசியமும் இல்லை.
        
            ஆக மேலதிக விளக்கம் இல்லாமலே நோன்பின் அடிப்படை நோக்கம் என்ன என்பதை எளிதாக அறியலாம்., எனினும் அத்தகைய சங்கை மிகு நோன்பு காலங்களில் முஸ்லிம்கள் செயல்பாடுகள் குறித்து காண்போம்.

ரமலானும் -முஸ்லிம்களும்      எந்த ஒரு முஸ்லிமும் ரமலானிற்கு முன்னதாகவே அதனை வரவேற்க மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறார் என்பதில் இரு வேறுகருத்துக்கள் இல்லை. எனினும் நோன்பு காலங்களில் இரவு காலங்களில் சஹருக்கு முன்புவரை நன்கு எங்கேணும் அமர்ந்து விளையாடி (அல்லது சக நண்பர்களோடு அரட்டை அடித்து)விட்டு சஹருக்கு பின் நன்றாக தூங்கி நோன்பு திறப்பதற்கு முன் தன் கண்களை திறக்கும் சகோதரர்களின் நிலை மாறி.,
      
             பதினான்கு மணி நேரத்திற்கு மேலாக பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மட்டுமல்லாது தனது அன்றாட அதிக அலுவல்களுக்கு மத்தியிலும் அந்தந்த தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டவுடன் மிகச்சரியாக (பள்ளி வாசலுக்கு) தொழ செல்வதும், ஏனைய பர்ளான தொழுகைகளை போலவே சுன்னத்தான இரவு தொழுகைக்கு மிக முன்னதாக அல்லது தனது அலுவல் பணி முடிந்தும் விரைவாக வந்து ஜமாத்தோடு கலந்து தொழுகையே தொடர்வதும், 
      
             ஆயிரமாயிரம் மக்கள் உலவும் கடை வீதிகளில் அரைகுறை ஆடையுடன் காட்சியளிக்கும் அனேக அனாச்சாரியங்களுக்கு மத்தியிலும் பார்வையை தாழ்த்தி ஈமானை அதிகரிக்கும் மாண்புடன் உலவுவதும், தீய பேச்சுக்க்கள் பேசிடினினும், கெட்ட எண்ணங்கள் வந்திடினும் மறுகணம் "அஸ்தாஃபீருல்லாஹ்..!" எனக்கூறி எண்ணத்தை தூய்மையாக்குதலும், திரைப்படத்திற்கு திரையிட்டு தன்னின் நேரங்களை குர்-ஆனோடு உரையாடுவதற்காக செலவிடுவதும்,அதிக பசி இருப்பதை அறிந்தும் அருகே வந்தவருக்கு தன்னிடமிருந்து ஏராளமான உணவும் அதை விட தாரளமான இடமும் கொடுக்கும் பொறுமையும் மன சகிப்புதன்மையும் பொரும்பாலான முஸ்லிம்களின் நோன்பாக இருக்கிறது... எனினும்
அத்தகைய சங்கை மிகு ரமலான் கடந்து விட்டால்...

ரமலான் முழுக்க நம்மில்-

  • தஸ்பீஹ்கும் கையுமாக இருந்தவரின் கரங்களில் உயர்ரக சிகரெட்டுகள்..!
  • பாங்கு சொல்வதற்கு முன்னதாக பள்ளிக்குள் நுழைந்தவர் தொழுகை நேரம் முடிந்தும் பள்ளியின் பக்கம் எட்டிப்பார்பதில்லை...!
  • கடைவீதீகளில் தரையுடன் மட்டுமே விழிகளால் பேசியவர்களின் பார்வை தேடும் விரச காட்சிகள்
  • தீயப்பேச்சுகள் இவையாவும் அடியோடு தவிர்த்த அனேகர்களின் வாயில் அநாகரிக பேச்சுக்களின் அடிச்சுவடுகள்...!
  • பெரு நாள் தொழுகை முடிந்து துஆ கேட்பதற்கு முன்பாகவே திரையரங்க வளாகங்களில்...டிக்கெட் கிடைத்த பெருமிதத்தோடு
       இப்படி சிலர்..!

  இப்படித்தான் பல வருட ரமலானும் அதைத்தொடர்ந்த மாதங்களும் வெற்று சடங்காக பலர் வாழ்கையில் வந்தும்- சென்றும் கொண்டிருக்கின்றது.


இதுதான் ரமலான் மாதம் முழுக்க நமக்கு அளிக்கப்பட்ட பயிற்சியா ? 


இதுதான் நோன்பு நோற்பதன் மூலம் நாம் அடைந்து கொண்ட பயன்பாடா..? 


தூய்மையுடையோர் என்பதற்கு இது தான் விளக்கமா?


நோன்பு காலங்களில் மட்டும்தான் ஒழுக்கத்துடன் செயல் பட வேண்டும் என அல்லாஹ் வரையரை ஏற்படுத்தி தந்திருக்கின்றானா..?

 சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம் நாம்...
  மேலும் புஹாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1894 ல் அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்க
இரட்சகனின் இறுதித்தூதர் மேலும் கூறுகிறார்கள்

  "நோன்பு ஒரு கேடயமாகும்..!"


      ஆம்! அது பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயம்.,  அக்கேடயத்தை பயன்படுத்தி பாவ செயல்களிலிருந்தும், மன இச்சையிலிருந்தும் நம்மை தற்காத்து நோன்பில் நாம் கொண்ட பயிற்சியின் விளைவாக இறைவனுக்கு பயந்து ரமலான் மாதம் முழுக்க எவ்வாறு ஒழுக்க சீலர்களாக நம்மை தயார்படுத்தினோமோ அதன் தாக்கம் அதை தொடர்ந்த ஏனைய மாதங்களிலும் நம்மீது இருக்கவேண்டும்.,
         ஏனெனில் ஆதம் அலையை படைப்பதற்கு முன்னதாக இருந்த அதேஅல்லாஹ் தான் நம்முடன் நோன்பிலும் இருக்கின்றான் -நோன்பல்லாத பிற காலங்களிலும் இருக்கின்றான். மேலும் ஒரு நல்ல செயலை தொடர்ந்து செய்வதற்கும், அதுப்போல கெட்டச்செயலை விட்டொழிப்பதற்கும் ஏனைய நிலைகளை விட ரமலான் மாத்திலேயே முறையாக பின்பற்றுதலுக்குரிய சாத்தியக்கூறுகள் அதிகம்.
      அந்த வாய்ப்பை நாம் நன்கு பயன்படுத்தி ரமலானில் மட்டும் முஸ்லிம்களாக இல்லாமல் நோன்பில் கொண்ட பயிற்சியின் விளைவால் உயிர் வாழும் காலம் முழுவதும் அல்லாஹ்விற்கு பயந்து அவனது ஏவல்-விலக்கல்களை பின்பற்றும் முன்மாதிரி முஸ்லிம்களாக வாழ வேண்டும். அத்தகைய நல்ல பாக்கியத்தை உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக..!

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். (3:102)


                                                                                            அல்லாஹ் நன்கு அறிந்தவன்

Saturday, August 6, 2011

நோன்பா?வெறும் பட்டினியா?(சுய பரிசோதனை)

4 கருத்துக்கள்


அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் சிறப்புமிக்க ரமளான் மாதத்தை அடைந்து நோன்பு நோற்றிருக்கும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் என்றும் நிலவட்டுமாக! இந்த ரமளான் மாதம் நம் உள்ளங்களை தூய்மைப் படுத்தக்கூடியதாகவும், சிறு சிறு தவறுகளையும்கூட களைந்து உண்மையான/முழுமையான‌ இஸ்லாமியர்களாக வாழ நம்மை தயார் படுத்தக்கூடியதாகவும் உள்ளது. அது எப்போது..? ரமளானில் நோற்கும் நோன்பின் நோக்கத்தை சரியான முறையில் நாம் நிறைவேற்றும்போது! அப்படியானால் நோன்பின் நோக்கத்தை நாம் எவ்வாறு நிறைவேற்றுவது? முதலில் நோன்பின் நோக்கம் இதுதான் என்று நாம் அறிந்துக் கொண்டால்தான் அதன் நோக்கத்தை நாம் நிறைவேற்ற‌ இயலும்.

நோன்பின் நோக்கம் என்பது ஏழைகளின் பசியை அறிந்துக் கொள்வதற்காக என சிலர் (அறியாமையில்) கூறுவதுபோல் இஸ்லாம் நமக்கு எங்குமே கூறவில்லை. அப்படி கூறியிருந்தால் பசியின் கொடுமையை வாழ்நாளெல்லாம் உணர்ந்த, தினமும் பட்டினியால் வாடும் ஏழைகளுக்கும் இந்த நோன்பை இஸ்லாம் கடமையாக்கி இருக்காது. பசியை உணர்ந்திருக்கும் செல்வந்தர்களாக இருந்தாலும், அத‌ன் கொடுமை அறியாமல் பழகிய வசதி படைத்தவர்க‌ளுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கும். ஆனால் அன்றாடங்காய்ச்சிகளாக இருந்தாலும், அடுத்தவர்களின் கையை எதிர்ப்பார்த்து வாழும் பரம ஏழைகளாகவே இருந்தாலும்கூட ரமளானில் நோன்பு நோற்பதை இஸ்லாம் கடமையாக்கி இருக்கிறது. அது ஏன்? அதுபோல் இஸ்லாமிய நோன்பு முறையினால் உடல் ஆரோக்கியம் பேணப்படும் என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறினாலும் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு அதுவும் ஒரு காரணம் என இஸ்லாம் குறிப்பிடவில்லை. இப்படியிருக்க ரமளானின் ஒரு மாதகாலம் முழுவ‌தும் ஏழை/ பணக்காரன் பாகுபாடின்றி நோன்பு நோற்கவேண்டும் என்ற இஸ்லாத்தின் கட்டளைக்கு என்னதான் நோக்கமாக இருக்கும்? இறைவனும், இறுதித்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் கூறுவதைப் பாருங்கள்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

"நம்பிக்கைக் கொண்டவர்களே! நீங்கள் இறைவனை அஞ்சி (பயபக்தியுடன்) நடந்துக் கொள்வதற்காக, உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப் பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது". (அல்குர்ஆன் 2:183) என்று அல்லாஹ்தஆலா கூறுகிறான்.

நோன்பின் உன்னதமான நோக்கத்தை அல்லாஹ் தனது திருமறையிலே இவ்வாறு ரத்தினச் சுருக்கமாகவும், மிக அழகாகவும் சொல்லிக் காட்டுகிறான்.'நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக' என்ற ஒரு வார்த்தையிலேயே, எவ்வளவு அற்புதமான வாழ்வியல் பண்பாட்டினை மனிதனுக்கு போதிக்கும் நோக்கத்தை இறைவன் பொதிந்து வைத்துள்ளான் பாருங்கள்! (சுப்ஹானல்லாஹ்!)

அதாவது மனிதன் மறுமையின் வெற்றியை அடைய இறையச்சத்துடன் வாழவேண்டும். அந்த இறையச்சத்திற்கான ஒரு ஆன்மீகப் பயிற்சியை நோன்பு நோற்பதின் மூலம் நாம் பெறுகிறோம். உதாரணமாக நாம் ஹலாலான முறையில் உழைத்து, சம்பாதித்த பொருட்களிலிருந்தோ, நமக்கு உரிமையான மற்ற‌ ஹலாலான பொருட்களிலிருந்தோ உண்பது நமக்கு அனுமதியளிக்கப் பட்டதாக இருந்தாலும், அந்த உணவை ரமலானின் பகல் நேரத்தில் உண்ணாமல் தவிர்த்துக் கொள்கிறோம். காரணம் அது அல்லாஹ்வின் கட்டளை! நம்முடைய‌ வீட்டில், சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை என்ற நிலையில் நம்மைத் தவிர யாருமில்லாமல் நாம் தனித்து இருந்தாலும், அங்கு அறுசுவை உணவுகளும் கண் முன்னால் தயார் செய்து வைக்கப்பட்டு இருந்தாலும், அந்த நேரத்தில் பசியோ, தாகமோ, அவற்றை உண்ணவேண்டும் என்ற ஆவலோ ஏற்பட்டாலும் 'சாப்பிடக் கூடாது' என்ற அல்லாஹ்வின் கட்டளையினால் நாம் அவற்றை சாப்பிடுவதில்லை.  யாருமே பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது ஒரு கவளம் உணவாக‌ இருந்தாலும், ஒரு மிடறு தண்ணீராக இருந்தாலும் அது அல்லாஹ்வுக்கு தெரியும்! அவன் நம்மைப் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உள்ளச்ச‌ம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதாலும், அல்லாஹ்தஆலா இட்ட கட்டளையை மீறினால் மறுமையில் தண்டனைக்குரியவர்களாக ஆகிவிடுவோம் என்ற இறையச்சமும் நம் உணவையே நாம் சாப்பிடுவதை விட்டும் நம்மை தடுக்கிறது.

ஆக நாம் சாப்பிடுவதை யாருமே பார்க்க முடியாத சூழலிலும் இறைவன் பார்க்கிறான் என்ற ஒரே காரணத்திற்காக நமக்குச் சொந்தமான, * ஹலாலானஉணவை ரமளானின் பகல் நேரங்களில் ஒதுக்கி வைக்கும் நாம், ரமளான் அல்லாத மாதங்களில் இஸ்லாம் தடுத்துள்ள * ஹராமான தீய‌ காரியங்களில் ஈடுபட வாய்ப்பு கிடைத்தாலும், அல்லாஹ் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அச்சம் நமக்குள் ஏற்பட்டு அதிலிருந்து விலகி வாழ்கிறோமே, அதுதான் ரமளான் மாதத்தில் நாம் பெற்ற அந்த ஆன்மீகப் பயிற்சி! அதை நம் வாழ்நாள் முழுதும் கடைபிடிக்கும்போது நோன்பின் நோக்கத்தை நாம் நிறைவேற்றியவர்களாக ஆகிவிடுவோம். (இன்ஷா அல்லாஹ்!) 

ஆனால் அநேக மக்கள், இஸ்லாம் தடுத்துள்ள‌ தீய காரியங்கள் என்று சொன்னால் இணைவைத்தல், வட்டி, விபச்சாரம்,  கொலை, கொள்ளை, மது அருந்துதல் போன்ற பெரும் பாவங்கள் மட்டும்தான் என்று சிறிய ஒரு வட்டத்திற்குள் அடக்கி வைத்திருப்பதால், மற்ற தவறுகளை தவறென்று நினைத்து அஞ்சாமல் அலட்சியப் படுத்தப்படுவதால் நோன்பு வைத்தாலும் அதன் பலனை அடைய முடியாத நஷ்டவாளிகளாக ஆகும் நிலையில் மக்கள் உள்ளனர். (அல்லாஹ் காப்பாற்றுவானாக!) இப்படிப்பட்ட‌ நிலையை விட்டும் தவிர்ந்துக் கொண்டவர்களாக நம்முடைய ரமளான் நோன்பை நன்மை தர‌க்கூடியதாக‌ நாம் நிறைவேற்றி வருகிறோமா? அல்லது நோன்பைப் பாழாக்கும் விஷயங்கள் இன்ன இன்னவை என இஸ்லாம் பட்டியலிடுவதை சரியான முறையில் அறிந்து அவற்றைத் தவிர்ந்துக் கொள்ளாமல் வெறும் பட்டினி கிடப்பதைப்போல நன்மையற்ற நோன்பு நோற்கிறோமா? என்பதை நாம் ஒவ்வொருவரும் இந்த ரமளானிலே சுய பரிசோதனை செய்துக் கொள்ளவேண்டும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"யார் பொய்யான பேச்சுகளையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதிலோ, தாகித்திருப்பதிலோ அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை"


அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்: புகாரி, திர்மிதி, இப்னுமாஜா


மற்ற எத்தனையோ தவறுகள் தடுக்கப்பட்டதாக இருப்பினும் 'பொய் சொல்வதை'ப் பற்றி இங்கே நபிகள்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டு சொல்கிறார்கள். அப்படியானால் புறம் பேசுவது, கோள் சொல்வது, இல்லாததை கற்பனையாக‌ இட்டுக் கட்டுவது, வீணான பொழுது போக்குகள், அருவறுக்கத்தக்க/ஆபாசமான‌ பேச்சுகள், தீமைகளுக்கு துணை போவது, மோசடி செய்வது, வாக்குறுதி மீறுவது என அத்தனையும் செய்யலாமென்று அர்த்தமாகிவிடாது. ஒரு மனிதனால் தவறென்றே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் சர்வ சாதாரணமாக செய்கின்ற‌, அல்லது தவறென்று தெரிந்தும் அதை அலட்சியப் படுத்தக்கூடியதாக இருக்கக்கூடிய, அடிக்கடி நிகழும் ஒரு தவறுதான் பொய் சொல்வதாகும் என்பதால்தான், தடுக்கப்பட்ட விஷயங்களில் 'பொய்'யை முக்கியப்படுத்தி நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆக குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ள 'பொய்' என்ற இந்த ஒன்றைப் போலவே, அலட்சியமாகக் கருதப்படும் மேற்சொன்ன மற்ற அத்தனை தவறுகளும் நாம் நோற்கும் நோன்பினை நன்மை இல்லாமல் பாழாக்கிவிடும்என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். அவ்வளவு ஏன்.. நாம் நோன்பு நோற்றிருக்கும்போது நம்முடன் யாரும் வீண் வம்புக்கு வந்தால் கூட அவர்களுடன் நாமும் பதில் வம்புக்குப் போகக்கூடாது என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு வலியுறுத்தியுள்ளார்கள் என்றால், எந்தளவுக்கு பேணுதலாக நம்முடைய நோன்பின் நன்மையைப் பெறவேண்டியுள்ளது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும்போது யாரேனும் சண்டைக்கு வந்தால், (அல்லது) யாரேனும் திட்டினால் "நான் நோன்பாளி" என்று கூறிவிடுங்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்: புகாரி (1893, 1903)


ஆகவே, நோன்பாளிகளே! அல்லாஹ்வின் அருளால் நமக்குக் கிடைத்திருக்கும் இந்த ரமளான் நோன்பின் முழு பயனையும் அடைய‌ பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மட்டும் போதாது. நாம் நோன்பு நோற்பதுடன் அலட்சியமாகக் கருதிக் கொண்டிருக்கும் ஆபத்தான பாவங்களை விட்டு நாம் தவிர்ந்துக் கொள்ளவேண்டும். நோன்பின் மூலம் எடுக்கப்படும் இந்தப் பயிற்சி மற்ற 11 மாதங்களிலும் நம்மிடம் சிறந்தவொரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.  நோன்பின் மூலம் நாம் பொய் சொல்வதிலிருந்தும் அதுபோன்ற மற்ற‌ தீய நடவடிக்கையிலிருந்தும் விலகிக் கொள்ளவில்லை என்றால் அது நோன்பே அல்ல, வெறும் பட்டினிதான் என்பதை நினைவில் கொள்வோமாக! அதுபோன்றதொரு நிலையை விட்டும் அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக!

* பொருள் விளக்கம்: (மாற்றுமத சகோதர, சகோதரிகளுக்காக)

ஹலாலான‌ = அனுமதிக்கப்பட்ட‌

ஹராமான‌ = தடுக்கப்பட்ட‌

Sunday, August 22, 2010

நோன்பின் மாண்புகளை கூறும் நபிமொழிகள்!

0 கருத்துக்கள்
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1894

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!’ என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) ‘எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!” (என்று அல்லாஹ் கூறினான்)” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1896

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!” என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1897

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். “ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, ‘அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)’ என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் ‘ஜிஹாத்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ‘ரய்யான்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் ‘சதகா’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க ‘ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!” என்றார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1898

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1899

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன் நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1900

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக் கொள்ளுங்கள்.” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். மற்றோர் அறிவிப்பில் ‘ரமலான் பிறை” என்று உள்ளது.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1901

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1902

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் – ரமலான் முடியும்வரை – நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1903

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1904

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!” என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் ‘நான் நோன்பாளி!” என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1906

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்.” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1907

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்.” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1908

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்கள் இரண்டு கைவிரல்களையும் மூன்று முறை விரித்து) மாதம் என்பது இவ்வளவுதான் என்று கூறினார்கள். மூன்றாம் முறை கட்டை விரலை மடக்கினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1909

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1912

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “துல்ஹஜ், ரமலான் ஆகிய பெருநாள்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தால் போல் குறையாது.” என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1913

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1914

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ரமளானுக்கு முதல் நாளும் அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது; அந்நாள்களில் வழக்கமாகத் நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால்அந்நாளில் நோன்பு நோற்கலாம்!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1915

பராஉ(ரலி) அறிவித்தார். (ஆரம்ப காலத்தில்) நபித்தோழர்கள் நோன்பு நோற்று, நோன்பை நிறைவு செய்யும் நேரம் வந்து, அதற்கு முன்பே உறங்கி விட்டிருந்தால் அன்றைய இரவிலும் (தொடர்ந்து) பகலிலும் மாலை வரை எதையும் உண்ண மாட்டார்கள். (ஒரு முறை) கைஸ் இப்னு ஸிர்மா(ரலி) நோன்பு நோற்றிருந்தார்; நோன்பு நிறைவு செய்யும் நேரம் வந்ததும் தம் மனைவியிடம் வந்து, ‘உன்னிடம் உணவு ஏதும் உள்ளதா?’ என்று கேட்டார்; அவரின் மனைவி, ‘இல்லை! எனினும் நான் சென்று உமக்காக (உணவைத்) தேடி வருகிறேன்!” என்றார். கைஸ் இப்னு ஸிர்மா(ரலி) அன்றைய தினம் கூலி வேலை செய்துவிட்டு வந்ததால் அவருக்கு உறக்கம் மேலிட்டுவிட்டது. அவரின் மனைவி வந்து அவரைக் கண்டபோது, ‘உமக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது’ என்றார் நண்பகலானதும் கைஸ்(ரலி) மூர்ச்சையுற்றார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டபோது, ‘நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற வசனமும் ‘இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் என்ற வசனமும் இறங்கின. இதனால் நபித்தோழர்கள் அதிக மகிழ்ச்சியடைந்தார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1916

அதீ இப்னு ஹாதிம்(ரலி) அறிவித்தார். ‘கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை’ என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டபோது, நான் ஒரு கருப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து தன் தலையணையில் வைத்துக் கொண்டேன்; இரவில் அதைப் பார்க்கலானேன்; எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன்; அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘(கருப்புக் கயிறு என்பதின் கருத்து) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதின் கருத்து) விடியலின் வெண்மையும் தான்!” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1917

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். “கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்!” என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டது! அப்போது அவ்வசனத்தில் ‘மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)’ என்னும் வாசகம் இருக்கவில்லை! அப்போதெல்லாம் மக்கள் நோன்பு நோற்க நினைத்தால் ஒரு காலில் வெள்ளைக் கயிற்றையும் கட்டிக் கொள்வார்கள். அவ்விரண்டும் கண்ணுக்குத் தெரியும்வரை உண்டு கொண்டே இருப்பார்கள்! பிறகுதான் ‘மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)’ என்னும் வாசகம் (அவ்வசனத்துடன்) இறங்கியது. ‘இரவையும் பகலையுமே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்” என்று அப்போதுதான் மக்கள் விளங்கினர்!”

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1918

ஆயிஷா(ரலி) இப்னு உமர்(ரலி) ஆகியோர் அறிவித்தார். பிலால்(ரலி), (ஃபஜ்ரு நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள்; அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்! ஏனெனில், அவர்தாம் ஃபஜ்ரு (கைவறை) நேரம் வந்ததும் பாங்கு சொல்கிறார்!” என்று குறிப்பிட்டார்கள்.

“அவர் பாங்கு சொல்லிவிட்டு இறங்குவார்; இவர் பாங்கு சொல்வதற்கு ஏறுவார் என்பதைத் தவிர இரண்டு பாங்குக்குமிடையே பெரிய இடைவெளி இருக்காது!” என்று காஸிம்(ரஹ்) கூறினார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1920

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். “நான் என் குடும்பத்தாருடன் ஸஹ்ர் செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களுடன் (ஸுப்ஹுத்) தொழுகையை அடைவதற்காக விரைவாகச் செல்வேன்!”

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1921

அனஸ்(ரலி) அறிவித்தார். “நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஹ்ர் செய்தோம்; பின்னர், தொழுகைக்கு அவர்கள் தயாராகி விட்டார்கள்!” என்று ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்; நான் ‘பாங்குக்கும் ஸஹ்ருக்குமிடையே எவ்வளவு நேரம் இருந்தது?’ என்று கேட்டேன். அதற்கவர் ‘ஐம்பது வசனங்கள் (ஓதும்) நேரம் இருந்தது!” என்று பதிலளித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1923

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!” இதை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1925-1926

அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு, குளிப்பு கடமையானவர்களாக ஃபஜ்ரு (அதிகாலை) நேரத்தை அடைவார்கள்; பின்னர் குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்!’ என்று ஆயிஷா(ரலி), உம்மு ஸலமா(ரலி) ஆகியோர் அறிவித்ததாக அன்றைய தினம் மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானிடம் என் தந்தை அப்துர் ரஹ்மான் கூறினார். மர்வான், என் தந்தையிடம், ‘இதன் வாயிலாக (இதை எடுத்துரைத்து), அபூ ஹுரைராவை நீர் எச்சரிக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்!’ என்று கூறினார். பின்னர் நாங்கள் ‘துல்ஹுலைஃபா’ என்னும் இடத்தில் ஒன்று சேர்வதாக முடிவு செய்யப்பட்டது. அங்கு அபூ ஹுரைரா(ரலி) அவர்களுக்கு ஒரு நிலம் இருந்தது; (நாங்கள் அங்கு சென்றபோது இருந்தார்;) என் தந்தை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம், ‘நான் உம்மிடம் ஒரு செய்தியைக் கூறவிருக்கிறேன்: மர்வான், இது தொடர்பாக (உம்மிடம் கூறும்படி) சத்தியம் செய்து என்னை வற்புறுத்தியிருக்காவிட்டால் இதை நான் உம்மிடம் கூறப்போவதில்லை!’ என்று கூறிவிட்டு, ஆயிஷா(ரலி), உம்மு ஸலமா(ரலி) ஆகியோர் கூறியதை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் கூறினார். அதற்கு அபூ ஹுரைரா(ரலி) ‘அது (ஃபஜ்ருக்கு முன்பே குளித்ததாக வேண்டும் என்பது) போல்தான் ஃபள்ல் இப்னு அப்பாஸ்(ரலி) எனக்குக் கூறினார்கள்: (நபியின் மனைவியரான) அவர்கள்தாம் இது பற்றி நன்கு அறிந்தவர்கள்!’ என்று பதிலளித்தார்.”

‘ஃபஜ்ரு நேரத்தில் குளிப்பு கடமையாக இருப்பவர் நோன்பை விட்டுவிடுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்’ என்று அபூ ஹுரைரா(ரலி) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் முந்திய (இந்த நபிமொழியின் தொடக்கத்தில் உள்ள) செய்தியே பலமான அறிவிப்பாளர் வரிசையுடன் உள்ளதாகும்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1927

ஆயிஷா(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்; முத்தமிடுவார்கள்! உங்களில் தம்(உடல்) உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்!”

“ஒருவர் தம் மனைவியை இச்சையுடன் பார்த்து, அதனால் விந்து வெளிப்பட்டால் அவர் நோன்பைத் தொடரலாம்!” என்று ஜாபிர் இப்னு ஸைத் கூறுகிறார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1928

உர்வா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் தம் மனைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்!” என்று சொல்லிவிட்டு ஆயிஷா(ரலி) சிரித்தார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1929

உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். “நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வைக்குள் இருக்கும்பொழுது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. நான் (போர்வையிலிருந்து) நழுவி, மாதவிடாய்க்குரிய ஆடைகளை அணிந்து கொண்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?’ என்று கேட்டார்கள்: நான் ‘ஆம்!’ என்று கூறிவிட்டு, அவர்களுடன் போர்வைக்குள் நுழைந்து கொண்டேன்! நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் (இருக்கும் தண்ணீரையள்ளிக் குளிப்போம்! நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிடுவார்கள்!”

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1930

ஆயிஷா(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளிப்பு கடமையானவர்களாக ஃபஜ்ரு நேரத்தை அடைவார்கள். குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்!”

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1931-1932

அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார். “நானும் என் தந்தையும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றோம். ஆயிஷா(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளிப்பு கடமையானவர்களாகக் காலை நேரத்தை அடைவார்கள்; பின்னர் நோன்பைத் தொடர்வார்கள!’ என்று கூறினார்கள். பிறகு, உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்களும் அவ்வாறே கூறினார்கள்!’

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1933

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப்படுத்தட்டும்; ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1935

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் எரிந்து போய்விட்டேன்!” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘உமக்கு என்ன நேர்ந்தது?’ என்றார்கள். அவர், ‘ரமளானில் என் மனைவியுடன் கூடிவிட்டேன்!” என்று பதிலளித்தார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் ‘அரக்’ என்று கூறப்படும் ஓர் அளவை (நிறைய பேரீச்சம் பழம்) கொண்டு வரப்பட்டது. ‘எரிந்து போனவர் எங்கே?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘நானே” என்று அவர் கூறினார். (அந்தப் பேரீச்சம் பழத்தை அந்த மனிதரிடம் கொடுத்து.) ‘இதை தர்மம் செய்வீராக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1936

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழிந்து விட்டேன்!” என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘உமக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடிவிட்டேன்!” என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள், ‘விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை!” என்றார். ‘தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ‘இல்லை!” என்றார். ‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர், ‘இல்லை!” என்றார். நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த ‘அரக்’ எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் ‘கேள்வி கேட்டவர் எங்கே” என்றார்கள். ‘நானே!” என்று அவர் கூறினார். ‘இதைப் பெற்று தர்மம் செய்வீராக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! என்னை விட ஏழையாக இருப்போருக்கான (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!” என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள்: பிறகு ‘இதை உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!” என்றார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1937

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். “ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘(என்னைப் போன்ற) பாமரர் ஒருவர் ரமளானில் தம் மனைவியுடன் கூடிவிட்டால் (பரிகாரம் என்ன?)” என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஓர் அடிமையை உம்மால் விடுதலை செய்ய இயலுமா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இயலாது!” என்றார். ‘அறுபது ஏழைகளுக்கு உணவு அளிப்பதற்குரிய பொருள் உம்மிடம் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை” என்றார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த ‘அரக்’ எனும் அளவை கொண்டு வரப்பட்டது. ‘இதை உம் சார்பாக வழங்குவீராக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கவர் ‘எங்களை விட ஏழைக்கா? மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையே எங்களை விட அதிகத் தேவையுடையோர் வேறு யாரும் இல்லை!” என்று கூறினார். ‘அப்படியானால் உம் குடும்பத்தாருக்கே இதை உண்ணக் கொடுத்து விடுவீராக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1938

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் இரத்தம் குத்தி எடுத்துள்ளனர். நோன்பு நோற்று இருக்கும்போது இரத்தம் குத்தி எடுத்துள்ளனர்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1939

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது இரத்தம் குத்தி எடுத்தார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1940

ஸாபித் அல் புனானீ அறிவித்தார். “நோன்பாளி இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வதை நீங்கள் வெறுத்து வந்தீர்களா?’ என்று அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘இல்லை! ஆயினும், (நாங்கள் அதை வெறுத்தது) பலவீனம் ஏற்படும் என்பதற்காகவே!” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில் ‘நபி(ஸல்) அவர்கள் காலத்தில்’ என்னும் வாக்கியம் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1941

இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், ‘(வாகனத்திலிருந்து) இறங்கி, (உண்பதற்கேற்ப) மாவை எனக்காகக் கரைப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கவர், ‘இறைத்தூதர் அவர்களே! (இன்னும் முழுமையாக மறையவில்லையே,) சூரியன்!” என்றார். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!” என்றார்கள். அப்போதும் அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! (இன்னும் முழுமையாக மறையவில்லையே,) சூரியன்!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!” என்று மீண்டும் கூறினார்கள். அவர் இறங்கி மாவைக் கரைத்தார். அதை நபி(ஸல்) அவர்கள் அருந்திவிட்டுத் தம் கையால் (கிழக்கே) சுட்டிக் காட்டினார்கள் பிறகு, ‘இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதை நீங்கள் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யலாம்! என்றார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1942

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஹம்ஸா இப்னு அம்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நான் காலமெல்லாம் நோன்பு நோற்கிறேன்’ என்று கூறினார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1943

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஹம்ஸா இப்னு அம்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், ‘பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?’ என்று கேட்டார். அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்; நீ விரும்பினால் விட்டுவிடு” என்றார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1944

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் ரமளானில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள்; அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். ‘கதீத்’ எனும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டார்கள்; மக்களும் நோன்பைவிட்டனர்!”

“கதீத் என்பது உஸ்ஃபான், குதைத் ஆகிய இடங்களுக்கிடையே உள்ள நீர்ப் பகுதியாகும்!” என்று அபூ அப்தில்லாஹ் புகாரீயாகிய நான் கூறுகிறேன்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1945

அபூ தர்தா(ரலி) அறிவித்தார். “நாங்கள் நபி(ஸல்) அவர்களின் பயணமொன்றில் வெயில் மிகுந்த ஒரு நாளில் அவர்களுடன் சென்றோம். கடும் வெப்பத்தின் காரணமாக சிலர் தம் கையைத் தம் தலையில் வைத்தனர். அப்பயணத்தில் நபி(ஸல்) அவர்களையும் தவிர எங்களில் வேறு எவரும் நோன்பு நோற்றிருக்கவில்லை!”

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1946

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒருவர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். ‘இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘இவர் நோன்பு நோற்றிருக்கிறார்!” என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘(பலவீனமான நிலையில் உள்ளவர்கள்) பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது!” என்று கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1947

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணத்தில் செல்வோம். நோன்பு நோற்றவரை நோற்காதவரும் நோற்காதவரை நோற்றவரும் குறை கூறமாட்டார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1948

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து மக்காவிற்குப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். உஸ்பான் எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் கொண்டுவரச் செய்து, மக்கள் காண்பதற்காகக் கைகளின் நீளத்திற்கு அதை உயர்த்திக் காட்டி நோன்பை முறித்தார்கள். மக்காவை அடையும் வரை நோன்பு நோற்க வில்லை. இது ஒரு ரமளானில் நடந்தது!

“நபி(ஸல்) அவர்கள் (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; நோன்பை விட்டும் இருக்கிறார்கள். (நோன்பு நோற்க) விரும்புபவர் நோன்பு நோற்கலாம்; நோன்பைவிட்டுவிட விரும்புபவர்விட்டு விடவும் செய்யலாம்!”

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1949

நாஃபிவு(ரஹ்) அறிவித்தார். “ரமளான் (நோன்பை விட்டதற்குப்) பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்!” என்ற வசனத்தை இப்னு உமர்(ரலி) ஓதிவிட்டு, இந்த வசனம் கூறும் சட்டம் மாற்றப்பட்டு விட்டது!” என்று கூறினார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1950

ஆயிஷா(ரலி) அறிவித்தார். எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டு விடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது.

நபி(ஸல்) அவர்களுக்கு ஆயிஷா(ரலி) பணிவிடை செய்ததே இதன் காரணம் என்று யஹ்யா பின் சயீத் (ரஹ்) கூறுகிறார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1951

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா? அதுதான் மார்க்கத்தில் அவளுக்குள்ள குறைபாடாகும்.” இதை அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1952

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்பார்.” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1953

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது” என்றார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘என் சகோதரி மரணித்து விட்டார் என்று கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில் ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘என் தாய் இறந்து விட்டார்’ என்று கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், ‘நேர்ச்சை நோன்பு என் தாயாருக்குக் கடமையாக இருந்த நிலையில் என் தாய் இறந்துவிட்டார்…’ என்று ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில், ‘என் தாய் மீது பதினைந்து நோன்புகள் கடமையாக இருந்த நிலையில் இறந்துவிட்டார்’ என்று ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1954

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “சூரியன் மறைந்து, இந்த(கிழக்கு) திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்த (மேற்கு) திசையிலிருந்து பகல் பின்னோக்கி(ப்போ)னால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யவேண்டும்!”

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1955

அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் கூட்டத்தில் ஒருவரிடம், ‘இன்னாரே! எழுந்து நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கவர் ‘இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக! எனறார்கள். அதற்கவர் ‘இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டும்!” என்றார். நபி(ஸல்) அவர்கள். ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கவர், ‘இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கவர் ‘பகல் (வெளிச்சம்) இன்னும் (எஞ்சி) இடருக்கிறதே?’ என்று கேட்டதற்கும் நபி(ஸல்) அவர்கள் ‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். உடனே அவர் இறங்கி, அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி(ஸல்) அவர்கள் அருந்திவிட்டு, ‘இரவு இங்கிருந்து (கிழக்கிலிருந்து) முன்னோக்கி வந்துவிட்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!” என்றார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1956

அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் ஒருவரிடம். ‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கவர், ‘இறைத்தூதர் அவர்களே! மாலைநேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கவர், ‘பகல் (வெளிச்சம்) இன்னும் எஞ்சியிருக்கிறதே!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அவர் இறங்கி மாவு கரைத்தார். பின்னர், ‘நீங்கள் இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதைக் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!” என்று தம் விரலால் கிழக்கே சுட்டிக் காட்டிக் கூறினார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1957

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!” இதை ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1958

அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். அவர்கள் நோன்பு நோற்றார்கள். மாலை (முடியத் தொடங்கும்) நேரம் வந்ததும் ஒரு மனிதரிடம், ‘இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கவர், ‘மாலை நேரம் (முழுமையாக) முடிவடையும் வரை காத்திருக்கலாமே!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக! இரவு இங்கிருந்து முன்னோக்கி வருவதைக் கண்டால், நோன்பாளி நோன்பை நிறைவு செய்யவேண்டும்!” என்றார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1959

அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பை நிறைவு செய்த பின்னர் சூரியன் தென்பட்டது.

“அவர்கள் களா செய்யுமாறு கட்டளையிடப்பட்டார்களா?’ என்று ஹிஷாம்(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘களா செய்வது அவசியமில்லாமல் போகுமா?’ என்று கேட்டார். (‘களா செய்வது அவசியமாகும்!’ என்பது இதன் பொருள்.)

“அவர்கள் களா செய்தார்களா? இல்லையா என்பது எனக்குத் தெரியாது!” என்று ஹிஷாம்(ரஹ்) கூறினார்கள் என மஃமர் கூறுகிறார்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1969

ஆயிஷா(ரலி) அறிவித்தார். “(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: ‘(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பைவிட்டுவிடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!”

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1970

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தை வட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில ஆண்டுகளில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். ‘உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!” என்றும் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும் தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1971

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறு எந்த மாதமும் முழுமையாக நோன்பு நோற்க மாட்டார்கள். (ரமளான் அல்லாத மாதங்களில்) ‘அல்லாஹ்வின் மேல் ஆணையாக! இனிமேல் நோன்பை விட மாட்டார்கள்!” என்று மக்கள் கூறுமளவுக்கு நோன்பு நோற்பார்கள். ‘அல்லாஹ்வின் மேல் ஆணையாக! இனிமேல் நோன்பு நோற்க மாட்டார்கள்!’ என்று மக்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டு விடுவார்கள்.

ஆதார நூல்: புகாரீ.