ஒரிறையின் நற்பெயரால்
இஸ்லாத்தை பொறுத்தவரை மனித மூலங்கள் மண்ணில் படைக்கப்படுவதற்கு முன்பே அவர்களுக்கு உண்டான தெரிதல்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் தெளிவாக வழங்கப்பட்ட பின்னரே மனிதர்கள் அவ்வழி வாழ எத்தனித்தது. அதன் அடிப்படையில் மனிதர்கள் படைக்கப்பட்டதன் நோக்கம் குறித்து திருக்குர்-ஆன் கூறும்போது
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(51:56)
இங்கு இறைவன் மனிதர்கள் படைக்கப்பட்ட காரணமே அவனை வணங்குவதற்காகதான் எனும்போது மனிதர்கள் வணங்குவவேண்டுமென்பது ஏக இறைவனுக்கு தேவையா..? என்றே கேள்வியே அபத்தமானது. ஏனெனில் அல்லாஹ் மனிதர்கள் மற்றும் ஜின்களை படைத்ததால் வணங்க சொல்லவில்லை. வணங்குவதற்கு வேண்டிய அவைகளை படைத்திருக்கிறான். சரி., அவ்வாறு வணங்க சொன்னப்போதும் அது தேவையே அடிப்படையாக கொண்டதா? ஏனெனில் தேவையானது ஒரு சொல். செயல் அல்லது ஏனையவற்றின் மூலமாக ஒருவர் மற்றவரை சார்ந்திருப்பது. அந்த அடிப்படையில் தேவைகள் என்பது இரண்டை மையப்படுத்தி இருக்க வேண்டும். ஒன்று, பெறப்படும் தேவையின் மூலம் அதை சார்ந்தவர் பயன்பாடு பெற வேண்டும்.அல்லது, அத்தேவையே அடையாவிட்டால் அதன் விளைவால் அவர் பாதிக்கப்படவேண்டும். இதுவே "தேவை" என்பதன் அளவுகோல். இதை அடிப்படையாக வைத்து இனி காண்போம்.
தேவையுடையவனா..? இறைவன்!
இஸ்லாம் ஐந்து காரியங்கள் மீது நிர்மானிக்கப்பட்டுள்ளது.
- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள் என்று சாட்சி கூறுவது,
- தொழுகையை நிலை நாட்டுவது
- ரமளான் மாதம் நோன்பு நோற்பது
- ஜகாத் கொடுப்பது
- ஹஜ் செய்வது .
(என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்அறிவிப்பவர் : இப்னு உமர் -ரலி, நூல் : புகாரீ) பொதுவாக, இஸ்லாத்தில் அடிப்படை கொள்கைகள் அனைத்தும் இறைவனோடு தொடர்புடையதாக இருந்தாலும் முதலாவது மற்றும் நான்காவது (கலிமா மற்றும் ஜகாத்) ஆகியவை தவிர ஏனைய மூன்று கொள்கைகளும் நோன்பு, தொழுகை மற்றும் ஹஜ் ஆகியவைகள் இறைவனுக்கு செய்யவேண்டிய வணக்கம் என்ற நிலைகளிலேயே குறிப்பிடப்படுகிறது. ஆக இம்மூன்றும் இறைவனை தேவையுடையவனாக ஆக்குகிறாதா?
தொழுகை
தொழுகை என்ற இறைவணக்கம் நாளொன்றுக்கு ஐந்துமுறையென ஏழு வயது முதல் சுய அறிவுள்ள ஏனைய ஆண், பெண் அனைவரின் மீது கடமையாக இஸ்லாம் பணிக்கிறது.தொழுகை பொதுவாக இறைவனுக்கு மேற்கொள்ளும் வணக்கமாக கூறினாலும் அத்தொழுகையால் மனிதர்கள் அடையும் விளைவை குறித்து வல்லோன் தன் வான் மறையில்
(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். (29:45)
மேற்கூறப்பட்ட வசனத்தில் தொழுகையானது மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்குவதாக இருக்கிறது என அல்லாஹ் கூறுகிறான்.ஆக தொழுகை என்பது மனித மனங்களில் தோன்றும் அனைத்து விதமான தனி மனித ஒழுக்க சீர்க்கேடுகளையும் அருவறுக்கத்தக்க சமுக தீமைகளையும் வேரறுக்கவே இறைவன் புறத்தில் ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்ட பிரத்தியேக பாதுகாப்பு என்பதை அறியலாம்.
நோன்பு
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)
பசி உணர்தல், தீய செயல் மற்றும் பேச்சுக்கள் தவிர்த்தல் போன்றவைகள் இருந்தாலும் நோன்பின் பிரதான நோக்கம் தூய்மையே ஆகும். இங்கு தூய்மை என்பது உளத்தூய்மையே குறிக்கும் அதாவது நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலையும் இறைவனுக்கு பயந்து செயல்படுத்தும்போது தவறுகள் களையப்பட்டு நன்மைகள் பக்கமே நமது வாழ்வின் பயணமிருக்கும். இதுவே உளத்தூய்மையின் அடிப்படையாகும்.
ஹஜ்
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்;. இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கி;றான். (3:97)
மேற்கூறிய வசனம் மிக தெளிவாக ஹஜ்ஜிக்கான இரண்டு அடிப்படை கூறுகளை சொல்கிறது. ஒன்று, அவ்விடத்தில் ஒன்றுகூடும் போது அவர் அச்சமற்று பாதுக்காப்பு பெறுகிறார், பிறிதொன்று வசதியிருந்தால் மட்டுமே நிறைவேற்ற வேண்டிய கடமையாக பணிக்கிறது .மேலும் பாருங்கள் அஃது அக்கடமையே நிறைவேற்றும் வாய்ப்பு கிட்டியும் நிறைவேற்றவில்லையென்றால் அதனால் இறைவனுக்கு எந்த இழப்பும் ஏற்படபோவதில்லை என்பதை இந்த மனித சமுகத்திற்கு அவனே உரக்கச்சொல்கிறான்
ஆக இஸ்லாம் ஏனைய வணக்கங்களை மேற்கொள்ள சொன்னாலும் அதற்கு அடிப்படைக்காரணம் தக்வா எனும் 'இறையச்சத்தை' மனித சமுகம் எக்காலமும் பேணவேண்டும் என்பதற்காக தான் தவிர அவர்களின் பால் இறைவன் தேவையுடையவன் என்பதற்காக அல்ல. ஏனெனில் இந்த நொடியிலிருந்து கூட எவரும் எத்தகைய வணக்கங்களையும் அறவே செய்யாவிட்டாலும் கூட அவர்களுக்கும் அவர்களின் சமுகத்திற்கும் தான் இழப்பே தவிர ஏக இறைவனின் கண்ணியத்திற்கு அணுவளவேனும் கூட தீங்கு ஏற்படாது. வணக்கங்கள் என்பது இஸ்லாத்தை பொருத்தவரை இறைவனை முன்னிருத்தி மனிதன் நன்மையின் பக்கம் விரையச் செய்யும் ஒரு காரியமே! எந்த ஒரு மனிதனும் வணக்கத்தை செய்யும்போதோ அல்லது தவிர்க்கும்போதோ இறைவன் எந்த இலாபமோ, நஷ்டமோ அடைவதில்லை. எனும்போது "தேவை" என்ற அளவுகோல் இறைவனுக்கு பொருந்தாது. ஏனெனில்...
மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன்.(35:15)
அல்லாஹ் மிக்க அறிந்தவன்
0 கருத்துக்கள்:
Post a Comment
அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.
நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!