Friday, June 3, 2011

உஜைர் நபி வரலாற்றில் பிழை.?

0 கருத்துக்கள்
   ஓரிறையின் நற்பெயரால்.,
            இன்று நேற்றல்ல.. மனித அறிவு இந்த மண்ணில் மதியிழக்கும் போதெல்லாம் அதற்கு நேர்வழி வழங்கும் இஸ்லாமிய வாழ்வியல் நெறியை குறைகாண்பதோடு, தனது அதி மேதாவித்தனமாக (அறைகுறை) ஆய்வறிவில் குர்-ஆனில் அங்காங்கே, கைவைத்து வரலாற்றுப் பிழையும், வாழ்வியல் பிழையும் நிறைந்திருக்கிறது என்ற தன் மனம்போனப்போக்கில் வெளியிடும் போலி குற்றச்சாட்டில் ஒன்று தான் நாம் இங்கு பார்க்க போவது.,
உஜைர் நபி குறித்து குர்-ஆன் கூறுவது என்ன...?
 யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?  (9:30)
   இந்த வசனத்தை மேற்கோள் காட்டி ஈஸா நபியை கிறித்துவர்கள் கடவுளின் மகனாக கூறுவது உண்மை தான், ஆனால் நபி உஜைரை எந்த யூதனும் கடவுளின் மகனாக கூறவில்லையே...ஆக குர்-ஆனின் வரலாற்றுப்பிழை என நிறுவ முயல்கின்றன சில திரித்துவ கொள்கைகள்.,
 இங்கு உஜைர் நபியை கடவுளின் மகனாக யூதர்கள் சொன்னார்களா என்பதை பார்க்கும் முன்பு சொல்ல வேண்டிய காரணம் குறித்து அறிந்தாலே.. இது வரலாற்றுப் பிழை இல்லை வழிகெட்டவர்களின் பார்வையில் பிழை என்பதை அறியலாம்.,அதற்கு முன்பாக,
குரானிய பார்வையில் நபி ஈஸா அலை மற்றும் உஜைர் நபி குறித்த ஓப்பிட்டு பார்வை
முதலி நபி ஈஸா அலை அவர்கள் குறித்து பார்ப்போம்.,
அவர்களது பிறப்புக்குறித்து,
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் "குன்" (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார் ((3 :59))
மர்யம் அலை இறைவனிடம் "என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?" 
(அதற்கு)  "அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது. ((9 :47))
மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார் ((3:46))
மேலும், அதை தொடர்ந்த வசனங்களில்,
இஸ்ராயீலின் சந்ததியனருக்கு அவரை தூதராகவும் ஆக்குவான், 
"நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன்
பின் மர்யம் அலை அவர்கள் நபி ஈஸாவை பெற்றெடுத்தப்பின் மக்கள் முன்பாக அவர்கள் தொட்டிலிருந்தவாறே மக்களை நோக்கி
நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். ((19 30))
ஆக நபி ஈஸா அலை அவர்கள்

  • ஏனையோரை போல் தாம்பத்திய உறவில்லாமல் இறைவனின் பிரத்தியேக ஆற்றல் மூலமாக அவனது ரூஹ் (ஆன்மா) கொண்டு படைக்கப்பட்டவர்கள்
  • சிறுபிரயாத்திலேயே... மக்களுடன் பேசினார்கள்.
  • சாதாரண களிமண்ணை பறவையாக்கினார்கள்
  • கடும் நோயுடையவர்களை வெறும் கைகளால் தடவியே குணப்படுத்தினார்கள்.
  • எல்லாவற்றையும் விட மிக பெரும் அற்புதமாக இறந்தவர்களை உயிர்பித்தார்கள்.

         நபி உஜைரை குறித்து பார்ப்போமேயானால், குர்-ஆனில் இந்த ஒரு வசனம் தவிர (9 30)  அறிந்த வரையில் வேறெங்கும் காணக்கிடைக்கவில்லை, அவர்கள் குறித்து சில ஹதிஸ்களே இருக்கிறது
குர்-ஆனின் விளக்கவுரை நூல்களில் ஒன்றான இப்னு கஸீர் நபி உஜைரை பற்றி பின்வருமாறு கூறுகிறது,
 (எஸ்ரா) கி.மு. 487 வாக்கில் யூதர்களிடையே வாழ்ந்த நல்ல மனிதர் ஒருவரின் பெயர். இவர் ஓர் இறைத்தூதாரா என்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடு உள்ளது. புக்த்தநஸ்ஸர் (நெபுகாட்நேஸர்- கி.மு 561) ஜெருசலத்தைக் கைப்பற்றி (கி.மு 568) அழித்தப்பின், தவ்ராத் (தோரா) வேதப் பிரதிகள் அனைத்தும் காணாமல் அல்லது அழிந்து போய்விட்டன.அப்போது உஸைர் (அலை) அவர்கள் தமது நினைவில் இருந்த தவ்ராத்தை எழுதினார்கள். இதனால் யூதர்கள் உஸைரை நபி மூஸா (அலை) அவர்களுக்கு இணையானவராகக் கருதினார்கள்.
 இவர்களை இறைத்தூதராகவே கருத்தில் கொண்டே நாம் பார்ப்போம்

  • உஜைர் நபி அவர்கள் தவ்ராவை மீண்டும் மக்கள் மத்தியில் எடுத்தியம்பினார்கள்
  • மக்கள் மூஸா அலை அவர்களுக்கு இணையாக கருதியிருந்தனர்.

       ஆக நபி ஈஸாவை போல "அற்புத செயல்கள்" என்ற பிரத்தியேக பண்புகளால் நபி உஜைர் அவர்கள் தன்னை இனங்காட்டவில்லை.
மாறாக மேற்குறிப்பிட்ட சம்பவத்தின் மூலமே அச்சமுக மக்களுக்கு மத்தியில் நன்கு பரிச்சயம் ஆனார்கள்.ஆக இவ்விரு இறைத்தூதர்களின் வாழ்வியல் நிகழ்வுகளை வைத்து ஒப்பு நோக்கும் போது நபி ஈஸா போன்று அசாதாரண செயல்கள் (ஒன்றுக்கூட) உஜைர் நபி புரியவில்லை என்பது தெளிவு!. எனவே அவர்கள் கடவுளின் மகன் என்றழைக்கப்படுவதற்கு நிரந்தர வாய்ப்புகள் குறைவு அதாவது,
    இறைவனின் வேதத்தை நினைவில் நிறுத்தி அதை புரனமைப்பு செய்ததே அவர்களின் பிரதான செயல். இச்செயலை அஃது சாதாரண மனிதரால் செய்ய இயலாது எண்றெண்ணியே இதை தெய்வீக செயலாக அங்கிகரித்து அம்மக்கள் அவர்களுக்கு ஒரு தெய்வீக அந்தஸ்தை கொடுத்து அவர்களை கடவுளின் மகன் என்றழைக்கலாயினர்.,ஆக இவர்கள் ஒரு குறிப்பிட்ட இட, சமுக சூழ்நிலையில் மட்டுமே மேற்கண்ட நிகழ்வை செயல்படுத்தி அம்மக்களிடையே வாழ்ந்ததால் அற்புத மிகுதியால் தன்னை நிலை நிறுத்திய நபி ஈஸாவைப்போல கடவுளின் மகன் என்ற தொடர் அந்தஸ்தை அக்காலம் தாண்டி அவர்கள் பெறவில்லை... ஆக இங்கு வரலாற்றுப் பிழைக்கோ /புரட்டுக்கோ வேலையே இல்லை.,
      இதையும் தாண்டி தங்களது திரி(பு)த்துவ வாதத்தை முன்னிருத்தி எந்த யூதருமே..... நபி உஜைரை கடவுளின் மகனாக கூறவில்லையென்று மீண்டும் முரண்பாட்டு அறிவை முன்னிருத்தினால்....அதற்கு அடுத்த வசனமே அவர்களுக்கு பதில் சொல்ல காத்திருக்கிறது...இல்லை இல்லை அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறது
அத்தவ்பா அத்தியாயம் 9 வசனம் 31 ல் அல்லாஹ் 
அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; 
   இங்கு கிறித்துவர்கள் நபி ஈஸாவோடு சேர்த்து பாதிரிகளையும், சந்நியாசிகளையும் கடவுள்களாக ஆக்கிக்கொண்டதாக குர்-ஆன் கூறுகிறது. ஆனால் எந்த கிறித்துவரும் எந்த பாதிரிகளையும் சந்நியாசிகளையும் இன்று கடவுளாக கொள்ளவில்லை., உஜைர் நபி குறித்து விழி அகல வரலாற்றைத் தோண்டியவர்கள்., இந்த வசனம் பொய்யுரைக்கிறது என தற்கால ஓப்பிட்டில் திறம்பட கூறலாமே.. போலி சிந்தனை இவ்வசனம் குறித்து சிறிதும் வாய் திறக்காதது ஏன்..?
விளக்கம் வேண்டுமானால் தெளிவாக இருக்கிறது
மேற்கூறிய உஜைர் நபி குறித்த அதே பார்வை தான் இங்கேயும்., ஒரு குறிப்பிட்ட இட மற்றும் சமுக சூழ்நிலையில் வாழ்ந்த கிறித்துவர்கள் அஃது அந்த தருணத்தில் மேற்கூறிவர்களை கடவுளாக கொண்டனர் என்பதே மிக்க பொருத்தும்... சரி இருக்கட்டும் இன்றும் நபி ஈஸாவை கடவுளின் மகனல்ல நபி முஹம்மதைப் போல அவரும் கடவுளின் தூதர் என குர்-ஆன் கூறுவதை நம்பும் கிறித்துவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...?
அவர்களின் கூற்று குர்-ஆனுக்கு ஆதாரமாக இருக்கிறதா....அல்லது கிறித்துவ கொள்கைக்கு மாற்றமா இருக்கிறதா? அவர்களை எந்த பட்டியலில் சேர்க்கிறது  உலகாதாய அறிவு...உஜைர் நபி குறித்து உரத்து கூறியவர்கள்,,,, மேற்கண்ட வினாக்களுக்கும் விடையளிக்கட்டும்...ஆங்கில எண்ணங்களுக்கு தங்கள் தளங்களில் எழுத்து வர்ணம் பூசுவோர்., ஒரு கணம் எழுத்தோடு சேர்த்து சிந்தனையும் விதைக்க முற்படட்டும்...  
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். ((9 32))
                                                                                  அல்லாஹ் மிக்க அறிந்தவன்


0 கருத்துக்கள்:

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!