Saturday, July 31, 2010

ஹஜ் புனிதப் பயணம்

0 கருத்துக்கள்
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் இறுதியாக இறைவனால் வகுத்து தந்துள்ள கடமை ஹஜ் செய்வதாகும். இந்த ஹஜ் கடமையில் என்ன இருக்கின்றது என்பதையும், வாழ்க்கையில் ஒரு முறை நிறைவேற்றப்படுகின்றகடமை என்ற அளவில் மட்டும் அதன் முக்கியத்துவம் நின்று விடாது. யாரொருவர் எந்த ஒரு தீயச் செயலிலும் ஈடுபட்டு விடாமல் இந்த ஹஜ் கடமையை நிறைவேற்றுகின்றாரோ, அவருக்கு இறைவன் சொர்க்கத்தை ஹலாலாக்கி விடுகிறான். ஒருவர் ஹஜ் செய்வதற்கான காரணத்தையும், ஹஜ்ஜில் செய்யவேண்டிய கடமைகளைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். எவர் ஒருவரும் ஏனோதானோ என்றும், வெறும் சடங்குக்காகவும் ஹஜ் செய்யக்கூடாது

லப்பைக்கல்லாஹும்ம லப்பைக், லப்பைக்க லா ஷரீகலக்க லப்பைக், இன்னல் ஹம்த வந்நிஃமத லகவல் முல்க், லா ஷரீகலக்

பொருள்:
இதோ உன் அழைப்பிற்கு பதில் கூற நான் ஆஜராக உள்ளேன். யா அல்லாஹ்! இதோ உன் அழைப்பிற்கு பதில் கூற நான் ஆஜராக உள்ளேன். இதோ உன் அழைப்பிற்கு பதில் கூற நான் ஆஜராக உள்ளேன். உனக்குக் கூட்டுக்காரர் (எவரும்) இல்லை. உன் அழைப்பிற்கு பதில் கூற நான் ஆஜராக உள்ளேன். நிச்சயமாக புகழ், அருட்கொடை, ஆட்சி யாவும் உனக்கே உரியது உனக்கு கூட்டுக்காரர் (எவரும்) இல்லை.
இந்த தல்பியாவை ஜம்ரத்துல் அகபா என்ற ஷைத்தானின் மீது கல்லெறியும் வரைக்கும் முழங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

ஹஜ்ஜின் சிறப்புகள்:
ஹஜ் புனிதப் பயணம் எந்த ஒரு ஆராவாரமும் இல்லாமல் எளிய வகையில் இறைவனும், அன்னல் நபி (ஸல்) அவர்களும் எவ்வாறு செய்ய வேண்டும் என வழியுருத்தினார்களோ! அதன் அடிப்படையில் ஹஜ் பயணம் அமைய வேண்டும். ஹஜ் என்பது அல்லாஹ்வின் வீடாகிய மக்கமா நகரில் அமைந்துள்ள கஃபாவைத் தரிசிப்பதும், இன்னும் சில கடமைகளையும், இவற்றை ஷவ்வால், துல்காயிதா, துல்ஹஜ் முதல் பத்து நாட்கள் வரை செய்வதைக் குறிக்கும். ஹஜ் கடமையானது ஹிஜ்ரத்திற்குப் பிறகு 9 ஆம் வருடத்திலிருந்து வயது வந்த ஆண் பெண்கள் மீதும், புத்தியுள்ள சுய நினைவில் இருக்கக் கூடியவர்கள் மீதும், ஹஜ் செய்ய சக்திப் பெற்ற ஒவ்வொரு முஃமீன்கள் மீதும் அவரது வாழ்நாளில் ஒரு முறையாவது நிறைவேற்ற வேண்டும் என்று கடமையாக்கப்பட்டுள்ளது.
இதனை இறைவன் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.

(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான். அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார் இன்னும் அதற்குச் செல்வதற்குரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. (ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கிறான்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம். செயல்களிலேயே மிகச் சிறந்த செயல் எது? என்று கேட்ட பொழுது, அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் மீதும் நம்பிக்கைக் கொள்வது, எனக் கூறினார்கள். மீண்டும் மிகச் சிறந்த செயல் எது? என்று கேட்ட பொழுது, இறைவனுக்காக ஜிஹாத்தில் கலந்துக் கொள்வது என கூறினார்கள். அடுத்து மீண்டும் மிகச் சிறந்த செயல் எது? எனக் கேட்ட பொழுது, குறைகள் ஏதும் இல்லாத் வகையில் ஹஜ்ஜை நிறைவேற்றுவது எனக் கூறினார்கள்.(நூல் புகாரி, முஸ்லிம் இன்னும் பல)

மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
ஹஜ் கடமையை யார் வரம்புகளை மீறாமலும், உடலுறவுகளில் ஈடுபடாமலும் அல்லது இறைவனுக்கு கீழ்படியாமை போன்ற தன்மைகளிலிருந்து விலகிய நிலையில் அந்தக் கடமையை நிறைவேற்றுவார்களெனில் அவர்கள், அன்று பிறந்த பாலகர்களாக பாவங்களற்ற நிலையில் தங்களது இல்லங்களுக்குத் திரும்புவார்கள்.(நூல் : புகாரி, முஸ்லிம்)

ஹஜ்ஜில் தவிர்க்க இயலாத முதல்நிலைக் கடமைகள்:
1.இஹ்ராம் அணிந்திருத்தல் வேண்டும்.

2.அரஃபா மைதானத்தில் தங்குவது

3.தவாஃபுல் இபாழா (பெருநாளில் செய்யும் தவாஃப்)

4.ஸயீ செய்வது.


ஹஜ்ஜின் வாஜிபுகள்:
இந்த கீழ்கண்ட வாஜிபான கடமைகளில் ஏதாவதொன்று தவறினாலும், அதற்குப் பரிகாரமாக பிராணி ஒன்றை மக்காவில் அறுத்து ஏழைகளுக்கு அதன் இறைச்சியை வழங்க வேண்டும். இந்தப் பரிகாரத்தை வழங்குபவ்ர் அந்த பரிகாரப் பிராணியின் இறைச்சியிலிருந்து எதனையும் உண்ணுவது கூடாது. இவ்வாறு ஒருவரால் பரிகாரம் செய்ய இயலவில்லை எனில் அதற்குப் பதிலாக அவர் பத்து நாட்கள் நோன்பிருக்க வேண்டும். அதில் மூன்றை ஹஜ்ஜின் பொழுதும், மீதமுள்ள ஏழு நாட்களை ஹஜ்ஜிலிருந்து வீடு திரும்பியவுடன் நோற்க வேண்டும்.

1.மீக்காத் எல்லையில் இஹ்ராம் கட்டுவது

2.மாலை நேரம் வரை அரஃபா மைதானத்தில் தங்குவது

3.அரஃபாவை அடுத்து முஸ்தலிஃபாவில் தங்குவது (பலவீனர்களையும், பெண்களையும் தவிர, இவர்கள் பாதி இரவு வரை தங்குவது கூடும்)

4.தஷ்ரீக்குடைய இரவுகளில் மினாவில் தங்குவது (தஷ்ரீக்குடைய இரவுகள் துல்ஹஜ் 1,12,13 ஆகிய இரவுகள்)

5.தஷ்ரீக்குடைய நாட்களில் கல்லெறிதல்

6.தலைமுடி மழிப்பது அல்லது கத்தறிப்பது (ஆண்கள் மட்டும்)

7.தாஃபாவுல் வஃதா

ஹஜ்ஜை நிறைவேற்றுகின்ற போது முஸ்லிம்கள் தங்களது ஹஜ் இறைவனால் திருப்தியைப் பெற்றுத்தரக் கூடியதாக அமைய வேண்டுமென்ற எண்ணத்துடனும், பேணுதலுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். ஹஜ்ஜின் நடைமுறைகளான இஹ்ராம் அணிதல், உம்ரா செய்தல், தவாப் செய்தல், ஸயீச் செய்தல், அரபா, முஸ்தலிபா, மினா போன்ற மைதானங்களில் தங்குவது, கல்லெறிதல், உழ்ஹிய்யாக் கொடுத்தல் போன்ற எல்லா நடைமுறைகளையும் இறைவனுடைய அங்கிகாரத்தைப் பெற்றுத் தரும் வகையில் அமைய வேண்டும். மேலும் ஹஜ்ஜில் வீண் வார்த்தைகள், புறம் பேசுதல், தீய செயல்களை விட்டும் விலகி, ஹஜ்ஜில் தங்கியிருக்கும் நாட்களில் நல்ல முறையிலிம், முழு மனதுடனும் இபாதத் செய்தல், நற்செயல்கள் புரிதல், மார்க்க விளக்கங்களை தெளிவான முறையில் பகிர்ந்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.

ஹஜ்ஜுக்குறிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும், எனவே அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான். மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது (நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும். எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்துக் கொள்ளுங்கள். ( திருக்குர்ஆன் 2:197)

நீங்கள் அறுத்துப் பலியிடுகின்ற பிராணிகளின் மாமிசமோ அதனது இரத்தமோ அல்லாஹ்வைச் சென்றடைய மாட்டாது. மாறாக உங்களிடமுள்ள இறையச்சமே அவனைச் சென்றடையும்.

ஸஹாபாக்கள் தமது ஹஜ் அங்கீகரிக்கப்பட்டதாக வேண்டும் என்ற உணர்வுடன் செயல்பட்டனர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இஸ்லாத்தின் ஆரம்பப் பொழுதில், மனிதர்கள் ஹஜ் காலத்திலும் ஏனைய காலங்களிலும், மினா, அரபா, துல்மஜாஸ் ஆகிய இடங்களில் வியாபார கொடுக்கல் வாங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் ஸஹாபாக்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் நிலையில் இந்த இடங்களில் வியாபாரம் செய்வதற்குப் பயந்தனர். அப்பொழுது அல்லாஹுதஆலா கீழ்வரும் திருமறை வசனத்தை இறக்கியருளினான்.

(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலங்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது, பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது "மஷ்அருள் ஹராம்" என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு (தியானம்) செய்யுங்கள். உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.  (திருக்குர்ஆன் 2:198)

இறைவன் மனிதர்களுக்கு வேண்டிய சலுகைகளை கொடுத்து அவன் எவ்வாறு நடந்துக் கொள்கிறான் என்று கவனித்தவனாகவே இருக்கிறான், நம்முடைய அத்துமீறிய போக்கு இறை அங்கீகாரத்தை பாதித்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஆண்களிலும் பெண்களிலும் உடல் உள இயல்புகளை நன்கறிந்த எல்லாம் வல்ல அல்லாஹ் இருவருக்குறிய கடமைகளையும், பொறுப்புகளையும் தனித்தனியே அமைத்து வைத்துள்ளான். ஆண்களுக்கு அறப் போராட்டம் கடமையாக்கப்பட்டுள்ளது. இப்போராட்டம் குறித்து ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அல் ஜிஹாதை சிறந்த நற்செயல் என்று நாம் கருதுகின்றோம். நாங்களும் இறைவழியில் போராடலாமா? என வினவினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள். வேண்டாம்! உங்களுக்குறிய சிறந்த ஜிஹாத் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ் என பதிலளித்தார்கள். (நூல் - புகாரி)

ஹஜ்ஜின் ஒழுக்கங்கள்:
1.ஹஜ் செய்ய விரும்பும் ஒருவர் தான் ஹஜ்ஜுக்குப் பயனமாகும் முன்னர் தனக்குத் தேவையான ஹஜ்ஜின் சட்டங்களை படித்தோ கேட்டோ தெரிந்து கொள்வதும் அல்லது யாராவது ஒரு ஆலிம் அல்லது ஹஜ்ஜின் அனைத்து காரியங்களையும் அறிந்த அறிஞர்கள் அடங்கிய குழுவோடு செல்வதில் ஆர்வம் கொள்ள வேண்டும்.

2.தன் ஹஜ்ஜை நிறைவேற்றுவதைக் கொண்டு நம்மைப் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நெருக்கத்தையும், உவப்பையும் பெற ஆர்வம் இருக்க வேண்டும்.

3.நாம் பேசுகின்ற பேச்சு ஒவ்வொன்றும் இறைவனை போற்றி புகழ வேண்டும், தேவையற்ற பேச்சுகளை தவிர்த்து நல்ல வார்த்தைகளையும், திக்ரு, துஆ செய்துக்கொண்டிருக்க வேண்டும்.

4.பெண்கள் அனைவரும் புர்கா அணிந்து தன்னை மூடி மறைத்துக் கொண்டு, இறையச்சத்தோடு அங்கு செயல்பட வேண்டும்.

ஹஜ்ஜின் சில் கருத்துகள்: (பெண்களுக்காக)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அருளினார்கள், பெண்கள் தங்களுடன் வருவதற்கு மஹ்ரமான ஆண் துணையைப் பெற்று விட்டார்கள் என்றால், ஆண்களைப் போலவே பெண்கள் மீதும் ஹஜ் கடமையாக இருக்கிறது. என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மஹ்ரமான ஆண் துணையுடன் இருக்கின்ற பெண்களைத் தவிர்த்து, பெண்கள் தனியாக இருக்கும் நிலையில் எந்த ஆணும் அவ்விடத்தில் நுழைவதுக் கூடாது.

இவ்வாறு மஹ்ரமில்லாத ஆண் துணையுடன் ஹஜ் செய்யக் கூடிய பெண்ணின் ஹஜ் நிறைவேறும், இருந்தாலும் அப்பெண்ணின் மஹ்ரமில்லாத ஆண் துணையுடன் சென்றதற்காக, ஒரு பாவத்தைச் செய்ததாகக் கருதப்படும். மேலும், ஒரு பெண் இன்னொரு பெண் துணையுடனோ அல்லது ஒரு பெண்ணின் குழுவுடனோ சென்று ஹஜ் செய்வதும், பயணம் செய்வதும் சட்டப்படி ஆகுமானதல்ல. அல்லது எங்கு சென்றாலும் ஒரு பெண்ணின் துணையுடனோ அல்லது பெண் குழுவின் துணையுடனோ செல்வது என்பது மஹ்ரமான ஆண் துணையுடன் செல்வதற்குறிய ஈடாக கருதப்பட மாட்டாது.

ஒரு பெண் ஹஜ் செய்ய வேண்டுமானால் தன் கணவ கணவரிடம் முதலில் அனுமதிப் பெற வேண்டும் என்பது மிகவும் போற்றக்கூடிய செயலாகும். கணவன் அனுமதி தர மறுத்தால், எதாவது ஒரு மஹ்ரமான ஆண் துணையுடன் அப்பெண் ஹஜ் செய்யலாம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், தன்னைப் படைத்தவனுக்கு மாறு செய்யக் கூடிய வகையில் நிர்பந்திக்கப் பட்டால் எந்தப் படைப்பினத்தின் மீதும் கீழ்ப்படிவது கடமையில்லை. (நூல் - முஸ்லிம்)

மேலும் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஹஜ் செய்வது என்பது விரும்பத்தக்கதல்ல, தன்னுடன் இறுதி ஹஜ் செய்ய வந்திருந்த மனைவிமார்களைப் பார்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

இந்த ஹஜ் உங்களுக்குப் போதுமானது, இதன் பின் நீங்கள் உங்கள் வீட்டிலேயே தனித்திருங்கள் என்று (அதாவது இதற்குப் பின் உங்களுக்கு ஹஜ் என்பது கிடையாது, உங்கள் வீட்டிலேயே நீங்கள் இருந்துக் கொள்வது நல்லது) என்று கூறினார்கள்.

ஹஜ் (பிறருக்காக):
ஒருவர் ஹஜ் செய்வதற்குண்டான அனைத்து வசதிகளையும் பெற்றிருந்தும், அவரால் எப்பொழுதும் ஹஜ் செய்ய முடியாத நிலையில் இருப்பின், அவருக்காக ஒருவர் (ஆண் அல்லது பெண்) ஹஜ் செய்வது அவர் மீது தவிர்க்க இயலாத கடமையாக இருக்கிறது. அந்த நபருக்காக ஹஜ் செய்பவர், முதலில் தனக்காக ஒரு ஹஜ் செய்திருக்க வேண்டும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடத்தில் ஒருவர் இவ்வாறு கேட்டார். யா அல்லாஹ் சுப்ருமா என்ற மனிதருக்காக ஹஜ் செய்வதற்காக, உன்னுடைய அழைப்பிற்கு செவிசாய்த்தவனாக உன்னிடம் ஆஜராகி உள்ளேன் என்று கூறினார். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? எனக் கேட்டார்கள், அந்த மனிதர் இல்லை என பதில் கூறவே, முதலில் உனக்காக நீ ஹஜ் செய்துக் கொள், பிறகு சுப்ருமாவிற்காக ஹஜ் செய்துக் கொள் என பதில் கூறினார்கள். (நூல் - அபூதாவூத் மற்றும் இப்னு மாஜா)

குறிப்பு:
இஸ்லாத்தின் கடமைகளில் அனைத்தையும் கடைப்பிடித்து இறைவழியில் நாமும் சென்று நம்மால் முடிந்த அளவு இறைவனின் துணைக் கொண்டு பிறருக்கும் உதவிசெய்து இறைவனுடைய அன்பையும் நெருக்கத்தையும் பெற்று ஈருலகிலும் வளமான வாழ்வைப் பெறுவோமாக! ஆமீன்!!

Posted by Haja.....

0 கருத்துக்கள்:

Post a Comment

அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.

நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!