இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!’ என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) ‘எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!” (என்று அல்லாஹ் கூறினான்)” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1896
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!” என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1897
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். “ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிருந்து, ‘அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!)’ என்று அழைக்கப்படுவார். (தம் உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் ‘ஜிஹாத்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ‘ரய்யான்’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் ‘சதகா’ எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே, எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்க ‘ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நம்புகிறேன்!” என்றார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1898
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1899
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன் நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1900
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்; உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக் கொள்ளுங்கள்.” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். மற்றோர் அறிவிப்பில் ‘ரமலான் பிறை” என்று உள்ளது.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1901
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1902
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் – ரமலான் முடியும்வரை – நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1903
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1904
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!” என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் ‘நான் நோன்பாளி!” என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1906
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்.” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1907
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாள்களாக எண்ணிக்கையை முழுமைப் படுத்துங்கள்.” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1908
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்கள் இரண்டு கைவிரல்களையும் மூன்று முறை விரித்து) மாதம் என்பது இவ்வளவுதான் என்று கூறினார்கள். மூன்றாம் முறை கட்டை விரலை மடக்கினார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1909
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1912
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “துல்ஹஜ், ரமலான் ஆகிய பெருநாள்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தால் போல் குறையாது.” என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1913
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1914
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ரமளானுக்கு முதல் நாளும் அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது; அந்நாள்களில் வழக்கமாகத் நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால்அந்நாளில் நோன்பு நோற்கலாம்!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1915
பராஉ(ரலி) அறிவித்தார். (ஆரம்ப காலத்தில்) நபித்தோழர்கள் நோன்பு நோற்று, நோன்பை நிறைவு செய்யும் நேரம் வந்து, அதற்கு முன்பே உறங்கி விட்டிருந்தால் அன்றைய இரவிலும் (தொடர்ந்து) பகலிலும் மாலை வரை எதையும் உண்ண மாட்டார்கள். (ஒரு முறை) கைஸ் இப்னு ஸிர்மா(ரலி) நோன்பு நோற்றிருந்தார்; நோன்பு நிறைவு செய்யும் நேரம் வந்ததும் தம் மனைவியிடம் வந்து, ‘உன்னிடம் உணவு ஏதும் உள்ளதா?’ என்று கேட்டார்; அவரின் மனைவி, ‘இல்லை! எனினும் நான் சென்று உமக்காக (உணவைத்) தேடி வருகிறேன்!” என்றார். கைஸ் இப்னு ஸிர்மா(ரலி) அன்றைய தினம் கூலி வேலை செய்துவிட்டு வந்ததால் அவருக்கு உறக்கம் மேலிட்டுவிட்டது. அவரின் மனைவி வந்து அவரைக் கண்டபோது, ‘உமக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது’ என்றார் நண்பகலானதும் கைஸ்(ரலி) மூர்ச்சையுற்றார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டபோது, ‘நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற வசனமும் ‘இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் என்ற வசனமும் இறங்கின. இதனால் நபித்தோழர்கள் அதிக மகிழ்ச்சியடைந்தார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1916
அதீ இப்னு ஹாதிம்(ரலி) அறிவித்தார். ‘கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும் வரை’ என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டபோது, நான் ஒரு கருப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து தன் தலையணையில் வைத்துக் கொண்டேன்; இரவில் அதைப் பார்க்கலானேன்; எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன்; அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘(கருப்புக் கயிறு என்பதின் கருத்து) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதின் கருத்து) விடியலின் வெண்மையும் தான்!” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1917
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். “கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்!” என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டது! அப்போது அவ்வசனத்தில் ‘மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)’ என்னும் வாசகம் இருக்கவில்லை! அப்போதெல்லாம் மக்கள் நோன்பு நோற்க நினைத்தால் ஒரு காலில் வெள்ளைக் கயிற்றையும் கட்டிக் கொள்வார்கள். அவ்விரண்டும் கண்ணுக்குத் தெரியும்வரை உண்டு கொண்டே இருப்பார்கள்! பிறகுதான் ‘மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)’ என்னும் வாசகம் (அவ்வசனத்துடன்) இறங்கியது. ‘இரவையும் பகலையுமே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்” என்று அப்போதுதான் மக்கள் விளங்கினர்!”
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1918
ஆயிஷா(ரலி) இப்னு உமர்(ரலி) ஆகியோர் அறிவித்தார். பிலால்(ரலி), (ஃபஜ்ரு நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள்; அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்! ஏனெனில், அவர்தாம் ஃபஜ்ரு (கைவறை) நேரம் வந்ததும் பாங்கு சொல்கிறார்!” என்று குறிப்பிட்டார்கள்.
“அவர் பாங்கு சொல்லிவிட்டு இறங்குவார்; இவர் பாங்கு சொல்வதற்கு ஏறுவார் என்பதைத் தவிர இரண்டு பாங்குக்குமிடையே பெரிய இடைவெளி இருக்காது!” என்று காஸிம்(ரஹ்) கூறினார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1920
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். “நான் என் குடும்பத்தாருடன் ஸஹ்ர் செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களுடன் (ஸுப்ஹுத்) தொழுகையை அடைவதற்காக விரைவாகச் செல்வேன்!”
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1921
அனஸ்(ரலி) அறிவித்தார். “நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஹ்ர் செய்தோம்; பின்னர், தொழுகைக்கு அவர்கள் தயாராகி விட்டார்கள்!” என்று ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்; நான் ‘பாங்குக்கும் ஸஹ்ருக்குமிடையே எவ்வளவு நேரம் இருந்தது?’ என்று கேட்டேன். அதற்கவர் ‘ஐம்பது வசனங்கள் (ஓதும்) நேரம் இருந்தது!” என்று பதிலளித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1923
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!” இதை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1925-1926
அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு, குளிப்பு கடமையானவர்களாக ஃபஜ்ரு (அதிகாலை) நேரத்தை அடைவார்கள்; பின்னர் குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்!’ என்று ஆயிஷா(ரலி), உம்மு ஸலமா(ரலி) ஆகியோர் அறிவித்ததாக அன்றைய தினம் மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானிடம் என் தந்தை அப்துர் ரஹ்மான் கூறினார். மர்வான், என் தந்தையிடம், ‘இதன் வாயிலாக (இதை எடுத்துரைத்து), அபூ ஹுரைராவை நீர் எச்சரிக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்!’ என்று கூறினார். பின்னர் நாங்கள் ‘துல்ஹுலைஃபா’ என்னும் இடத்தில் ஒன்று சேர்வதாக முடிவு செய்யப்பட்டது. அங்கு அபூ ஹுரைரா(ரலி) அவர்களுக்கு ஒரு நிலம் இருந்தது; (நாங்கள் அங்கு சென்றபோது இருந்தார்;) என் தந்தை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம், ‘நான் உம்மிடம் ஒரு செய்தியைக் கூறவிருக்கிறேன்: மர்வான், இது தொடர்பாக (உம்மிடம் கூறும்படி) சத்தியம் செய்து என்னை வற்புறுத்தியிருக்காவிட்டால் இதை நான் உம்மிடம் கூறப்போவதில்லை!’ என்று கூறிவிட்டு, ஆயிஷா(ரலி), உம்மு ஸலமா(ரலி) ஆகியோர் கூறியதை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் கூறினார். அதற்கு அபூ ஹுரைரா(ரலி) ‘அது (ஃபஜ்ருக்கு முன்பே குளித்ததாக வேண்டும் என்பது) போல்தான் ஃபள்ல் இப்னு அப்பாஸ்(ரலி) எனக்குக் கூறினார்கள்: (நபியின் மனைவியரான) அவர்கள்தாம் இது பற்றி நன்கு அறிந்தவர்கள்!’ என்று பதிலளித்தார்.”
‘ஃபஜ்ரு நேரத்தில் குளிப்பு கடமையாக இருப்பவர் நோன்பை விட்டுவிடுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்’ என்று அபூ ஹுரைரா(ரலி) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் முந்திய (இந்த நபிமொழியின் தொடக்கத்தில் உள்ள) செய்தியே பலமான அறிவிப்பாளர் வரிசையுடன் உள்ளதாகும்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1927
ஆயிஷா(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்; முத்தமிடுவார்கள்! உங்களில் தம்(உடல்) உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்!”
“ஒருவர் தம் மனைவியை இச்சையுடன் பார்த்து, அதனால் விந்து வெளிப்பட்டால் அவர் நோன்பைத் தொடரலாம்!” என்று ஜாபிர் இப்னு ஸைத் கூறுகிறார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1928
உர்வா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் தம் மனைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்!” என்று சொல்லிவிட்டு ஆயிஷா(ரலி) சிரித்தார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1929
உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். “நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வைக்குள் இருக்கும்பொழுது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. நான் (போர்வையிலிருந்து) நழுவி, மாதவிடாய்க்குரிய ஆடைகளை அணிந்து கொண்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?’ என்று கேட்டார்கள்: நான் ‘ஆம்!’ என்று கூறிவிட்டு, அவர்களுடன் போர்வைக்குள் நுழைந்து கொண்டேன்! நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் (இருக்கும் தண்ணீரையள்ளிக் குளிப்போம்! நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிடுவார்கள்!”
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1930
ஆயிஷா(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளிப்பு கடமையானவர்களாக ஃபஜ்ரு நேரத்தை அடைவார்கள். குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்!”
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1931-1932
அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார். “நானும் என் தந்தையும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றோம். ஆயிஷா(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளிப்பு கடமையானவர்களாகக் காலை நேரத்தை அடைவார்கள்; பின்னர் நோன்பைத் தொடர்வார்கள!’ என்று கூறினார்கள். பிறகு, உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்களும் அவ்வாறே கூறினார்கள்!’
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1933
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப்படுத்தட்டும்; ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1935
ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் எரிந்து போய்விட்டேன்!” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் ‘உமக்கு என்ன நேர்ந்தது?’ என்றார்கள். அவர், ‘ரமளானில் என் மனைவியுடன் கூடிவிட்டேன்!” என்று பதிலளித்தார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் ‘அரக்’ என்று கூறப்படும் ஓர் அளவை (நிறைய பேரீச்சம் பழம்) கொண்டு வரப்பட்டது. ‘எரிந்து போனவர் எங்கே?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘நானே” என்று அவர் கூறினார். (அந்தப் பேரீச்சம் பழத்தை அந்த மனிதரிடம் கொடுத்து.) ‘இதை தர்மம் செய்வீராக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1936
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழிந்து விட்டேன்!” என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘உமக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடிவிட்டேன்!” என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள், ‘விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை!” என்றார். ‘தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ‘இல்லை!” என்றார். ‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர், ‘இல்லை!” என்றார். நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த ‘அரக்’ எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் ‘கேள்வி கேட்டவர் எங்கே” என்றார்கள். ‘நானே!” என்று அவர் கூறினார். ‘இதைப் பெற்று தர்மம் செய்வீராக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! என்னை விட ஏழையாக இருப்போருக்கான (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை!” என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள்: பிறகு ‘இதை உம்முடைய குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!” என்றார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1937
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். “ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘(என்னைப் போன்ற) பாமரர் ஒருவர் ரமளானில் தம் மனைவியுடன் கூடிவிட்டால் (பரிகாரம் என்ன?)” என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஓர் அடிமையை உம்மால் விடுதலை செய்ய இயலுமா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இயலாது!” என்றார். ‘அறுபது ஏழைகளுக்கு உணவு அளிப்பதற்குரிய பொருள் உம்மிடம் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை” என்றார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த ‘அரக்’ எனும் அளவை கொண்டு வரப்பட்டது. ‘இதை உம் சார்பாக வழங்குவீராக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கவர் ‘எங்களை விட ஏழைக்கா? மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையே எங்களை விட அதிகத் தேவையுடையோர் வேறு யாரும் இல்லை!” என்று கூறினார். ‘அப்படியானால் உம் குடும்பத்தாருக்கே இதை உண்ணக் கொடுத்து விடுவீராக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1938
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் இரத்தம் குத்தி எடுத்துள்ளனர். நோன்பு நோற்று இருக்கும்போது இரத்தம் குத்தி எடுத்துள்ளனர்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1939
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது இரத்தம் குத்தி எடுத்தார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1940
ஸாபித் அல் புனானீ அறிவித்தார். “நோன்பாளி இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வதை நீங்கள் வெறுத்து வந்தீர்களா?’ என்று அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘இல்லை! ஆயினும், (நாங்கள் அதை வெறுத்தது) பலவீனம் ஏற்படும் என்பதற்காகவே!” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
மற்றோர் அறிவிப்பில் ‘நபி(ஸல்) அவர்கள் காலத்தில்’ என்னும் வாக்கியம் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1941
இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், ‘(வாகனத்திலிருந்து) இறங்கி, (உண்பதற்கேற்ப) மாவை எனக்காகக் கரைப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கவர், ‘இறைத்தூதர் அவர்களே! (இன்னும் முழுமையாக மறையவில்லையே,) சூரியன்!” என்றார். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!” என்றார்கள். அப்போதும் அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! (இன்னும் முழுமையாக மறையவில்லையே,) சூரியன்!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!” என்று மீண்டும் கூறினார்கள். அவர் இறங்கி மாவைக் கரைத்தார். அதை நபி(ஸல்) அவர்கள் அருந்திவிட்டுத் தம் கையால் (கிழக்கே) சுட்டிக் காட்டினார்கள் பிறகு, ‘இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதை நீங்கள் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யலாம்! என்றார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1942
ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஹம்ஸா இப்னு அம்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நான் காலமெல்லாம் நோன்பு நோற்கிறேன்’ என்று கூறினார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1943
ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஹம்ஸா இப்னு அம்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், ‘பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?’ என்று கேட்டார். அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்; நீ விரும்பினால் விட்டுவிடு” என்றார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1944
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் ரமளானில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள்; அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். ‘கதீத்’ எனும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டார்கள்; மக்களும் நோன்பைவிட்டனர்!”
“கதீத் என்பது உஸ்ஃபான், குதைத் ஆகிய இடங்களுக்கிடையே உள்ள நீர்ப் பகுதியாகும்!” என்று அபூ அப்தில்லாஹ் புகாரீயாகிய நான் கூறுகிறேன்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1945
அபூ தர்தா(ரலி) அறிவித்தார். “நாங்கள் நபி(ஸல்) அவர்களின் பயணமொன்றில் வெயில் மிகுந்த ஒரு நாளில் அவர்களுடன் சென்றோம். கடும் வெப்பத்தின் காரணமாக சிலர் தம் கையைத் தம் தலையில் வைத்தனர். அப்பயணத்தில் நபி(ஸல்) அவர்களையும் தவிர எங்களில் வேறு எவரும் நோன்பு நோற்றிருக்கவில்லை!”
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1946
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒருவர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். ‘இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘இவர் நோன்பு நோற்றிருக்கிறார்!” என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘(பலவீனமான நிலையில் உள்ளவர்கள்) பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது!” என்று கூறினார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1947
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணத்தில் செல்வோம். நோன்பு நோற்றவரை நோற்காதவரும் நோற்காதவரை நோற்றவரும் குறை கூறமாட்டார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1948
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து மக்காவிற்குப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். உஸ்பான் எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் கொண்டுவரச் செய்து, மக்கள் காண்பதற்காகக் கைகளின் நீளத்திற்கு அதை உயர்த்திக் காட்டி நோன்பை முறித்தார்கள். மக்காவை அடையும் வரை நோன்பு நோற்க வில்லை. இது ஒரு ரமளானில் நடந்தது!
“நபி(ஸல்) அவர்கள் (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; நோன்பை விட்டும் இருக்கிறார்கள். (நோன்பு நோற்க) விரும்புபவர் நோன்பு நோற்கலாம்; நோன்பைவிட்டுவிட விரும்புபவர்விட்டு விடவும் செய்யலாம்!”
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1949
நாஃபிவு(ரஹ்) அறிவித்தார். “ரமளான் (நோன்பை விட்டதற்குப்) பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்!” என்ற வசனத்தை இப்னு உமர்(ரலி) ஓதிவிட்டு, இந்த வசனம் கூறும் சட்டம் மாற்றப்பட்டு விட்டது!” என்று கூறினார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1950
ஆயிஷா(ரலி) அறிவித்தார். எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டு விடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது.
நபி(ஸல்) அவர்களுக்கு ஆயிஷா(ரலி) பணிவிடை செய்ததே இதன் காரணம் என்று யஹ்யா பின் சயீத் (ரஹ்) கூறுகிறார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1951
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா? அதுதான் மார்க்கத்தில் அவளுக்குள்ள குறைபாடாகும்.” இதை அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1952
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்பார்.” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1953
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது” என்றார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘என் சகோதரி மரணித்து விட்டார் என்று கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில் ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘என் தாய் இறந்து விட்டார்’ என்று கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், ‘நேர்ச்சை நோன்பு என் தாயாருக்குக் கடமையாக இருந்த நிலையில் என் தாய் இறந்துவிட்டார்…’ என்று ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில், ‘என் தாய் மீது பதினைந்து நோன்புகள் கடமையாக இருந்த நிலையில் இறந்துவிட்டார்’ என்று ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள் என இந்த ஹதீஸ் துவங்குகிறது.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1954
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “சூரியன் மறைந்து, இந்த(கிழக்கு) திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்த (மேற்கு) திசையிலிருந்து பகல் பின்னோக்கி(ப்போ)னால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யவேண்டும்!”
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1955
அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் கூட்டத்தில் ஒருவரிடம், ‘இன்னாரே! எழுந்து நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கவர் ‘இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக! எனறார்கள். அதற்கவர் ‘இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டும்!” என்றார். நபி(ஸல்) அவர்கள். ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கவர், ‘இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கவர் ‘பகல் (வெளிச்சம்) இன்னும் (எஞ்சி) இடருக்கிறதே?’ என்று கேட்டதற்கும் நபி(ஸல்) அவர்கள் ‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். உடனே அவர் இறங்கி, அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி(ஸல்) அவர்கள் அருந்திவிட்டு, ‘இரவு இங்கிருந்து (கிழக்கிலிருந்து) முன்னோக்கி வந்துவிட்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!” என்றார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1956
அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் ஒருவரிடம். ‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கவர், ‘இறைத்தூதர் அவர்களே! மாலைநேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கவர், ‘பகல் (வெளிச்சம்) இன்னும் எஞ்சியிருக்கிறதே!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அவர் இறங்கி மாவு கரைத்தார். பின்னர், ‘நீங்கள் இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதைக் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!” என்று தம் விரலால் கிழக்கே சுட்டிக் காட்டிக் கூறினார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1957
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!” இதை ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1958
அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். அவர்கள் நோன்பு நோற்றார்கள். மாலை (முடியத் தொடங்கும்) நேரம் வந்ததும் ஒரு மனிதரிடம், ‘இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கவர், ‘மாலை நேரம் (முழுமையாக) முடிவடையும் வரை காத்திருக்கலாமே!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக! இரவு இங்கிருந்து முன்னோக்கி வருவதைக் கண்டால், நோன்பாளி நோன்பை நிறைவு செய்யவேண்டும்!” என்றார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1959
அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பை நிறைவு செய்த பின்னர் சூரியன் தென்பட்டது.
“அவர்கள் களா செய்யுமாறு கட்டளையிடப்பட்டார்களா?’ என்று ஹிஷாம்(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘களா செய்வது அவசியமில்லாமல் போகுமா?’ என்று கேட்டார். (‘களா செய்வது அவசியமாகும்!’ என்பது இதன் பொருள்.)
“அவர்கள் களா செய்தார்களா? இல்லையா என்பது எனக்குத் தெரியாது!” என்று ஹிஷாம்(ரஹ்) கூறினார்கள் என மஃமர் கூறுகிறார்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1969
ஆயிஷா(ரலி) அறிவித்தார். “(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: ‘(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்’ என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பைவிட்டுவிடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!”
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1970
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தை வட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில ஆண்டுகளில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். ‘உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!” என்றும் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும் தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.
பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1971
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறு எந்த மாதமும் முழுமையாக நோன்பு நோற்க மாட்டார்கள். (ரமளான் அல்லாத மாதங்களில்) ‘அல்லாஹ்வின் மேல் ஆணையாக! இனிமேல் நோன்பை விட மாட்டார்கள்!” என்று மக்கள் கூறுமளவுக்கு நோன்பு நோற்பார்கள். ‘அல்லாஹ்வின் மேல் ஆணையாக! இனிமேல் நோன்பு நோற்க மாட்டார்கள்!’ என்று மக்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டு விடுவார்கள்.
ஆதார நூல்: புகாரீ.
0 கருத்துக்கள்:
Post a Comment
அன்பர்களே..! நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
ஆக்கம் தொடர்பான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பேசுபொருளை திசைதிருப்பும் வீண் விவாதங்களும், அநாகரீக, காழ்ப்புணர்ச்சி, கேலி கிண்டல் பின்னூட்டங்ளும் பிரசுரிக்கபடமாட்டாது.
நியாயமான உங்கள் கேள்விகளுக்கு நடுநிலையான பதில் இன்ஷா அல்லாஹ் இங்கு உண்டு!