Saturday, June 25, 2011

இஸபெல்லா - ஒரு புதினம்,ஒரு புரட்சி (1)

4 கருத்துக்கள்
அஸ் ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹ்,

இந்த தொடர், ஒரு கதை. பாகிஸ்தானிய கதாசிரியர் ஒருவருடையது. கதை மூலமே கிறிஸ்தவ மதத்தையும், இஸ்லாமிய மதத்தையும் ஆய்வு செய்து, ஒப்பிட்டுப் பார்த்து, எது சரி, எங்கே தப்பு என்பதை உளவியல் ரீதியாக அணுகி முடிவு செய்வார். இந்தக் கதையை முதன் முதலில் படிக்கும்போது எவ்வளவு தாக்கத்தை உணர்ந்தேனோ அதே அளவு தாக்கத்தை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் உணருகிறேன். இதனை கதையாக வாசித்தாலும் சரி, தர்க்க ரீதியில் அணுகினாலும் சரி, ஒரு சின்ன சலனத்தையாவது ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இன்ஷா அல்லாஹ் அப்படி ஒரு மாற்றத்தையோ, சலனத்தையோ ஏற்படுத்துமெனில் அதுவே இந்த தொடரின் வெற்றியாகும். அல்லாஹ் போதுமானவன். சரி வாருங்கள், பழைய, மிகப்பழைய ஸ்பெயினின் கொர்டபா நகரை சுற்றிப்பார்க்க செல்வோம்.

---------------------------- ~✿~ ----------------------------

அழகிய தோட்டத்தில்...
ஏடென் தோட்டத்தில் அன்றைய மாலைப்பொழுதை கதிரவன் தன் வசமாக்கியிருந்தான். பொன்னிற கதிரை காணுமிடமெல்லாம் பாய்ச்சி கண்களுக்கு விருந்தாக்கியிருந்தான். சுற்றுலாவிற்கு வந்தவர்களும் அங்கேயே வாழும் அதிர்ஷ்டத்தைப் பெற்றவர்களும் என்றைக்கும் போல அன்றைக்கும் ரம்மியமான அந்த மாலைப்பொழுதை மகிழ்வுடன் கழித்துக் கொண்டிருக்கையில் இரண்டு இளைஞர்கள் மட்டும் தோட்டத்தின் ஒரு மூலையில் அமர்ந்து தனியே மதங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அதே தோட்டத்தில் கொஞ்சம் தள்ளி இருந்த பெஞ்சில் அமர்ந்து தோழிகளுடன் அந்த மாலையின் அழகில் மனம் பறிகொடுத்துக் கொண்டிருந்தாள் இஸபெல்லா. இஸபெல்லா, கொர்டபாவின் பணம் படைத்த, வசதியற்ற என எல்லா இளைஞர்களின் மனதையும் கொள்ளை கொண்டிருந்த ஒரே பெயர். சமூகத்தில் உயர்ந்தோரும், மத குருமாரின் வம்சங்களும் தங்கள் வசம் கொள்ளத் துடித்த தேவதை. ஆனால் அவளின் தந்தையோ, இஸபெல்லாவை இன்னொரு (மரியம் அலைஹ்) கன்னிமேரியாக்கி வைக்க வேண்டுமென்றே முடிவுடன் இருந்தார். இஸபெல்லாவிற்கு அதற்கெனவே தனியாக மதம் சார்ந்த கல்வியை கற்க வழி வகை செய்திருந்ததால் இஸபெல்லாவுக்கும் மதம் சார்ந்த விவாதங்கள் மிகுந்த மகிழ்ச்சியை தந்தன எனலாம்.

அங்கே அந்த மூலையில் இருந்த இரண்டு இஸ்லாமிய இளைஞர்களும் தங்களுக்குள் ஏதோ ஓர் விவாதத்தில் தீவிரமாய் இறங்கியிருந்தனர்.
முதலாம் இளைஞன்: “செயிண்ட் பால், அவரின் கடிதங்களில் [எபிஸ்ட்ல், கேலேஷியன்களுக்கு அனுப்பப்பட்டது 3:10] ஒன்றில் இப்படி எழுதியுள்ளாரே?”

இரண்டாம் இளைஞன்: “என்னவென்று?”

முதலாம் இளைஞன்: “அதுதான், மார்க்க கட்டளை என்பது ஒரு சாபமென்றும், அந்த சாபத்திலிருந்து விடுவிக்கவே ஏசுநாதர் இந்த மண்ணிற்கு வந்தார் என்றும். அப்படி என்றால் என்ன அர்த்தம்?”
இரண்டாம் இளைஞன்: (சிரித்துக் கொண்டே) “நீ என்னிடம் இருந்து இதன் விளக்கத்தை அறிய முயற்சிக்கிறாயா? ஆளானப்பட்ட கிறிஸ்தவ குருமார்களே...”

இஸபெல்லாவின் காதுகளுக்கு “கிறிஸ்தவ குருமார்களே..” என்னும் வார்த்தை தெளிவாக விழுந்தது. தோழிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தவள் இந்த வார்த்தைகளை கேட்டதும் சட்டென அமைதியானாள். தன் தோழிகளையும் அழைத்து சற்றே அமைதி காக்கும்படி கூறினாள். 
இஸபெல்லா: “இந்த இரு இஸ்லாமிய இளைஞர்களும் நம் மதத்தைப் பற்றி ஏதோ பேசுவது போல கேட்கிறதே. கொஞ்சம் அமைதியாக இருங்கள். என்ன பேசுகிறார்கள் என்று கேட்கலாம்.”
தோழிகளில் ஒருத்தி: “இந்த இஸ்லாமியர்கள் இந்நாட்டிற்கு வந்ததிலிருந்து நம் மதம்தான் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது போலுள்ளது. இப்பொழுது மீண்டும் என்னவோ??”
இஸபெல்லா: “ஷ்ஷ்ஷ்... சும்மாயிருங்கள். அவர்கள் என்ன சொல்கிறார்களென்று கேட்கலாம். பின்னர் நாம் விவாதிக்கலாம்.”

முதலாம் இளைஞன்: “மு’ஆஸ், என்ன நீ அந்த கிறிஸ்தவ குருமார்களே இந்த விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை என்கிறாயா?? அப்படியென்றால் அவர்கள் கிறிஸ்தவத்தை புரிந்து கொள்ளாமலே அதை பின்பற்றுகிறார்கள் என்கிறாயா??”

இரண்டாம் இளைஞன்: “உமர் லஹ்மி!, உனக்கு என் கூற்றில் சந்தேகமிருந்தால் இதே கேள்வியை இங்கிருக்கும் யாரேனும் ஒரு சிறந்த, மார்க்க அறிவு நிரம்பிய பாதிரியாரை அழைத்து இதைக் கேட்டுப்பார். ஆனால் அதற்கு முன் செயிண்ட் பால் கூறியுள்ள விஷயத்திற்கு உன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்காமல் இருந்து கேள்.”

உமர் லஹ்மி: “என்னிடம் இந்த விஷயத்தில் எந்த எதிர்ப்போ, மறுப்போ இல்லை. ஆனால் அதிகமாக கிறிஸ்தவர்களுடன் நீ இந்த விவாதங்களை செய்வதைப் பார்த்தபின்தான் உன்னிடம் இதை தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டுமென்று தோணியது. அதுவுமன்றி நீதான் அவர்களின் வேதங்களையும் அதிகம் படித்து வைத்துள்ளாயே. அதனால்தான். என் கேள்வியெல்லாம் ஒன்றுதான், மார்க்க சட்டங்கள் ஒரு சாபமென்றும், இறைத்தூதர் ஈஸா(அலைஹ்) / ஏசுநாதர் கிறிஸ்தவர்களை எல்லாம் இந்த சாபத்திலிருந்தே காப்பாற்ற வந்தார் என்றும் வைத்துக்கொண்டால் திருட்டு / விபச்சாரம் / பெற்றோர்களுக்கு மாறு செய்வது போன்ற எல்லாமே பின் செல்லத்தக்கவையாகி / அனுமதிக்கப்பட்டவையாகி விடுமே??  கிறிஸ்தவர்களே இதை விரும்பாதவர்களாயினும் அவை அனுமதிக்கப்பட்டவையாகிவிடுமே என்றுதான் குழம்புகிறேன்”

மு’ஆஸ்: “என்ன உளறுகிறாய்? எனக்கு புரியவில்லை. எப்படி மார்க்க சட்டம் ஒரு சாபமென்றால், திருட்டு, விபச்சாரம் போன்ற பாவங்கள் அனுமதிக்கப்பட்டவையாகும் என்கிறாய்? எனக்கு புரியவில்லை??”

உமர் லஹ்மி: “நான் என்ன சொல்கிறேன் என்றால், பழைய ஏற்பாட்டின்படி மார்க்க சட்டங்களில் ஒருவர் திருடுவதோ, விபச்சாரம் செய்வதோ, பக்கத்துவீட்டினருக்கு தொல்லை அளிப்பதோ, பெற்றோருக்கு மாறு செய்வதோ அனுமதிக்கப்படாது. ஆனால், முழுதாக மார்க்க சட்டங்களே ஒரு சாபம் என்றானால், இந்த தடை உத்தரவுகளையெல்லாம் ஏற்க வேண்டியதில்லை. ஏனெனில் இந்த தடை உத்தரவுகளெல்லாம் மார்க்க சட்டங்களின் ஆணிவேர்தானே. செயிண்ட் பால் கூறுவது சரியென்றால் பின் இவர்களெல்லாம் திருடலாம், விபச்சாரம் செய்யலாம், இன்னும் பல பாவங்களையும் செய்யலாம் என்றுதானே பொருள்? அப்படிப் பார்த்தால் இந்த சாபங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு பாவகாரியங்கள் செய்பவர்களே கிறிஸ்தவர்கள் என்றும், இந்த பாவங்களை, பாவங்களே என்று ஒதுக்குகிறவர்கள் மார்க்கத்தை மதிக்கவில்லை என்றுதானே பொருள்படும்???”

மு’ஆஸ்: “வேடிக்கையாக உள்ளது. நான் இதுவரை எந்த விஷயத்தை எதிர்ப்படுகிற எல்லா கிறிஸ்தவர்களிடமும் பதில் சொல்லுமாறு கேட்கிறேனோ, அதே கேள்வியை நீ என்னிடம் விளக்க சொல்கிறாய்??”

உமர் லஹ்மி: “என்ன? இதை நீ முன்னமே கிறிஸ்தவர்களிடம் கேட்டுள்ளாயா?? அப்படியெனில் அவர்களின் பதில் என்ன??”

மு’ஆஸ்: “அவர்கள் அதற்கு பதிலுரைத்திடத்தான் விரும்புகிறார்கள். ஆனால் பின் அவர்களே குழப்பத்தில் ஆழ்ந்துவிடுகிறார்கள்.”

பேச்சின் சுவாரஸ்யத்தில் நேரம் கழிந்து மஃக்ரிப் (அந்திமாலை தொழுகை) தொழுகையின் பாங்கு சத்தம் கேட்கிறது. உடனே அவ்விருவரும் எழுந்து அருகில் உள்ள நீர்த்தொட்டியிலிருந்து தண்ணீரெடுத்து ஒலு (தொழுகைக்கான சுத்தம் செய்யும் வழக்கம்) செய்து தொழ விரைகின்றனர்.

இஸபெல்லாவோ இதையெல்லாம் கேட்டபின் நெருப்பிலிட்ட புழுவாய் துடித்துக் கொண்டிருந்தாள். அவளின் பாடங்களில் இன்னும் இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல பயிற்றுவிக்கப்படவில்லையே. இல்லையெனில் அங்கேயே அவர்களின் மூக்குடைவது போல் பதிலுரைத்திருக்கலாமே என்று தவித்தாள். அவளுக்கு தெரிந்த ஞானத்தைக் கொண்டு உமர் லஹ்மிக்கும், மு’ஆஸுக்கும் பதில் அளித்திட சிந்தனையில் ஆழ்ந்தாள். ஆனால் எப்படி யோசித்தும் அவளுக்கு விடை கிட்டவில்லை. எனவே தோழிகளுடன் அவ்விடத்தை விட்டகன்று, பின் தந்தையிடம் பேசி இதற்கு தீர்வை தர எண்ணினாள். அவளின் தந்தை, அவ்வூரிலேயே மிகச்சிறந்த மதகுரு. எனவே அவருக்கு தெரியாத விஷயம் இருக்காது என்றே முடிவு செய்தாள்.

தோட்டத்தை ஒட்டி இருந்த ஒரு நாற்சந்திப்பில் தோழிகளை விட்டு பிரிந்து கொர்டோபாவின் கிழக்கு வாசலை நோக்கி நடக்கலானாள்.
(தொடரும்... இன்ஷா அல்லாஹ்)

Wednesday, June 15, 2011

இஸ்லாத்தை நோக்கி இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர்?

2 கருத்துக்கள்
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக செயல்பட்டு வருகிறார். கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார். தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார். இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குரானை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குரான் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குரான் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்த புத்தகம். இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார்.

Wednesday, June 8, 2011

தற்செயலாய் வீடு உருவாகுமா?

2 கருத்துக்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

ஏ, பி என்று இருவர் ஒரு காட்டிற்குள் சென்றனர். அங்கே ஒரு வீட்டை கண்டனர். ஏ உடனே ஒரு நோட்டை எடுத்து குறிப்பெடுக்க ஆரம்பித்தார்.

பி: (ஆச்சர்யத்துடன்)  என்ன செய்கின்றீர்கள்?

ஏ: இவ்வளவு அழகான வீடு நிச்சயமாக இயற்கையால் பல லட்ச ஆண்டுகளாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்......அது சம்பந்தமாகத்தான் குறிப்பெடுத்து கொண்டிருக்கின்றேன்.....

பி: இது அறிவுக்கு ஒத்து வரவில்லை. இதை யாராவது கட்டியிருக்க வேண்டும்...

ஏ: எப்படி அவ்வளவு உறுதியாக கூறுகின்றீர்கள்? இயற்கையால் இந்த வீடு உருவாகியிருக்க வாய்ப்பில்லையா?

பி: ஆம். உள்ளே வாருங்கள்....(உள்ளே செல்கின்றனர்). இங்கே பாருங்கள், அறைகள் எல்லாம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருகின்றன. இயற்கை தற்செயலாக ஏதாவது ஒரு உருவத்தை உருவாக்கலாம், ஆனால் நேர்த்தியான ஒரு அமைப்பை பலவித கணக்குகளோடு உருவாக்க முடியுமா?   

ஏ: ஏன் முடியாது? 

பி: அந்த அறைக்குள் செல்வோம் வாருங்கள்...(ஒரு அறைக்குள் செல்கின்றனர், அங்கே உள்ள ஒரு split A/C யை சுட்டி காண்பித்து)...இதோ பாருங்கள், இந்த குளிர் சாதன இயந்திரத்தை....இது உங்கள் கணக்குப்படி தானாகவே உருவாகி, பின்னர் சுவரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன்னை அமர்த்தி கொண்டு, அதற்கு பக்கத்தில் இருக்கும் power supply யுடன் தானாகவே இணைந்து ஒரு முழுமையான வேலை செய்யும் இயந்திரமாக வந்திருக்க வேண்டும். இது லாஜிக் என்கின்றீர்களா? இது அறிவியலா? 

இயற்கை இந்த அளவு ஒரு நேர்த்தியான working சிஸ்டத்தை உருவாக்கும் என்பது உங்களுக்கு சரியென படுகின்றதா?            

இது போலவே இந்த வீட்டிற்கு அடிப்படை போடுவதிலிருந்து, plumping, wiring என்று அனைத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்...      

ஏ: இல்லை, நீங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. யாராவது ஒன்றை உருவாக்கினார் என்று சொன்னால் அது அறிவியலில்லை....தற்செயலாக என்று கூறுவது தான் எனக்கு சரியென படுகின்றது....நீங்கள் அறிவியலுக்கு முரண்படுகின்றீர்கள்....நீங்கள் அறிவியலுக்கு எதிரி...  

பி: நான் சொல்வதில் லாஜிக் இல்லையா?...சரி உங்கள் வாதத்திற்கே வருவோம். உங்கள் கூற்றுக்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள்?....இந்த கட்டிடம் உங்கள் வாதப்படி உருவாகும் போது நீங்கள் பார்த்தீர்களா? இல்லை வேறு ஏதாவது இப்படி உருவாகும் கட்டிடத்தை காட்ட முடியுமா?...

ஏ: இப்படி மற்றொரு கட்டிடம் உருவாக லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகும். நம்மால் பார்க்க முடியாது...

பி: ஒரு ஆதாரமும் இல்லை என்று இப்படி சுற்றி வளைத்து சொல்கின்றீர்கள்....அப்படித்தானே.... ஆதாரமே இல்லாமல் நம்புவதற்கு பெயர் அறிவியலா?  

ஏ: நீங்கள் என்ன சொன்னாலும் சரி. யாராவது இதை உருவாக்கினார் என்று நீங்கள் சொன்னால் அதை என்னால் நம்ப முடியாது. இது தற்செயலாக தான் உருவாகியிருக்க வேண்டும்....அவ்வளவுதான்...

உங்களுடன் பேசுவதெல்லாம் டைம் வேஸ்ட். நீங்கள் இப்படியே பேசி அறிவியலுக்கு எதிராக இருங்கள். என்னைப் போன்றவர்கள் உங்களை பற்றி கவலைப்பட போவதில்லை...

பி: நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்....ம்ம்ம்... மிக்க மகிழ்ச்சி...   

.....பிரிந்து சென்று விடுகிறார்கள்...

பிறகு ஏ, எப்படி அந்த வீடு தற்செயலாய் உருவாகியிருக்கும் என்பதைப் பற்றிய தன் ஆராய்ச்சியை (???) தொடங்குகிறார்...

ஒரு மின்னல் வெட்டியதால் மண், சிமென்ட், தண்ணீர் எல்லாம் ஒன்றாக கலந்து சிமென்ட் கலவை உண்டாகி, பின்னர் காற்று இந்த பக்கமாக பலமாக அடித்ததால் சிமென்ட் கலவை செங்கல்லோடு சேர்ந்து ஒருபக்க சுவர் உண்டாகி, பின்னர் காற்று அந்த பக்கமாக பலமாக அடித்ததால் அந்த பக்க சுவர் உண்டாகி என்று மிக அற்புதமாக தன்னுடைய ஆராய்ச்சியை வழிநடத்தி செல்கின்றார்.  

என்ன? வீட்டின் அடிப்படை பற்றி எப்படி எழுதினார் என்று கேட்கின்றீர்களா?....

அதாவது, ஒரு சூறாவளி எங்கோ இருந்த TMT BAR கம்பிகளை (கம்பிகளும் தற்செயலாய் உருவானவைதான், அந்த அளவுடன், அந்த எடையுடன், அந்த நீளத்துடன்...)  அப்படியே தன்னோடு கொண்டு வந்து, அவற்றை அந்த கட்டிட இடத்தில் சொருகி விட்டு சென்றதாம்.    

இப்படியாக தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரையை முடித்து, அதனை, தன்னைப் போலவே கருத்துள்ளவர்கள் இருக்கக்கூடிய சங்கத்தில் சமர்ப்பித்தார் ஏ.

சிலபல நாட்கள் சென்ற பிறகு 'பி'க்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு. அழைத்தது ஏ தான். தன்னுடைய ஆய்வுக் கட்டுரை நல்ல வரவேற்பை பெற்றதாகவும், அந்த கட்டுரைக்காக தனக்கு விருது அளிக்கப்படுவதாகவும், அந்த விழாவில் நிச்சயம் பி பங்குக்கொள்ள வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார். 

'பி'யும் சென்றார். தடபுடலாக நடந்து முடிந்தது விருது வழங்கும் விழா. நிகழ்ச்சி முடிந்ததும் 'ஏ'விடம் கேட்டார் பி... 

"வாழ்த்துக்கள்.... அடுத்து என்ன?"

"அடுத்ததா......ஒரு நகரமே எப்படி தற்செயலாய் உருவாகியிருக்கும் என்பது பற்றி தான் அடுத்த ஆய்வு...."

அவ்வளவுதான். அதிர்ச்சியில் உறைந்தார் பி..........................

"என்ன?...மிக சிக்கலான கட்டமைப்பையும், செயல்பாட்டையும் கொண்ட ஒரு நகரம் தற்செயலாய் உருவாகுமா?.......நம் உடலில் உள்ள மில்லியன் கணக்கான செல்கள் ஒவ்வொன்றும் ஒரு நகரத்திற்கு நிகரான கட்டமைப்பையும், செயல்பாட்டையும் கொண்டுள்ளதாக கேள்விப்பட்டிருக்கின்றேனே?....ஒரு வீடே தற்செயலாக உருவாக வாய்ப்பில்லை எனும்போது ஒரு நகரம் எப்படி........................." என்று தனக்குள் கேட்டவராய், "கற்பனை வளம் இருந்தால் போதும் போல" என்று நினைத்துக்கொண்டே நடையை கட்டினார். 

அந்த சங்கத்தை விட்டு வெளியேறும் சமயம், வரவேற்பறையில் தன் நண்பனை பார்க்கின்றார் பி.

"நீ என்னப்பா செய்கின்றாய் இங்கே?...அது என்ன கையில்? நோட்டா? என்ன எழுதிக் கொண்டிருக்கின்றாய்?' 

"ஒ அதுவா, எப்படி ஒரு பஸ் தானாகவே உருவாகியிருக்கும் என்பது பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கின்றேன்...."

"டேய் நீயுமா......................."

"அட நீ ஒண்ணுப்பா...இப்படியெல்லாம் எழுதினாத்தான் இந்த சங்கத்துல உறுப்பினரா இருக்க முடியும்...ஒரு complete system தானாக உருவாக வாய்ப்பில்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும்....இதெல்லாம் சும்மா ஜாலிக்குதான்.... கண்டுக்காதே"

"உனக்கே தெரியும்னு சொல்ற...அப்புறம் ஏன் இன்னும் இந்த சங்கத்துல உறுப்பினரா இருக்கணும்னு ஆசப்படுற" 

"என்னப்பா தெரியாத மாதிரி கேட்குற. இவங்களுக்கு தான் ஆராய்ச்சிக்காக பணம் அதிகம் வருது. இங்க இருந்தாதான் நல்லா காசு பார்க்க முடியும்"  

"பொழைக்க தெரிந்தவன்டா நீ" என்று சொல்லி புன்னகைத்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார்  பி...........

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

பரிணாமம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் காண <<இங்கே>> சுட்டவும்... 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.......

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ. 
                      

Friday, June 3, 2011

உஜைர் நபி வரலாற்றில் பிழை.?

0 கருத்துக்கள்
   ஓரிறையின் நற்பெயரால்.,
            இன்று நேற்றல்ல.. மனித அறிவு இந்த மண்ணில் மதியிழக்கும் போதெல்லாம் அதற்கு நேர்வழி வழங்கும் இஸ்லாமிய வாழ்வியல் நெறியை குறைகாண்பதோடு, தனது அதி மேதாவித்தனமாக (அறைகுறை) ஆய்வறிவில் குர்-ஆனில் அங்காங்கே, கைவைத்து வரலாற்றுப் பிழையும், வாழ்வியல் பிழையும் நிறைந்திருக்கிறது என்ற தன் மனம்போனப்போக்கில் வெளியிடும் போலி குற்றச்சாட்டில் ஒன்று தான் நாம் இங்கு பார்க்க போவது.,
உஜைர் நபி குறித்து குர்-ஆன் கூறுவது என்ன...?
 யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?  (9:30)
   இந்த வசனத்தை மேற்கோள் காட்டி ஈஸா நபியை கிறித்துவர்கள் கடவுளின் மகனாக கூறுவது உண்மை தான், ஆனால் நபி உஜைரை எந்த யூதனும் கடவுளின் மகனாக கூறவில்லையே...ஆக குர்-ஆனின் வரலாற்றுப்பிழை என நிறுவ முயல்கின்றன சில திரித்துவ கொள்கைகள்.,
 இங்கு உஜைர் நபியை கடவுளின் மகனாக யூதர்கள் சொன்னார்களா என்பதை பார்க்கும் முன்பு சொல்ல வேண்டிய காரணம் குறித்து அறிந்தாலே.. இது வரலாற்றுப் பிழை இல்லை வழிகெட்டவர்களின் பார்வையில் பிழை என்பதை அறியலாம்.,அதற்கு முன்பாக,
குரானிய பார்வையில் நபி ஈஸா அலை மற்றும் உஜைர் நபி குறித்த ஓப்பிட்டு பார்வை
முதலி நபி ஈஸா அலை அவர்கள் குறித்து பார்ப்போம்.,
அவர்களது பிறப்புக்குறித்து,
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் "குன்" (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார் ((3 :59))
மர்யம் அலை இறைவனிடம் "என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?" 
(அதற்கு)  "அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது. ((9 :47))
மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார் ((3:46))
மேலும், அதை தொடர்ந்த வசனங்களில்,
இஸ்ராயீலின் சந்ததியனருக்கு அவரை தூதராகவும் ஆக்குவான், 
"நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன்
பின் மர்யம் அலை அவர்கள் நபி ஈஸாவை பெற்றெடுத்தப்பின் மக்கள் முன்பாக அவர்கள் தொட்டிலிருந்தவாறே மக்களை நோக்கி
நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். ((19 30))
ஆக நபி ஈஸா அலை அவர்கள்

  • ஏனையோரை போல் தாம்பத்திய உறவில்லாமல் இறைவனின் பிரத்தியேக ஆற்றல் மூலமாக அவனது ரூஹ் (ஆன்மா) கொண்டு படைக்கப்பட்டவர்கள்
  • சிறுபிரயாத்திலேயே... மக்களுடன் பேசினார்கள்.
  • சாதாரண களிமண்ணை பறவையாக்கினார்கள்
  • கடும் நோயுடையவர்களை வெறும் கைகளால் தடவியே குணப்படுத்தினார்கள்.
  • எல்லாவற்றையும் விட மிக பெரும் அற்புதமாக இறந்தவர்களை உயிர்பித்தார்கள்.

         நபி உஜைரை குறித்து பார்ப்போமேயானால், குர்-ஆனில் இந்த ஒரு வசனம் தவிர (9 30)  அறிந்த வரையில் வேறெங்கும் காணக்கிடைக்கவில்லை, அவர்கள் குறித்து சில ஹதிஸ்களே இருக்கிறது
குர்-ஆனின் விளக்கவுரை நூல்களில் ஒன்றான இப்னு கஸீர் நபி உஜைரை பற்றி பின்வருமாறு கூறுகிறது,
 (எஸ்ரா) கி.மு. 487 வாக்கில் யூதர்களிடையே வாழ்ந்த நல்ல மனிதர் ஒருவரின் பெயர். இவர் ஓர் இறைத்தூதாரா என்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடு உள்ளது. புக்த்தநஸ்ஸர் (நெபுகாட்நேஸர்- கி.மு 561) ஜெருசலத்தைக் கைப்பற்றி (கி.மு 568) அழித்தப்பின், தவ்ராத் (தோரா) வேதப் பிரதிகள் அனைத்தும் காணாமல் அல்லது அழிந்து போய்விட்டன.அப்போது உஸைர் (அலை) அவர்கள் தமது நினைவில் இருந்த தவ்ராத்தை எழுதினார்கள். இதனால் யூதர்கள் உஸைரை நபி மூஸா (அலை) அவர்களுக்கு இணையானவராகக் கருதினார்கள்.
 இவர்களை இறைத்தூதராகவே கருத்தில் கொண்டே நாம் பார்ப்போம்

  • உஜைர் நபி அவர்கள் தவ்ராவை மீண்டும் மக்கள் மத்தியில் எடுத்தியம்பினார்கள்
  • மக்கள் மூஸா அலை அவர்களுக்கு இணையாக கருதியிருந்தனர்.

       ஆக நபி ஈஸாவை போல "அற்புத செயல்கள்" என்ற பிரத்தியேக பண்புகளால் நபி உஜைர் அவர்கள் தன்னை இனங்காட்டவில்லை.
மாறாக மேற்குறிப்பிட்ட சம்பவத்தின் மூலமே அச்சமுக மக்களுக்கு மத்தியில் நன்கு பரிச்சயம் ஆனார்கள்.ஆக இவ்விரு இறைத்தூதர்களின் வாழ்வியல் நிகழ்வுகளை வைத்து ஒப்பு நோக்கும் போது நபி ஈஸா போன்று அசாதாரண செயல்கள் (ஒன்றுக்கூட) உஜைர் நபி புரியவில்லை என்பது தெளிவு!. எனவே அவர்கள் கடவுளின் மகன் என்றழைக்கப்படுவதற்கு நிரந்தர வாய்ப்புகள் குறைவு அதாவது,
    இறைவனின் வேதத்தை நினைவில் நிறுத்தி அதை புரனமைப்பு செய்ததே அவர்களின் பிரதான செயல். இச்செயலை அஃது சாதாரண மனிதரால் செய்ய இயலாது எண்றெண்ணியே இதை தெய்வீக செயலாக அங்கிகரித்து அம்மக்கள் அவர்களுக்கு ஒரு தெய்வீக அந்தஸ்தை கொடுத்து அவர்களை கடவுளின் மகன் என்றழைக்கலாயினர்.,ஆக இவர்கள் ஒரு குறிப்பிட்ட இட, சமுக சூழ்நிலையில் மட்டுமே மேற்கண்ட நிகழ்வை செயல்படுத்தி அம்மக்களிடையே வாழ்ந்ததால் அற்புத மிகுதியால் தன்னை நிலை நிறுத்திய நபி ஈஸாவைப்போல கடவுளின் மகன் என்ற தொடர் அந்தஸ்தை அக்காலம் தாண்டி அவர்கள் பெறவில்லை... ஆக இங்கு வரலாற்றுப் பிழைக்கோ /புரட்டுக்கோ வேலையே இல்லை.,
      இதையும் தாண்டி தங்களது திரி(பு)த்துவ வாதத்தை முன்னிருத்தி எந்த யூதருமே..... நபி உஜைரை கடவுளின் மகனாக கூறவில்லையென்று மீண்டும் முரண்பாட்டு அறிவை முன்னிருத்தினால்....அதற்கு அடுத்த வசனமே அவர்களுக்கு பதில் சொல்ல காத்திருக்கிறது...இல்லை இல்லை அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறது
அத்தவ்பா அத்தியாயம் 9 வசனம் 31 ல் அல்லாஹ் 
அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; 
   இங்கு கிறித்துவர்கள் நபி ஈஸாவோடு சேர்த்து பாதிரிகளையும், சந்நியாசிகளையும் கடவுள்களாக ஆக்கிக்கொண்டதாக குர்-ஆன் கூறுகிறது. ஆனால் எந்த கிறித்துவரும் எந்த பாதிரிகளையும் சந்நியாசிகளையும் இன்று கடவுளாக கொள்ளவில்லை., உஜைர் நபி குறித்து விழி அகல வரலாற்றைத் தோண்டியவர்கள்., இந்த வசனம் பொய்யுரைக்கிறது என தற்கால ஓப்பிட்டில் திறம்பட கூறலாமே.. போலி சிந்தனை இவ்வசனம் குறித்து சிறிதும் வாய் திறக்காதது ஏன்..?
விளக்கம் வேண்டுமானால் தெளிவாக இருக்கிறது
மேற்கூறிய உஜைர் நபி குறித்த அதே பார்வை தான் இங்கேயும்., ஒரு குறிப்பிட்ட இட மற்றும் சமுக சூழ்நிலையில் வாழ்ந்த கிறித்துவர்கள் அஃது அந்த தருணத்தில் மேற்கூறிவர்களை கடவுளாக கொண்டனர் என்பதே மிக்க பொருத்தும்... சரி இருக்கட்டும் இன்றும் நபி ஈஸாவை கடவுளின் மகனல்ல நபி முஹம்மதைப் போல அவரும் கடவுளின் தூதர் என குர்-ஆன் கூறுவதை நம்பும் கிறித்துவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...?
அவர்களின் கூற்று குர்-ஆனுக்கு ஆதாரமாக இருக்கிறதா....அல்லது கிறித்துவ கொள்கைக்கு மாற்றமா இருக்கிறதா? அவர்களை எந்த பட்டியலில் சேர்க்கிறது  உலகாதாய அறிவு...உஜைர் நபி குறித்து உரத்து கூறியவர்கள்,,,, மேற்கண்ட வினாக்களுக்கும் விடையளிக்கட்டும்...ஆங்கில எண்ணங்களுக்கு தங்கள் தளங்களில் எழுத்து வர்ணம் பூசுவோர்., ஒரு கணம் எழுத்தோடு சேர்த்து சிந்தனையும் விதைக்க முற்படட்டும்...  
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். ((9 32))
                                                                                  அல்லாஹ் மிக்க அறிந்தவன்


Wednesday, May 25, 2011

கிருத்துவ மிஷனரிகளை திணறடித்தவர்....

12 கருத்துக்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்

அஹ்மத் தீதத் அவர்கள், 

  • ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரணம்
  • ஒரு முஸ்லிமின் மன உறுதிக்கு எடுத்துக்காட்டு
  • எண்ணற்றவர்களை தாவாஹ்  பணிக்கு அழைத்து வந்தவர்
  • எண்ணற்றவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வந்தவர் 
  • கிருத்துவ மிசனரிகளை எப்படி எதிர்க்கொள்வது என்று கற்றுத் தந்தவர்களில் ஒருவர்.
  • தென் ஆப்பிரிக்காவில் ஒரு வலிமையான, நேர்த்தியான இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்.

அஹ்மத் தீதத் (Ahmed Deedat, 1918-2005) அவர்கள் இந்தியாவில் பிறந்தவர், தென் ஆப்ரிக்காவில் வளர்ந்தவர். IPCI (Islamic Propagation Centre International, Durban, South Africa) யை நிறுவியவர். 

1980-1996 இடையேயான காலக்கட்டம் இவரது தாவாஹ் பணியில் முக்கியமானது. இந்த காலக்கட்டத்தில் தான் தீதத் அவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல பிரபல கிருத்துவ மிசனரிகளுடன் பல்வேறு தலைப்புகளில் விவாதம் மேற்கொண்டு அவர்களை திணறடித்தார். ஒவ்வொரு விவாதமும் நம் அறிவுக்கு உணவு, ஒவ்வொரு கேள்வியும் கூர்மை.          

இன்றளவும் இவரது நூல்கள் மற்றும் விவாத வீடியோக்கள் உலகளாவிய முஸ்லிம்களுக்கு கிருத்துவ மிசனரிகளை எதிர்க்கொள்ள உதவுகிறது. இன்றளவும் இவரது நூல்களை படித்து பைபிளை பற்றி அறிந்துகொண்டு, இஸ்லாமை படிக்கத் துவங்கியவர்கள் பலர்.


இன்றளவும் இஸ்லாத்திற்கு வரும் கிருத்துவர்களில் பலர், தாங்கள் அஹ்மத் தீதத் அவர்களின் நூல்களை/வீடியோக்களை படித்ததாலேயே/பார்த்ததாலேயே பைபிளின் மற்றொரு பக்கத்தை பற்றி அறிந்து கொண்டோம் என்றும், இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள ஆர்வப்பட்டோம் என்றும்  கூறுவதை பார்க்கலாம்.          

இங்கு அவரது சில விவாதங்களில் இருந்து சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ்...    


1. Ahmed Deedat and Tele-Evangelist Jimmy Swaggard, at University of Louisiana USA, November 1986.
Debate Title: Is the Bible God's Word?

அமெரிக்காவின் லூசியானா பல்கலைகழகத்தில் ஜிம்மி ஸ்வாகர்ட் (Jimmy Swagard) அவர்களுடன் அஹ்மத் தீதத் அவர்கள் கலந்து கொண்ட விவாதம் சுவாரசியமானது. ஜிம்மி ஸ்வாகர்ட், அன்றைய காலத்தில் அமெரிக்காவில் மிகப்  பிரபலமானவர். தொலைக்காட்சியில் தோன்றி கிருத்துவத்தை போதித்து வந்தவர் (Tele Evangelist).  

விவாதத்தின் நடுவே ஜிம்மி ஸ்வாகார்ட் அவர்கள் பின்வருமாறு கூறினார்,

"நான் இந்த விவாதம் ஆரம்பிக்கும் முன் அஹ்மத் தீதத் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன், அப்போது அவரிடம் கூறினேன், மிஸ்டர் தீதத் உங்கள் மதம் நிறைய பெண்களை மணமுடிக்க உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது என்று, அப்போது தீதத் அவர்கள் குறுக்கிட்டு நான்கு வரை மட்டுமே என்றார். 


நான் கூறினேன், பாருங்கள் தீதத் உங்கள் மதம் நான்கு பெண் வரை மணமுடிக்க உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது, ஆனால் எங்கள் மதம் எனக்கு ஒரு பெண்ணை(?) மட்டுமே மணமுடிக்க அனுமதி அளிக்கிறது, அதனால் நான் முதல் தடவையே சிறந்த பெண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்" 

இதை அவர் சொல்லி முடித்தவுடன் அரங்கத்தில் பலத்த கைதட்டல்கள். ஜிம்மி ஸ்வாகர்ட், வசீகரமாக பேசக்கூடியவர், அதனாலேயே அவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமிருந்தது. 

இந்த விவாதம் நடந்த முடிந்த சில மாதத்தில் ஜிம்மி ஸ்வாகர்ட் ஒரு விபச்சார வழக்கில் சிக்கினார். வாரம் ஒருமுறை விலைமாதரிடம் சென்று வந்திருக்கிறார் அவர். அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய சம்பவம் அது. ஒரே நாளில் அவரது செல்வாக்கு சரிந்து விட்டது. 

இந்த சம்பவத்தை பிறிதொரு விவாதத்தில் குறிப்பிட்ட தீதத் அவர்கள் 

"அன்று ஜிம்மி ஸ்வாகர்ட் என்னிடம்.....(இங்கு மேலே ஸ்வாகர்ட் பேசியதை போட்டுக்கொள்ளவும்)....என்று கூறினார். இப்போதுதான் தெரிகிறது, அவர் முதல் தடவையே தேர்ந்தெடுத்த பெண் அவருக்கு சிறந்தவளாக இல்லையென்று" 

இப்படி சொன்னதுதான் தாமதம். அரங்கம் முழுவதும் சிரிப்பொலி ... 

ஜிம்மி ஸ்வாகர்ட் அவர்களுடனான அதே விவாதத்தில் மற்றுமொரு சுவையான சம்பவம். அஹ்மத் தீதத் அவர்கள் ஒரு வலிமையான வாதத்தை முன்வைத்தார். அது, பைபிளின் சில பகுதிகள் ஆபாசம் நிறைந்ததாக இருக்கின்றது என்றும், அந்த பகுதிகளை ஒரு ஆண் தன் மனைவி முன்போ, சகோதரி முன்போ, மகள் முன்போ படிக்க முடியாது என்றும்

"இதோ என்னிடம் பைபிளின் அந்த பகுதிகள் (Ezekiel 23) இருக்கிறன, ஜிம்மி ஸ்வாகர்ட் இந்த மக்கள் கூட்டத்தின் முன் அதனை படித்து காட்டட்டும். நிச்சயமாக அவரால் முடியாது. யாராலும் முடியாது. ஏனென்றால் அவை அந்த அளவிற்கு மோசமானவை. அப்படி ஸ்வாகர்ட் படித்துவிட்டால் நூறு டாலர்கள் அவருக்கு" 

என்று தன்னிடம் இருந்த அந்த பகுதிகளின் நகல்களை ஸ்வாகர்ட் முன் நீட்டினார். ஸ்வாகர்ட், தீதத் அவர்களின் சவாலுக்கு விவாதத்தில் பதிலளிக்கவில்லை.

பின்னர் கேள்வி நேரத்தில் ஒரு நபர் அதே கேள்வியை முன்வைக்க, ஸ்வாகர்ட் அவர்களுக்கு தர்மசங்கடமாய் போயிற்று. சிறிது நேரம் அமைதி காத்தவர், பின்னர் எழுந்து வந்து அந்த பகுதிகளை படிக்க தயாரானார். ஆனால் அஹ்மத் தீதத் அவர்கள் கொடுத்த நகலை படிக்கவில்லை, சிறிது நேரம் அஹ்மத் தீதத் அவர்கள் கொடுத்த நகலை உற்று நோக்கியவர், பின்னர் என்ன நினைத்தாரோ தன்னுடைய பைபிளில் இருந்து படிக்க ஆரம்பித்தார்.

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும், தீதத் அவர்கள் கொடுத்தது சமீபத்தைய பைபிள் பதிப்பிலிருந்து (New International Version) எடுத்தது. அதனுடைய ஆங்கிலம் எளிமையாக இருக்கும், யாருக்கும் சட்டென புரிந்துவிடும்.

ஆனால் ஸ்வாகர்ட் அவர்கள் படித்ததோ பழைய ஆங்கிலம் கொண்ட கிங் ஜேம்ஸ் பதிப்பு (King James Version) அதனுடைய ஆங்கிலம் சட்டென புரியாது. தீதத் அவர்களும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, எதையாவது படிக்கட்டும், உண்மை மக்களுக்கு (சிறிதளவாவது) தெரிந்தால் போதும் என்று இருந்து விட்டார் போலும்.

இங்கு மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். எப்போதும் ஒரு வித வசீகரத்துடன் நிறுத்தி நிதானமாய் பைபிளை வாசிக்கும் ஸ்வாகர்ட் அவர்கள், அந்த பகுதியை வேகமாய் படித்தார், ஒருவித பதற்றத்திலேயே அந்த நேரத்தை கையாண்டார். படித்து முடித்தவுடன் நூறு டாலர்களை பெற்றுக்கொண்டு அதை அந்த அரங்கத்திற்கு வாடகை கட்ட தன்னாலான தொகை என்று கொடுத்துவிட்டார்.



அஹ்மத் தீதத் அவர்களுக்கும் மகிழ்ச்சி. பின்ன இருக்காதா என்ன, இது தானே அவர் எதிர்பார்த்தது... கிருத்துவ மக்கள் அதிக அளவில் குழுமி இருந்த அரங்கத்தில் அவர்களது ஆளை வைத்தே தன் காரியத்தை சாதித்து கொண்டாரே...                              


2. Ahmed Deedat and Pastor Stanley Sjoberg, at Stockholm Sweden, Oct 1991.
Debate Title: Is the Bible the true word of God? 

ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் (Stockholm), பாஸ்டர் ஸ்டான்லி சொபர்க் (Paster Stanley Sjoberg) அவர்களுடன் தீதத் அவர்கள் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இரண்டு விவாதங்களில் கலந்து கொண்டார். விவாதங்களில் தீதத் அவர்கள் பாஸ்டரை மிகுந்த தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார், அல்லது ஒருவழி பண்ணிவிட்டார் என்றே கூறலாம். பாஸ்டர் அவர்கள் தீதத் அவர்களின் வாதத்தால் மிகுந்த உணர்ச்சிவச  பட்டுவிட்டார்.

சர்ச்சில் நடந்த முதல் விவாதத்தில், ஆரம்பத்திலேயே தீதத் அவர்கள் பாஸ்டரிடம் பல பைபிள்களை காட்டி (Catholic Bible, Scofield Bible, Revised standard version (RSV) bible 1952 version, RSV bible 1971 version)

"தாங்கள் இதில் எது உண்மையான கடவுளின் வார்த்தை என்று சொல்லுகிறீர்களோ அதனை வைத்தே நான் விவாதத்தை தொடங்க விரும்புகிறேன்" என்று கூற,

பாஸ்டர் அவர்களோ இதற்கு தன் நேரத்தில் பதில் கூறுவதாக சொன்னார். ஆனால் அவருடைய நேரத்தில் பதில் கூறவே இல்லை. தீதத் அவர்கள் அந்த கேள்வியை கேட்டதற்கு காரணம், அவர் காட்டிய அனைத்து பைபிள்களும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டவை.

பின்பு, தீதத் அவர்கள் அவருடைய நேரத்தில்,

"பாஸ்டர் அவர்களை இப்போதே ஒரு சோதனைக்கு அழைக்கிறேன். இதோ என்னிடம் இரண்டு பைபிள்கள் உள்ளன, இரண்டும் RSV பைபிள்கள்தான். ஒன்று 1952 ஆம் ஆண்டு பதிப்பு, மற்றொன்று 1971 ஆம் ஆண்டு பதிப்பு. பாருங்கள் இரண்டையும்....இரண்டும் ஒன்றாக இருப்பது போல் தானே இருக்கிறது...ஆனால் இரண்டும் ஒன்றல்ல...



பாஸ்டர் அவர்களிடம் நான் இதில் ஒரு பைபிளை கொடுக்கிறேன்...

பாஸ்டர், நீங்கள் அந்த பைபிளில் Book of Isiah 37 யை பாருங்கள். என்னிடம் உள்ள மற்றொன்றிலிருந்து நான் படிக்கிறேன். நான் படிப்பது உங்களிடத்தில் உள்ள பைபிளில் அப்படியே இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் "



என்று ஆரம்பிக்க விவாதம் படு சுவாரசிய கட்டத்தை எட்டியது...

தீதத் அவர்கள் ஒரு RSV பதிப்பில் இருந்து படிக்க ஆரம்பிக்க, பாஸ்டர் ஸ்டான்லியும் அவரிடம் உள்ள பைபிளில் அதனை சரிப்பார்த்துக்கொண்டே வந்தார். எல்லாம் ஒரே மாதிரி தான் இருந்தன.

"எல்லாம் ஒரே மாதிரிதானே இருக்கின்றன?...நீங்கள் படிக்கின்ற Book of Isiah 37 அப்படியே தானே இருக்கிறது" என்று பாஸ்டர் கூற...

அஹ்மத் தீதத் அவர்கள் போட்டார் பாருங்கள் ஒரு போடு....

"ஆனால் மிஸ்டர் பாஸ்டர், நான் இவ்வளவு நேரம் தாங்கள் நினைத்து கொண்டிருப்பது போல் Book of Isiah 37 யை படிக்கவில்லை, நான் படித்து கொண்டிருந்தது Book of Kings "

என்று சொல்லி பாஸ்டரிடம் அதை காட்டினாரே  பார்க்கணும் , பாஸ்டர் அவர்கள் என்ன சொல்லுவது என்று தடுமாற, அரங்கமோ கைதட்டல்களால் அதிர்ந்தது.

                        
அதே விவாதத்தின் கேள்வி நேரத்தில், ஒரு சகோதரர் பாஸ்டர் ஸ்டான்லியிடம், பைபிளில், ஏசுவிடம் உண்மையான நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு கிருத்துவன் விஷம் குடித்தாலும் அவனுக்கு ஒன்றும் ஆகாது என்று இருப்பதாகவும் (Mark 16:18), தான் கையோடு விஷம் கொண்டு வந்திருப்பதாகவும், அதை பாஸ்டர் ஸ்டான்லி குடித்து ஏசுவின் மீதான தன் நம்பிக்கையை நிரூபித்து காட்டவேண்டும் என்று விஷம்(?) நிறைந்த ஒரு பாட்டிலை பாஸ்டர் முன் நீட்டினார்.  



அதை வாங்கிய ஸ்டான்லி அவர்கள்,  ஒரு டம்ளரில் அந்த திரவத்தை ஊற்றி,



"இதை ஊற்றும்போது உடம்பு சிறிது நடுங்குகிறது. ஆனால் நான் இதை குடிக்கப்போவதில்லை. இது நிச்சயமாக சாத்தானின் செயல், இந்த கேள்வியை கேட்ட மனிதரின் ரூபத்தில் நான் சாத்தானை காண்கிறேன். அதனால் நான் சாத்தானுக்கு கட்டுப்பட போவதில்லை"

என்று கூறி அந்த திரவத்தை குடிக்க மறுத்து விட்டார். இந்த சவாலின் போது மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டார் அவர். பார்வையாளர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்று நாம் எண்ணி பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.    


3. Ahmed Deedat and Dr.Anis Shorrosh, at Royal Albert Hall London, December 1985.
Debate Title: Is Jesus God?

பாலஸ்தீனத்தில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற கிருத்துவ மிசனரியான அனீஸ் ஷரோஷ் (Anis Shorrosh) அவர்கள் ஒருமுறை அஹ்மத் தீதத் அவர்களை விவாதத்திற்கு அழைத்தார். லண்டனின் பிரசித்தி பெற்ற ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடந்த இந்த விவாதம் பிரபலமானது.

ராயல் ஆல்பர்ட் ஹால் மிகப்  பெரியது. இருந்தும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர் வரை இடம் கிடைக்காததால் திரும்பி சென்றதாக விவாதம் துவங்கும் முன் அறிவிக்கப்பட்டது.

விவாதத்தின் தலைப்பு இதுதான் "ஏசு கிறிஸ்து கடவுளா?"

விவாதத்தின் நடுவில் அஹ்மத் தீதத் அவர்கள் மக்கள் கூட்டத்தை பார்த்து கேட்டார்,

"ஏசு, பைபிளில், நான் தான் கடவுள் என்னை வணங்குங்கள் என்று எப்போதாவது கூறி இருக்கிறாரா? அல்லது நானும் இறைவனும் ஒன்றுதான் என்றாவது கூறி இருக்கிறாரா?, இதற்கு இந்த கூட்டத்தில் உள்ள கிருத்துவர் யாராவது பைபிளில் இருந்து ஆதாரம் காட்ட முடியுமா" என்று கேட்க

கூட்டத்தில் இருந்து ஒரு குரல் "ஆம் இருக்கிறது, John 14 சொல்லுகிறது, I and My father are one"



இதை கேட்டவுடன் தீதத் அவர்களின் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு கிருத்துவ போதகர் "சரியாக சொல்லப்போனால் அது John 14:6" என்று கூற,

தீதத் அவர்கள் தன் பைபிள் அறிவை இங்கு காட்டினார் பாருங்கள்....

"நீங்கள் இருவருமே தவறு. அது John 14:6 அல்ல, அது John 10:30"

என்று கூறியது தான் தாமதம், பலத்த கைதட்டல்கள். பிறகு அந்த வசனத்திற்கு அற்புதமாக விளக்கமளித்தார். அவர் யாராவது இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று தான் சவால் விட்டிருக்கிறார்.

அந்த விவாதம் முழுவதும் அனீஸ் ஷரோஷ் அவர்களால் தீதத் அவர்களின் எந்த ஒரு கேள்விக்கும் சரிவர பதிலளிக்க முடியவில்லை.


4. Ahmed Deedat and Reverend Eric Bock, at Copenhagen Denmark, November 1991.
Debate Title: Is Jesus God?

டென்மார்க்கின் தலைநகரான கோபென்ஹேகனில் (Copenhagen), அஹ்மத் தீதத் அவர்களுக்கும் ரெவரண்ட் எரிக் போக் (Reverend Eric Bock) அவர்களுக்கும் இடையே விவாதம் நடைப்பெற்றது.

ஆனால் எரிக் அவர்கள் ஏசு கடவுள் என்பதை தன்னால் நிரூபிக்க முடியாது என்று கண்ணியமாக சொல்லிவிட்டார். தீதத் அவர்களும் எரிக் அவர்களது நேர்மையை பாராட்டுவதாகவும், எரிக் ஒரு உண்மையான கிருத்துவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

கேள்வி நேரத்தில் ஒரு வயதானவர் எரிக் அவர்களிடம்,பைபிளின் எந்த இடத்திலாவது, ஏசு, தான் கடவுளின் மகன் என்று கூறி இருக்கிறாரா என்று கேட்க, அதற்கு எரிக் அவர்கள் தன்னால் இந்த கேள்விக்கு பதிலளிக்க இயலவில்லை என்றும், இதற்கு பதிலளிக்க பார்வையாளர் கூட்டத்தில் இருந்த தன் நண்பரான ஒரு பாஸ்டரை உதவிக்கு அழைப்பதாகவும் கூறினார்.



அந்த பாஸ்டரும் பைபிளில் எந்த ஒரு இடத்திலும் ஏசு அப்படி கூறவில்லை என்று ஒப்புக்கொண்டார். பின்னர் எரிக் அவர்களும் பாஸ்டரும் சேர்ந்தே கேள்விகளுக்கு பதிலளித்தனர்.    

அஹ்மத் தீதத் அவர்களின் கேள்விகள் கூர்மையானவை, அவரால் நன்கு ஆராயப்பட்டவை. அதனால் அவரது எந்த ஒரு கேள்விக்கும் பதிலளிப்பது என்பது கிருத்துவ மிசனரிகளுக்கு எளிதானதல்ல. நான் இதுவரை கண்ட அவரது விவாதங்களில் கிருத்துவ மிசனரிகள் அவரது கேள்விகளுக்கு திருப்திகரமாக பதிலளித்ததாக எனக்கு நினைவில்லை.

அஹ்மத் தீதத் அவர்களின் கடைசி ஒன்பது ஆண்டுகள் சோதனையானவை. 1996 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்க பட்டார்.கண்களையும் தலையையும் தவிர வேறெதையும் அசைக்க முடியாத நிலை. பேசக்கூட முடியாது. இறைவனின் அவருக்கான கடைசி கட்ட சோதனை.

இங்குதான் அவர் தன் மன உறுதியை நமக்கு பாடமாக அளித்தார். அந்த ஒரு மன உறுதியை இறைவன் நமக்கும் அளிப்பானாக...ஆமின்.

ஆம்... அந்த ஒரு நிலையிலும் தன் தாவாஹ் பணியை தொடர்ந்தார். ரியாத்தில் கண்கள் மூலம் கருத்தை தெரிவிக்கும் கலையை கற்றார். அதன் மூலம் எண்ணற்றவர்களை தாவாஹ் பணியை மேற்க்கொள்ள உற்சாகப்படுத்தினார். அவரது துணைவியார்தான் அவரை கவனித்துக்கொண்டார். தீதத் அவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த காலங்களில் எந்த ஒரு வலியையோ வேதனையையோ உணரவில்லை என்று அவரது துணைவியார் தெரிவித்திருக்கிறார்கள்.எப்போதும் போல் உற்சாகமாகவே இருந்திருக்கிறார். அல்ஹம்துலில்லாஹ்....

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த எண்ணிய கிருத்துவ மிசனரிகள் தீதத் அவர்களை கிருத்துவத்திற்கு மாற்ற எடுத்த எந்த ஒரு முயற்சியும் பலனளிக்க வில்லை. ஒருமுறை ரெவரண்ட் நைடூ (Reverend Naidoo) அவர்கள் தீதத் அவர்களது வீட்டிற்கு சென்று, தன்னை பைபிளில் இருந்து ஒரு வாசகத்தை படிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், ஏசுவின் நாமத்தால் தான் அவரை குணமாக்குவதாகவும் கூறினார். ஆனால் தீதத் அவர்களோ, அவரிடம் (கண்கள் மூலமாக தகவலை தெரிவிக்கும் யுக்தியை கொண்டு) பைபிளின் ஒரு பகுதியை மேற்க்கோள் காட்டி, அதனை விளக்க முடியுமா? என்று கேட்க நைடூ அவர்கள் தீதத் அவர்களின் ஈமானைப் பார்த்து அதிர்ந்து விட்டார். பதிலேதும் சொல்லாமல் திரும்பி விட்டார்.

இப்படியாக படுக்கையிலும் அதே உற்சாகத்தை காட்டினார். இன்றளவும் அவர் துவங்கிய IPCI, தீதத் அவர்கள் விட்டுச் சென்ற பணியை சிறப்புற செய்து வருகிறது. சுப்ஹானல்லாஹ்...

அஹ்மத் தீதத் அவர்களை பற்றி பேசக்கூடிய பலரும் அவர் பின்னல் இருந்த இரு முக்கிய நல்லடியார்களை மறந்து விடுகிறார்கள். அவர்கள், அஹ்மத் தீதத் அவர்களின் இன்பத்திலும் துன்பத்திலும் கூடவே இருந்தவர்கள். தீதத் அவர்களின் நெருங்கிய தோழர்களான குலாம் உசேன் வாங்கர் மற்றும் தாகிர் ரசூல் தான் அவர்கள்.

இறைவன் நமக்கு என்ன சோதனை அளித்தாலும், அஹ்மத் தீதத் அவர்களுக்கும், அவரது தோழர்களுக்கும் கொடுத்தது போன்ற மன உறுதியையும் சேர்த்தே கொடுப்பானாக...ஆமின்..

அஹ்மத் தீதத் போன்று கிருத்துவ மிசனரிகளை வெற்றிகரமாக எதிர்க்கொண்டவர்களில் என்னைக் கவர்ந்த மற்றொருவர், கனடாவைச் சேர்ந்த டாக்டர். ஜமால் பதாவி (Dr.Jamal Badawi) அவர்கள். இன்ஷா அல்லாஹ், இறைவன் நல்ல உடல்நலத்தை கொடுத்தால் அவரைப்பற்றி மற்றுமொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்...      

இறைவன் நம் எல்லோருக்கும் என்றென்றும் இஸ்லாத்தில் நிலைத்திருக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக..ஆமின்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Official Website of IPCI:
1. Ahmed-deedat.co.za

Ahmed Deedat's Debate Videos and Other Lecture Videos can be Downloaded at: 
1.Truthway.tv

My Sincere thanks to:
1. IPCI, Durban, South Africa.
2. Truth Way Broadcasters.

References: 

1. Ahmed Deedat's debate with Tele Evagelist Jimmy Swaggard on the topic "Is the Bible the word of God?" at University of Louisiana, November 1986.
2. Ahmed Deedat's debate with Pastor Stanley Sjoberg on the topic "Is the Bible true word of God?" at stockholm Sweden, Oct, 1991.
3. Ahmed Deedat's debate with Dr.Anis Shorrosh on the topic "Is Jesus God?" at Royal Albert Hall London, December 1985.
4. Ahmed Deedat's debate with Pastor Eric Bock on the topic "Is Jesus God?" at Copenhagen Denmark, November 1991.
5. Ahmed Deedat - Wikipedia.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.

Sunday, May 15, 2011

போலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...

4 கருத்துக்கள்

                                        ஓரிறையின் நற்பெயரால்

இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க....
     ஜிஹாதுன்னா....? 
  பொதுமக்களையும்,அப்பாவிகளையும் கொல்வதற்கு பேருதாங்க ஜிஹாது..... இது உலக வலை விற்பனர்கள் முதல் உள்ளூர் ஊறுகாய் வியாபாரி வரைக்கும் அறியாமலே அறிந்ததாய் சொல்லும் ஒரு வாக்கியம்.... இந்த அடிப்படை தவறான வாக்கியத்திற்கு அடிப்படையில் இரண்டு காரணம்.,

  • இஸ்லாமியர்கள் ஊடகத்தை சரிவர பயன்படுத்தி கொள்ளவில்லை., 
  • ஊடகம் இஸ்லாமியர்களை தவறாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றது- அதிலும் குறிப்பாக சினிமாத்துறை மிக மோசமாக இஸ்லாமிய எதிர்ப்பை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது., அத்தகைய சினிமாவில் இஸ்லாம் நிலை குறித்தே இங்கு பதிவு.

சின்ன ப்ளாஸ்பேக்
 ப்ளாக் & ஒயிட் சினிமாக்களில் இஸ்லாமியர்
 "அரே பாய் சைத்தான் நிம்மளிக்கி ப்லிம் காட்ரான்... " என்று உண்மை இஸ்லாமியர்களுக்கு கூட (பேச) தெரியாத மொழியில் நீள்வட்ட தொப்பியுடன், கொஞ்சம் குறுந்தாடி கறைபடிந்த பற்கள் நீண்ட ஜிப்பா சகிதமாக கையில் குச்சியுடன் வட்டியை வசூல் பண்ணும் காட்சியில் தோன்றுவார்... அதுதான் அன்றைய இஸ்லாமியர் அறிமுகம்.,
    இடைப்பட்ட காலங்களில் ஒரு படி மேல போய்.... வீடுகள் முழுக்க காபா படங்கள்., பாங்கு சொல்லும் போதே.. தொழுது கொண்டிருப்பார் ., எப்போதும் தலையில் வலைத்தொப்பியுடன் உலவுவார், கழுத்தில் தட்டை வடிவ தாயத்து அதில் முன்புறம் வளர்பிறை அதன் மேலாக 786 என பொறிக்கப்பட்டிருக்கும் ( பார்த்தீர்களா இஸ்லாத்தை எவ்வளவு ஆழமாக உணர்ந்து எடுத்திருக்கிறார்கள்) பெரும்பாலும் சோக செய்திகள் இவரிடம் சொல்லப்படும் போது "யா அல்லா..."(ஹ்)... என உச்சஸ்த்தாயில் கத்தி பெருமூச்சுடன் முடிப்பார்.. ப்ளாஷ் பேக் ஓவர்

 நிகழ்கால சினிமாக்களில் இஸ்லாம்
 இந்த ஆக்கத்தின் மையக்கருவே இது தான்., சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் நான் பார்த்த ஒரு காட்சி
காட்சி -1
ஒரு நல்ல முஸ்லிம், தீவிரவாதியாக கருதப்பட்டு அடித்து செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அப்போது அங்கு குர்-ஆன் சகிதமாக நெற்றியில் தொழுதற்கான அடையாள தழும்புகளுடன், கண்டிப்பாக தாடியுடன் இருக்கும் கெட்ட முஸ்லிம் தீவிரவாதி சொல்கிறார்
"இந்த நாட்டில் இவ்வளவு நமக்குதான் மரியாதை.....
நல்ல முஸ்லிம் மிரட்சியுடன் பார்க்கிறார்...

மேலும் சில நிமிடங்கள் கழித்து
காட்சி -2
நாட்புறமும் குண்டுகள் சத்தம் முழங்க ஏந்திய துப்பாக்கியுடன் சக முஸ்லிம்தீவிரவாதிகள் அங்கு வருகின்றனர்
நல்ல முஸ்லிம் கேட்கிறார் என்ன...... செய்ய போறீங்க......
கெட்ட முஸ்லிம்  தீவிரவாதி தன் உடம்பில் "பாம்" கட்டிக்கொண்டே கூலாக சொல்கிறார்
இந்த நாட்டிற்கு நாம யாருன்னு காட்ட போறோம்....

காட்சி - 3
மருத்துவ மனை வளாகத்தில் தென்படுவோரை சுட்டுக்கொண்ட முன்னேற
நல்ல முஸ்லிம் ஹீரோவுடன் இணைந்து ஏனையோரை காப்பாற்ற முற்பட...
எதிரில் கெட்ட முஸ்லிம்  தீவிரவாதியும் வர
ஹீரோ கேட்கிறார்
எந்த கடவுள்டா மக்களை கொல்ல சொன்னீச்சு....
கெட்ட முஸ்லிம்  தீவிரவாதி
ஜிஹாத்...... ஜிஹாத்..... தொடர்ந்து இந்தியில் ஏதோ....சொல்ல
மீண்டும் கேட்கிறார் ஹீரோ
கடவுளை விடுங்க.. மனுஷங்களே பாருங்கடா...
ஜிஹாத்...... ஜிஹாத் 
மீண்டும் அதே உச்சரிப்பு கெட்ட முஸ்லிம்  தீவிரவாதியிடமிருந்து மேலும் இந்தியில் ஏதோ... சொல்லிக்கொண்ட ஹீரோவை நெருங்க.. உடல் முழுவதும் பாம் வேறு... ஹீரோ கட்டிப்பிடித்தவாறே கட்டிடத்திலிருந்து குதிக்க வழக்கம் போல் கெட்ட முஸ்லிம்  தீவிரவாதி சாக வழக்கத்திற்கு மாறாக ஹீரோவும் சாகிறார், இந்த கேப்ல... நல்ல முஸ்லிம் உருக்கமாக பேசுகிறார் அதைக்கேட்டு ஒரு கெட்ட முஸ்லிம்  தீவிரவாதி சுப்பாக்கியால் தன்னைதானே சுட்டு சூஸைடு வேறு...
????
    _______________________ X ____________________________

   இங்கு ஒரு விசயத்தை கண்டிப்பாக நாம் கவனிக்க வேண்டும் இஸ்லாத்திற்கு சம்பந்தமில்லாத செயல்களை வட்டிக்கு விடுதல், தகடு தாயத்து அணிதல் போன்றவற்றை செய்பவர்களை மீடியாவில் நல்ல முஸ்லிம்களாக காட்டப்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் செய்ய சொன்னதை செய்வர்களாக குர்-ஆன் ஓதுதல் தாடிவைத்தல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டவர்கள் மீடியாவில் தீவிரவாதிகளாக அறிமுகம்,,,
இந்த சினிமாத்துறை இஸ்லாத்தை பற்றியும் அறிந்திருக்கவில்லை., இஸ்லாமியர்களை பற்றியும் தெரிந்திருக்கவில்லை., ஆயுதபூஜைக்கு தனது பழைய TVS 50 க்கு புதிதாய் சந்தனமிடுபவர்களும், ஹோலி பண்டிகையில் எதையாவது போலியாய் எரிக்கும் முஸ்லிம்களுமே இவர்கள் பார்வையில் உண்மை முஸ்லிம்கள்.,
அட கேடுகெட்ட சினிமாத்துறையே.... இஸ்லாமியர்களை திருத்துவதாக சொல்லி இஸ்லாத்தில் இல்லாததை விமர்சிக்கிறாயே... உன் உலக அறிவை இஸ்லாமிய அறிவோடு பொருத்துவதை எப்படி மெச்சுவது..
ஜிஹாத்., -விளக்கம் கொடுத்து கொடுத்தே ஓய்து போனவர்கள் நம்மில் அனேகம்...
அல்லாஹ் குர்-ஆனில்
"நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" (அல்குர்-ஆன். 5:32)
       நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ 
எவரது நாவாலும், கரத்தாலும் ஏனையவர்களுக்கு தீங்கு ஏற்படவில்லையோ - அவரே உண்மை முஸ்லிம் ஆவார்

    இவ்வாறு அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் கூறியிருக்க இஸ்லாம் அங்கிகரிக்காத, அறுவெறுக்கும் ஒன்றை, தடைசெய்த, ஏற்க மறுத்த ஒன்றை, இஸ்லாத்தில் பெயரில் செய்வதாக திரிப்பது எவ்வளவு பெரிய கொடுமை.,

  • தனி மனித கொலையை., அங்கிகரிக்காத இஸ்லாம் எப்படி இறைவன் பெயரில் மக்களை கூட்டம் கூட்டமாக கொல்ல சொல்லும்., ?
  • தற்கொலை ஹராம்..( விலக்கப்பட்டது) அஃது தற்கொலை புரிவோருக்கு நரகம் என மார்க்கம் சொல்லும் போதும் தற்கொலை படை தாக்குதலை நடத்தவோரை சுவனப்பதியில் எப்படி இஸ்லாம் நுழைய செய்யும்..?

     இவையெல்லாம் பார்க்கும்போது திரைத்துறை ஊடங்களுக்கு சரியான இஸ்லாமிய புரிதல் இல்லையென்பதை காட்டிலும் இஸ்லாம் குறித்த அடிப்படை அறிவுக்கூட இல்லை., என்பதே உண்மை.,
                                            
                                                                             அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Sunday, May 8, 2011

வினவே..! யார் பயங்கரவாதி..? மாவோயிஸ்டா..? தலிபானா..? பதில் சொல்..!

0 கருத்துக்கள்
அவன் பாவம் வாய் பேச இயலாதவன் ஆனால், உழைப்பாளி பார்க்கவே பரிதாபமாக இருந்தான். அவன் பர்ஸில் சொற்பமாகவே இருந்தது பணம். பேருந்தில் ஏறிய அவன் அருகில் வந்து நின்றான் டிப்டாப் ஆசாமி ஒருவன்.கண்களில் கூலிங் கிளாஸ், கழுத்தில் மைனர் செயின் என பந்தாவான தோற்றம். ஆனால் அவன் செய்த காரியம்?

பேருந்தின் நெரிசல் வசதியாக இருக்க அந்த வாய் பேச இயலாத ஏழையின் பேன்ட் பாக்கெட்டுக்குள் இருந்த பர்ஸை அபேஸ் பண்ணிக் கொண்டு இறங்கி ஓடினான் டிப்டாப் ஆசாமி. சுதாரித்த ஏழை, தன் பர்ஸை மீட்கத் துரத்தி,டிப்டாப்பின் சட்டையைக் கொத்தாகப் பிடிக்க இருவருக்கும் சண்டை.கூட்டம் கூடிவிட்டது.

சட்டென டிப்டாப் தனது பர்ஸை அந்த ஏழை திருடிவிட்டதாக உண்மையைத் தலைகீழாகப் புரட்டிப் போட, மொத்தக் கூட்டமும் அந்தப் பரிதாபத்துக்குரிய வாய் பேச இயலாதவனைச் சாத்துகிறது. பாவம், அவனால் உண்மையைச் சொல்லவும் வழியில்லை. சொன்னாலும், அது எடுபாடாது. ஏனென்றால்,அவனது தோற்றம் அப்படி. பொது ஜனங்களைப் பொறுத்தவரை,ஏழைதான் திருடுவான்.

இந்த தருணத்தில் பேருந்திலிருந்து இறங்கிய மூன்றாவது நபர் ஒருவர் அங்கே வருகிறார். அவருக்கு உண்மை தெரியும்.

இப்போது சொல்லுங்கள்... அவர் மூன்றாவது மனிதர் என்ன செய்ய வேண்டும்?

யார் குற்றவாளி என்ற உண்மையை ஊருக்கு உலகுக்குச் சொல்லி, அந்த ஏழையைக் காப்பாற்றி டிப்டாப திருடனை அடையாளம் காட்ட வேண்டியது, அவரது கடமையல்லவா?

ஆனால அந்த நபர் வருகிறார் அடிவாங்கி கிழிந்த சட்டையின் ஒட்டை வழியாக அந்த உள்பனியனை பார்க்கிறார். ஆ பச்ச பனியன் உள்ளே அல்லாஹு அக்பர் என்று எழுதியிருக்கிறது. இவருக்கு முகம் சிவக்கிறது செவப்பு பனியன் போட்டு அதில் செவ்வணக்கம் என்று அல்லவா இருக்க வேண்டும்? அவர் எதிர்பார்த்தது இல்லை எண்டா இப்படி திருடுறா சார் இவனா அடியுங்க சார் என்கிறார்

இது புனைவாக இருந்தாலும் சுடும் உண்மை


டிப்டாப் ஆசாமி அமெரிக்க வல்லாதிக்க வெறியர்கள் காய்ந்த ரொட்டிகளை தின்று கொண்டு மண் வீடுகளில் வசிக்கின்ற ஆப்கானியர்களின் வீட்டில் புகுந்து திருடுகிறான் கொல்லுகிறான் ஊடக பலமில்லாத உமையர்களான ஆப்கானியர்களின் வீட்டில் நடக்கும் எழவு வீட்டு ஒப்பாரி வெளியே கேட்பதில்லை.
தொடர்ந்து வாசிக்க......


Tuesday, April 26, 2011

கடவுளும்- நாமும்

1 கருத்துக்கள்
 ஓரிறையின் நற்பெயரால்
கடவுளோடு தொடர்பு பொதுவாக மக்களுக்கு இரண்டு விதத்தில் இருக்கிறது
1.நாத்திக சிந்தனை
கடவுள் Vs நாம்
2.ஆத்திக சிந்தனை
கடவுளுக்காக நாம்
   இதில் முதலாவது சிந்தனை முற்றிலும் கடவுளை மறுக்க அனைத்து வழிகளையும் ஆராய்கிறது., அது கடவுள் மறுப்பாளர்களின் எதிர்ப்பாளர்களால் அவ்வபோது மறுக்கப்படுகிறது., எனினும் இது தர்க்க ரீதியான வெற்றியே தான் கடவுளை ஆதரிப்பவர்களுக்கு கொடுக்குமே தவிர நாத்திகவாதிகளின் மனதில் பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தாது.,
 நாத்திக சிந்தனை அடியோடு ஒழிய வேண்டுமானால் அதற்கு எதிராக இருக்கும் ஆத்திக சிந்தனை முழு அளவில் வெளிபட பெற வேண்டும். ஆதாவது இறைவனை பின்பற்றுவோரது வாழ்வியல் ரீதியான வழிமுறைகள் மிக சரியாக, எப்போதும் நிலையாக இருக்கவேண்டும்.
 எனினும் ஆத்திக சிந்தனையென வரும்போது இரண்டு விதத்தில் வித்தியாசப்படுகிறது
1.அனைத்தும் கடவுள்
2.அனைத்தும் கடவுளுடையது
 முதாலாவது, ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் என்ற அடிப்படையில் கடவுளை ஏற்பது -இது இஸ்லாம் தவிர ஏனைய அனைத்து மதங்களும் பின்பற்றும் வழிமுறை,
இரண்டாவது, ஒரே இறைவனே இவ்வுலகம் அனைத்தையும் படைத்து அதில் உள்ள யாவற்றையும் படைத்தாக ஏற்றுக்கொள்வது இஸ்லாம் கூறும் கடவுட்கொள்கை.
ஆக., நாத்திக சிந்தனையின் பிரதான கேள்விகளுக்கு "அனைத்தும் கடவுள்" என்ற ஆத்திக கொள்கையால் பதில் தர இயலாது.ஆக அதுவல்லாத "இஸ்லாம் கூறும் கடவுட்கோட்பாடுகளாலும் அதன் கூறும் வாழ்வியல் வழிமுறைகளாலும் மட்டுமே நாத்திக சிந்தனைக்கு போதுமான பதில் தர முடியும். எனினும் கோட்பாடுகளை முன்னிருத்தி போதுமான பதில் தரப்படினும் அடுத்து அவர்களிடம் முளைக்கும் கேள்வி அத்தகைய கோட்பாடுகளின் (அதன்)படி எத்தனை இஸ்லாமியர்கள் நடக்கிறார்கள்...? என்பதே..



இக்கேள்விக்கு பதில் தரும் முகமே இக்கட்டுரையின் நோக்கம்....
   அல்லாஹ் தன் திருமறையில் மனித வாழ்விற்கு தேவையான அனைத்து ஏவல்கள்- விலக்கல்களை மிக தெளிவாக இந்த மனித சமுகத்திற்கு ஏற்படுத்தி அதனை இறுதி நாள் வரை வரக்கூடிய மக்கள் யாவரும் பின்பற்ற சாத்தியமாக அச்செயல்களை எடுத்து செயல்படுத்துவதற்கு மனிதர்களுடையே ஓர் தூதரை ஏற்படுத்தி தந்தான். அந்த தூதரும் மிக சரியாக தெளிவாக அனைத்து செயல் முறைகளையும் செய்ததோடு அதனை செய்வதற்கும் ஏதுவாக ஏனைய விஷயங்களையும் இந்த மனித சமுகத்திர்கு தெளிவாக வலியுறுத்தினார்கள்.,
 ஆக இறை கட்டளைகளை (இறைவனின் நாட்டப்படி) எல்லோராலும் எல்லா காலக்கட்டங்களிலும் பின்பற்ற முடியும் என்பது நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் வாயிலாக நாம் எளிதாக அறிந்திடலாம். அவர்கள் பிரத்தியேக பண்புகளுடன் இறைவன் பால் அனுப்பட்ட தூதராக இருந்தாலும் அவர்கள் மக்களிடையே மக்களாக வாழ்ந்ததை கண்டுதான் அச்சமுக இறை நிராகரிப்பாளர்கள்
"நீர் உண்மையாளரில் ஒருவராக இருப்பின் நீர் எங்களிடத்தில் மலக்குகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா?" (என்றும் கூறுகின்றனர்.) (15:07)
மேலும் அவர்கள் கூறுகிறார்கள்;
"இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார் கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா?" (25:07)
இதற்கு பதில் தரும் விதமாக இறைவன்
(நபியே!) நீர் சொல்வீராக "நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது...(18:110)

         ஆக மனிதர்கள் யாவரும் எக்காலத்திற்கும் பின்பற்ற தகுந்த வாழ்வியல் நெறிமுறைகள் எண்ணிடங்காமல் நபிகள் நாயகம் மூலம் மிக தெளிவாக நம்மை வந்தடைகிறது எனவே தான் வல்லோன் அல்லாஹ் தன் வான்மறையில் அன்னாரைக்குறித்து
  அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (33:21)
 ஆக நம்மால் அந்த வழிமுறைகளில் எந்த ஒன்றையும் பின்பற்ற முடியாது என நம் வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் சொல்ல முடியாது. அஃது சொன்னால் அது நமது சுய நலத்திற்காக ஏற்படுத்திய திரிபு வாதம் அல்லது அல்லாஹ் மீது பயமின்மை.
நம்முடைய வாழ்வு தற்காலத்தில் எந்த அளவிற்கு அமைந்திருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் பாருங்கள்...
அல்லாஹ் தொழுகை குறித்து கூறும் போது
... நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்... (29:45)
ஆக தொழுகையே சரிவர பேணும்போது அது வீணான தீயச்செயல்கள் மற்றும் மானக்கேடானவற்றை விட்டும் நம்மை காக்கும் என்பது குர்-ஆன் அளிக்கும் வாக்குறுதி. எனினும் தொழுவோரில் பலர் வீணான காரியங்கள் செய்கிறார்கள் என்பதும் உண்மை. எனும்போது குர்-ஆன் பொய்யுரைக்கிறதா? இல்லவே இல்லை... தொழும் அத்தொழுகை ஒரு முழுமையான தொழுகையாக அவர்களிடத்தில் இல்லை... ஏதோ கடமைக்காக தொழுகிறோம் என்பதே உண்மை. அதைப்போலவே நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற ஏனைய நல்லறங்கள் செய்து கொண்டும் புகைப்பிடித்தல், குடி, பொய், புறம் பேசுதல், அடுத்தவர்களின் உரிமையே பறிப்பது, வாக்குறுதி நிறைவேற்றாமை, அமானிதங்களை அபகரிப்பது,  வட்டி வாங்குவது போன்ற இழி செயல்கள் புரிவது.,
  இதையெல்லாம் புரிவது மார்க்கத்தை சரிவர புரிந்துகொள்ளா முஸ்லிம்கள் என்ற போதிலும் இதைப்போன்ற செயல்களை பார்ப்போருக்கு இஸ்லாம் மீதே காழ்புணர்ச்சி ஏற்படுகிறது என்பது உண்மை.ஆக வெறுமனே., பெயர் தாங்கி முஸ்லிம்களாக வாழாமல் அஃது அல்லாஹ்வும் அவன் தூதரும் பொருந்திக்கொளும் விதம் இவ்வுலக வாழ்வை அமைத்து கொண்டு ஏனையோருக்கும் ஒரு முன்மாதிரி சமுகமாக வாழ்வது நம் அனைவர் மீதும் தார்மீக கடமையாக இருக்கிறது. ஏனெனில்
அல்லாஹ் தன் வான் மறையில்
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? (2:44)
  என பெயர் தாங்கி முஸ்லிம்களை சாடுகிறான்.
  பொதுவாக, எதிரில் வரையப்பட்டிருக்கும் ஒரு கோட்டினை நாம் சிறிதாக்க வேண்டுமெனில் நமது கோட்டை அதைக்காட்டிலும் சற்று பெரிதாக வரைந்தாலே போதும்.. அக்கோடு தானாகவே சிறிதாகி விடும். அதுப்போல நாத்திகம் என்பதை இல்லாமல் ஆக்க தூய இஸ்லாமிய சிந்தனைகளை இவ்வுலகத்திற்கு எடுத்து இயம்புவதோடு மட்டுமில்லாமல் செயல் முறை ரீதியாகவும் உணர்த்தினாலே போதும். நாத்திகம் இஸ்லாத்தின் காலடியில் நசுங்கி போகும். அல்லாஹ் அத்தகைய நல்ல பாக்கியத்தை உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வானாக...
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். (03:102)
                                                                    அல்லாஹ் மிக்க அறிந்தவன்