Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Monday, June 11, 2012

திருமணம் 'கட்டாயக்கடமை' இல்லையா...?

4 கருத்துக்கள்
பள்ளிப்படிப்பில் குறிப்பாக தமிழ் செய்யுட்பகுதிகளில் துறவறம் குறித்து சற்று உயர்வாகத்தான் கூறப்பட்டிருந்தது..! மேலும், மணம்  செய்து 'இல்லறம்'புரிந்து வாழ்வது குறித்து கூறப்படும்போது 'சிற்றின்பம்' என்றும், எப்போதும் இறைசிந்தையில் திளைத்து விடுவதாக சொல்லிக்கொண்டு,  காவிபூண்டு தம் வாழ்வில் 'துறவறம்' பூண்டு வாழ்தல்  'பேரின்பம்' என்றும் வகைப்படுத்தி வைத்திருப்பர்..! 
.
இதில் நாம் கவனிக்க வேண்டியது... 'துறவி'யாக வாழ்தல் 'அறம்' என்று அறிவுறுத்தப்படுகிறது..! நடைமுறைக்கு ஒவ்வாத... பயிற்றுவிப்பவரே தம் வாழிவில் வெறுக்கக்கூடிய ஒன்று எப்படி நல்லறமாகும்..? 'சிறுமையும்.. பெருமையும் அதெப்படி ஒரே தரநிலையில் 'அறம்' என்றாக முடியும்..?' இது தவறான கல்வி அல்லவா..? ஆகவே... "இல்லறமே நல்லறம்..!" "துறவு என்பது ஓர் அறமே அல்ல..!" இப்படி புரிதலே சரியான புரிதல் அல்லவா..?

Monday, October 24, 2011

சர்தார்ஜிக்களை விட்டுருவோமே...ப்ளீஸ்

15 கருத்துக்கள்


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

சர்தார்ஜி ஜோக்குகள் - இன்றைய காலக்கட்டத்தில் இவை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை தந்தாலும், பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் இன்றும் இம்மாதிரியான நகைச்சுவைகள் வந்துக்கொண்டு தான் இருக்கின்றன. ஆகையால், நமக்கெல்லாம் ஒரு நினைவூட்டலாக இந்த பதிவு. 

நம்மில்  பலரும் அறியாமையால் தான் இன்றும் சர்தார்ஜி நகைச்சுவைகளை பகிர்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.  அதாவது இது தவறென்று தெரியாமலேயே.

இதனை பகிர்பவர்கள் இதன் பின்னணியை அறிந்திருக்கின்றார்களா என்று தெரியவில்லை.  வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி, பதினெட்டாம் நூற்றாண்டில் நாதிர் ஸா மன்னனின் படைகளிடம் இருந்து பெண்களை காக்க நள்ளிரவு நேரத்தில் கொரில்லா யுத்தம் செய்து பெண்களை விடுதலை செய்வனராம் சீக்கியர்கள். அவர்கள் குறைந்த அளவில் இருந்ததே இந்த நள்ளிரவு தாக்குதலுக்கு காரணம். ஆனால் இன்றோ இந்த வரலாற்றை அறியாத நம்மவர்கள் சீக்கியர்களை வைத்தே '12 மணி' ஜோக்குகள் என்று ஒன்றை உருவாக்கி அவர்களை கேலி செய்துக்கொண்டிருக்கின்றார்கள். 

அதுமட்டுமல்லாமல், சீக்கியர்கள் மீதான ஈகோவும் இம்மாதிரியான நகைச்சுவைகள் தோன்ற காரணமாக இருந்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

சரி போகட்டும். இஸ்லாமிய பார்வையில் சர்தார் நகைச்சுவைகளை எப்படி கையாள்வது. இது சரியா??

"எல்லா மனிதர்களும் ஆதாம், ஏவாள்லிருந்தே வந்தனர். ஒரு அரபி, அரபி அல்லாதவரை காட்டிலும் உயர்ந்தவரல்ல. அதுபோலவே ஒரு அரபி அல்லாதவர், அரபியரை விட உயர்ந்தவரல்ல. மேலும், வெள்ளையர் கருப்பரை விடவோ அல்லது கறுப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரல்ல" - நாயகம் (ஸல்) அவர்கள், தன்னுடைய இறுதி பேருரையில்..

எல்லா இனத்தவரும் சமம் என்று இஸ்லாம் கூறுகின்றது. சீக்கியர்களின் அறிவுத்திறனை பகடி செய்தே சர்தார்ஜி நகைச்சுவைகள் வருகின்றன. இன்னொரு இனத்தவரை நம்மை விட அறிவுத்திறனில் தாழ்ந்தவராக எண்ணுவது இஸ்லாம் நமக்கு வகுத்த தந்த பாதையல்ல. அப்படியிருக்க எப்படி ஒரு முஸ்லிமால் இன்னொரு இனத்தவரை கேலி செய்ய முடியும்?

அதுமட்டுமல்லாமல், நமக்கு என்ன விரும்புகின்றோமோ அதனையே அடுத்தவருக்கும் விரும்ப சொல்கின்றது இஸ்லாம். தமிழ் என்னும் நம் இனம், அறிவுத்திறனில் தாழ்ந்த இனமாக கருதப்பட்டு கேலிச் செய்யப்படுவதை நாம் விரும்ப மாட்டோம். பிறகு எப்படி நமக்கு விரும்பாத ஒன்றை அடுத்தவருக்கு செய்துக்கொண்டிருக்கின்றோம்? 

நான்  முன்னமே சொன்னது போன்று சர்தார்ஜி நகைச்சுவைகளை பலரும் அறியாமையால் தான் பகிர்ந்து வருகின்றனர். சும்மா நகைச்சுவைக்காக தானே என்று நினைத்து தான் பகிர்ந்து வருகின்றனர். நகைச்சுவை என்ற காரணத்தை சொல்லி ஒரு இனத்தையே கேலிக்குள்ளாக்குவது ஏற்புடையதா? 

அறியாமல் செய்த காலங்கள் போகட்டும். இனியும் நாம் இதனை தொடர்ந்தால் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்பதை நினைவில் கொண்டு இந்த செய்கைகளை கைவிடுவோம். சர்தார் நகைச்சுவைகளை பகிர மாட்டோம் என்று உறுதிக்கொள்வோம். இன்ஷா அல்லாஹ்.

இறைவன்  நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே  எல்லாம் அறிந்தவன்.

Reference: 
1. Sardarji jokes - wikipedia. link

வஸ்ஸலாம், 

உங்கள் சகோதரன்,
ஆஷிக்  அஹமத் அ  

Saturday, September 10, 2011

அமெரிக்க முஸ்லிம்கள் - ஆய்வு தகவல்கள்

13 கருத்துக்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா? 
இது, பிரபல காலப் (Gallup poll) நிறுவனத்தால் 2009-ஆம் வருடம் அமெரிக்க முஸ்லிம்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று. 

இதற்கான பதில் -

ஆம் - 80%

முஸ்லிம் அமெரிக்கர்களில் பத்தில் எட்டு பேர் இஸ்லாம் தங்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர்.   

காலப் நிறுவனத்தின் அமெரிக்க முஸ்லிம்கள் குறித்த இந்த ஆய்வறிக்கை கவனிக்கத்தக்க பல தகவல்களை நமக்கு தருகின்றது. அவற்றில் சில உங்கள் பார்வைக்காக....

1. இனப் பின்னணி: 

அமெரிக்க முஸ்லிம்கள் பல்வேறு இனப் பின்னணியை கொண்டவர்களாக இருக்கின்றனர். அமெரிக்காவில்,  ஒரு மார்க்கம் பலவித இன மக்களால் அதிகம் பின்பற்றபடுகிறதென்றால் (Most Racially Diverse Religious Group) அது இஸ்லாம் தான்.

அமெரிக்க முஸ்லிம்களில் 35% பேர் கறுப்பின மக்கள் (African Americans). இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தை தழுவியவர்கள் அல்லது தழுவியவர்களின் வாரிசுகள்.

28% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை வெள்ளையர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்.

அமெரிக்க முஸ்லிம்களில் ஐந்தில் ஒருவர் ஆசியர். சுமார் 18% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை எந்தவொரு இனத்தோடும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

கடைசியாக, சுமார் 1% அமெரிக்க முஸ்லிம்கள் தங்களை ஹிஸ்பானிக் (Hispanic - Spanish speaking people/ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள்) என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்..


2. தினசரி வாழ்வில் இஸ்லாம்:

முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் பெரும் பங்காற்றுகிறது. இதற்கு அமெரிக்க முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.

சுமார் 80% அமெரிக்க முஸ்லிம்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம்.


இன்னும் சற்று விரிவாக கூற வேண்டுமென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் பெண்கள் 82% பேரும், ஆண்கள் 78% பேரும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.

இங்கு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் ஆண் பெண் என்று வித்தியாசம் இல்லாமல் இருபாலருடைய கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளன. ஆனால் அமெரிக்காவின் மற்ற மார்க்க மக்களை எடுத்துக்கொண்டால் வித்தியாசத்தை காணலாம்.

அதாவது, மற்ற மார்க்கங்களில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த கருத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உண்டு. உதாரணத்துக்கு, கத்தோலிக்கர்களை எடுத்துக்கொண்டால் 75% பெண்களும், 62% ஆண்களும் தங்கள் மதம் தங்களுடைய அன்றாட வாழ்வில் முக்கிய பங்காற்றுவதாக கூறியுள்ளனர்.

அமெரிக்க சராசரியை எடுத்துக்கொண்டால், 72% பெண்களும் 58% ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.


ஆக, அமெரிக்காவை பொறுத்தவரை மார்க்கப்பற்று என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகமுள்ளது. ஆனால் அமெரிக்க முஸ்லிம்களை பொறுத்தவரை இந்த வித்தியாசம் இல்லாமல் இருபாலரும் கிட்டத்தட்ட சமமான நிலையிலேயே உள்ளனர்.

அமெரிக்க முஸ்லிம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வும் (77%) இதே முடிவுகளைத்தான் தருகிறது.

80% அமெரிக்க முஸ்லிம்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாமிற்கு முக்கிய பங்குள்ளதாக  கூறியிருந்தாலும் இந்த சதவிதம் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது குறைவுதான். உதாரணத்துக்கு, இதே நிறுவனத்தால் வேறு சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இதே கேள்விக்கு, எகிப்தில் 100% முஸ்லிம்களும், இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷில் 99% முஸ்லிம்களும், ஜெர்மன் முஸ்லிம்கள் 82% பேரும் "தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்காற்றுவதாக" தெரிவித்துள்ளனர்.


3. பெண்கள் 

யூதர்களுக்கு அடுத்து அமெரிக்காவில் அதிகம் படித்தவர்களாக இருப்பவர்கள் முஸ்லிம்கள் தான்.

அதிலும், மேற்படிப்பு முடித்த மற்றும் பட்டம் பெற்ற முஸ்லிம்களில் ஆண்களை (39%) விட பெண்களே (42%) அதிகம்.


முஸ்லிம் பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, மற்றொரு குறிப்பிடத்தக்க தகவலையும் தருகின்றது. என்னவென்றால், பெண்கள் (40%), ஆண்களுக்கு (42%) நிகரான அளவில் பள்ளிவாசலுக்கு வருகின்றனர். இது, காலப் நிறுவனத்தால் சில முஸ்லிம் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளோடு ஒப்பிடும் போது வேறுபடுகின்றது. இந்த நாடுகளில் பெண்கள் பள்ளிக்கு வருவது (அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது) குறைவே. ஆனால் அமெரிக்காவில் அந்த நிலை இல்லை. அங்கு ஆண்களும் பெண்களும் சமமான அளவிலேயே பள்ளிக்கு வருகின்றனர்.

4. மற்றவைகள்: 
  • 70% முஸ்லிம் அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 6% அதிகம்.
  • அமெரிக்காவின் பள்ளிவாசல்கள் பல்நோக்கு கூடங்களாக உள்ளன.  
  • மது அருந்துவோரின் சதவிதம், மற்ற மார்க்க மக்களுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவாகவே உள்ளது. அதே சமயம், நான்கில் ஒரு முஸ்லிம் அமெரிக்கர் புகை பிடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்.     
  • அமெரிக்க முஸ்லிம் பெண்களில் மூன்றில் ஒருவர் "professional Job"பில் உள்ளார்.
  • கறுப்பின முஸ்லிம் அமெரிக்கர்கள் மார்க்கத்தின் மேல் அதிக பற்று கொண்டுள்ளனர் (87%). இவர்களைத் தொடர்ந்து ஆசியர்களும் (86%), வெள்ளையர்களும் (72%) வருகின்றனர். 

காலப் நிறுவனத்தின் இந்த ஆய்வறிக்கையை (140 பக்கங்கள்) முழுவதுமாக படிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (File Size : ~5.2 MB). 

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.


My Sincere Thanks to: 
1. Sister Dalia Mogahed.
2. Gallup's Center for Muslim Studies.

Reference: 
1. Muslim Americans: A National Portrait - The center for Muslim Studies, Gallup, 2009.  

One can download the complete document from: 
http://www.muslimwestfacts.com/mwf/116074/Muslim-Americans-National-Portrait.aspx


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.

Tuesday, September 6, 2011

அதிகளவில் இஸ்லாத்தை தழுவும் பெண்கள்...

13 கருத்துக்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

இஸ்லாத்திற்கு எதிராக வைக்கப்படும் வாதங்களில் முக்கியமானது "Islam Oppresses Women" என்பது. இஸ்லாத்திற்கு எதிரான வாதங்கள் எப்படி ஒன்றுமில்லாமல் ஆகின்றனவோ அது போல தான் இந்த வாதமும் காணாமல் போகின்றது. 

இஸ்லாத்திற்கெதிரான இந்த பிரச்சாரம் இஸ்லாமிய சகோதரிகளிடையே சிறிய அளவிலான பாதிப்பையாவது ஏற்படுத்தி இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஆனால் முஸ்லிமல்லாத சகோதரிகளை "இஸ்லாம் என்றால் என்ன?" என்று அறியத் தூண்டியிருக்கின்றது. பிரிட்டனில் இஸ்லாமை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டோரில் பெரும்பாலானோர் பெண்கள். 

சென்ற வருடம், பிரபல "டைம்ஸ் ஆன்லைன்" இணையதளம் இஸ்லாத்தை தழுவும் பிரிட்டன் இளைஞிகள் பற்றிய ஒரு கட்டுரையை "Young. British. Female. Muslim" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது. 



அதில் பின்வரும் தகவல்களை கூறுகின்றது டைம்ஸ் ஆன்லைன். 

  • பிரிட்டன் தேவாலயங்களில் வாரயிறுதி பிரார்த்தனை கூட்டங்களில் பங்கேற்போர் எண்ணிக்கை இரண்டு சதவிதத்துக்கும் கீழாக இருக்கும் நிலையில், இஸ்லாத்தை தழுவும் பெண்களின் எண்ணிக்கையோ அதிகரித்து வருகின்றது. 
  • லண்டன் மத்திய மசூதியில் (London Central Mosque, Regent Park) இஸ்லாத்தை தழுவும் மூவரில் இருவர் பெண்கள். அவர்களில் பெரும்பாலானோர் முப்பது வயதுக்கும் குறைந்தவர்கள்.  
  • இருபதுகளில் மற்றும் முப்பதுகளில் உள்ள படித்த பிரிட்டன் இளைஞிகள் இஸ்லாத்தை தழுவுவது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று கெவின் ப்ரைஸ் (Kevin Brice, Centre for Migration Policy Research, Swansea University) கூறியுள்ளார். 

இந்த கட்டுரையில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட ஐந்து பிரிட்டன் சகோதரிகளின் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆன்லைன்.

அனைத்தையும் இங்கே பதித்தால் நீண்ட பதிவாகிவிடும் என்பதால் அவர்களில் இருவருடைய கருத்துக்களை மட்டும் இங்கே காண்போம். இன்ஷா அல்லாஹ். 

அந்த கட்டுரையை முழுமையாக படிக்க விரும்புபவர்கள் இந்த பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை பயன்படுத்தவும்.


1. கேதரின் ஹெசெல்டின் (Catherine Heseltine)
Nursery school teacher, 31, North London

இஸ்லாத்தை தழுவ விருப்பம் இருக்கின்றதா? என்று என்னுடைய பதினாறாம் வயதில் நீங்கள் கேட்டிருந்தால் என்னுடைய பதில் "இல்லை, நன்றி" என்பதாக இருந்திருக்கும். குடிப்பது, பார்ட்டிகளுக்கு செல்வது, நண்பர்களுடன் இருப்பது என்று மகிழ்ச்சியாகவே இருந்தது. 

வட லண்டனில் வளர்ந்தேன். என் வீட்டில் மதத்தை பின்பற்றியதே இல்லை. நான் எப்போதும் நினைத்ததுண்டு, மதம் என்பது பிற்போக்கானது மற்றும் (தற்காலத்துக்கு) ஒத்துவராதது என்று. 

ஆனால் இவையெல்லாம் என்னுடைய வருங்கால கணவர் சையத்தை சந்திக்கும் வரைதான். அவர் என்னுடைய எண்ணங்களுக்கு சவாலாக விளங்கினார். அவர் இளைஞர், இறைவனை நம்பக்கூடியவர். அவருக்கும் மற்ற டீனேஜ் இளைஞர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்றால், அது, அவர் மது அருந்தமாட்டார் என்பதுதான்.

ஒரு வருடம் சென்றிருக்கும், நாங்கள் உணர்ந்து கொள்ள ஆரம்பித்தோம், அவர் முஸ்லிமாகவும் நான் முஸ்லிமல்லாதவலாகவும் இருந்தால் எப்படி ஒன்று சேர்ந்து வாழ்வது? 

சையத்தை சந்திக்கும் வரை என்னுடைய நம்பிக்கையை நான் கேள்வி கேட்டதில்லை. agnostic (agnostic - இவர்கள் இறைவன் இருக்கிறானென்றும் சொல்லமாட்டார்கள், இல்லையென்றும் சொல்ல மாட்டார்கள்) ஆகவே தொடர்ந்திருப்பேன். 

ஆக, ஆர்வ மிகுதியால் இஸ்லாம் குறித்த சில நூல்களை படிக்க ஆரம்பித்தேன்.      

குரானின் அறிவார்ந்த விளக்கங்கள் தான் துவக்கத்தில் என்னை கவர்ந்தன. பிறகுதான் குரானின் ஆன்மீக பக்கம் என்னுள் வந்தது. குரானின் விளக்கங்களை விரும்பினேன். மேற்குலகில் சமீபத்தில் கொடுக்கப்பட்ட பெண்ணுரிமைகளை 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் கொடுத்திருக்கின்றது. It was a Revelation. 

மதம் பற்றிய பேச்சுக்களை பேசுவதென்பது எங்கள் வீட்டில் அவ்வளவு எளிதானதல்ல. அதனால் மூன்று வருடங்கள் என்னுலேயே இஸ்லாம் குறித்த ஆர்வத்தை மறைத்து கொண்டேன். ஆனால், பல்கலைகழகத்தின் முதல் வருடத்தில், நானும் சையத்தும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று முடிவெடுத்தோம். இப்போது கண்டிப்பாக என் பெற்றோரிடம் சொல்லி விடுவதென முடிவெடுத்தேன். 

என் அம்மாவின் முதல் கருத்து என்னவென்றால், "நீங்கள் ஏன் முதலில் சேர்ந்து வாழக்கூடாது?". நான் திருமணத்திற்கு அவசரப்படுவதும், இஸ்லாமிய பெண்களின் இல்ல பொறுப்புகளும் அவரை கவலைக்கொள்ள செய்தன. 

ஆனால் நான் எந்த அளவு இஸ்லாத்தை தழுவுவதில் மும்முரமாக இருக்கிறேன் என்று யாருமே உணரவில்லை. ஒருமுறை என் தந்தையுடன் இரவு உணவுக்காக வெளியே சென்ற போது அவர் கூறினார், "மதுவை அருந்து. நான் சையத்திடன் சொல்ல மாட்டேன்".

நிறைய பேர், நான் இஸ்லாத்தை தழுவ நினைப்பது "சையத்தின் குடும்பத்தை திருப்திபடுத்தத்தான்" என்று நினைத்தார்களே ஒழிய, இஸ்லாம் மீதான என்னுடைய ஆர்வத்தை உணரவில்லை.

அந்த வருடத்தின் இறுதியில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். துவக்கத்தில் நான் ஹிஜாப் (முகம் மற்றும் கை மணிக்கட்டுகளை தவிர்த்து அனைத்து உடல் பாகங்களையும் மறைக்கும் விதமாக உடையணியும் முறை) அணியவில்லை. தலையில் ஒரு தொப்பியை அணிந்து கொள்வேன்.

படிப்படியாக இஸ்லாமிய எண்ண அலைகளுக்குள் வந்துவிட்டேன். என்னுடைய அறிவாற்றலை வைத்தும், நடத்தையை வைத்தும் தான் என்னை எடை போட வேண்டுமே தவிர, நான் எப்படி உடை அணிகின்றேன் என்பதை வைத்தல்ல. It was empowering.

என்னுடைய நண்பர்கள் எனக்கு துணையாக நின்றார்கள். சிலருக்கு அதிர்ச்சியாக இருந்தது, "என்ன, மது இல்லையா, drugs இல்லையா, ஆண்கள் இல்லையா?........எங்களால் முடியாது"

என்னுடைய ஆண் நண்பர்களிடம் கன்னத்தில் முத்தம் கொடுப்பதை தவிர்க்க சொல்ல சில காலம் ஆனது, "மன்னிக்கவும், இது முஸ்லிம்களின் பழக்கம்"

நாட்கள் போகப்போக, என் கணவரை விட மார்க்கத்தில் மிகுந்த பற்றுள்ளவளாக மாறிவிட்டேன்.

காலப்போக்கில் என் கணவரால் குடும்பம் என்ற பொறுப்புக்குள் வர முடியவில்லை. ஏழு வருடங்களுக்கு பிறகு என்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டேன்.

என்னுடைய பெற்றோர்களிடம் திரும்ப சென்ற போது, என்னை பார்த்தவர்கள் ஆச்சர்யம் தெரிவித்தார்கள், நான் ஏன் இன்னும் அந்த தலையை மறைக்கும் துணியை அணிந்திருக்கின்றேனென்று. ஆனால் நான் தனியாக இருந்தது என்னுடைய நம்பிக்கையை மேலும் வலுவாக்கியது.

இஸ்லாம் எனக்கு திசையையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் கொடுத்திருக்கின்றது. 

முஸ்லிம் பொது பிரச்சனைகள் குழுவில் (Muslim Public Affairs committee) என்னை ஐக்கியப்படுத்தி கொண்டிருக்கின்றேன். இஸ்லாமிற்கு எதிராக செயல்படுபவர்களை எதிர்த்து, மசூதிகளில் பெண்களை பாரபட்சமாக நடத்துவதை எதிர்த்து, வறுமை மற்றும் பாலஸ்தீன நிலைமையை எதிர்த்து என பிரச்சாரங்களை முன்னின்று நடத்தி வருகின்றேன்.

நான் இன்னும் என்னை பிரிட்டிஷ் சமூகத்தின் அங்கமாகவே கருதுகின்றேன். அதே நேரம் நான் முஸ்லிமும் கூட. இந்த இரண்டு அடையாளங்களுக்கு நடுவே ஒத்து போக சிறிது காலம் ஆனது. நான் இப்போது இந்த இரண்டிலும் அங்கம் வகிக்கின்றேன், அதிலிருந்து என்னை யாரும் வெளியேற்றவும் முடியாது.  


2. ஜோஅன் பெய்லி (Joanne Bailey) 
Solicitor, 30, Bradford

நான் முதல் முறை என் அலுவலகத்திற்கு ஹிஜாப் அணிந்து சென்ற போது மிகுந்த பதற்றத்துடன் இருந்தேன். எல்லோரும் என்னைப் பார்த்து என்ன சொல்வார்கள்?. உள்ளே நுழைந்தபோது சிலர் கேட்டார்கள், "எதற்காக தலையை மறைத்திருக்கின்றீர்கள்? நீங்கள் முஸ்லிமாக இருப்பீர்கள் என்று எனக்கு தெரியாது"

நான் தெற்கு யார்க்க்ஷையரில் வளர்ந்தவள். பல்கலைக்கழகத்திற்கு செல்லும் முன் வரை ஒரு முஸ்லிமை கூட பார்த்ததாக நினைவில்லை. என்னுடைய முதல் வேலையின் போது, தனியாக நின்று சம்பாதிக்கக்கூடிய இளைஞியாக வர வேண்டுமென்று முயற்சி செய்தேன். மதுக்கூடங்கள், கடுமையான டயட், ஸாப்பிங் என்று சென்றது வாழ்க்கை. ஆனால் இது எனக்கு திருப்தியை கொடுக்கவில்லை. 

2004ல், ஒரு மதிய நேரத்தில் எல்லாமே மாறிவிட்டது. ஒரு முஸ்லிம் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். என் கழுத்தில் இருந்த சிறிய தங்க "ஏசு சிலுவையில் அறையப்பட்ட" செயினைப் பார்த்து அவர் கேட்டார், "உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கின்றது போல?"

நான் அதனை மதத்திற்காக அணிந்திருக்கின்றேன் என்பதை காட்டிலும் பேஷனுக்காக தான் அணிந்திருந்தேன். "இல்லை நான் அப்படி நினைக்கவில்லை".

பிறகு அவர் தன்னுடைய நம்பிக்கையை பற்றி பேச ஆரம்பித்தார்.  

முதலில் நான் அவரை கண்டுகொள்ளவில்லை, ஆனால் அவருடைய வார்த்தைகள் என் மனதை துளைக்க ஆரம்பித்தன. சில நாட்களுக்கு பிறகு இணையம் மூலமாக குரானை ஆர்டர் செய்தேன்.

லீட்ஸ் புதிய முஸ்லிம்கள் குழுவினரால் (Leeds New Muslims Group) நடத்தப்படும் சமூக நிகழ்ச்சிகளுக்கு செல்ல தைரியத்தை வரவழைக்க சில நாட்கள் ஆனது. 

எனக்கு நினைவிருக்கின்றது, வாசலுக்கு வெளியே நின்று கொண்டு தீர்மானமில்லாத நிலையில் என்னையே கேட்டுக்கொண்டேன், "நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றேன்?". உள்ளே இருக்கும் பெண்கள் தலை முதல் கால் வரை கருப்பு நிற அங்கி அணிந்திருப்பர் என்று கற்பனை செய்து கொண்டேன். "25 வயது பிரிட்டன் பெண்ணான எனக்கும், உள்ளே இருக்கும் அவர்களுக்கும் என்னென்ன ஒற்றுமைகள் இருக்கும்?"   

நான் உள்ளே சென்ற போது, அதிலிருந்த எவரும் நாம் அடிக்கடி கேள்விப்படும் "அடிமைப்படுத்தப்பட்ட முஸ்லிம் குடும்பத்தலைவி" என்ற வட்டத்திற்குள் வரவில்லை (none of them fitted the stereotype of the oppressed Muslim housewife). அவர்கள் மருத்துவர்களாக, ஆசிரியர்களாக, உளவியல் நிபுணர்களாக இருந்தனர். 

அவர்கள் மனநிறைவுடனும், பாதுகாப்புடனும் காணப்பட்டார்கள். இது என்னை மிகவும் கவர்ந்தது. நான் எந்த புத்தகத்தை படித்ததை காட்டிலும், இந்த பெண்களுடனான சந்திப்பு என்னை மிகவும் திருப்திபடுத்தியது.

பிறகு, நான்கு வருடங்கள் கழித்து, 2008ல் ஒரு நண்பரது வீட்டில் இஸ்லாத்தை தழுவினேன். முதலில், நான் சரியான முடிவை எடுத்திருக்கின்றேனா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் விரைவில் அதிலிருந்து விடுபட்டு விட்டேன்.     

சில மாதங்களுக்கு பின்னர் என் பெற்றோரிடம் இது குறித்து சொல்ல வேண்டுமென்று உட்கார்ந்தேன். 

"நான் உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்". 

சிறிது நேரம் அமைதி...என் தாய் கூறினார். 

"நீ முஸ்லிமாக போகின்றாய், அப்படித்தானே?"

கண்ணீர் விட்டு அழுதார், கேள்விகளாய் கேட்டார். 

"திருமணமான பிறகு எப்படி இருப்பாய்? நீ இப்படி உடையணிந்து தான் ஆக வேண்டுமா? உன்னுடைய வேலை என்னவாகும்?. 

அவர் என்னைப்பற்றி அதிகம் கவலைப்பட்டார். நான் அவரிடம் மறுபடியும் வாக்களித்தேன், நான் நானாகவே இருப்பேனென்று.

நிறைய மக்கள் நினைப்பது போல, இஸ்லாம் என்னை அடிமைப்படுத்தவில்லை, நான் நானாகவே இருக்க அனுமதிக்கின்றது. 

நான் இப்போது மிகுந்த மனநிறைவுடன் உள்ளேன்.  சில மாதங்களுக்கு முன், ஒரு முஸ்லிம் வழக்குரைஞருடன் எனக்கு திருமணம் நிச்சயமானது. அவருக்கு நான் வேலைக்கு செல்வதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அதே நேரம் இஸ்லாமிய பார்வையிலான ஆண் பெண் பொறுப்புகளை ஆமோதிக்கின்றேன். என்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்து கொள்ள விரும்புகின்றேன். அதே நேரம் என்னுடைய சுதந்திரத்தையும் விரும்புகின்றேன்.

நான் ஒரு பிரிட்டிஷ் என்பதிலும், முஸ்லிம் என்பதிலும் பெருமை கொள்கிறேன். எந்த வழியிலும் இவை இரண்டிற்குமிடையே முரண்பாடு இருப்பதாக நான் நினைத்ததில்லை. 


அல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் இறைவனிற்கே....

பிரிட்டிஷ் கலாச்சார பின்னணியில் நம்மை வைத்து பார்த்தால் இந்த சகோதரிகள் கடந்து வந்த பாதை நமக்கு தெளிவாக புலப்படும்.

டைம்ஸ் ஆன்லைனின் இந்த பதிவில் என்னை திணறடித்தது அகீலா லிண்ட்சே வீலர் என்ற சகோதரியின் கருத்து. 

"The first time I tried on the hijab, I remember sitting in front of the mirror, thinking, ‘What am I doing putting a piece of cloth over my head? I look crazy!’ Now I’d feel naked without it and only occasionally daydream about feeling the wind blow through my hair" - Aqeela Lindsay Wheeler, Housewife and mother, 26, Leicester.
முதலில் நான் ஹிஜாபை அணிந்த போது, கண்ணாடியை பார்த்து என்னையே கேட்டுக் கொள்வேன், "ஒரு துணியை என் தலையை சுற்றி கட்டுவதால் நான் என்ன பண்ணுகின்றேன்? I look Crazy!". ஆனால் இப்போதோ ஹிஜாப் அணியாமல் இருப்பதை நிர்வாணமாக இருப்பது போல உணர்கின்றேன் --- (extract from the original quote of) Aqeela Lindsay Wheeler, Housewife and mother, 26, Leicester.

ஆக, எந்த ஹிஜாபை நோக்கி அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றதோ, அதனை விரும்பி அணியும் பெண்களாகத் தான் இவர்கள் இருக்கின்றார்கள்.

இஸ்லாம் தங்களுக்கு மனநிறைவையும், பாதுகாப்பையும், திசையையும், உரிமைகளையும் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர். 

ஒருபுறம், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது, அடக்கியாள்கின்றது என்ற பிரச்சாரம். மறுபுறம், டைம்ஸ் இணையதளம் சொல்லுவது போல ஆயிரக்கணக்கில் இஸ்லாமிற்குள் நுழையும் சகோதரிகள்.

இஸ்லாமை நன்கு ஆராய்ந்து அதனுள் தங்களை இணைத்து கொண்டிருக்கும் சகோதரிகளின் கருத்து சரியா?, அல்லது, இஸ்லாமிற்கு வெளியே நின்று கொண்டு இஸ்லாம் பெண்களை இப்படி நடத்துகின்றது, அப்படி நடத்துகின்றது என்று கூப்பாடு போடுபவர்களின் கருத்து சரியா?

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

இஸ்லாத்தை தழுவியவர்கள் குறித்த என்னுடைய அனைத்து கட்டுரைகளையும் படிக்க <<இங்கே>> சுட்டவும்....

Please note:
சகோதரிகளின் கருத்துக்கள் வார்த்தைக்கு வார்த்தை மொழிப்பெயர்க்கப்படவில்லை. 

My Sincere Thanks to:
1. The Times.

Reference:

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Tuesday, August 23, 2011

நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்...

34 கருத்துக்கள்
                  ஓரிறையின் நற்பெயரால்

நாத்திகம்: 

    பிறிதொருவரின் கொள்கையை தவறென்று வாதிட்டால் அதற்கு மாற்றமாக தான் கொண்ட கொள்கை குறித்த இலக்கணத்தை மிக தெளிவாக வரையறை செய்திருக்க வேண்டும். அதனடிப்படையில் இறை பின்பற்றுதலை எதிர்க்கும் நாத்திகம் இறை மறுப்புக்கான ஒரு வரைவிலக்கணத்தை இதுவரை ஏற்படுத்த வில்லையென்பதை விட தான் நிராகரிக்கும் இறைக்குறித்துக்கூட ஒரு தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை.  விக்கிபீடியா நாத்திகம் குறித்து இவ்வாறு கூறுகிறது 

நாத்திகம் - கடவுள் பற்றிய எத்தகைய நம்பிக்கையும் இல்லாமல் இருத்தல் அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மறுக்கும் ஒரு கொள்கையாகும்.

பொதுவாக இறை மறுப்பை அடிப்படையாக கொண்டாலும் இறைமறுப்பு என்றால் என்ன என்பதை வரையறை செய்வது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதாவது, இறை என்றால் என்ன என்பதை வரையறை செய்வதில் குழப்பம் இருப்பதால், இறைமறுப்பு என்பதை வரையறை செய்வதிலும் குழப்பம் வருகிறது. இறை என்றால் தொன்மங்கங்களில் வரும் கடவுள்களா, அல்லது மெய்யியலில் வரையறை செய்யப்படும் கருத்துருவா, அல்லது இயற்கைச் சுட்டும் வேறுபெயரா என்ற பல விதமான கருத்துருக்கள் உள்ளன.

ஒரு கொள்கைக்கு மாற்றமாக உருவாகும் நேர் எதிர் கொள்கை தனக்கென ஒரு உறுதியான நிலைப்பாட்டை இதுவரை வைத்திருக்காதது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே..! இன்னும் இதில் வேடிக்கையென்னவென்றால் நாத்திகம் குறித்து கூறுகையில் எங்கெணும் பகுத்தறிவு என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை., ஆனால் இறை மறுப்பை பேசும் நாத்திகர்களுக்கு தமிழகத்தில் பகுத்தறிவாளர்கள் என குறியீடு இருப்பது தான் வருத்தத்திற்குரியது.,

நீண்ட காலமாக நாத்திக பார்வையில் விரியும் செந்திற காட்சி இஸ்லாத்தின் வெண்மையை பொய்மையாக்க குறை கண்டு காழ்ப்புணர்ச்சியை யூனிக்கோடில் கக்கிக்கொண்டிருக்கிறது. இஸ்லாமிய வெறுப்புக்கு தெளிவான மறுப்பு அழகாய் சொல்லப்பட்ட போதிலும் கடவுளை விமர்சிக்கும் நாத்திகர்கள் இதுவரையிலும் நாத்திகம் குறித்து உரையாட வாய் திறப்பதில்லை. ஆகவே அன்புள்ளம் கொண்ட இணைய வாழ் பெருமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்...

நாத்திகரா  நீங்கள்..?
      
Good!.. உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்., கீழ்க்கண்ட ஆத்திக பதிவர்கள் உங்களோடு நாத்திகம் குறித்து நாகரிமான முறையில் உரையாட காத்திருக்கிறார்கள்., அவர்களின் நாத்திகம் குறித்த சந்தேக பார்வையை நீங்களும் பாருங்கள்., உங்கள் பார்வையில் நாத்திகம் உண்மையென்றால் அதுக்குறித்து உரையாட வாருங்கள்., 




"நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"


மேலும் நாத்திகம் குறித்த

1. சந்தேகங்கள்...
2. பார்வைகள்...
3. எண்ணங்கள்..



"மனிதர்க்கு மட்டுமே பகுத்தறிவு என்ற சுயமாக சிந்தித்துணரும் மூளையை இறைவன் கொடுத்து, அதன்மூலம் மனிதர் தன்னை (இறைவனை) உணர்ந்து, தன் தூதர்கள் மூலம் தரப்பட்ட சட்டங்களுக்கு அடிபணித்து ஒழுகி, வழங்கப்பட்ட கிருபைகளுக்கு வணங்கி தனக்கு நன்றி தெரிவித்து, இவ்வுலகில் இறையச்சத்துடன் வாழ்கின்றனரா" என்று சோதிக்க நாடுகிறான், இறைவன்..!

ஆறாவது அறிவாகிய பகுத்தறிவை பயன்படுத்தி இறைவனை பகுத்துணர வேண்டிய மனிதர்களில் வெகு சிலர், எதோ பார்த்து உணரும் ஓரறிவு பிராணிகள் போல...'கண்ணால் கண்டால்தான் நம்புவேன்' என்கின்றனர்..!

இதில் வேடிக்கை என்னவென்றால் கடவுள் விஷயத்தில் பகுத்தறிவையே பயன்படுத்தாத இவர்கள், தங்களை தாங்களே பகுத்தறிவுவாதிகள் என்றும் சொல்லிக்கொள்கின்றனர்..!

...என்றும் உங்கள் அன்புள்ள சகோ.,
முஹம்மத் ஆஷிக்.
mohaashik[at]gmail.com




நாத்திகம் என்றால் என்ன???....

     கடவுளை மறுப்பது என்று விளக்கம் சொல்கின்றார்கள் நாத்திகர்கள். எப்படி மறுக்க முடியும்?? தர்க்கரீதியான காரணங்கள் இருக்கவேண்டுமல்லவா??. காரணம் கேட்டால் அறிவியலை நோக்கி கைநீட்டுகின்றார்கள் நாத்திகர்கள். ஆச்சர்யம். ஆம் நிச்சயம் ஆச்சர்யமான ஒன்றுதான். ஏனென்றால், ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருப்பதாக பிரபல பெர்க்கிலி பல்கலைகழக தளம் கூறுகின்றது. அறிவியல் இறைவனை மறுப்பதாக இருந்தால், எப்படி ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இறைநம்பிக்கையாளர்களாக இருக்க முடியும்???. இதற்கு நாத்திகர்கள் என்ன பதில் வைத்திருக்கின்றார்கள்?

அதுபோல, எந்த அறிவியலை வைத்து இறைவனை மறுக்கின்றார்களோ, அதே அறிவியலை வைத்து தான், "இந்த உலகம் தற்செயலாக தோன்றியிருக்க முடியாது, இதற்கு பின்னால் ஒரு அறிவார்ந்த சக்தி இருக்கின்றது" என்று நம்புபவர்களாக இருக்கின்றனர் பல விஞ்ஞானிகள். 

ஆக, அறிவியல் துணைக்கொண்டு இறைவனை மறுப்பது நிச்சயம் புரியாத புதிராகவே உள்ளது. 

ஒருசில நாத்திகர்கள் உணர்வுரீதியாக இறைவனை மறுக்கின்றனர். "உலகில் இவ்வளவு பிரச்சனை நடக்கின்றதே...அதனை போக்க இறைவன் வரவில்லையே. அதனால் இறைவன் இல்லை"....இம்மாதிரி வாதங்கள் எப்படி இறைவனை மறுக்கும்?. உதவி செய்யவில்லை என்றால் இறைவன் இல்லையென்று ஆகிவிடுமா??. 'இறைவன் என்றால் இப்படிதான்' என்ற அளவுக்கோலை இவர்களுக்கு யார் கொடுத்தது???


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ 
aashiq.ahamed.14[at]gmail.com

           ===============================================================
* நாத்திகம் மறுக்கும் கடவுளுக்கு இலக்கணம்..?

*பொதுவாக, இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களாகிய நாங்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் மார்க்கப் போதனைப்படி ஏவல்/விலக்களை பின்பற்றுகிறோம் இஸ்லாமல்லாத ஏனைய மதங்களை பின்பற்றுவோர் தங்களது வாழ்வுமுறையே அவர்களது மதத்தின் படி (சரியோ/ தவறோ) பின்பற்றுகிறார்கள்., எந்த மத வழிமுறைகளையும் பின்பற்றா நீங்கள் எதன் அடிப்படையில் வாழ்வை அமைத்துள்ளீர்கள்?., குறிப்பாக "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற திருமண பந்தத்தை எந்த நாத்திக சட்ட்த்தில் எடுத்தீர்கள்..?

*ஒருவன் ஏன் இறை மறுப்பாளானாக இருக்க வேண்டும்..?


G u l a m 
இறை நாடினால் இனியும் சந்திப்போம்...
gulamdhasthakir[at]gmail.com

===============================================================



      நாத்திகர்களின் பிரதான ஆதாரமாகிய பரிணாமம் என்பது பொய் என்று சமீப காலத்தில் வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது. இருப்பினும் நாத்திக கொள்கையினால் மக்களுக்கு உள்ள ஆபத்துக்களை விளங்கி கொள்ள வேண்டும்.

இவ்வுலகில் பல மத கொள்கைகள் இருந்தாலும் அவற்றின் அடிப்படை பிற மனிதர்களை கொல்லாதே, தவறு செய்யாதே என்பதே.  அப்படி தவறுகள் செய்தால் தண்டனை, நரகம் என்பதே இந்த கொள்கைகளில் போதிக்கப்படும் பிரதான விஷயங்கள். இந்த தண்டனைக்கு பயந்துகொண்டே பலவகையான குற்றங்கள் நடைபெறுவதில்லை.

கடவுளே இல்லை என கூறும் நாத்திகர்கள் இவ்வகையான குற்றங்களின் பக்கம் செல்ல மாட்டார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. இவர்களுடைய கொள்கையே உலகில் உள்ள கொள்கைகளில் மோசமான கொள்கை என்பதற்கு இவ்வுலகில் நடந்த, நடக்கும் சம்பவங்களே சாட்சி.

இவ்வுலகில் பெரிய தவறு பிற மனிதனை கொலை செய்வது. அதிக மக்களை கொன்று குவித்தவன் யாரென்று அனைவரும் அறிந்ததே, ஹிட்லர், அனைத்து யூதர்களையும் அழித்தொழிக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவன். பிறப்பால் ஒரு கிறித்துவனாக இருந்தும் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்தான்.

வெள்ளை காலர் குற்றங்கள் (White collar crime)  என்பதை பற்றி அறிந்திருப்பீர்கள், குற்ற உணர்வு இல்லாமல் மெத்த படித்த மேதாவிகளால் செய்யப்படும் வரி ஏய்ப்பு, திருட்டு, கொள்ளை, சட்ட விரோதமாக பணம் ஈட்டல் மற்றும் சைபர் குற்றங்கள். அமெரிக்க வணிக அமைச்சரவையின் 1996 ன்  அறிக்கையின் படி வெள்ளை காலர் குற்றங்களால் நிறுவனங்களுக்கு  ஏற்பட்ட நஷ்டத்தின் மதிப்பு 400பில்லியன் டாலர்கள். மேலும் இந்த குற்றங்களினால் ஏற்படும் இழப்பு அதிகரிந்து தான் செல்கிறது. ஏனெனில் இப்படிப்பட்ட குற்றங்கள் மிகவும் சாமர்த்தியமான முறையில் செய்யபடுகின்றன, குற்றங்கள் புரிபவர்களை கண்டறிவது என்பது அரசாங்கத்திற்கே சவாலாக உள்ளது. என்னதான் மறைவாக செய்தாலும் நமக்கு மேலே ஒருவன் பார்த்து கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் மனிதர்களுக்குள் இல்லாமல் இந்த வெள்ளை காலர் குற்றங்களை எப்படி குறைக்க முடியும் என்பதற்கு நாத்திகர்கள் பதில் தருவார்களா?

மேலும் தனி மனித ஒழுக்கம் சம்பந்தமான குற்றங்களை எந்த அரசாங்கத்தாலும் கட்டுபடுத்த முடியாது அவற்றிக்கு முக்கியம் கடவுள் நம்பிக்கை மட்டுமே, மனிதன் பயப்படுவது தப்பு செய்தால் கடவுள் தண்டனை கொடுத்துவிடுவார் என்பதற்கே... கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகர்கள் யாரை பார்த்து பயப்பட வேண்டும்?

இதுபோல பல, இந்த நாத்திக கொள்கையினால் தனி மனித ஒழுக்கம் கெட்டு குற்றங்களும் குழப்பங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதை அனைவரும் அறிவர்.

carbonfriend[at]gmail.com

        ==============================================================



1) உலகில் காணப்படும்/பேசப்படும் ஒவ்வொன்றையும் அறிவியல் ரீதியாக மட்டுமே நிரூபிக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள் உங்கள் மனைவி, மக்கள், குடும்பத்தார் அனைவரும் உங்களை நேசிக்கிறார்கள் என்றால், அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா?

2) விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்க முடியாத எத்தனையோ விஷயங்கள் பகுத்தறிவுப் பூர்வமானதாக இருப்பதை நீங்கள் மறுக்கிறீர்களா?

3) கடவுளின் பெயரால் மக்கள் சுயமாக நடத்தும் அனாச்சாரங்கள்/அக்கிரமங்கள்/சமூக அவலங்களை வைத்து 'கடவுளே இல்லை' என்று முடிவு செய்வது எந்த வகையான பகுத்தறிவு? 

4) 'கடவுள்' என்ற சூப்பர் பவர் இருக்கிறான் என்று சொல்வது மூடத்தனம் என சொல்லிக் கொண்டு தங்கள் முன்னோர்களுக்கு கற்சிலைகளை உண்டாக்குவதும், அதற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதும் மட்டும் பகுத்தறிவுதானா?

5) பகுத்தறிவின் ஊற்றாக தங்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள், காலம் முழுதும் கருப்புச் சட்டையே கதி என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதில் உள்ள‌ அறிவியல் தத்துவம்தான் என்ன?

6) நேற்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்த விஷயங்களை 'விஞ்ஞானக் கண்டுபிடிப்பு' என அறிவிக்கும்போது ஏற்றுக்கொள்ளும் நீங்கள், அதே விஷயத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன் தெளிவாக சொல்லப்பட்டிருந்தும் அதை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுப்பது உங்கள் பகுத்தறிவுக்கு உட்பட்டதா?

7) பூமி உருண்டை வடிவமானது என்பதையும் ஒவ்வொரு கோள்களும் அதன் துணைக் கோள்களும் தன்னைத் தானே சுழன்றுக் கொண்டே சுற்றி வருகின்றன என்பதையும், அவற்றின் ஈர்ப்பு விசை குறித்து அறிவித்து தந்த விஷயங்களையும், இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வரும்/அந்த‌ விஞ்ஞானிகளைக் கூட வியப்படையச் செய்த இன்னும் பற்ப‌ல விஷயங்களை அன்றைக்கே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதை வைத்தும், 'இது முஹம்மது நபியின் சொந்தக் கூற்று அல்ல' என்றும்'முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மற்ற யாரும் அன்றைய மக்களின் விஞ்ஞான அறிவைக் கொண்டு இவ்வளவு துல்லியமாக நிச்சயம் கூற முடியாது' என்றும், 'அது முக்காலத்தையும் அறிந்துள்ள பேராற்றல் மிகுந்த/மகத்தான‌ இறைவனின் வார்த்தைதான்'என்றும் பகுத்தறிவைப் பயன்படுத்தி இஸ்லாமியர்களாகிய நாங்கள் நம்புகிறோம். விஞ்ஞானம் முன்னேறி இராத அந்தக் காலக் கட்டத்தில் இவற்றையெல்லாம் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் எப்படிக்கூற முடிந்தது என்பதற்கு, கடவுளை மறுக்கும் உங்களின் அறிவியல் பூர்வமானபதிலென்ன? 

8) 'பரிணாம வளர்ச்சி'யென கற்பனையாக உருவாக்கப்பட்ட‌ டார்வின் தத்துவம் 'பொய்' என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் அதிக அளவில் பெருகிய பிறகும், அதையே மீண்டும் மீண்டும் உங்கள் வாதத்திற்கு ஊன்றுகோலாக பயன்படுத்திக் கொண்டிருப்பதும் பகுத்தறிவுதான் என்கிறீர்களா?"

அன்புடன்,
உங்கள் சகோதரி,
அஸ்மா.
costblog[at]gmail.com

            =============================================================


    ஏனைய உயிரின தொடர்ச்சியின் விளைவாக மனிதன் உருவானான் என்றால் ஏன் மனிதன் பரிணாமம் அடைந்து வேறு நிலைக்கு இன்னும் மாற வில்லை? ஏனெனில் சூழ் நிலைக்கு தகுந்தவாறு ஒரு உயிரினம் மெல்ல மெல்ல மாற்றமடைவதே பரிணாமம். ஆக ஏனைய அஃறிணை உயிரினங்களின் மாற்றத்தை விட அறிவு மிகுந்த மனித உயிரி வாழும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றமடைய வேண்டியது அவசியமான ஒன்று., அஃது மாற்றடைவதற்கான அறிகுறீகள் கூட ஏற்படவில்லை என்பது ஆச்சரியமான ஒன்று..! 

N.H. ABDUL BASITH
"You can't satisfy all the people with your wealth, but satisfy them with a cheerful face and a good character" - PROPHET MUHAMMAD (S.A.W)


basith27[at]gmail.com

       ===============================================================================


      நாத்திகர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் முதலில் தாங்கள் என்ன கொள்கையுடையவர்கள் என்று விளக்குவார்களா..? 

ஏனெனில் பெரியார் தொண்டனாக இருந்தால் அவர்களது கள்ளத்தனங்கள், கயமைத்தனங்கள், முட்டாள்தனங்களின் அடையாளங்களை வெளிப்படுத்தியும், கம்யூனிசத்திற்கு சப்போர்ட் செய்பவர்களாக இருந்தால் அவர்களது கொலைப்பட்டியலுடன் ஏராளமான கொள்கை ஓட்டைகளை குறித்தும், இதல்லாமல் எந்த கொள்கையுமின்றி வெறும் இறை மறுப்பாளர்களாக இருப்பவர்களை அவர்கள் பானியில் அதாவது விஞ்ஞான ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் குறித்தும் விவாதிக்கலாம்.

  -Mohamed Ihsas
 mohamedihsas786[at]gmail.com

      ==============================================================

     உலகத்தில் மதம் மற்றும் கடவுள் போன்ற கொள்கைகளை நம்பாமல் போனால், இவ்வுலகில் நடக்கும் பிரச்சனைகளுக்கு மனிதர்கள் எவ்வாறு தீர்வு காணுவர்? அதாவது தீர்வுகள் ஏதும் இல்லாத பட்சத்தில் யாருக்கு எந்த தீர்வு சரியெனபடுகின்றதோ அதையே அவர் தீர்வாக எடுத்துக் கொள்வர். அதனால் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வு வராது. சரி அப்படியே அவரவருக்கு பிடித்த தீர்வையே வைத்துக் கொண்டாலும் அதை பின்பற்றுபவர்களின் அளவுகோல் என்ன? 

      அதாவது தமிழ் கலாச்சாரத்தில் ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்வான், ஆந்திர கலாச்சாரத்தில் ஒருவன் (பகுத்தறிவாதி) வளர்க்கப்பட்டால் அவன் ஆந்திர முறைப்படி திருமணம் செய்து கொள்வான். தமிழ் நாட்டு பகுத்தறிவாதிக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டில் நம்பிக்கை இருக்கலாம். ஆந்திர பகுத்தறிவாதிக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம். இப்போது தமிழ் நாட்டு பகுத்தறிவாதி ஆந்திர பகுத்தறிவாதியை திருமணம் செய்து கொண்டால் பகுத்தறிவாதிகளுக்குள் பிரச்சனை வருமா? வராதா?

     அடுத்து தமிழ் நாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்த ஒரு பகுத்தறிவாதி Living together கலாச்சாரத்தை பற்றி என்ன முடிவு சொல்வான். அது நன்று என்று கூறுவானா? அல்லது தீமை என்று கூறுவானா? தீமை என்று சொன்னால் என்ன காரணம் சொல்வான்? ஓரினப்புணர்ச்சி பற்றி பகுத்தறிவாதிகளின் முடிவு என்ன?

இந்தியாவில் சொத்து விவகாரங்களில் அவர்கள் எந்த சட்டத்தை பின்பற்றுவார்கள்? விவாகரத்து போன்ற விஷயங்களில் அவர்களின் நிலைபாடு என்ன? விவாகரத்து பண்ணினால் just like that விட்டுவிடுவார்களா? அல்லது பாதிக்கப்பட்டவருக்கு உதவித்தொகை கொடுக்க வேண்டுமா? விவாகரத்து செய்வதற்கு என்ன காரணங்கள் சொல்லலாம்? அதன் அளவுகோல் என்ன? அதை எவ்வாறு வழிவகுத்தார்கள்.

இது போன்ற மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எந்த பகுத்தறிவாதிக்கு எந்த சட்டம் தன் மன்சாட்சிக்கு சரியன படுகின்றதோ அதை செய்தால், கண்டிப்பாக பிரச்சனைகளுக்கான சரியான தீர்வாக பகுத்தறிவாதிகளின் சட்டம் இருக்காது, தவிர இது மேலும் குழப்பங்களையும், சச்சரவுகளையுமே ஏற்படுத்தும். மதங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று கூக்குரலிட்ட போலி பகுத்தறிவாதிகளே, முதலில் வாழ்க்கை வாழ்வதற்கு நீங்கள் அமைத்த கொள்கைகள் என்ன என்பதை கூறுங்கள். பின்னர் கடவுளை பற்றி பேசலாம்.

தோழைமையுடன்
அபு நிஹான்                                                                                       
hajamydheen[at]gmail.com

                           =====================================================


       நாத்தீகரா நீங்கள்? அப்போ இந்த கேள்விகளெல்லாம் உங்களை பார்த்துதான்..

இந்த பிரபஞ்சம்,இந்த பூமி,அதில் உள்ள உயிரினங்கள்(மனிதன் உட்பட),அதுவல்லாது,உயிர் வாழத்தேவையான நீர்,காற்று ஒளி,இவைகளின் வடிவமைப்பு என ஆதி முதல் அந்தம் வரை அத்துனையும் இயற்கையாகவே உருவானதாக கருதுகிறீர்களா???

உங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் இயற்கையாக உருவானது என சொன்னால் நம்பி விடுவீர்களா?? ம்ம்ஹும் இல்லை..இதை யாராவது உருவாக்கி இருக்க வேண்டும் என எதை வைத்து ஆணித்தரமாக சொல்கிறீர்கள்?

ஆம்! பகுத்தறிவு...அல்லவா? எந்த ஒரு பொருளும் ஒரு படைப்பாளி இல்லாது தானாக வந்துவிடாது என்ற அறிவு.வீடல்ல,ஒரு குருவிக் கூடானாலும், எறும்பு தங்கும் புற்றானாலும்,அதை ஒருவர் உருவாக்காமல் வந்து விடுவதில்லை என்பதில் திண்ணமாக இருக்கும் நீங்கள்....முழு மனித சமுதாயமும் முயன்றாலும் முடிந்திடாத,கற்பனைக்கும் எட்டிவிடாத டிஸைனில் இந்த உலகத்தை ஒரு படைப்பாளன் இல்லாது தானாக உருவாகிவிட்டது என வாதிடுவது விந்தையாகவும்,கருத்துமுரணாகவும், பின் முட்டாள்தனமாகவும் இருக்கிறதே!

நீங்கள் சொல்லலாம், வீடு உட்பட என் வீட்டில் இருக்கும் அத்துனையும் மனிதன் உருவாக்க அதை நான் நேரடியாக கண்டிருக்கிறேன், அதனால் படைப்பாளி இல்லாமல் வந்திருக்க முடியாது என சொல்கிறேன் என்று,..சரிதான்..வீடு கட்டும் போது நீங்கள் பார்த்ததால் நம்புகிறீர்கள்...

அதுபோல இவ்வுலகம் படைக்கப்படும் போது குத்துக்கால் போட்டு, கண்ணத்தில் கைவைத்து உக்காந்து நான் பார்க்கவில்லை அந்த ஒரே காரணத்தால் நம்பவில்லை என்கிறீர்கள் சரிதானே!

இயற்கையாகவேதான், இந்த பூமி 100% பெர்ஃபெக்‌ஷனுடன் வந்துவிட்டது என உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா???ஒன்றும் இல்லை..கையில் பத்துவிதமான பொருட்களை வைத்துக்கொள்ளுங்கள்.ஒவ்வொன்றும் உங்களின் மேசையில் இன்ன இன்ன இடத்தில் இன்னின்னவாறு இருக்க வேண்டும் என முடிவு செய்து கொள்ளுங்கள் பின் அதை மேசையில் சிதரவிட்டுவிடுங்கள்... அவையாவும் தாங்கள் விரும்பிய பெர்ப்க்‌ஷனை பூர்த்தி செய்யும் சதவிகிதம் எத்தனை என நீங்களே யூகித்துக்கொள்ளவேண்டியதுதான்...அது ஒன்றில் இருந்து ஐந்து சதவிகிதத்தை கூட எட்டமுடியாது என்பது உறுதி..இதுதான் நீங்கள் சொல்லும் இயற்கையால் கொடுக்கப்பட முடிந்த பெர்ஃபெக்‌ஷன்...நீங்கள் விரும்பிய, அல்லது, குறைந்த பட்ச ஒழுங்கை எட்டவேண்டும் என்றால் கூட உங்களின் கைவைக்கப்படாமல் அங்கு ஒன்றும் நடக்காது.

அப்படி இருக்க இவ்வுலகில் இருக்கும் அத்துனையும் முழுமைபெற்றும், அதில் ஒரு நேர்த்தியுடனும் இருக்க, அதுவோ இயற்கையாக வந்துவிட்டது என சொல்வது உங்களின் அறிவை நீங்களே ஏமாற்றிக்கொள்ளும் காரியம் இல்லையா?? 

ஒரு முறை முழு உலகையும் விழிவிரித்து திறந்த மனதுடன் பாருங்கள். எத்தனை ரம்யமான படைப்பு,,,மாஷாஅல்லாஹ் (அல்லாஹ் போதுமானவன்) ...ஒவ்வொன்றும் தெரிவு செய்யப்பட்ட,வடிவமைப்பில் உச்சம் பெற்ற படைப்பு....எங்கிருந்து வந்துவிட்டன இவை???

உதாரணத்திற்கு ஒன்றை பார்ப்போம்.

நீர்???இப்படியான ஒரு திரவத்தை மனிதன் காண்பதற்கு முன்புவரை சிந்தித்திருக்க முடியுமா?உலகில் மனிதன் உண்டாக்கிய அத்துனை விலைமதிப்புமிக்க பானங்கள், நிறமற்ற சுவையற்ற எளிய நீரின் சுவையை விஞ்ச முடிந்ததா?? இதுவும் இயற்கை என்றால்..இந்த நீர் ஏன் ஒரு அமிலமாக உருவாகி இருக்ககூடாது?..ஏன் வேறுவிதமான அடர்த்தியில் வெளியாகி இருக்ககூடாது...

மாசுக்களால் நிறைந்த உலகத்தில் மாசுமறுவற்று கண்ணாடிபோல் எப்படி உண்டானது...இந்த தன்மையும் தானாக வந்துவிட்டதா? இவ்வாறு எப்படி எப்படியோ இருந்திருக்க வேண்டிய நீர்..ஏன் தனிச்சிறப்பு மிக்க இத்தகைய குணாதிசியங்களை கொண்டதாக இருக்க வேண்டும்? இதை உலகில் உள்ள பிற உயிரினங்கள் பயன்படுத்தும்,அதனால் இப்படித்தான் நீர் இருக்க வேண்டும் என இயற்கை முடிவு செய்துவிட்டதோ??? 

இயற்கை என்ற அறிவற்ற எந்திரத்தில் இருந்து வெளியாகும் இந்த திரவம் இத்தனை தன்மைகளை கொண்டிருக்கவேண்டும் என்ற நோக்க சிரத்தை யாருடையது?இத்தனை குவாலிட்டி,இத்தனை பெர்ஃபெக்‌ஷன் யாருடையது???

ஒரு வேலை எல்லாம் சரியாக உருவாகி நீர் மட்டும் கரியமிலமாக இந்த இயற்கையில் இருந்து, இயற்கையாக வெளியாகி இருப்பின்..மனிதன் அதை உண்டுதான் வாழ்ந்திருக்க வேண்டுமா???..இல்லை வெவ்வேறு விதமாக இயற்கையாக உருவான நீரானது...உயிரினங்களின் தேவையறிந்து பரிணாம வளர்ச்சி(???) கண்டு இன்று இத்தனை தெள்ளியதாக இருக்கிறதா சகோதரர்களே!!!

இது போல இயற்கை படைப்பு ஒவ்வொன்றையும் சிந்தித்தாலே போதுமே!

நீங்கள் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக்கொள்ள போதுமான ஆதாரங்கள் கிடைத்துவிடுமே!அப்ரம் வருவோம் அந்த இறைவன் யார்?யாராக இருக்க முடியும்? என்ற கேள்விகளுக்கெல்லாம்...

முன் முடிவுகளை தூர எறிந்துவிட்டு திறந்த மனதுடன் சிந்திப்போம்...

நிச்சயமாக வானங்கள்,பூமி ஆகியவற்றின் படைப்பிலும், இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும், அறிவுடையோருக்கு திடமான அத்தாட்சிகள் பல இருக்கின்றன - அல்குர்ஆன் 3:90

அன்புடன்
ரஜின்
askabt.islam[at]gmail.com


படைத்தவன் நாடினால் பகுத்தறிவாளர்களின் பட்டியல் தொடரும்...





இறைவன் நாடினால் இத்தளத்திலோ அல்லது மேற்கண்டவர்களின் எந்த தளத்திலோ நாத்திகம் குறித்து உரையாட பதிவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
      இங்குள்ளவர் யாவரும் முகவரி தந்தே கருத்து தந்திருக்கிறார்கள்., போலி பெயரில் ஆநாகரிக பின்னூட்டமிடாமல் உங்கள் எழுத்துக்களோடு சேர்த்து உண்மையையும் கொண்டு வாருங்கள்., 

அல்லாஹ் நன்கு அறிந்தவன்